பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக் ஹோம்ஸ்
##~##
''இ
து இன்ஷூரன்ஸ் ஸ்பெஷல். இடப் பற்றாக்குறை... எனவே, செய்திகளைச் சுருக்கமாகத் தர முடியுமா?'' இது நாம். ''டிவிட்டர் டைப்பில் அனுப்பவா?'' இது ஷேர்லக். ''சுருக்கமாகத்தான் என்றோம், ரத்தின சுருக்கமாக என்று சொல்லவில்லை'' இது நாம். ''ஓகே. எட்டு மணிக்கு என் மெயில் வரும்'' இது ஷேர்லக். சுமார் எட்டு மணி வாக்கில் அவரிடமிருந்து வந்த மெயிலில் கண்ட செய்திகள் இனி:

• கடந்த வாரத்தில் நான்கு டிரேடிங் தினங்களில் மூன்று நாட்கள் சந்தை ஏற்றத்திலேயே முடிந்தது. உலக அளவிலும் இந்திய அளவிலும் பொருளாதாரத்தின் ஃபண்டமென்டல்கள் எந்த வகையிலும் மாற்றம் அடையவில்லை. இருப்பினும், சந்தை உயரக் காரணம், வெளிநாட்டுப் பணம் இந்திய சந்தைக்கு வருவதுதான். இந்த ஏற்றத்தை காளைச் சந்தை என்று சொல்ல முடியாது. 5350 புள்ளிகளுக்கு மேல் இருக்கும் நிஃப்டி இன்னும் 150 வரை உயரலாம். பிறகு மீண்டும் ஒரு வீழ்ச்சி வரும் என்கிறார்கள் டெக்னிக்கல் அனலிஸ்ட்கள். பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.

ஷேர்லக் ஹோம்ஸ்

• எம்.எஸ்.சி.ஐ. (மார்கன் ஸ்டேன்லி கேப்பிட்டல் இன்டர்நேஷனல்), அதன் வளர்ந்துவரும் சந்தைகளுக்கான இண்டெக்ஸில் இந்தியாவுக்கான இண்டெக்ஸ் வெயிட்டேஜை (எம்.எஸ்.சி.ஐ. இந்தியா இண்டெக்ஸ்) 6.3-லிருந்து 6.4 சதவிகிதமாக உயர்த்தி உள்ளது. இது செப்டம்பர் 3-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால், இந்தியாவை நோக்கி வரும்  எஃப்.ஐ.ஐ. முதலீடு இன்னும் அதிகரிக்கும்.  

தவிர, எம்.எஸ்.சி.ஐ., இந்திய பங்குகளின் வெயிட்டேஜையும் மாற்றி அமைக்கிறது. ஹெச்.டி.எஃப்.சி-ன் வெயிட்டேஜ் 6.21-லிருந்து  7.4 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், டி.சி.எஸ்., ஆர்.ஐ.எல்., ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகளின் வெயிட்டேஜை 0.1% குறைத்துள்ளது. எம்.எஸ்.சி.ஐ. இந்தியா இண்டெக்ஸிலிருந்து பாம்பே ரேயான் ஃபேஷன்ஸ், மைண்ட்ரீ, நவபாரத் வென்ச்சர்ஸ், டைம் டெக்னோபிளாஸ்ட் பங்குகளை நீக்கியுள்ளது.  

• நிஃப்டி 50-ல் இடம் பெற்றிருந்த செயில் மற்றும் ஸ்டெர்லைட் பங்குகள் நீக்கப்பட்டு, லூபின் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் சேர்க்கப்பட உள்ளது. இது செப்டம்பர் 28-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. புதிதாகச் சேர்க்கப்பட இருக்கிற இரு பங்குகளும் நடப்பு ஆண்டில் முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தைத் தந்திருக்கின்றன. இவை முறையே 27% மற்றும் 49% வருமானத்தை அளித்திருக்கின்றன. ஸ்டெர்லைட், சேச கோவாவுடன் இணைக்கப்பட்டு பின்னர் மீண்டும் பட்டியலிடப்படும். அந்த வகையில் அந்த பங்கை, ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்கள் வைத்துக்கொள்ளலாம். மற்றவர்கள் விலை ஏறும்போது விற்றுவிடுவது புத்திசாலித்தனம். செயில் பங்குகளை வைத்திருப்பவர்கள், அதனை விற்றுவிட்டு புதிதாக லூபின் மற்றும் அல்ட்ராடெக் பங்குகளை வாங்கிக்கொள்ளலாம்.  

ஷேர்லக் ஹோம்ஸ்

• தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலக்கரி எடுக்க அரசாங்க அனுமதி அளித்ததன் மூலம் 1.84 லட்சம் கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டதை ஆடிட்டர் ஜெனரல் ரிப்போர்ட் சொல்லி இருப்பது ஒருபக்கமிருக்க, டெல்லி இன்டர்நேஷனல் ஏர்போர்ட் மீண்டும் அமைக்க ஜி.எம்.ஆர். நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதிலும் அரசுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக ஆடிட்டர் ஜெனரல் ரிப்போர்ட் சொல்லி இருக்கிறது. கிட்டத்தட்ட 24,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஏர்போர்ட் நிலம் வெறும் 31 லட்ச ரூபாய்க்கு ஜி.எம்.ஆர். நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டு இருக்கிறதாம்! ஆடிட்டர் ஜெனரல் இப்படி தோண்டத் தோண்ட எத்தனை பூதம் கிளம்பி வருமோ தெரியவில்லை!  

• நடப்பு ஆண்டில் இதுவரை சென்செக்ஸ் 14.25% வருமானத்தைத் தந்திருக்கும் நிலையில் முன்னணி எஃப்.எம்.சி.ஜி. நிறுவனமான ஐ.டி.சி. பங்கின் விலை 30% அதிகரித்திருக்கிறது. இதில் யாருடைய கண்பட்டதோ தெரியவில்லை, ஐ.டி.சி. பங்கின் விலை வியாழக்கிழமை ஒரே நாளில் 3.6% வீழ்ச்சி அடைந்தது. ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளில் சிகரெட்டுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்படுவதைப் போல் இந்தியாவிலும் வரலாம் என்பதால் ஐ.டி.சி. பங்கு விலை இறங்கி இருக்கிறது. ஐ.டி.சி. தனது லாபத்திற்கு சிகரெட்டையே நம்பி இருப்பது மற்றும் அதன் எஃப்.எம்.சி.ஜி. பொருட்கள் எதிர்பார்த்த அளவிற்கு சந்தை பங்களிப்பைப் பெறாதது போன்ற காரணங்களினால் பங்கு விலை குறைய வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள் நிபுணர்கள்.

ஷேர்லக் ஹோம்ஸ்

• ஆசியாவின் மிகப் பழைமையான பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (பி.எஸ்.இ.), ஐ.பி.ஓ. வருவதற்கான வேலையில் களமிறங்கி இருக்கிறது. செபிக்கு விண்ணப்பித்து அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையில் பி.எஸ்.இ-ன் ஓர்க்கிங் கமிட்டி ஈடுபட்டு வருவதாக அதன் இடைக்கால சி.இ.ஓ. ஆஷிஷ்குமார் சௌகான் தெரிவித்துள்ளார். 2013 முதலாம் காலாண்டில் இந்த ஐ.பி.ஓ. வரலாம் என்கிறார்கள்.  

• நிலக்கரி சர்ச்சையில் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திற்கு 'அளவில்லாத நன்மை’ கிடைத்திருப்பதாக ஆடிட்டர் ஜெனரல் ரிப்போர்ட் சொல்லி இருக்கிறது. டாடா பவர், டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் என வேறு சில நிறுவனங்களின் பெயர்களும் அடிபடுகின்றன. எனவே, உஷார்!  

• கிரேட் ஆஃப்ஷோர் நிறுவனம் தனது பங்குகளை திரும்ப வாங்க உத்தேசித்திருக்கிறது. ரூ.175-188 வரையிலான விலையில் பங்குகள் திரும்ப வாங்கப்படலாம்.

• கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 17 லட்சம் ஜி.எஸ்.எம். இணைப்புகள் குறைந்துள்ளன. கடந்த ஓராண்டில் இந்த அளவுக்கு ஜி.எஸ்.எம். இணைப்புகள் குறைந்ததே இல்லை!

மார்க்கெட் சிறிது பாசிட்டிவ்வாக இருப்பதால் ஷேர்லக் டிப்ஸ் அனுப்பவும் மறக்கவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு