Published:Updated:

கம்பெனி மசோதா: இப்போதாவது நிறைவேறுமா?

கம்பெனி மசோதா: இப்போதாவது நிறைவேறுமா?

பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி மசோதா: இப்போதாவது நிறைவேறுமா?

இதோ அதோ என கடந்த எட்டு வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த கம்பெனி மசோதா கூடிய விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கு பல நன்மைகள் உருவாகும்!  

##~##
ந்திய கம்பெனிச் சட்டம் 1956-ம் வருடம் இயற்றப்பட்டது. அப்போதைய சூழ்நிலை களுக்குத் தகுந்த மாதிரியான ஷரத்துகள் இந்த சட்டத்தில் இடம் பெற்றன. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்து 56 வருடங்கள் ஆகிவிட்டதைத் தொடர்ந்து 2004-ம் வருடம் முதன்முதலில் கம்பெனி சட்டத்தை மாற்றி அமைக்க முடிவானது. 2008-ல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் கம்பெனிச் சட்டம் நிறைவேற்ற முடியாமல் போனது.

டிசம்பர் 14, 2011-ல் நாடாளுமன்றத்தில் புதிய மசோதாவை தாக்கல் செய்தார்கள். ஆனால், நாடாளுமன்ற நிலைக்குழு சொன்ன திருத்தங்கள் புதிய மசோதாவில் இல்லையென்பதால் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறுவது நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் 2012 ஜூன் மாதத்தில் கமிட்டி சொன்ன அனைத்து மாற்றங்களையும் சேர்த்து புதிய மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே இந்த கம்பெனி மசோதா நிறைவேற்றப்படும் என அரசுத் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

புதிய மாற்றங்கள்!

கம்பெனி மசோதா: இப்போதாவது நிறைவேறுமா?

மாறியுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப இந்த மசோதாவில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பார்ப்போம்.

• ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு பெண் இயக்குநர் நியமிக்கப்படலாம் என சொல்லப்பட்டுள்ளது.

• ஒரே ஆடிட்டரை தொடர்ந்து வைத்திருக்கக் கூடாது. ஒரு ஆடிட்டர் ஒரு நிறுவனத்தில் ஆறு வருடங்களுக்கு மட்டுமே பணியாற்ற வேண்டும். சுழற்சி அடிப்படையில் ஆடிட்டரை மாற்ற வேண்டும்.

• முன்பு டிவிடெண்ட் தரும்போது குறிப்பிட்ட சதவிகித தொகையை ரிசர்வ் செய்து வைக்க வேண்டும். இந்த நடைமுறை புதிய மசோதாவில் தளர்த்தப்பட்டுள்ளது.

• இடைக்கால டிவிடெண்ட் என்பது நடப்பு ஆண்டின் லாபத் தொகைக்கு மட்டும் கொடுக்க வேண்டும் என்பது பழைய சட்டம்.  ஆனால், முந்தைய ஆண்டின் லாபத்தைக் கணக்கிட்டும் இடைக்கால டிவிடெண்ட் கொடுக்கலாம் என்கிறது புதிய மசோதா.  

• முன்பு நிதியாண்டு என்பதை  நிறுவனங்கள் தங்கள் இஷ்டத்துக்கு நிர்ணயித்துக்கொள்ளலாம். இனி ஏப்ரல் முதல் மார்ச் 31 வரையிலான நிதி ஆண்டாக அனைவரும் பின்பற்ற வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.

• போர்டு இயக்குநர்கள் முன்பு 12 நபர்கள் இருந்தார்கள். இனி 15 பேரை நியமிக்க வேண்டும்.  

• ஒவ்வொரு நிறுவனமும் ஆண்டறிக்கையை கண்டிப்பாகத் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த கம்பெனி மசோதா சட்டமாக நிறைவேறினால் யாருக்கு என்ன நன்மை கிடைக்கும், இதிலிருக்கும் சாதக, பாதகங்கள் என்ன? என பிராக்டிஸிங் கம்பெனி செகரட்டரி ஸ்ரீதரனிடம் கேட்டோம்.  

''புதிய கம்பெனி மசோதா நிறைவேற்றப் பட்டால் நிறுவனங்களுக்கும், பங்குதாரர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பழைய சட்டத்தில் 658 பிரிவுகளும், 15 அட்டவணைகளும் இருந்தன. ஆனால், புதிய சட்டத்தில் 470 பிரிவுகளும், 7 அட்டவணைகளும் மட்டுமே இருக்கின்றன. பழைய சட்டத்தில் பல பிரிவுகளாக இருந்ததைச் சேர்த்து சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையிலும், எளிதில் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையிலும் புதிய மசோதா இயற்றப்பட்டுள்ளது.

கம்பெனி மசோதா: இப்போதாவது நிறைவேறுமா?

இந்த மசோதாவில் உள்ள சாதகமான அம்சம் என்னவெனில், பல முக்கிய விஷயங்களை எல்லாம் விதிமுறைகளில் (Rules) கொண்டு வந்திருக்கிறார்கள். அதாவது, பழைய சட்டத்தில் இருக்கும் முக்கிய அம்சங்கள் ஷரத்தில் (Article) இருக்கும். ஷரத்தில் இருக்கும் விஷயங்களை மாற்ற வேண்டுமென்றால் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் செய்வதன் மூலமே மாற்ற முடியும். ஆனால், தற்போது விதிமுறைகளில் கொண்டுவரப்படும் அம்சங்களை மத்திய அரசே சூழ்நிலைகளுக்குத் தகுந்த மாதிரி மாற்றிக்கொள்ள முடியும்'' என்றார்.

இந்த மசோதா சட்டமானால்  எஸ்.எம்.இ. துறைக்கு பல்வேறு பயன்கள் உருவாகும் என்கிறார் இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செகரட்டரீஸ் ஆஃப் இந்தியாவின் கவுன்சில் உறுப்பினர் நரசிம்மன்.  

''நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40% எஸ்.எம்.இ.-களின் பங்காக இருக்கிறது. ஆனால், முக்கிய நகரங்களிலிருந்துதான் எஸ்.எம்.இ.-களின் பங்களிப்பு இருக்கிறது. நாடு வேகமாக வளர வேண்டுமெனில் அனைத்து பகுதிகளிலும் உள்ள எஸ்.எம்.இ.கள் வளர வேண்டும். இதை ஊக்குவிக்கும் வகையில் இந்த புதிய சட்டம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.  

என்.எஸ்.இ., பி.எஸ்.இ. போன்ற எக்ஸ்சேஞ்சுகள் எஸ்.எம்.இ.-களை ஊக்குவிக்கும் விதங்களில் நல்ல பாதையை அமைத்திருக்கிறது. முன்பெல்லாம் எஸ்.எம்.இ.-கள் சுலபமாகத் தவறு செய்து, காணாமல் போய்விடும். ஆனால், இப்போது புது விதிமுறைகள் வந்துவிட்டன. இது அத்துறை வளர்ச்சி அடைய அடித்தளத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. பணப் புழக்கம் அதிகம் கிடைக்கவும் இந்த சட்டம் வழிவகைச் செய்யும்'' என்றார்.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இழுவையில் இருந்த இந்த மசோதா, இந்த கூட்டத் தொடரிலாவது நிறைவேறினால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்! செய்யுமா மத்திய அரசு?

- பானுமதி அருணாசலம்,
படங்கள்: ரா.ராபின்மார்லர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு