Published:Updated:

பிஸினஸ் சமூகம் - கவுண்டர்கள்!

பிஸினஸ் சமூகம் - கவுண்டர்கள்!

பிஸினஸ் சமூகம் - கவுண்டர்கள்!

பிஸினஸ் சமூகம் - கவுண்டர்கள்!

Published:Updated:
பிஸினஸ் சமூகம் - கவுண்டர்கள்!
பிஸினஸ் சமூகம் - கவுண்டர்கள்!

வுண்டர் சமூகத்தினருக்கு விவசாயம் என்பதே பிரதானமான தொழில். கொங்கு மண்டலத்தின் மூத்த குடிமக்கள் இவர்கள் என்பதால், இவர்களிடம் விவசாய நிலங்கள் நிறையவே இருந்தது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரைகூட விவசாயத்தையே பெரிய அளவில் செய்துவந்தனர் இந்த சமூகத்து மக்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிற்பாடு, குறிப்பாக இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு விவசாயத்தை விட்டு, பல்வேறு தொழில்களில் ஈடுபட்டனர். இன்றைக்கு நூற்பாலை, பின்னலாடை, சர்க்கரை உற்பத்தி, ஆட்டோமொபைல், இன்ஜினீயரிங் என பல்வேறு தொழில் துறைகளில் கவுண்டர் சமூகத்து மக்கள் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, மருத்துவத் துறையில் இன்றைக்குப் பெரும் புகழுடன் விளங்குகிறார் கோவை மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடலை நடத்திவரும் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி.

ஈரோடு மாவட்டம் நல்லாம்பட்டி கிராமத்தில் 1941-ல் பிறந்தார் பழனிசாமி. அவர் தந்தையார் நல்லாம்பட்டி கிராமத்தில் ஓரளவுக்குப் பெரிய விவசாயி. இருபது, முப்பது ஏக்கர் அவரிடம் இருந்தது. ஆனால், அவரது குடும்பமோ மிகப் பெரியது. பழனிச்சாமிக்கு ஆறு அக்காக்கள், ஒரு தம்பி என மொத்தம் எட்டு பேர். ஆனால், இத்தனை பேரிலும் பள்ளிக்குச் சென்று படித்தது அவர் மட்டும்தான்.

பெருந்துறையில் உள்ள போர்டு ஹைஸ்கூலில் பள்ளிப் படிப்பை முடித்தார். பெற்றோருக்கோ, கூடப் பிறந்தவர்களுக்கோ பெரிய அளவில் கல்விப் பின்னணி இல்லை என்ற போதிலும் பழனிசாமி சிறுவயதிலேயே நன்றாகப் படித்தார்.

##~##
பள்ளிப்படிப்பை முடித்த கையோடு, கல்லூரிப் படிப்பையும் படிக்க கிளம்பினார் பழனிசாமி. கல்லூரிப் படிப்புக்கு அவர் தேர்வு செய்த கல்லூரி கோவை பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜ். அதற்கு பிறகு, சென்னையில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் படித்தார்.  அதன்பிறகு மேற்கொண்டு அவர் படிக்க நினைத்தது மருத்துவப் படிப்பு. ஒரு இன்ஜினீயராகவோ, ஒரு அரசு அதிகாரியாகவோ ஆவதைவிட ஒரு மருத்துவராக வரவேண்டும் என்கிற ஆசை அவருடைய சிறுவயதில் இருந்தே இருந்தது. அதற்கு ஒரு காரணமும் இருந்தது. சிறுவயதில் பழனிசாமிக்கு அடிக்கடி காய்ச்சல் வரவே, அவரை மருத்துவரிடம் அழைத்துப் போவாராம் அவரது அப்பா. பலதரப்பட்ட நோயாளிகளை அவர் குணப்படுத்தும் விதத்தைக் கண்டு ஆச்சரியப்பட்ட பழனிசாமி, நன்றாகப் படித்து ஒரு டாக்டராவதே தன்னுடைய லட்சியம் என்று முடிவு செய்தார். இதெல்லாம் நடந்தது அவர் ஆறாம் வகுப்பு படித்த சமயம்.

எனவே, பிரசிடென்சி கல்லூரியில் படித்து முடித்தவுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கத் தொடங்கினார். அதே கல்லூரியில் மருத்துவ உயர் படிப்பான எம்.டி.யையும் தொடர்ந்து படித்து முடித்தார்.

மருத்துவம் படித்து முடித்தவுடன் கோவை மருத்துவக் கல்லூரியில் ரீடராக இரண்டு ஆண்டுகள் இருந்தார். 1975-ல் அவரது தந்தையார் இறந்தபிறகு, அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்காகப் புறப்பட்டார். 1975-78 வரை சின்சினாட்டியில் மருத்துவ உயர்படிப்பு படித்தார். அதன்பிறகு அமெரிக்காவிலேயே மருத்துவராக வேலை பார்த்தார். 1983-85-ல் மிச்சிகனில் மருத்துவ ஆராய்ச்சி மேற்கொண்டார். 87-83 வரை மிச்சிகனில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் வேலை பார்த்தார். 1985-90 வரை டெட்ராய்ட் பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்தார்.

என்றாலும், அமெரிக்காவுக்குச் செல்ல டாக்டர் பழனிசாமி நினைத்தது பணம் சம்பாதிப்பதற்கோ அல்லது அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட வேண்டும் என்பதற்காகவோ அல்ல. அங்குள்ள மக்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சை வழங்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளத்தான். ஆனால், அமெரிக்காவுக்குச் சென்றபிறகுதான் அங்கு பின்பற்றப்படும் மருத்துவ முறைகள், பயிற்சிகள், சோதனை முறைகள் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கின்றன என்பதை நேரடியாக கண்டார்.  

அமெரிக்க மக்களுக்குக் கிடைக்கும் தரமான மருத்துவ சேவை, நம் நாட்டு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணம் டாக்டர் பழனிசாமியின் மனதில் தோன்றியது. எந்த மக்கள் மிகச் சிறந்த மருத்துவச் சேவை பெறுகின்றனரோ, அந்த மக்கள் கல்வி, செல்வம் என எல்லா விஷயங்களிலும் சிறந்து விளங்குவதை தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தார் அவர். அப்படிப்பட்ட மருத்துவ சேவை தன் நாட்டு மக்களுக்குக் கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டார். தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னைக்கு அடுத்து மிக முக்கியமான தொழில் கேந்திரமாக இருக்கும் கோவையில் அதிநவீன சிகிச்சை வழங்கும் ஒரு மருத்துவமனையைத் தொடங்க நினைத்தார். இந்த முடிவை அவர் எடுத்தது 1985-ம் வருஷம்.

ஆனால், மருத்துவமனை தொடங்க நிறைய பணம் வேண்டுமே! அதற்கு எங்கே செல்வது? என்று நினைத்தபோது வால்மார்ட் நிறுவனத்தைத் தொடங்கிய சாம் வால்டன் சொன்னது நினைவுக்கு வந்தது. 'பிஸினஸ் தொடங்குவதற்குப் பணம் என்பது ஒரு தடையே அல்ல; தீர்க்கதரிசனம்தான் தேவை’ என்று சாம் வால்டன் சொன்னது டாக்டர் பழனிசாமியின் மனதில் ஆழமாகப் பதிந்தது. மருத்துவமனையைத் தொடங்குவதற்கான பணத்தை தன்னுடைய நண்பர்களாக இருக்கும் என்.ஆர்.ஐ.களிடம் வாங்கினார். போதிய பணம் கிடைத்தவுடன், 1990-ல் அமெரிக்காவில் அவர் செய்துவந்த வேலையை விட்டுவிட்டு, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையை ஆரம்பித்தார்.

இதெல்லாம் நடந்தது, இந்தியாவில் தாராளமயமாவதற்கு முன்பு. ஆனால், அவர் இந்தியாவிற்கு வந்தவுடன் தாராளமயமாதல்  தொடங்கியது, அவருடைய தீர்க்கதரிசனத்திற்கு கிடைத்த பரிசு என்றே சொல்லவேண்டும்.

கோவை மெடிக்கல் சென்டர், கோவை மக்களுக்கு உயர்தரமான மருத்துவ சேவை வழங்கியது. அதோடு கோவையைச் சுற்றி இருக்கிற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் நல்லதொரு மருத்துவச் சிகிச்சை அளித்திட வேண்டும் என டாக்டர் பழனிசாமி நினைத்தன் விளைவு, பெருந்துறையிலும் ஒரு சின்ன மருத்துவமனையைத் தொடங்கினார். வெறும் 200 படுக்கையுடன் தொடங்கிய இந்த மருத்துவமனைக் குழுமம் இன்று 800 படுக்கை என்கிற அளவுக்குப் படிப்படியாக வளர்ந்து, கோவையில் மட்டுமல்ல, தமிழகத்திலேயே மிக முக்கியமான ஒரு மருத்துவமனையாக மாறியிருக்கிறது.

அது மட்டுமல்ல, பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் இன்றைக்கு கோவைக்கு வந்து மருத்துவ சிகிச்சை பெற நினைப்பதற்கான விதையை அன்றைக்கே ஊன்றியவர் டாக்டர் பழனிசாமி.

கோவையை ஒரு முக்கிய மருத்துவக் கேந்திரமாக மாற்றியதோடு, மருத்துவ மாணவர்களை உருவாக்கும் மருத்துவக் கல்லூரிகளையும் நடத்தி வருகிறார் டாக்டர் பழனிசாமி. நர்ஸிங், பார்மஸி, ஹெல்த் சயின்ஸ் என ஐந்து மருத்துவக் கல்லூரிகளை நடத்தி வருகிறார். இது தவிர,  ஒரு கலைக் கல்லூரி, ஒரு இன்ஜினீயரிங் கல்லூரி, ஒரு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி என மொத்தம் ஒன்பது கல்வி நிலையங்களையும் நடத்தி வருகிறார் டாக்டர் பழனிசாமி.

மருத்துவத் தொழிலை வெற்றிகரமாக செய்துவரும் அதே நேரத்தில், ஏழை - எளிய மக்களுக்கும் மருத்துவச் சிகிச்சை சென்று சேரவேண்டும் என்பதற்காக பாடுபட்டு வருகிறார் டாக்டர் பழனிசாமி. தீர்க்கதரிசனமும் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு டாக்டர் பழனிசாமி ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

(அறிவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism