Published:Updated:

என் பணம்; என் அனுபவம்!

என் பணம்; என் அனுபவம்!

என் பணம்; என் அனுபவம்!

கள்ள நோட்டு, உஷார்!

##~##
''ச
மீபத்தில் வங்கி ஒன்றில் என் சேமிப்புக் கணக்கில் 2,000 ரூபாய் பணம் செலுத்துவதற்காக 20 நூறு ரூபாய் நோட்டுகளுடன் வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது நடுத்தர வயதுள்ள நபர் ஒருவர், ''சார்... என்னிடம் நாலு 500 ரூபாய் நோட்டுகள் இருக்கு... கவுன்டர்ல சில்லறை கேட்டா தரமாட்டேங்கறாங்க. நீங்க பணம் கட்டத்தானே போறீங்க... 2,000 ரூபாய்க்குச் சில்லறை குடுத்து உதவுங்களேன்'' என்று கெஞ்சினார். நான் வைத்திருந்த 20 நூறு ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துவிட்டு, அவரிடமிருந்து ஐநூறு ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொண்டேன். பத்து, பதினைந்து நிமிடங்கள் வரிசையில் சென்று கவுன்டரில் பணத்தைக் கொடுத்தேன். கேஷியர் 500 ரூபாய் நோட்டுகளைப் பார்த்துவிட்டு, எல்லாமே 'கள்ள நோட்டு’ என கத்த ஆரம்பித்துவிட்டார். 2,000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதுடன், அனைவர் முன்னிலையிலும் அவமானமும் ஏற்பட்டது. 100, 500, 1,000 ரூபாய் போன்ற அதிக மதிப்புள்ள நோட்டுகளை மிகத் தெரிந்தவர்களிடமிருந்து  மட்டுமே வாங்கிக்கொள்ளுங்கள்.''

- ஆர்.பிரசன்னா, சென்னை.

நட்பு வேறு; பணம் வேறு!  

என் பணம்; என் அனுபவம்!

''நான் அரசு பணியில் உள்ளேன். வங்கியன்றில் பெர்சனல் லோன் வாங்கினேன். எனக்கு நேரம் இல்லாததால், ஆறு மாதத்துக்கான தவணைத் தொகை 20,000 ரூபாயை அருகில் வசிக்கும் நண்பர் ஒருவரிடம் கட்டிவிடுமாறு கொடுத்தேன். பிறகு போனில் கேட்டபோது, கட்டிவிட்டதாகச் சொன்னார். நெருங்கிய நண்பர் என்பதால் ரசீது கேட்காமல் விட்டுவிட்டேன். அடுத்த ஆறு மாதம் கழித்து வங்கியில் இருந்து எனக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள். நான் அதிர்ச்சி அடைந்து நண்பரை தேடிப்போய் விவரத்தைச் சொன்னேன். அவரோ, ஆமாம் அப்போது அவசரமாக ஒரு செலவு வந்ததால, அப்புறம் கட்டலாம்னு இருந்தேன். ஆனால், மறந்தேவிட்டது. அடுத்த மாதம் பணத்தைக் கொடுத்து விடுகிறேன் என்றார். ஆனால், பல மாதங்கள் கடந்தும் இன்றுவரை பணம் கைக்கு வரவில்லை. என்னதான் நெருங்கிய நண்பராக இருந்தாலும் பண விஷயத்தில் நான் அலட்சியமாக இருந்திருக்கக் கூடாது. ஒன்று நானே வங்கிக்குச் சென்று பணம் கட்டியிருக்கணும்; அல்லது நண்பரிடம் ரசீது கேட்டு வாங்கியிருக்கணும் என்பதைத் தாமதமாகத்தான் உணர்ந்துகொண்டேன்.''

- எல்.முருகன், கரூர்.

பரிதாபப்பட்டேன்; பணத்தை இழந்தேன்!

என் பணம்; என் அனுபவம்!

''நான் திருச்சி புறநகர் பகுதியில் வசிக்கிறேன். எங்கள் பகுதிக்கு அதிக அளவில் டவுன் பஸ்கள் கிடையாது. நான் பிஸினஸ் விஷயமாக வெளியூருக்குப் போய் வர வேண்டியிருப்பதால் பஸ்ஸுக்காக காத்திருப்பதில்லை. வீட்டுக்குத் திரும்பும்போது பஸ் ஸ்டாண்டிலிருந்தே ஆட்டோவில் வந்துவிடுவேன். சில மாதங்களாக ஒரே ஆட்டோவில் வீட்டுக்கு வந்துபோவதால் ஆட்டோ டிரைவர் பழக்கமாகிவிட்டான். திடீரென ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று என் வீட்டிற்கு வந்தான் அந்த டிரைவர். திருநெல்வேலியில் இருக்கும் தன் அம்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும், ஆட்டோவை வைத்துக்கொண்டு 10,000 ரூபாயைக் கொடுத்து உதவுங்கள்; ஊரிலிருந்து திரும்பியதும் ஆட்டோவை அடமானம் வைத்து பணத்தைக் கொடுத்துவிடுகிறேன் என்றான். பாவமாக இருக்கவே, 10,000 ரூபாய் பணத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தேன். ஆனால், போனவன் திரும்பவே இல்லை. ஆனால், ஆட்டோ உரிமையாளர் என்று போலீஸுடன் வந்த ஒருவர் ஆட்டோவை எடுத்துக்கொண்டு போனார். பரிதாபம் பார்த்த நான் ஆட்டோ அவனுக்குச் சொந்தமானதா, சம்பளத்துக்கு ஓட்டுகிறானா என்பதைக் கூட பார்க்காமல் விட்டது என் தவறுதான்.''

- கே.இராமசாமி, திருச்சி.

ரசீது சரியா இருக்கா..?

என் பணம்; என் அனுபவம்!

''சில மாதங்களுக்கு முன் மின்சார கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி, எங்கள் வீட்டின் மின்சாரத்தைத் துண்டித்தது மின்சார வாரியம். வழக்கமாகவே எப்போதும் சரியான நேரத்தில் கட்டணத்தை மின்சார அலுவலகத்திற்குச் சென்று செலுத்திவிடுவார் என் அம்மா. அவரிடம் கேட்டபோது, கட்டியாச்சே என்று கூறி, அதற்கான ரசீதையும் காண்பித்தார். ஆனால், அந்த ரசீதில் எங்கள் வீட்டின் மின் இணைப்பு எண்ணும், என் அப்பா பெயரும் இல்லை. வேறு எண்ணும், பெயரும்தான் இருந்தது. நான் மின்சார அலுவலகத்திற்கு சென்று கட்டணம் செலுத்தும்போது உங்கள் மின்சார அலுவலர் தவறாக கம்ப்யூட்டரில் பதிவு செய்துவிட்டார். அதனால் வந்த குழப்பம் இது என்று எடுத்துக் கூறினேன். அங்கிருந்த அதிகாரிகளோ, உங்கள் மீதுதான் தவறு. நீங்கள் அப்போதே கட்டண ரசீதில் பெயரும், இணைப்பு நம்பரும் சரியாக இருக்கிறதா என்று பார்த்து இருக்க வேண்டும்.  உரிய கட்டணத்தையும், தாமதமாகச் செலுத்துவதால் அதற்குரிய அபராதத்தையும் சேர்த்து மொத்தமாக கட்டுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். வேறு வழியில்லாமல் தொகையைச் செலுத்திதான் மீண்டும் மின் இணைப்பு பெற்றேன். அந்த சம்பவத்திற்குப் பிறகு, எந்த கட்டணமாக இருந்தாலும் செலுத்திய உடனே ரசீதில் எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்த்துவிடுகிறேன்.''

- தி.உத்தண்டராமன், விருதுநகர்.

என் பணம்; என் அனுபவம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு