பிரீமியம் ஸ்டோரி
அக்ரி கமாடிட்டி!

மிளகு (PEPPER)

##~##
மற்ற நாட்டு மிளகைவிட இந்திய மிளகின் விலை அதிகரிப்பும், குறைந்த ஏற்றுமதி தேவை காரணமாகவும் சென்ற வாரத்தில் மிளகு விலை குறைந்து வர்த்தகமானது. மேலும், உள்நாட்டு சந்தைகளில் தினவரத்து அதிகரித்ததாலும் விலை மேலும் குறைந்தது. கடந்த வாரத்தில் கொச்சின் சந்தைக்கு தினவரத்தாக 30 டன் மிளகு வந்தது. வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் பண்டிகைகள் வர இருப்பதாலும், மிளகின் தேவை அதிகம் என்பதாலும் விலை மேலும் குறையாமல் தடுக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் ஒரு குவிண்டால் மிளகு அக்டோபர் கான்ட்ராக்ட் 43,380 ரூபாய்க்கு வர்த்தகமானது.

ஜீரகம் (JEERA)

சென்ற வாரத்தில் இந்திய ஜீரகத்தை வாங்க வெளிநாட்டு வர்த்தகர்கள் ஆர்வம் காட்டியதால் தேவை அதிகரித்தது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் நடந்துவரும் பிரச்னையின் காரணமாக இந்திய ஜீரகத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்துள்ளது. ஆசிய நாடுகளிலிருந்தும் இந்திய ஜீரகத்திற்கான ஆர்டர்கள் வரத் தொடங்கியிருக்கிறது. ஜீரகம் பயிரிடப்படும் பகுதிகளில் பருவநிலை முன்னேற்றத்துடன் காணப்படுவதால் விளைச்சல் நன்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பால் விலை மேலும் அதிகரிக்காமல் தடுக்கப்பட்டது.

ஜீரகம் அதிகம் விளையும் குஜராத் மாநிலத்தில் நல்ல மழைப்பொழிவின் காரணமாக விளைச்சல் நன்கு இருக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். சென்ற வாரத்தில் கையிருப்பு அதிகமாக இருந்ததால் விலை சிறிது குறைந்தது. சென்ற வாரத்தில் உஞ்ஹா சந்தைக்கு தினவரத்தாக 4,000 பைகள் (ஒரு பை என்பது 55 கிலோ) வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் ஒரு குவிண்டால் ஜீரகம் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் 13,630 ரூபாய்க்கு வர்த்தகமானது.

மஞ்சள் (TURMERIC)

சென்ற வாரத்தில் மஞ்சள் விலை மந்தமாக இருந்ததாலும், அதிக கையிருப்பு இருந்ததாலும் குறைந்து வர்த்தகமானது. இதற்கிடையில் ஏற்றுமதி தேவை சற்று அதிகமானதைத் தொடர்ந்து விலை குறையாமல் தடுக்கப்பட்டது. 2012-2013-ம் ஆண்டில் குறைவான ஏக்கரில்தான் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. குறைந்த பரப்பளவு காரணமாக சென்ற ஆண்டைவிட இந்தாண்டு 40 சதவிகிதம் விளைச்சல் குறையும் என கூறப்படுகிறது. செப்டம்பர் 26 நிலவரப்படி, ஆந்திர மாநிலத்தில் பயிடப்பட்டுள்ள மஞ்சளின் பரப்பளவு சென்ற ஆண்டைவிட (56,528 ஹெக்டர்கள்) 19.7 சதவிகிதம் குறைவாக பயிரிடப்பட்டுள்ளது என ஆந்திர விவசாயத் துறை தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை என்.சி.டி.எக்ஸ். சந்தையில் மஞ்சள் ஒரு குவிண்டால் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் 5,640 ரூபாய்க்கு வர்த்தகமானது.

அக்ரி கமாடிட்டி!

ஏலக்காய் (CARDAMOM)

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் ஏலக்காயின் தேவை மந்தமாக இருந்ததும், கையிருப்பு அதிகரித்ததாலும் விலை குறைந்து வர்த்தகமானது. இடுக்கியில் உள்ள ஸ்பைஸ் போர்டு, ஒரு கிலோ ஏலக்காயின் டிக்கெட் சைஸ் விலையை 50 பைசாவில் இருந்து ஐந்து ரூபாயாக உயர்த்தியதை எதிர்த்து வர்த்தகர்கள் போராடி வருகிறார்கள். புதிய வருடப் பிறப்பு மற்றும் கிருஸ்துமஸ் பண்டிகைகளை முன்னிட்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் ஏலக்காய் தேவை அதிகரிக்கும். இதனால் ஏற்றுமதி தேவையும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு சந்தைகளிலும் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை எம்.சி.எக்ஸ். சந்தையில் ஒரு கிலோ ஏலக்காய் அக்டோபர் கான்ட்ராக்ட் 985 ரூபாய்க்கு வர்த்தகமானது.

மிளகாய் (CHILLI)

அதிக கையிருப்பும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் மிளகாய் தேவை குறைந்ததன் காரணமாக கடந்த வாரத்தில் மிளகாய் விலை குறைந்தே வர்த்தகமானது. குண்டூர் சந்தைக்கு தினவரத்தாக 40,000 பைகள் (ஒரு பை என்பது 45 கிலோ) வந்தன. மிளகாய் அதிகமாக விளையும் இடங்களில் விதைத்தல் மெதுவாக நடந்து வருவதால் மேலும் விலை குறையாமல் தடுக்கப்பட்டது. செப். 26 நிலவரப்படி 1,12,472 ஹெக்டர் பரபளவில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. இதே சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் 1,26,641 ஹெக்டர் பரப்பளவில் மிளகாய் பயிரிடப்பட்டிருந்தது என ஆந்திர விவசாயத் துறை தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை என்.சி.டி.எக்ஸ். சந்தையில் மிளகாய் ஒரு குவிண்டால் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் 5,364 ரூபாய்க்கு வர்த்தகமானது.

-செ.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு