Published:Updated:

பழைய வீடு / ஃப்ளாட்டுக்கு சேவை வரி கட்ட வேண்டுமா?

கேள்வி-பதில்

பிரீமியம் ஸ்டோரி
பழைய வீடு / ஃப்ளாட்டுக்கு சேவை வரி கட்ட வேண்டுமா?
##~##
பழைய தனி வீடு அல்லது பழைய அடுக்குமாடி குடியிருப்பு வீடு வாங்கும்போது சேவை வரி கட்ட வேண்டுமா?

- குமரகுரு, திருச்சி.

- ஆர்.சத்தியநாராயணன், ஆடிட்டர்.

''புதிதாக வீட்டை அல்லது அடுக்குமாடி குடியிருப்பை பதிவு செய்யும்போது மட்டுமே சேவை வரி கட்ட வேண்டிவரும். அந்த வகையில் பழைய தனி வீடு அல்லது பழைய அடுக்குமாடி குடியிருப்பு வீடு வாங்குகிறபோது சேவை வரி கட்ட தேவையில்லை. ஆனால், நீண்ட நாட்களாக விற்காமல் இருந்து பில்டரிடமிருந்து நேரடியாக வாங்கும் வீடு என்றால் சேவை வரி கட்ட வேண்டும்.''  

பழைய வீடு / ஃப்ளாட்டுக்கு சேவை வரி கட்ட வேண்டுமா?

சென்னையில் வசிக்கும்போது மெடிக்ளைம் பாலிசி எடுத்திருந்தேன். தற்போது மும்பையில் வசிக்கிறேன். நான் இங்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால் கிளைம் முழுமையாகக் கிடைக்குமா?

- நீதிதேவன், மும்பை.

அருண் மெஹ்ரா, மார்க்கெட்டிங் அசோசியேட்ஸ், சோழமண்டலம் எம்.எஸ்., ஜெனரல் இன்ஷூரன்ஸ்.  

''மெடிக்ளைம் வழங்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு நகரத்திலும் மருத்துவ சிகிச்சைக்காக சில மருத்துவமனைகளோடு ஒப்பந்தம் செய்துகொள்கின்றன. குறிப்பிட்ட அந்த மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போது மெடிக்ளைம் வழங்கும் நிறுவனமே உங்கள் பாலிசி கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணங்களை கட்டிவிடும். ஒப்பந்தங்களில் குறிப்பிடாத மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தாலும், மெடிக்ளைம் கவரேஜ் முழுமையாக கிளைம் செய்ய முடியும் என்றாலும், ஒவ்வொரு சிகிச்சைக்கும் வரையறுத்துள்ள கட்டணங்களைவிட அதிகமாகச் செலவு செய்யப்பட்டிருந்தால் அதை கிளைம் செய்ய முடியாது. எனவே, நீங்கள் மும்பையில் மருத்துவ சிசிச்சை எடுப்பதில் எந்த கட்டுப்பாடும் கிடையாது. உங்களுக்கான கிளைம் கிடைக்கும்.''

பழைய வீடு / ஃப்ளாட்டுக்கு சேவை வரி கட்ட வேண்டுமா?

நான் வைத்திருக்கும் பங்குகளை அந்த நிறுவனமே திரும்பப் பெறுவதாக அறிவித்தது. நான் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் அந்த பங்குகளின் நிலை என்ன ஆகும்?

- கொங்குராஜ், பொள்ளாச்சி.

ஏ.எஸ்.ராமகிருஷ்ணன், இயக்குநர், ரிலையபிள் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்.

''எந்த நிலைமையில் அந்த பங்குகளை வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அந்த பங்குகளின் நிலைமை இருக்கும். நிறுவனம் இரண்டு விதமான நிலைமைகளில் பங்குகளை திரும்பப் பெறுவதாக அறிவிக்கும். அதன்படி ஒரு நிறுவனத்திடம் அதிகமான பணம் கையிருப்பில் இருந்து, அப்போது அந்த நிறுவனம் பங்குகளை திரும்ப வாங்கும்போது, நீங்கள் பங்குகளை திரும்பத் தரவில்லை என்றாலும் எந்த சிக்கலும் இல்லை. அந்த பங்குகள் தொடர்ந்து பங்குச் சந்தையில் வர்த்தகத்தில் இருக்கும். எப்போது வேண்டுமென்றாலும் விற்பனை செய்துகொள்ள முடியும். ஆனால், அந்த பங்கு, சந்தையிலிருந்து விலகும்போது பங்குகளை திரும்பப் பெறுவதாக அறிவிக்கும்போது பங்குகளை திரும்பத் தந்துவிடுவது நல்லது. அப்படி செய்யாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தைத் தொடர்புகொண்டுதான் முதலீட்டு பணத்தைத் திரும்பப் பெறமுடியும். பங்கு வர்த்தகத்திலிருந்து விலகிய நாளில் அந்த பங்குகளுக்கான மதிப்பு என்னவோ அதன்படி உங்களது முதலீடும் திரும்பக் கிடைக்கும். எனவே, எந்த நிலைமையில் நீங்கள் பங்குகளை வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே விளைவுகள் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியும்.''  

பழைய வீடு / ஃப்ளாட்டுக்கு சேவை வரி கட்ட வேண்டுமா?

போனஸ், டிவிடெண்ட் போன்றவற்றை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியுமா?

- வின்சென்ட், சென்னை.

இ.எம்.சி.பழனியப்பன், சோனா ஃபைனான்ஷியல் சர்வீஸஸ்.

''போனஸ், டிவிடெண்ட் போன்றவற்றை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியாது. நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் எடுக்கும் முடிவுகளின்படியே இவை அறிவிக்கப்படும். இருந்தாலும், நிறுவனத்தின் கையிருப்பு தொகை, நிகர லாபம் இவற்றின் அடிப்படையில் டிவிடெண்ட் மற்றும் போனஸ் அறிவிக்கப்படலாம் என்பதை முன்கூட்டியே ஊகிக்க முடியும். நிறுவனம் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சி திட்டங்களில் இறங்கினால் இவை அறிவிக்கப்படாமலும் போகலாம்.''  

பழைய வீடு / ஃப்ளாட்டுக்கு சேவை வரி கட்ட வேண்டுமா?

குறுகியகால மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் என்று தனியாக இருக்கிறதா?

- சுதாகர், சிதம்பரம்.

விவேக் கார்வா, நிதி ஆலோசகர்.

''மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் குறுகிய கால ஃபண்டுகளை லிக்விட் ஃபண்டுகள் என்று அழைக்கிறோம். இதில், ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை முதலீடு செய்யலாம். இந்த குறுகிய கால முதலீடு திட்டத்தில் நுழைவு மற்றும் வெளியேறும் கட்டணம் கிடையாது. இந்த வகை திட்டங்களில் ஓரிரு நாட்களுக்குக்கூட முதலீடு செய்ய முடியும். ஆண்டுக்கு 6 முதல் 7 சதவிகிதம் வரை வருமானம் கிடைக்கும். லிக்விட் பிளஸ் திட்டங்களில் பத்து நாட்கள், பதினைந்து நாட்கள் என குறுகியகால முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன. எட்டு முதல் ஒன்பது சதவிகிதம் வரை தற்போது வருமானம் கிடைக்கிறது.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு