Published:Updated:

பிஸினஸ் சமூகம் - கவுண்டர்கள்!

பிஸினஸ் சமூகம் - கவுண்டர்கள்!

பிரீமியம் ஸ்டோரி
பிஸினஸ் சமூகம் - கவுண்டர்கள்!
##~##
சி
ல மனிதர்களின் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கும். சில நிறுவனங்களின் வளர்ச்சி நம்மை ஆச்சரியப்படுத்தும். சில சமயங்களில் சில நகரங்களின் வளர்ச்சிகூட நம்மை வியக்க வைக்கும். அப்படி வியக்க வைக்கும் வளர்ச்சி கொண்ட நகரம்தான் திருப்பூர்.

கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கு முன்பே அங்கு பின்னலாடை உற்பத்தி தொடங்கப்பட்டுவிட்டாலும் 1980-க்குப் பிறகுதான் அந்த நகரம் எட்டு கால் பாய்ச்சலில் முன்னேறத் தொடங்கியது. அதிலும் குறிப்பாக, ஏற்றுமதி என்கிற விஷயம் வந்த பிறகுதான் திருப்பூர் நகரம் சுபீட்சத்தில் நிறைந்து வழிய ஆரம்பித்தது. 1985-ல் திருப்பூரின் ஏற்றுமதி வெறும் பத்து கோடி ரூபாய் மட்டுமே. ஆனால், 2009-10-ல் 11,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது. உலகத்தின் எந்த ஒரு நகரமும் இத்தனை பிரம்மாண்டமான வளர்ச்சியை அடைந்திருக்குமா என்பது சந்தேகமே.

வியக்கத்தக்க இந்த வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தவர்கள் பலர். அதில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்கள் கவுண்டர் சமூகத்து மக்கள். அந்த கவுண்டர் சமூகத்திலேயே முக்கியமான காரணமாக இருந்தவர் பாப்பீஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவருமான சக்திவேல்.

இவர் 1947-ல் பொள்ளாச்சிக்கு பக்கத்தில் இருக்கிற செட்டிக்காபாளையம் என்னும் ஊரில் பிறந்தார். விவசாயக் குடும்பம்தான் இவருடையது. ஆனால், இவருடைய தந்தையார் சி.ஏ.ஆறுமுகம் கல்லூரிக்குச் சென்று படித்தவர் என்பதால், தமிழக காவல் துறையில் வேலை பார்த்தார். நேர்மையான அதிகாரியாக இருந்த ஆறுமுகம், திருநெல்வேலியின் எஸ்.பி.யாக இருந்தார்.

ஆறுமுகத்துக்கு மூத்த மகனாக பிறந்தார் சக்திவேல். அவருக்கு அடுத்தபடியாக இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். அப்பா அரசு ஊழியர் என்பதால் அடிக்கடி ஊர் மாற்றல் வந்துகொண்டே இருந்தது. இதனால் சக்திவேலும் பல்வேறு ஊர்களில் உள்ள பள்ளிகளிலும் படித்தார். உலகம் பெரிது என்கிற விசாலமான பார்வை சக்திவேலுக்கு இளம் வயதிலேயே கிடைத்தது ஆச்சரியமான விஷயம்தான்.

பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங்கில் டிப்ளமோ படித்தார் சக்திவேல். படித்து முடித்த சில ஆண்டுகளில், ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா மோட்டார்ஸில் சில ஆண்டுகள் வேலை பார்த்தார். என்றாலும் அவருக்கு மாதச் சம்பளம் வாங்குவது தன் திறமைக்கு மிகக் குறைவான வேலையை செய்வதாகவே பட்டது. சொந்த தொழில் தொடங்கி நடத்த வேண்டும் என்கிற எண்ணமே அவரிடம் எப்போதும் மேலோங்கி இருக்க, 1971-ல் அவர் செய்து வந்த வேலையை விட்டுவிட்டு, திருப்பூருக்கு வந்து சேர்ந்தார், சொந்தமாக பிஸினஸ் ஆரம்பிக்க.

அந்த சமயத்தில்தான் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மெள்ள மெள்ள நுழைந்து கொண்டிருந்தது. திருப்பூருக்கு வந்தவர் தனக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத பின்னலாடை உற்பத்தி பற்றி முழுவதுமாகத் தெரிந்துகொண்டார். அப்போது நாடு முழுக்க ஆயத்த ஆடைகளின் தேவை அதிகமாக இருந்தது. அவற்றை தயாரித்து அளிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதைக் கண்டார். சில ஆண்டுகளிலேயே உற்பத்தி பற்றிய அத்தனை விஷயங்களையும் நன்கு தெரிந்துகொண்ட சக்திவேல், வட நாட்டைச் சேர்ந்த ஒருவருடன் 1978-ல் அசோகா இன்டர்நேஷனல் என்கிற பெயரில் பின்னலாடை நிறுவனத்தைத் தொடங்கினார்.

இந்த நிறுவனம் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே நல்ல வளர்ச்சி கண்டது. முழுக்க முழுக்க உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்வதில் கவனமாக இருந்தது இந்த நிறுவனம். பல்வேறு நகரங்களிலிருந்து ஆயத்த ஆடைகளைக் கேட்டுவரும் ஆர்டர்களை, குறித்த நேரத்திலும் தரமாகவும் சப்ளை செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருந்தார் சக்திவேல்.

ஆனால், 1981-ல் வட நாட்டு பார்ட்னரோடு கருத்து வேறுபாடு தோன்றவே, சக்திவேல் அவரிடமிருந்து பிரிந்தார். இரண்டு, மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்து, ஓரளவு நல்ல வளர்ச்சி கண்டிருந்தும் மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. வங்கி உள்பட பல்வேறு நிறுவனங்களில் வாங்கப்பட்டு இருந்த கடனை திரும்பத் தரவேண்டிய பொறுப்பு அவர் தலை மீது விழுந்தது.  

எத்தனை கஷ்டமிருந்தாலும் யாருக்கும் எந்த குறையும் வைக்க நினைக்காதவர்கள் கவுண்டர் சமூகத்து மக்கள். புதிய பிஸினஸில் பெரிய அளவில் பணம் புழங்காத நிலையிலும் வங்கிக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் தரவேண்டிய பணத்தை அடுத்த சில ஆண்டுகளில் முழுவதுமாக தந்து முடித்தார். தரவேண்டிய கடன் பாக்கியை மட்டும் தந்தால் போதுமா, பிஸினஸில் சாதனை படைக்க வேண்டாமா?

இந்த சிந்தனை சக்திவேலை குடைந்து எடுத்தது. பாப்பீஸ் நிறுவனத்தை ஆரம்பித்தார். அப்போது அவர் கையிலிருந்த முதலீடு வெறும் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே. அதுவரை உற்பத்தியில் மட்டுமே பெரிதாக கவனம் செலுத்தி வந்தவர், அடுத்து உற்பத்தியோடு மார்க்கெட்டிங் துறையிலும் கவனம் காட்ட ஆரம்பித்தார். உள்ளூரில் ஆயத்த ஆடைகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்ததால், இந்தியா முழுக்க எல்லா நகரங்களுக்கும் சென்று ஆர்டர் வாங்கினார். அந்த சமயத்தில் அவர் நேரம், காலம் பார்க்காமல் வேலை பார்த்தார். பல நாட்களில் ஒன்றிரண்டு மணி நேரம் மட்டுமே தூங்க செய்தார். விளைவு, உள்ளூர் மார்க்கெட்டில் மிகப் பெரிய வெற்றி கிடைத்தது.

ஆனால், 1985-ம் ஆண்டுவாக்கில் திருப்பூரிலிருந்து மிகச் சில தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். உள்ளூர் மார்க்கெட்டுக்கான உற்பத்தியும் சப்ளையும் ஒருபக்கமிருக்க, வெளிநாட்டுக்குத் தேவையான ஏற்றுமதியை ஏன் செய்யக்கூடாது என்கிற யோசனை சக்திவேலின் மனதில் பிறந்தது. என்றாலும் அந்த சமயத்தில் அவருக்கு வெளிநாடுகளில் எப்படி பிஸினஸ் செய்ய வேண்டும் என்று தெரியாது. என்ன விலைக்கு பொருளை விற்க வேண்டும் என்றும் தெரியாது. பிஸினஸ் தொடர்பான கான்ட்ராக்ட்டுகளும் அப்போது சிக்கலாக, எளிதில் புரிந்துகொள்ள முடியாததாகவே இருந்தது. இப்படி தடை பல இருந்தபோதிலும் அவற்றைக் கண்டு அஞ்சி நிற்காமல், ஒவ்வொன்றாக கடந்து வந்தார். தைரியமாக பல்வேறு வெளிநாடுகளுக்குச் சென்று ஆர்டர் வாங்கி, அவர்கள் கேட்ட தரத்தில், அதே நேரத்தில் குறைவான விலையிலும் குறித்த நேரத்திலும் தந்ததன் விளைவு, அவருடைய நிறுவனம் அசூர வேகத்தில் வளர்ந்தது. உள்ளூரில் மட்டுமே விற்பனையாகி வந்த அவரது தயாரிப்பு, பிற்பாடு அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா நாட்டு மக்களால் பிரியப்பட்டு வாங்கும் பிராண்ட்-ஆக மாறியது. இன்றைக்கு அவருடைய பாப்பீஸ் நிறுவனத்தின் ஆண்டு டேர்ன் ஓவர் மட்டும் பல நூறு கோடி.

தான் வளர்ந்தால் மட்டும் போதாது; தன்னோடு இருப்பவர்களும் உயர வேண்டும் என்கிற சிந்தனை கொண்டவர் சக்திவேல். பின்னலாடைத் தொழிலுக்கு வரும் புதிய தொழில்முனைவர்கள், தான் பட்ட கஷ்டத்தை படக்கூடாது என்பதற்காக பல வகையிலும் உதவி செய்வார். வங்கியில் கடன் வாங்கித் தருவதில் ஆரம்பித்து, வெளிநாட்டுக்கு பொருள் சென்று சேர்வது வரை எந்த சிக்கல் வந்தாலும் உரிய யோசனை சொல்லி பிரச்னையிலிருந்து மீட்பார்.

திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர்கள் பல்வேறு கஷ்டங்களைச் சந்தித்து வந்தபோது, அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தை தொடங்கினார் சக்திவேல். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் உயர்ந்தபோது இந்திய அரசாங்கம் தலையிட்டு, தீர்வு காண வைத்ததில் இவருடைய பங்கு அதிகம்.

திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட்வேர் இண்டஸ்ட்ரியல் காம்ப்ளக்ஸ், நிட்வே டெக்னாலஜி மிஷன், நேதாஜி அப்பாரல் பார்க் என பல்வேறு அமைப்புகள் தொடங்க காரணமாக இருந்த இவர், இன்றைக்கு ஓட்டல் பிஸினஸிலும் கால் பதித்து வருகிறார். திருப்பூர், ஊட்டி, ராமேஸ்வரத்தில் ஏற்கெனவே விடுதிகளை நடத்திவரும் இவர், அடுத்து கும்பகோணம், மதுரை, கொச்சி ஆகிய ஊர்களில் புதிய விடுதிகளைத் தொடங்குவதற்கான முயற்சியை செய்து வருகிறார்.

கடின உழைப்புக்குப் பெயர் போன கவுண்டர் சமூகத்து மக்களுக்கு சக்திவேல் ஒரு சிறந்த உதாரணம் என்பதில் சந்தேகமே இல்லை.

(அறிவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு