பிரீமியம் ஸ்டோரி

தீபாவளிக்குள் நிஃப்டி 6000!

ஷேர்லக் ஹோம்ஸ்

''வாரும், உம்மைத்தான் இத்தனை நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்!'' என ஷேர்லக்கை வரவேற்று உட்கார வைத்தோம். ''நேரத்துக்கு வந்திருப்பேன். ஆனால், இன்றும் சந்தை உற்சாகமாக ஏற்றம் காணவே, நண்பர்களிடமிருந்து நிறைய போன்கால். எனவேதான் கொஞ்சம் லேட்'' என்றவரிடம், ''சந்தை அடுத்து எப்படிப் போகும்?'' என்று கேட்டோம்.

''ஒவ்வொரு அனலிஸ்ட்டும் ஒவ்வொரு இலக்கை சொல்கிறார்கள். மெக்கையர் நிறுவனம் 6600 வரை போகும் என்கிறது. இன்னும் சில நிறுவனங்கள் 6300 என்கின்றன. ஆனால், எந்த நிறுவனமும் சந்தை இப்போதைக்கு பெரிதாக இறங்கும் என்று சொல்லவில்லை. செப்டம்பர் மாத இறுதியில் 5600 புள்ளிகளுக்கு மேலே நிஃப்டி முடிவடையும் பட்சத்தில் சந்தை மேலே செல்லதான் வாய்ப்பு அதிகம் என்பதே பல அனலிஸ்ட்களின் கருத்தாக இருந்தது. அந்த நிலையை தாண்டிதான் நிஃப்டி முடிந்திருக்கிறது. எனவே, இந்த ஏற்றம் தொடரவே வாய்ப்பு அதிகம். சில எக்ஸ்பர்ட்டுகள், இந்த ஆண்டு இறுதிக்குள் 6000 புள்ளிகளைத் தொடும் என்கிறார்கள். இன்னும் சிலர் வருகிற தீபாவளிக்குள் சந்தை 6000 புள்ளிகளைத் தொட வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள். தீபாவளி அன்று எம்.சி.எக்ஸ். எக்ஸ்சேஞ்ச் துவங்கலாம் என்பதால் சந்தை அதிக ஏற்றம் அடைய வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை சந்தை கொஞ்சம் இறங்கினாலும் முதலீட்டாளர்கள் பெரிய அளவில் கவலைபடத் தேவையில்லை. டிரேடர்கள் மட்டும் சிறிது ஜாக்கிரதையாக இருப்பது நல்லது!'' என்றவருக்கு சுடச்சுட வாழைக்காய் பஜ்ஜியும் தேங்காய் சட்னியும் தந்தோம். பஜ்ஜியை ரசித்து சாப்பிட்டவர் அடுத்த செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.

''மகாராஷ்ட்ராவில் மாபெரும் ஊழல் நடந்திருக்கிறது. ஊழல் தொகை பல ஆயிரம் கோடி ரூபாயாம். நம் நாட்டின் ஜி.டி.பி. அதிகரிக்கலாம். ஆனால், அதற்கு போட்டி போட்டுக் கொண்டு ஊழல் தொகையும் அதிகரிப்பது ஆரோக்கியமான விஷயமல்ல. இந்த ஊழல் விவகாரம் வெளியாகக் காரணம் சரத்பவாருக்கும் அஜித்பவாருக்கும் இடைய உள்ள தனிப்பட்ட சண்டை என்கிறார்கள் சிலர். இந்த சர்ச்சையால் சில பங்குகள் சரிய வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள் மும்பையில் இருக்கும் சந்தை புரோக்கர் நண்பர்கள்.  அதாவது, சரத்பவாருக்கு ஐ.ஆர்.பி., ஹெச்.சி.சி., ஹெச்.டி. ஐ.எல். உள்ளிட்ட சில நிறுவனங்களில் பினாமி மூலமாக பங்கு இருக்கிறதாம். அது எப்படி வந்தது  உள்ளிட்ட பல தகவல்கள் அஜித்பவாருக்கு தெரியுமாம். இந்த தகவல்கள் விரைவில் வெளியாகும் பட்சத்தில் இந்த பங்குகள் உள்பட இன்னும் சில பங்குகளின் விலை அதிரும். எதற்கும் எச்சரிக்கையாக இருக்கலாம்!'' என்றார்.

''சிமென்ட் நிறுவனங்களின் பங்கு விலை திடீரென உயர்ந்திருக்கிறதே!'' என்றோம்.

##~##
''இந்தியாவில் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் திட்டங்களுக்கான முதலீடு கணிசமாக குறைந்துள்ளது என்பது பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. இந்நிலையில் சுமார் பத்து சிமென்ட் நிறுவனப் பங்குகளின் விலை இதுவரை இல்லாத வகையில் அவற்றின் 52 வார உச்சபட்ச விலையை தாண்டி வர்த்தகமாகி வருகின்றன. குறிப்பாக ஏ.சி.சி, அம்புஜா சிமென்ட்ஸ், ஆர்.சி.சி. சிமென்ட்ஸ், ஸ்ரீ சிமென்ட், அல்ட்ராடெக் சிமென்ட், ஜே.கே. லஷ்மி சிமென்ட் உள்ளிட்ட சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. டீசல் மற்றும் நிலக்கரி விலையை பொறுத்தே சிமென்ட் நிறுவனங்களின் செயல்பாடு இருக்கிறது என்பதால் இந்த இரு கமாடிட்டிகளின் விலையை கவனித்து முதலீடு செய்வது நல்லது'' என்றார்.

பஜ்ஜியை சாப்பிட்டு முடித்தவருக்கு ஏலக்காய் டீ தந்தோம். அதை ரசித்துக் குடித்தவர், அடுத்த செய்தி சொல்ல ஆரம்பித்தார்.

''இந்தியாவின் மிகப் பெரிய பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி.-ஐ கிரெடிட் சூஸே, மெரில் லின்ச், ஜே.பி. மார்கன் மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் என நான்கு பெரிய தரகு நிறுவனங்கள் அண்மையில் தரமிறக்கி இருக்கிறது. இந்நிலையில் நடப்பு மாதத்தில் சென்செக்ஸ் 6% அதிகரித்துள்ள நிலையில் எல் அண்ட் டி பங்கின் விலை சுமார் 18% உயர்ந்திருக்கிறது. தரகு நிறுவனங்கள் என்னத்தை வேண்டுமானாலும் சொல்லட்டும். எங்கள் ஆதரவு எல் அண்ட் டி-க்குதான் என முதலீட்டாளர்கள் சொல்வதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது'' என்று அதிசயித்தார்.

ஷேர்லக் ஹோம்ஸ்
ஷேர்லக் ஹோம்ஸ்

''டிரேடிங் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிற கௌதம் அதானி கஷ்ட காலத்தில் இருக்கிறார் போலிருக்கே!'' என்றோம்.

''ஆமாம், அதானி பவர் மேலும் 7 கோடி பங்குகளை அடமானம் வைத்துள்ளது. புதிதாக அடமானம் வைக்கப்பட்ட 3.25% பங்குகளோடு, இந்த நிறுவனம் அதனிடம் இருக்கும் மொத்த பங்கு மூலதனத்தில் 18.24% பங்குகளை அடமானம் வைத்திருக்கிறது. இந்த பங்குகளில் முதலீடு செய்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது'' என்று எச்சரித்தவர், இன்னொரு எச்சரிக்கை செய்தியையும் சொன்னார்.

''இரா கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை செயற்கையாக விலை ஏற்றியதற்காக விஜய் ரத்தோட் மற்றும் தேஜாஸ் ஜலானிக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004, மார்ச் 17 முதல் நவம்பர் 12 வரை நடந்த விலை மோசடிக்காக செபி அமைப்பு இப்போது அபராதம் விதித்துள்ளது. செத்த எலியைத் தோண்டி எடுத்து, தண்டனை தரும் வேலையை என்றைக்குத்தான் நிறுத்தப் போகிறார்களோ'' என்று புலம்பினார் ஷேர்லக்.

''முறைகேடுகளுக்குத் தண்டனை தருகிற செபியின் ஆக்ஷன் இருக்கட்டும். இப்போது செபியிலேயே முறைகேடு நடந்திருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறதே!'' என்றோம்.

ஷேர்லக் ஹோம்ஸ்

''உண்மைதான். கடந்த 2011 பிப்ரவரியில் செபியின் தலைவராக யூ.கே. சின்ஹா நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், சின்ஹாவுக்காக சட்டம் வளைக்கபட்டிருப்பதாகவும் பொது நல வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ளது.

நீதிபதி எஸ்.எஸ். நிஜார் தலைமையிலான பெஞ்ச் இந்த புகார் பற்றி நான்கு வாரத்தில் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சந்தை உயர்ந்துவரும் சமயத்தில் அதன் மீது எல்லோருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் முகமாக நடவடிக்கை எடுக்காமல் இது மாதிரியான செய்திகள் வருவது யாருக்கும் நல்லதல்ல'' என்றவர், புறப்படும் முன்பு இனிப்பான செய்தி ஒன்றையும் சொன்னார்.

''இன்ஷூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடு 26 சதவிகிதத்திலிருந்து 49 சதவிகிதமாக மாறலாம். இன்னும் சிறிது நேரத்தில் ஷேர் டிப்ஸ் அனுப்பி வைக்கிறேன்'' என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினார் ஷேர்லக்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு