மியூச்சுவல் ஃபண்ட்
Published:Updated:

என் பணம்; என் அனுபவம்!

என் பணம்; என் அனுபவம்!

என் பணம்; என் அனுபவம்!


எண்ணிப் பார்த்து வாங்கணும்!

##~##
மீபத்தில் என் வங்கிக் கணக்கிலிருந்து மொத்தமாகப் பணத்தை எடுத்து, நகைக் கடனுக்காக அருகிலுள்ள வேறொரு வங்கியில் கட்ட வேண்டியிருந்தது. அதற்காக என் வங்கியிலிருந்து பணம் எடுத்தபோது, 500 ரூபாய், 1,000 ரூபாய் கட்டுகளாகக் கொடுத்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், சரியாகத்தான் தந்திருப்பார்கள் என்கிற நம்பிக்கையில் பணத்தை எண்ணிப் பார்க்காமல் எடுத்துச் சென்றுவிட்டேன். அதை அப்படியே நகைக் கடனுக்காக கொடுத்தபோது பணத்தை எண்ணிப் பார்த்த அந்த வங்கி ஊழியர், 1,000 ரூபாய் கட்டில் இரண்டு ஐநூறு ரூபாய் கலந்து இருப்பதாகவும், மொத்த பணத்தில் 1,000 ரூபாய் குறைவதாகவும் சொன்னார். உடனே பணம் எடுத்த வங்கியில் சென்று கேட்டேன். நாங்கள் சரியாகத்தான் தந்தோம். பணம் வாங்கியவுடன் எண்ணிப் பார்த்திருக்கலாமே என்றனர். இதற்காக யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் வங்கியிலிருந்து பணத்தைப் பெற்றாலும், தனிப்பட்ட ஒருவரிடமிருந்து பெற்றாலும் எண்ணிப் பார்த்தே வாங்குகிறேன்.

- எம்.ராஜம்மாள், விருத்தாசலம்.

என் பணம்; என் அனுபவம்!


மனக்கணக்கு தப்பாகலாம்!

மீபத்தில் காய்கறி, மளிகைப் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றேன். கூட்டம் அதிகமாக இருந்ததால் கடைக்காரர் பம்பரமாக இயங்கிக்கொண்டிருந்தார். தேவையான பொருட்களை வாங்கியதும் கடைக்காரர் அவரைக்காய், வெண்டைக்காய் என மின்னல் வேகத்தில் மனக்கணக்காகவே கணக்குப் போட்டு மொத்தமாக 120 ரூபாய் கொடுங்க என்றார். கணக்கு சரியாக போட்டாரா என்பதில் சந்தேகம் வரவே, ஒரு துண்டு சீட்டில் எழுதிக்கொடுங்க என்று கேட்டேன். என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தவர், பில் போட்டு தரணும்னா சாவகாசமா வாங்க மேடம் என்று திட்டினார். நான் பொறுமையாகவே மறுபடியும் கேட்டதால் வேறு வழியில்லாமல் எழுதிக் கொடுத்தார். கணக்கை கூட்டிப் பார்த்தால், 105 ரூபாய்தான் வந்தது. நானும் அவசரத்தில் அவர் கேட்ட காசைக் கொடுத்துவிட்டு வந்திருந்தால் எனக்கு நஷ்டம் வந்திருக்கும். 15 ரூபாய் பெரிய காசு இல்லையென்று மற்றவர்கள் சொன்னாலும், ஐம்பது பைசாவாக இருந்தாலும் தேவையில்லாமல் ஏன் விடணும்?

- சரஸ்வதி குருமூர்த்தி, சென்னை.

என் பணம்; என் அனுபவம்!


போலி கண்ணீர்... உஷார்!

ன் கணவர் நகை அடகுக் கடை நடத்தி வருகிறார். அவர் வெளிவேலையாகப் போகும்போது நான் கடையைப் பார்த்துக்கொள்வேன். சமீபத்தில் நான் கடையிலிருந்த நேரம் ஒரு பெண், நகை அடகு வைக்க வந்தார். அவரை நான் பார்த்ததே இல்லை என்பதால் அறிமுகம் இல்லாதவர்களுக்குப் பணம் தருவதில்லை என்று சொல்லிவிட்டேன். அந்த பெண்ணோ விடுவதாக இல்லை. தன் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று அழுது, ஆர்ப்பாட்டம் செய்தார். தன் கணவர் இன்று வந்துவிடுவார்; அவர் வந்தவுடன் நகையைத் திருப்பிக்கொள்கிறேன். ஒரு பவுன் செயினுக்கு 5,000 ரூபாய் மட்டும் கொடுத்தாலே போதும் என்றாள். பார்க்கவே பரிதாபமாக இருக்க, நான் 5,000 ரூபாயைக் கொடுத்து அனுப்பினேன். மாலையில் என் கணவர் வந்ததும் விவரம் கூறினேன். நகையை வாங்கி பரிசோதித்துப் பார்த்தவர், அது போலி நகை என்று தெரிந்ததும் என்னை கடுமையாகத் திட்டினார். ஏமாற்றுகிறவர்கள் என்ன வேஷம் வேண்டுமானாலும் போடுவார்கள். நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.  

- பா.கவிதா, காரைக்குடி.

என் பணம்; என் அனுபவம்!


ஃபிராடு வேலைவாய்ப்பு நிறுவனம்!

ன் உறவினர் பையன் சமீபத்தில் என்னை சந்தித்து, தனக்கு வங்கியில் வேலை கிடைத்திருப்பதாகச் சொன்னான். அடுத்த சில நாட்களில் அந்த வங்கியின் தலைமை அலுவலகத்துக்குச் சென்று அப்பாயின்மென்ட் லெட்டர் வாங்க வேண்டியதுதான் பாக்கி என்றான். அவனை வாழ்த்தி அனுப்பினேன். கடந்த வாரம் மீண்டும் அவன் என் வீட்டுக்கு வந்தான். வங்கி வேலை எப்படி இருக்கு? என்று நான் கேட்க, நடந்ததைச் சொன்னான். உண்மையில் அவனை இன்டர்வியூ செய்தது அந்த வங்கி அல்ல; அந்த வங்கியின் பெயரைச் சொல்லி வேறு ஒரு நிறுவனம் இன்டர்வியூ செய்ததோடு, இந்த லெட்டரை வங்கியில் தந்தால் அப்பாயின்மென்ட் ஆர்டர் தந்துவிடுவார்கள் என்று சொல்லி, 25 ஆயிரம் ரூபாயையும் வாங்கிவிட்டது. அந்த அப்பாயின்மென்ட் லெட்டரை எடுத்துக்கொண்டு வங்கித் தலைமை அலுவலகத்திற்குப் போனபிறகு, அது ஒரு ஃபிராடு நிறுவனம்; இந்த நிறுவனத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; வங்கித் தேர்வின் மூலமாகத்தான் ஆட்களை எடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். வேலை விஷயம் என்பதால் காதும் காதும் வைத்த மாதிரி காரியத்தை முடித்துவிடலாம் என்று பார்த்தால், ஏமாந்ததுதான் மிச்சம்.

- முருகேசன், மதுரை.

என் பணம்; என் அனுபவம்!