Published:Updated:

வேல்யூ இன்வெஸ்டிங்! - 13

முதலீடு

வேல்யூ இன்வெஸ்டிங்! - 13

நிறைய வாசகர்கள் ஒரு கம்பெனியை உதாரணமாக வைத்து வேல்யூ இன்வெஸ்டிங்கை புரிய வைத்தால் பரவாயில்லை என்று தொடர்ந்து சொல்லி வருகின்றார்கள். அந்த லெவலை நாம் இந்த தொடரில் இன்னும் சென்றடையவில்லை என்றாலும், தொடர்ந்து கேட்கப்படுவதால் இந்த வாரம் அனைவருக்கும் தெரிந்த ஒரு கம்பெனியை வைத்து அது எப்படி வேல்யூ இன்வெஸ்டிங் என்ற கோட்பாட்டினுள் பெர்ஃபெக்ட்டாக அடங்குகின்றது என்பதையும், அது எந்த விலையில் விற்கும்போது வேல்யூ இன்வெஸ்டர்கள் அதை வாங்குவார்கள் என்றும் பார்ப்போம்.

வேல்யூ இன்வெஸ்டிங்! - 13

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நாம் பார்க்கப்போகும் கம்பெனி ஹிந்துஸ்தான் யூனிலீவர். என்னது! ஹிந்துஸ்தான் யூனிலீவர் வேல்யூ இன்வெஸ்டிங்கிற்கு உகந்த கம்பெனியா என்று ஆச்சரியப்படுகின்றீர்களா? இல்லையென்றால் இவ்வளவு சுலபமாகவா வேல்யூ இன்வெஸ்டிங் கம்பெனி கண்ணில் தென்படும் என்று ஆச்சரியப்படுகின்றீர்களா?

வேல்யூ இன்வெஸ்டிங்கை முழுவதுமாகக் கடைப்பிடிக்கும் வாரன் பஃபெட்டே ஆரம்ப காலத்தில் வேல்யூ இன்வெஸ்டிங்கிற்கு தகுதியான கம்பெனிகளை தேடுவது வைக்கோல்போரில் ஊசியைத்தேடுவதற்குச் சமம் என்று சொல்லியிருக்கிறார்.  அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க அவரே கண்ணுக்கு முன்னே டேபிள் மீது இருக்கும் ஊசியை விட்டுவிட்டு எதுக்குங்க வைக்கோல்போரினுள் இருக்கும் ஊசியைத் தேடிக்கொண்டு இருக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். ஹிந்துஸ்தான் யூனிலீவர் வேல்யூ இன்வெஸ்டிங்கிற்கு உகந்த கம்பெனிதான். எந்த விலையில் அது வேல்யூ இன்வெஸ்டிங்கிற்கு உகந்தது என்பதையும் கணக்கில் வைத்துக்கொண்டு நீங்கள் அதைப் பார்க்க வேண்டும்.

ஹிந்துஸ்தான் யூனிலீவரை நாம் வேல்யூ இன்வெஸ்டிங் கோட்பாட்டின்படி அலசுவோம். ஏற்கெனவே நான் சொன்னதைப்போல், வேல்யூ இன்வெஸ்டிங் என்ற கான்செப்ட் பெஞ்சமின் கிரகாம் காலத்திலிருந்து பல்வேறு நபர்களால் பல்வேறு வெற்றிகரமான டெக்னிக்குகள் புதிது புதிதாய்ச் சேர்ப்பதன் மூலம் வளர்க்கப்பட்டது. இது ஒரு ஸ்டைல். கணக்குவழக்குகளைவிட கொள்கைகள் முக்கியம் என்பதுதான் இதன் தாத்பர்யம்.

ஏன் இதைத் திரும்பத்திரும்பச் சொல்கின்றேன் என்றால், கொள்கைகளுக்கும் ஃபார்முலாக்களுக்கும் இடையே வித்தியாசம் நிறையவே உண்டு. ஃபார்முலாக்கள் மிகவும் கடுமையானதாக இருக்கும். கொள்கைகள் காலத்திற்கேற்ப மேம்பட்ட முடிவுகளை எட்டுவதற்காக சற்று தளர்த்தவும் அதிகரிக்கவும் மாற்றவும் முடிவதாக இருக்கும். அதுபோன்ற வேல்யூ இன்வெஸ்டிங் கொள்கைகளை வைத்து நாம் ஹிந்துஸ்தான் யூனிலீவரை ஆராய்வோம்.

நல்ல கம்பெனி என்பது குறைந்தபட்ச கடனுடனோ அல்லது கடனே வாங்காமலோ அந்த கம்பெனியில் போட்ட முதலீட்டுக்கு நல்ல லாபத்தைத் தரவேண்டும்.  ஹிந்துஸ்தான் யூனிலீவர் கடந்த 12 வருடங்களாகவே கிட்டத்தட்ட 30 சதவிகிதத்துக்கும் மேலான லாபத்தைத் தந்துவருகிறது (ஆர்.ஓ.இ.). கடந்த ஐந்து வருட அளவீட்டில் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட சராசரி லாபத்தினைத் தந்துள்ளது. அதிவேக லாப வளர்ச்சி வந்ததற்குப் பின் கடன் என்பது கொஞ்சம் வாங்கப்பட்டு அடைக்கவும் பட்டுவிட்டது. அதன் பின்னரும் லாப அளவு நன்றாகவே இருக்கிறது. கடன் என்பதை வேல்யூ இன்வெஸ்டிங்கில் ஏன் மிகவும் வெறுப்புடன் பார்க்கிறார்கள் என்றால், கடன் வாங்கித் தொழில் செய்யும்போது ஏதாவதொரு காரணத்தால் லாபம் பார்க்க முடியாமல் போனால் நிலைமை சரசரவென மோசமாகிவிட வாய்ப்புள்ளது. கடனுக்கு வட்டி கட்டாமலோ, கடன் தவணைத் தொகையைத் திருப்பிக்கட்ட முடியாமல் போனாலோ நிலைமை இன்னமும் மோசமாகும். நாம் செய்வது வேல்யூ இன்வெஸ்டிங். தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குகளே இதனுள் வரும். கடன் வாங்கிய கம்பெனிகளை இந்த ஆட்டத்தில் சேர்த்துக்கொள்வது மிகவும் கடினம்.

வேல்யூ இன்வெஸ்டிங்! - 13

நல்ல கம்பெனி என்பது அதற்குத் தேவைப்படும் பணத்தைவிட மிக அதிகமான பணத்தைத் தொழிலிலிருந்தே சம்பாதித்துக்கொள்ளும் என்பது இரண்டாவதாகப் பார்க்க வேண்டிய முக்கிய

அம்சம் வேல்யூ இன்வெஸ்டிங்கில். ஹிந்துஸ்தான் லீவர் கடந்த 14 வருடத்தில் சராசரியாக சம்பாதித்தப் பணத்தில் இரண்டரை ஆண்டு சம்பாத்தியத்தையே மறுமுதலீடாகச் செய்துள்ளது. அதாவது, புதிய பிளான்ட்களை நிறுவ கடந்த 14 ஆண்டு சராசரி வருமானத்தில் இரண்டரை ஆண்டு வருமானமே போதுமானதாக இருந்துள்ளது. இந்த குறைந்தபட்ச முதலீட்டை வைத்து அதிகபட்ச லாபம் பார்த்துள்ளது. இது நிச்சயம் நல்ல கம்பெனிதானே! இதுவும் மிகச் சாதாரணமான ஒன்றே. நிறைய புதிய முதலீடுகளைச் செய்துகொண்டேயிருந்தால்தான் லாபம் தொடர்ந்து வரும் என்ற நிலைமையில் இருக்கும் தொழில் மிகவும் டேஞ்சரானது இல்லையா? லாபம் வரும்! முதல் திரும்ப வருமா? என்ற கேள்வி நியாயமானதுதானே. நல்ல தொழில் என்பது குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கும் திறன் கொண்டதுதான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதானே!

சரி, ஒரு தடவை போட்ட முதலீட்டை வைத்தே நீண்ட நாள் தொழில் நடத்த முடியாதே. விரிவாக்கங்கள் செய்யும்போது புது முதலீடுகள் தேவைதானே! அதற்குக்கூட புதிய முதலீடு செய்யக்கூடாதா என்று கேட்பீர்கள், இல்லையா? நல்ல கம்பெனி என்பது ஒவ்வொரு முறையும் (தான் சம்பாதித்தப் பணத்தைக்கொண்டோ/ புதிய முதலீடுகளைத் திரட்டுவதன் மூலமோ)  அதிகப்படியான முதலீடுகளை அது செய்துவரும் தொழிலில் செய்யும்போது ஏற்கெனவே அந்த தொழிலில் போடப்பட்டிருக்கும் முதலுக்கு அந்த கம்பெனிக்குக் கிடைக்கும் ரிட்டர்னைவிட மிக அதிகப்படியான ரிட்டர்னை சம்பாதிக்கவேண்டும்.  அப்படி சம்பாதிக்க இயலாவிட்டால் லாபத்தில் பெரும்பங்கை பங்குதாரர்களுக்குக் கொடுக்கவேண்டும். இது ரொம்ப சிம்பிளான விஷயம். கார்ப்பரேட்டை மனதில் வைத்துக்கொண்டு இதைப் படித்தால் உங்களுக்குப் புரியாது. இப்ப பாருங்க உங்களுக்குச் சுலபமாய் புரியும் உதாரணம் ஒன்று சொல்கின்றேன்.

நீங்களும் நானும் பார்ட்னராக (பயப்படாதீங்க, உதாரணத்துக்குத்தான்!) சேர்ந்து ஆளுக்கு ஒரு லட்சம் போட்டு தொழில் ஆரம்பிக்கின்றோம். அபரிமிதமான நிகர லாபமாக வருஷத்துக்கு பத்து லட்சம் பத்து வருஷத்துக்கு வருகின்றது. லாபத்தில் வருடா வருடம் நீங்களும் நானும் ஒரு லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு மீதமுள்ள தொகையை தொழிலிலேயே போட்டுவிடுகின்றோம். அதாவது, பத்து வருடத்தில் நானும் நீங்களும் 10 ஙீ 2 = 20 லட்சம் வெளியே எடுத்துள்ளோம். போட்ட முதல் 2 லட்சம். லாபம் 10 ஙீ 10 = 1 கோடி. வெளியே எடுத்த 20 லட்சத்தைக் கழித்ததால் 1.02 கோடி - 20 லட்சம் = 82 லட்சம் தொழிலில் இருக்கின்றது. இந்த வருஷம் தீவிரமாய் உட்கார்ந்து கணக்குப் பார்த்தால் தொழிலுக்கு வெறும் 12 லட்சமே போதுமானதாய் இருக்கின்றது. நாம்தான் வீணாக 70 லட்சத்தை விட்டுவைத்திருக்கின்றோம். லாபம்தானே இருக்கட்டும் என்று.

##~##
கடந்த ஐந்து வருஷத்தைப் பார்த்தாலும், அதே அளவு (12 லட்சமே) பணமே தொழில் நடக்கப் போதுமானதாக இருந்தது என்று வைத்துக்கொள்வோம்.  உடனடியாக நாம் என்ன செய்வோம்? 70 லட்சத்தை ஆளுக்குப் பாதியாய் (நம் பார்ட்னர்ஷிப் 50:50) 35 லட்சமாகப் பிரித்து தொழிலிருந்து வெளியே எடுத்துவிடுவோம் இல்லையா? இல்லையா பின்னே? தொழிலுக்குத் தேவைப்படாத பணத்தை எதுக்குத் தொழிலில் விட்டுவைக்க வேண்டும். 35 லட்சத்தைக் கொடுத்தால் நீங்கள் ஷேர் மார்க்கெட்டில் போட்டுப் புரட்டுவீர்கள். நான் தங்கமும் நிலமும் வாங்கிவைப்பேன்!. அதுதான் தாத்பரியம்.

கம்பெனிக்குத் தேவைப்படாத பணம் (ஒரு 10 வருட அளவீட்டில் - இங்கே தேவைப்படாது என்பதற்கு அர்த்தம் - ஸ்கோப் இல்லை, பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியான லாபமே கிடைக்கும் என்ற நிலை என வைத்துக்கொள்ள வேண்டும்) கம்பெனியில் இருப்பதில் அர்த்தமில்லை. கம்பெனிகள் கையில் இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு பெரிய லாபம் பார்க்க முடியாவிட்டால் பேசாமல் அதைத் திரும்பவும் முதலீட்டாளர்களுக்குக் கொடுத்துவிடவேண்டும் என்பதுதான் சரியான முடிவாக இருக்கும்.  ஹிந்துஸ்தான் யூனிலீவர் அதிகப்படியான பணம் முதலீட்டுக்குத் தேவைப்படாததால் டிவிடெண்டை தொடர்ந்து வாரி வழங்கிக்கொண்டுதான் இருக்கிறது.

இத்தோடு முடிந்துவிடவில்லை, ஹிந்துஸ்தான் யூனிலீவரின் வேல்யூ இன்வெஸ்டிங் தகுதிகள் இன்னும் இருக்கிறது. அவற்றை அடுத்த வாரம் பார்ப்போம்.

ஹலோ சார், என்ன போனை எடுக்கறீங்க? ஹிந்துஸ்தான் யூனிலீவரை வாங்கிப் போடறதுக்கா?  நாம வேல்யூ இன்வெஸ்டிங்கைப் பத்தி பார்த்துக்கிட்டிருக்கோம். மதிப்பைவிட விலை குறைவா இருக்கறப்பதான் முதலீடு செய்யணும். அதைத் தெரிஞ்சுக்காம வாங்கிப் போட்டுறாதீங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!

(முதலிடுவோம்)