Published:Updated:

அழகா செய்தால் அள்ளலாம் லாபம்! - 4

மினி தொடர் - அக்ரி பிஸினஸ்

- ஆர்.குமரேசன்

நல்ல வருமானம் தரும் நர்சரி!

அழகா செய்தால் அள்ளலாம் லாபம்! - 4

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அழகா செய்தால் அள்ளலாம் லாபம்! - 4

சொந்த வீடாக இருந்தாலும் சரி, சின்ன ஃப்ளாட்டாக இருந்தாலும் சரி வீட்டுக்கு வெளியே நாலு மலர்ச் செடிகள் இருந்தால்தான் அழகு. காலையிலும் மாலையிலும் அந்த செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி, மலர் பறித்து, அழகு பார்ப்பதே மனதுக்குப் பிடித்த ரம்மியமான அனுபவம். இந்த செடிகள் உருவாக்கப்படுவது நர்சரி தோட்டங்களில்தான். இன்றைக்கு ஒரு தொழிலாகவே மாறிவிட்ட இந்த நர்சரிகளை நீங்களும் நடத்தினால் மாதாமாதம் பக்காவாக பணம் சம்பாதிக்கலாம் என்பது பலருக்கும் தெரியாத உண்மை!

பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கவும், புவி வெப்பமடைவதைக் குறைப்பதற்கும் மனிதனிடம் உள்ள ஒரே ஆயுதம், மரங்கள். காணும் இடமெல்லாம் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற விழிப்பு உணர்வு தற்போது அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஆயிரக்கணக்கில் வீடுகளும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இந்த குடியிருப்புகளிலும் அலங்காரச் செடிகள், மரக்கன்றுகளின் தேவை இருந்துகொண்டே உள்ளது. இந்த சந்தை தேவைதான் நர்சரி தொழிலுக்கான அடிப்படை.

நர்சரி தோட்டத்தை உருவாக்குவது, பராமரிப்பு, மார்க்கெட்டிங் உள்பட அனைத்தையும் பற்றி பேசுகிறார் திண்டுக்கல் விவேகானந்தா நகரில் பல ஆண்டுகளாக நர்சரி வைத்துள்ள முத்துராமன்.

ரிஸ்க் இல்லாத தொழில்!

##~##
''அழகை மனுசன் ரசிக்கிற வரைக்கும் அழிவில்லாத தொழில் இது. இதை மூன்று வகையாகச் செய்யலாம்.       10 சென்டுக்கு மேல இடவசதி இருக்கறவங்க, பெரிய அளவுல மரக்கன்றுகள் உற்பத்தி செய்து விற்கலாம். இதுல லாபம் அதிகம். அடுத்தது, இடவசதி குறைவா இருக்கிறவங்க, அதாவது ஒரு சென்ட், ரெண்டு சென்ட் இடம் மட்டுமே இருக்கிறவங்க அலங்கார செடிகளை, மரக்கன்றுகளை பெரிய நர்சரிகள்ல இருந்து வாங்கிட்டு வந்து வளர்த்து விற்கலாம். இதுல நம்ம உழைப்புக்கேத்த அளவுக்கு வருமானம் கிடைக்கும். இதை ஒவ்வொரு பகுதியிலேயும் செய்யலாம். அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் முதலீடு இருந்தாப் போதும்.
அழகா செய்தால் அள்ளலாம் லாபம்! - 4

மூன்றாவதாக, விதை, பை, மண் மாதிரியான இடுபொருட்கள், தொழில்நுட்பங்களை பெரிய நர்சரிகிட்ட வாங்கி, 'ஜாப் ஒர்க்’ அடிப்படையில செடிகளை வளர்த்து கொடுக்கிறவங்களும் இருக்காங்க. இதுல உங்க வேலை மரத்தை வளர்த்துக் குடுக்கிறது மட்டும்தான். எனவே, ரிஸ்க் அதிகம் இல்லை'' என்றவர், சிறிய அளவில் அலங்கார செடிகள் வாங்கி விற்பனை செய்யும் முறையைப் பற்றி விளக்கினார்.

நம்ம வீடுகள்ல செய்யும் சின்ன நர்சரியில கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, தண்ணி வசதி கண்டிப்பா இருக்கணும். அதேபோல நாம நர்சரி அமைக்கிற இடம் கொஞ்சம் பார்வையா இருந்தா நல்லது. நம்ம பகுதியிலயோ அல்லது வேற இடத்துலயோ இருக்கிற பெரிய நர்சரிகள்ல இருந்து சின்ன செடிகளா வாங்கிட்டு வரணும். உதாரணமா, ரோஜா செடிகளை மொத்தமா வாங்கும்போது போக்குவரத்து செலவோடு ஒரு செடியை அதிகபட்சம் 15 ரூபாய்க்குள்ள வாங்கிடலாம். அதைக் கொண்டுவந்து முறையா தண்ணி தெளிச்சு ஒரு மாசம் வளர்த்து பெரிய பைக்கு மாற்றி, மறுபடியும் ஒரு மாசம் வளர்த்தா ஒரு செடியை 30 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரைக்கும் விற்கலாம். அதையே தொட்டியில வளர்த்துக் கொடுத்தா 100 ரூபாய் வரைக்கும் விற்கலாம்.

40% முதல் 100% வரை லாபம்!

இதுமாதிரி குடியிருப்பு பகுதிகள்ல இருக்கிற சின்ன நர்சரிகள்ல அதிகமா விற்பனையாகிறது ரோஜா உள்ளிட்ட பூச்செடிகள்தான். அதனால நம்ம நர்சரியில வெவ்வேறு கலர்ல பூக்குற ரோஜா செடிகள், பல ரக செம்பருத்தி செடிகள், அலங்காரச் செடி வகைகள், வீட்டுத் தோட்டத்துக்குத் தேவையான கருவேப்பிலை, பப்பாளி, தென்னங்கன்றுகள், பழ மரங்கள் இருக்குமாறு பார்த்துக்கணும். இந்த செடிகளை வாங்கி விற்கிறதுல நமக்கு எந்த ரிஸ்க்கும் இல்லை. நேரத்துக்கு தண்ணி தெளிச்சுட்டு வந்தாப் போதும். செடிகளை காயவிட்டால் காசு போயிடும். இந்த தொழில்ல நம்ம கவனிப்பைப் பொறுத்து 40% முதல் 100% வரைக்கும் லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கு.

அலைஞ்சு ஆர்டர் எடுத்தா அள்ளலாம்!

அழகா செய்தால் அள்ளலாம் லாபம்! - 4

இந்த நர்சரிகள்ல செடிகளை மட்டும் விற்காம, பூந்தொட்டிகள், செடிகளுக்கான இயற்கை உரங்கள், காய்கறி, கீரை விதைகள்னு அது சார்ந்து இருக்க அனைத்தையும் வாங்கி விற்கலாம். விற்பனை வாய்ப்பை பொறுத்தவரை இந்த இடத்தில் நர்சரி இருக்கிறது என்பதை அந்த பகுதியில் குடியிருப்போருக்குத் தெரியப்படுத்தணும். குடியிருப்போர் நலச்சங்கம், உள்ளூர் தொலைக்காட்சி, நோட்டீஸ் மாதிரியான விளம்பர யுக்திகளை பயன்படுத்தி அதை செய்யலாம். கல்யாண மண்டபங்கள், விழாக்களில் மேடை அமைப்பவர்கள், டெக்கரேட் செய்கிறவங்களிடம் சொல்லி வைத்தால் விழாக்களுக்குத் தேவையான பூந்தொட்டிகள், அலங்காரச் செடிகளை வாடகைக்கு எடுத்துக்கொள்வார்கள். இதன் மூலமும் ஒரு வருமானம் கிடைக்கும். இன்னும் கூடுதல் நேரத்தை ஒதுக்க நினைக்கிறவங்க அல்லது முழு நேரமா இந்த தொழிலைச் செய்ய நினைக்குறவங்க மரக்கன்றுகளுக்கான ஆர்டரை எடுத்து பெரிய நர்சரிகளில் இருந்து வாங்கி சப்ளை செய்யறது மூலமாக நல்ல வருமானம் பார்க்கலாம். அதோட, வீட்டுத் தோட்டம் அமைப்பது, புல்தரை அமைப்பது போன்ற ஆர்டர்களை எடுத்து செஞ்சா இன்னும் கூடுதல் லாபம் கிடைக்கும்.

மாதம் 10 ஆயிரம்!

இது வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறத் துறை. ஒரு மாதத்தில் 25 ஆயிரம் ரூபாய் அளவுக்கு நமது நர்சரியில் விற்பனை செய்தால் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் வரை நிகர லாபமாக கிடைக்கும். ஆனால், நர்சரியை மட்டும் அமைச்சுட்டு வாடிக்கையாளர்கள் தேடி வருவாங்கன்னு எதுவுமே செய்யாம இருக்கவங்களுக்கு இந்த லாபம் நிச்சயம் கிடைக்காது. வாடிக்கையாளர்களை கவர்ற மாதிரி பல வண்ண மலர் செடிகளை

மத்தவங்க பார்வையிலபடுற மாதிரி காட்சிக்கு வைக்கணும். நம்மகிட்ட இருக்கிற செடிகள், விலைப் பட்டியல் அடங்கிய ஒரு ஆல்பத்தை தயார் செய்துகொண்டு அக்கம் பக்கத்து வீடுகள், குடியிருப்புகளில், அலுவலகங்களுக்குப் போய் கொடுத்தால் நிச்சயம் ஆர்டர்கள் கிடைக்கும். வேலை குறைந்த, முதலீடு குறைந்த நர்சரி தொழில் மூலமாக வர்ற வருமானத்தோடு செடி, கொடிகளுக்கு இடையில வாழ்ற மனத் திருப்தி ரொம்ப அலாதியானது'' என்றார். கச்சிதமான தொழிலை சொல்லிட்டோம். காசு பார்க்க நீங்க ரெடியா?

படங்கள்: வீ.சிவக்குமார்