Published:Updated:

தொழில் வேறு, முதலீடு வேறு!

விழிப்பு உணர்வு

தொழில் வேறு, முதலீடு வேறு!
தொழில் வேறு, முதலீடு வேறு!

என்னைத் தேடி வரும் பலரும் ஒரு கேள்வியைத் தவறாமல் கேட்பார்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் மாதம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதுதான் அந்த கேள்வி. இன்னும் சிலரோ ஒருபடி மேலே போய், தினமும் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்றும் கேட்பார்கள். ஒரு சாதாரண மனிதன் இப்படி கேட்டால் பிரச்னை இல்லை; பிஸினஸின் சூட்சுமங்களைப் புரிந்துகொண்ட பிஸினஸ்மேன்களே இப்படி கேட்பதுதான் ஆச்சரியம்!  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##
மா
தச் சம்பளம் வாங்குகிறவர்கள் தங்களது சம்பாத்தியத்திற்கும் முதலீட்டிற்கும் உள்ள வித்தியாசத்தைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துவைத்துள்ளனர். இதனால் அவர்கள் வாழ்க்கை சீராக சென்றுகொண்டிருக்கிறது. அவ்வப்போது சிறு அலைகளை சமாளிப்பதுடன் மட்டுமல்லாமல், ஒரு சில பெரிய அலைகள் வரும்போது அவர்களால் எளிதாகச் சமாளித்து கரைக்கு வந்துவிட முடிகிறது.

ஆனால், சில பிஸினஸ்மேன்கள், என்னிடம் முதலீட்டு ஆலோசனைக் கேட்டு வரும்போது, அவர்கள் செய்யும் முதலீட்டின் மூலம் எந்த அளவிற்கு வருமானத்தை எதிர்பார்க்கலாம் என்று கேட்பார்கள். கடன் சார்ந்த முதலீடாக இருந்தால் 8 முதல் 11 சதவிகிதமும், பங்கு சார்ந்த முதலீடாக இருந்தால் 12 முதல் 15 சதவிகிதமும் ஆண்டிற்கு எதிர்பார்க்கலாம் என்று நான் சொன்னவுடன் அவர்களின் முகம் சுருங்கும்.

தொழில் வேறு, முதலீடு வேறு!

அவர்கள், 'நான் செய்யும் தொழிலில் சர்வசாதாரணமாக 24% லாபம் கிடைக்கும். எப்படியும் அந்த பணத்தை ஆண்டுக்கு நான்கு முறை சுழற்றிவிடுவேன். அப்படி என்றால் ஆண்டிற்கு சாதாரணமாக 96% லாபம் பார்த்துவிடுவேன். அந்த லாபம் எங்கே? நீங்கள் சொல்லும் 8 முதல் 15 சதவிகித லாபம் எங்கே? இதற்கு நான் செய்யும் தொழிலிலேயே பணத்தைப் போட்டுவிட்டு நல்ல லாபம் பார்க்கலாமே, நான் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?'' என்று கேட்பார்கள்.

சில ரியல் எஸ்டேட் அதிபர்கள் வரும்போது அவர்கள் நான் சொல்லும் சதவிகிதத்தைப் பார்த்துவிட்டு என்னை மேலும் கீழும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். லேசாகச் சிரித்துவிட்டு, 'ஒரு நிலத்தை வாங்கி பிளாட் போட்டு விற்றால் மூன்றிலிருந்து ஆறு மாதத்திற்குள் 100% பார்த்துவிடுவோம். நீங்களோ வருடத்திற்கு அதிகபட்சமாக 15% என்று சொல்கிறீர்கள். அதற்கும் கியாரண்டி இல்லை என்கிறீர்கள்! இதற்குப் பதிலாக நாங்கள் செய்யும் தொழிலிலேயே வரும் லாபங்களை எல்லாம் மறுமுதலீடு செய்தால் எவ்வளவோ லாபம் பார்த்துவிடலாமே!'' என்பார்கள். அவர்களுக்கு நான் சொன்ன பதிலைத்தான் இனி உங்களிடமும் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

நாம் ஒவ்வொருவரும் பாடுபட்டு உழைத்து பணத்தைச் சம்பாதிக்கிறோம். அப்படி செய்யும்போது அதிகமான ரிஸ்க்கும் எடுக்கிறோம். அவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணத்தில் நமது செலவு போக மீதி இருப்பதில் ஒரு பகுதியை தொழிலில் மறுமுதலீடு செய்கிறோம். மற்றொரு பகுதியை நமது எதிர்காலத் தேவைகளான குழந்தைகள் நலன் மற்றும் ஓய்வுக்காலத்திற்காகச் சேமிக்கிறோம்.

மேலும், தொழிலில் ஏதேனும் நெருக்கடி நிலைமை ஏற்படும்போது சமாளிப்பதற்கும் நமது சொந்தப் பணத்தைத்தான் நாட வேண்டியிருக்கிறது. இதற்கு மேல் நாம் பெரிய பணக்காரர் என்றால் சமூகத்திற்கு திருப்பிக்கொடுப்பதும் (தானதர்மங்கள்) நமது கடமையாகிவிடுகிறது. ஆகவே, அதற்கென்று ஒரு பகுதி பணத்தை ஒதுக்கவேண்டி இருக்கிறது.

தொழில் வேறு, முதலீடு வேறு!

பெரிய தொழிலதிபர்கள் பெரும்பாலும் இதுபோன்று பிரித்து முதலீடு செய்து ஒழுங்காகச் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு அறிவுசார்ந்த உதவிகள் பல வகைகளில் கிடைக்கிறது. ஆனால், சிறு தொழிலதிபர்களோ, வணிகர்களோ சற்று தடுமாறிவிடுகிறார்கள். எவ்வளவு நாட்களுக்கு ரியல் எஸ்டேட்டில் அளவுக்கதிகமான லாபத்தைப் பார்க்க முடியும்? வியாபாரம் பெருகப் பெருக, பெரிய அளவில் வாங்க/விற்கச் செல்வார்கள். அவ்வாறு செய்யும்போது ஒரு பெரிய சிக்கல் வந்துவிட்டால், அதுவரை சம்பாதித்தப் பணம் அனைத்தையும் இழக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது விற்பதில் சுணக்கம் ஏற்பட்டால், அதிக வட்டி கொடுப்பதினால் லாபம் வெகுவாகக் குறைந்துவிட வாய்ப்பிருக்கிறது.

மேலும், நமது இந்தியப் பொருளாதாரம் விரிவடைய விரிவடைய, போட்டிகள் அதிகமாகும். பிற வளர்ந்த நாடுகளைப் போல நமது ரியல் எஸ்டேட் மார்க்கெட்டிலும் வெகுவான ஏற்ற இறக்கங்கள் இருப்பதன் மூலம் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.

அதேபோல் செய்யும் தொழிலைப் பற்றிய நெளிவுசுழிவுகள் நமக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும், நமக்கு வரப்போகிற ரிஸ்க் எதிர்பாராத திசையிலிருந்துதான் வரும். உதாரணத்திற்கு, குரோம்பேட்டை, ராணிப்பேட்டை, வேலூர், ஆம்பூர் போன்ற இடங்களில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை தோல் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களைக் கேட்டால், தொழிலிற்கு எப்படியெல்லாம் ரிஸ்க் வரும் என்பது புரியும்! உச்சநீதிமன்றத்தின் உத்தரவினால் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் பல தமிழ்நாட்டில் ஒரே நாளில் மூடப்படும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. அந்த நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு தோல் தொழிலில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கானோரின் வாழ்க்கை பாதாளத்திற்குப் போனது. தங்களுடைய ஓய்வுக்காலத்திற்கும், குழந்தைகள் நலனிற்கும், அவசரத் தேவைக்காகவும் தன் தொழில் அல்லாத முதலீட்டு உபகரணங்களில் முதலீடு செய்து வைத்திருந்தவர்கள் எழுந்துவந்து, அதே தோல் தொழிலை மாசு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு அல்லது வேறு புதுத் தொழிலை ஆரம்பித்து வெற்றிப்பாதையில் தங்களை நிலைநாட்டிக் கொண்டனர். தங்கள் தொழிலில் கிடைக்கும் லாபம் வேறு எதில் கிடைக்கப் போகிறது என்று நினைத்து, வேறு எதிலும் முதலீடு செய்யாமல் போயிருந்தால், இன்றைக்கு அவர்கள் பீனிக்ஸ் பறவையாக மீண்டுவந்து வெற்றிப்பாதையில் பயணித்திருக்க முடியாது!

தொழில் வேறு, முதலீடு வேறு!

இதே கதைதான் நமது திருப்பூர் நகரத்துக்கும். பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணி சம்பாதித்துத் தந்த அந்த நகரம், இன்றைக்கு தன் நிலையை தக்கவைத்துக்கொள்ள படாதபாடுபட வேண்டியிருக்கிறது. ஜட்கா வண்டி ஓட்டியவர்களும், சைக்கிள் ரிக்ஷா ஓட்டியவர்களும், டைப்பிஸ்ட்களும் கால மாற்றத்தில் தன் தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, வேறு தொழிலுக்குச் சென்றாகவேண்டிய நிலை ஏற்பட்டதை யாரால் மறுக்க முடியும்? நீங்கள் இன்று சென்னையில் ஒரு பெரிய மளிகை வணிகர். உங்களது கடைக்கு அடுத்தாற்போன்று ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட் வருகிறது என்றால், உங்கள் தொழில் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்தீர்களா?

அதற்காக நான் உங்களை என்ன ஆகிவிடுமோ என்று பயந்துகொண்டே இருக்கச் சொல்லவில்லை. இதுபோன்ற பிரச்னைகளை சமாளிப்பதற்கு நீங்கள் உங்களது தொழிலை பரவலாக்கலாம்/விஸ்தரிக்கலாம். அது உங்கள் தொழில் சார்ந்த ரிஸ்க்கை குறைக்கும். ஆனால், அதையெல்லாம் தாண்டிப் போய்விட்டது என்று வைத்துக்கொள்வோம். அப்போது உங்கள் தொழில் சாராத முதலீடுகள்தான் உங்களுக்கு கைதரும். ஆகவேதான் தொழில் வேறு; முதலீடு வேறு என்பதை பிஸினஸ்மேன்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்!

உங்களது முதலீடுகளில் பாதுகாப்பைத் தேடுங்கள்; ஸ்திரத்தன்மையைத் தேடுங்கள்; வெளிப்படைத்தன்மையைத் தேடுங்கள்; லிக்விடிட்டியைத் தேடுங்கள். இவற்றையெல்லாம் தேடி முதலீடு செய்யும்போது நியாயமான லாபம் கிடைக்கும். உங்களது தொழிலில் கொடுக்கும் வருமானத்தை முதலீடு தரும் வருமானத்தோடு ஒப்பிடாதீர்கள்!  நீங்கள் இன்று செய்யும் முதலீடு உங்களின் மழைக் காலத்தைப் பிரச்னை இல்லாமல் கழிப்பதற்காகத்தான் என்பதை நினைவில்கொள்ளுங்கள்! முதலீட்டை முதலீட்டுக் கண்ணோட்டத்துடன் அணுகினால் அதை சரியாகப் புரிந்துகொள்ள முடியும்!