Published:Updated:

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

'நெனைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு, அதனால முழிக்கிறே அம்மா பொண்ணே!’ - அந்த காலத்து சினிமாப் பாட்டை பாடியபடி உள்ளே வந்தார் ஷேர்லக். சில்லறை வர்த்தகத்தில் எஃப்.டி.ஐ. அனுமதித்தபோது சந்தை எகிறிய மாதிரி, இன்ஷூரன்ஸில் அனுமதித்தபோதும் எகிறும் என எல்லோரும் எதிர்பார்க்க, சந்தை மைனஸாகி புளியை கரைத்ததைத்தான் அவர் சொல்ல வருகிறார் என்று புரிந்தது.

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
''ஏ
ற்றம், இறக்கம் - அடுத்து என்ன நடக்கும்?'' என்று கேட்டோம்.

''கவலை வேண்டாம். இன்றைக்கு சந்தை இறங்கியதற்கு சில காரணங்கள் உண்டு. மத்திய அரசாங்கம் அடுத்தடுத்து வெளியிட்ட அறிவிப்புகளால் எக்கச்சக்கமாக வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 10-15% லாபம் பார்த்துவிட்டனர். தவிர, டாலரின் மதிப்பு நன்றாக குறைந்துள்ளது. இந்த சமயத்தில் பணத்தை எடுத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்ததன் விளைவுதான் இந்த சிறிய இறக்கம். ஆனாலும், நிஃப்டி சுமார் 65 புள்ளிகள் இறங்கினாலும் முடிவில் ரெக்கவர் ஆனதையும் கவனிக்க வேண்டும். இந்த இறக்கம் அடுத்த வாரத்தில் எதிரொலித்தாலும் ஆச்சரியமில்லை என்றாலும் பெரிய அளவில் இறக்கம் வர இப்போது வாய்ப்பில்லை. சர்வதேச முதலீட்டாளர்களில் கிங்கான மார்க் ஃபேர்கூட, இந்த ஆண்டு சந்தை புதிய உச்சத்தைத் தொடாது என்றுதான் சொல்லி இருக்கிறார். நம்முடைய மார்க்கெட்டை மிகவும் உன்னிப்பாக கவனிக்கிற வெளிநாட்டு அனலிஸ்ட்டுகள் டேரில் குப்பி முக்கியமானவர். அடுத்த மூன்று முதல் ஆறு மாதத்திற்குள் நிஃப்டி 6400 புள்ளிகளைத் தொடும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால்..?''

''என்ன ஆனால்... என்று இழுக்கிறீரே!'' என்றோம் அவருக்கு சுடச்சுட டீயைத் தந்தபடி.

''பணவீக்கம் குறையவில்லை; வட்டி விகிதம் மாறவில்லை; பொருளாதார அடிப்படை எதுவுமே மாறியதற்கான அறிகுறிகள் தெரியாதபோது சந்தை மட்டும் உயர்ந்தால் அது நிலைக்காது என்கிறார்கள் சிலர். பெரிய இறக்கம் வரவில்லை என்றாலும் சின்ன அளவிலாவது கரெக்ஷன் வந்தே தீரும் என்கிறார்கள். இதையும் நாம் மறந்துவிடக் கூடாது! தவிர அடுத்த வாரம் வரும் ஐ.ஐ.பி. டேட்டாவை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இதை வைத்து ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்க வாய்ப்பிருக்கிறது'' என்று எச்சரித்தார்.

''இன்று சந்தை இறங்கக் காரணம் புரோக்கிங் நிறுவனம் செய்த தவறுதான் என்கிறார்களே!'' என்றோம்.

ஷேர்லக் ஹோம்ஸ்

''உண்மைதான். எம்கே குளோபல் என்கிற புரோக்கிங் நிறுவனம் பல நூறு கோடி மதிப்புள்ள பங்குகளை தவறாக விற்றதால்தான் நிஃப்டி திடீரென ஆயிரம் புள்ளிகள் வரை இறங்கி, எல்லோரையும் திக்குமுக்காட வைத்தது. இது தவறுதலாக நடந்ததா, இல்லை இதன் பின்னால் ஏதாவது சதிவேலை நடக்கிறதா என செபி ஆராய்ந்து வருகிறது. ஆனால், இந்த களேபரத்தில் ஸ்டாப்லாஸ் போட்ட பல ஆயிரக்கணக்கான டிரேடர்களின் பங்கு விற்றதால், கடுமையாக நஷ்டமடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் செபி என்ன பதில் சொல்லப்போகிறது என்று தெரியவில்லை!'' என்று அவர் பேசிக்கொண்டே போக, புதிய இதழின் அட்டையை ஷேர்லக்கிடம் நீட்டினோம்.

ஷேர்லக் ஹோம்ஸ்

''முதலீட்டாளர்களுக்குத் தேவையானதைத்தான் இந்த வார அட்டையில் போட்டிருக்கிறீர்கள். சந்தை இறங்கும்போதைவிட ஏறும்போதுதான் கவனமாக இருக்க வேண்டும். காரணம், சந்தை ஏறும்போது நல்ல பங்குகளின் விலை ஏறும். கூடவே, மோசமான சில பங்குகளின் விலையும் ஏறும். இந்த ஏற்றத்தில்கூட பல பங்குகள் தேவை இல்லாமல் உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு ஏற்றத்தின்போதும் இதுபோன்று பல பங்குகள் கன்னாபின்னாவென்று ஏறுவதும், பிறகு ஏறிய வேகத்தில் சரிவதும் நடக்கத்தான் செய்கிறது. அதற்கு நிறைய உதாரணங்களும் இருக்கிறது. பார்டிரானிக்ஸ், ஏ.ஆர்.எஸ்.எஸ். இன்ஃப்ரா, 3ஐ.இன்ஃபோடெக், ஹெச்.டி.ஐ.எல்., ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்ஷன், டன்லப், ஜி.எம்.ஆர். இன்ஃப்ரா, எஸ்ஸார் ஆயில் உள்ளிட்ட சில பங்குகள் காரணமே இல்லாமல் ஏறிவருகிறது. அதுபோன்ற பங்குகளில் கவனமாக இல்லாவிட்டால் முதலுக்கே மோசமாகிவிடும், ஜாக்கிரதை'' என்றார்.

''நல்ல எச்சரிக்கைதான். அடுத்து என்ன செய்தி?'' என்றோம்.

''தரக் குறியீடு வழங்கும் கேர் நிறுவனம், ஐ.பி.ஓ. வர ஓராண்டுக்குப் பிறகு செபி அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இதன் புரமோட்டர்களாக ஐ.டி.பி.ஐ. பேங்க், கனரா பேங்க், எஸ்.பி.ஐ., ஃபெடரல் பேங்க், ஐ.எல். அண்ட் எஃப்.எஸ்., ஐ.என்.ஜி. போன்றவை உள்ளன. ஏற்கெனவே பட்டியலிடப்பட்டிருக்கும் கிரைஸில், இக்ராவுக்குப் போட்டியாக கேர் நிறுவனமும் களமிறங்க இருக்கிறது. தரக் குறியீடு வழங்கும் நிறுவனத்துக்கு மக்கள் நல்ல தரக் குறியீடு வழங்குவார்களா என்பது ஐ.பி.ஓ. வந்தவுடன் தெரிந்துவிடும்'' என்றார் சிரித்தபடி.

''இன்ஃப்ரா துறை பங்குகள் மீண்டும் சலசலக்க ஆரம்பித்திருக்கிறதே, என்ன காரணம்?'' என்று கேட்டோம்.

''மத்திய அரசு மேற்கொண்டு வரும் அதிரடி முதலீட்டு மாற்ற முடிவுகளால் கட்டுமானம், உள்கட்டமைப்பு மற்றும் அதற்கு நிதிச் சேவை அளிக்கும் நிறுவனங்கள் அதிக அளவில் லாபம் அடையும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதை உண்மையாக்கும் நடவடிக்கையாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இத்துறை பங்குகளில் முதலீட்டை அதிகரிக்க தொடங்கி இருக்கின்றன'' என்றவர், மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய செய்தி ஒன்றை சொன்னார்.  

ஷேர்லக் ஹோம்ஸ்

''சிறு முதலீட்டாளர்களுக்கான பங்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு முறையை செபி அமைப்பு எளிமையாக்கி வருகிறது. அதன் ஒரு கட்டமாக ஐ.பி.ஓ. வரும் பங்குகளை ஆன்லைன் மூலம் வாங்கும் இ-ஐ.பி.ஓ. வசதியை விரைவில் கொண்டு வர இருக்கிறது. முதல் கட்டமாக 2013, ஜனவரி மாதத்துக்குள் 400 இடங்களிலும் 2013, மார்ச் மாதத்துக்குள் 1,000 இடங்களிலும் இந்த வசதியைக் கொண்டு வர இருக்கிறது. இந்த வசதி இருக்கும் இடத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து உடனடியாக விண்ணப்பிக்க முடியும்'' என்றவர், புறப்படும் முன்பு ஒரு முக்கிய செய்தியைச் சொன்னார்.

''இந்திய பங்குச் சந்தையில் எஃப்.ஐ.ஐ.க்கள் முதலீடு அதிகரிப்பால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் சில்லறை வர்த்தகம், பென்ஷன், இன்ஷூரன்ஸ் உள்ளிட்ட துறைகளில் எஃப்.டி.ஐ. அனுமதி மற்றும் வரம்பு அதிகரிப்பு மூலம் வெளிநாட்டுப் பணம் இந்தியாவுக்கு வரவிருப்பதால் அடுத்த ஓராண்டு காலத்தில் ரூபாய் மதிப்பு 49 முதல் 54 ரூபாய்க்குள் இருக்கும் என முன்னணி அனலிஸ்ட்கள் கணித்துச் சொல்கிறார்கள். அந்த வகையில் இறக்குமதி நிறுவனங்கள், பழையபடி 56 ரூபாய்க்கு அதிகரித்துவிடுமோ என்று கவலைக்கொள்ள தேவையில்லை'' என்று சொல்லிவிட்டு, ''வாங்க வேண்டிய பங்குகளை நீங்களே சொல்லி என் வேலையை மிச்சப்படுத்தியதற்கு நன்றி'' என்றவர் விறுவிறுவென கிளம்பிப் போனார்.