Election bannerElection banner
Published:Updated:

அறிந்ததும் அறியாததும்!

கமாடிட்டி பாலபாடம்

அறிந்ததும் அறியாததும்!
அறிந்ததும் அறியாததும்!

ங்கு வர்த்தகத்தைத் தொடர்ந்து இப்போது கமாடிட்டி வர்த்தகத்திலும் பெரிய அளவில் எழுச்சி உருவாகி இருக்கிறது. பொதுவாக பங்குச் சந்தையைவிட கமாடிட்டி சந்தையில் ஏற்றத்தாழ்வுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். பொருட்களின் வரத்து அதிகரிப்பு, பொருட்களின் தேவை, உற்பத்திக் குறைவு போன்ற காரணங்களினால் உடனுக்குடன் அதிகப்படியான ஏற்றமும் இறக்கமும் கமாடிட்டி சந்தையில் பிரதிபலிக்கும். என்றாலும், இதை சரியாகச் செய்தால் கணிசமான லாபத்தைப் பார்க்கலாம்.

கமாடிட்டி சந்தையில் வர்த்தகம் செய்ய ஒருவர் என்ன செய்ய வேண்டும்? என்னென்ன விஷயங்கள் கற்று வைத்திருக்க வேண்டும்? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பது குறித்து சோனா ஃபைனான்ஷியல் நிறுவனத்தின் தலைவர் இ.எம்.சி. பழனியப்பனிடம் கேட்டோம். விவரமாக எடுத்துச் சொன்னார்.  

டிரேடிங் அக்கவுன்ட்!

##~##
''கமாடிட்டி சந்தையில் வர்த்தகம் செய்ய முதலில் டிரேடிங் அக்கவுன்ட் தொடங்க வேண்டும். அக்கவுன்ட் ஆரம்பிக்கும்போது பான் கார்டு நகல், முகவரிச் சான்று, வங்கிக் கணக்குச் சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். கமாடிட்டி எக்ஸ்சேஞ்சுகள் மூலமாகவோ அல்லது கமாடிட்டி புரோக்கர்களின் மூலமாகவோ இந்த டிரேடிங் அக்கவுன்டை ஆரம்பித்துக்கொள்ளலாம். அப்படி ஆரம்பிக்கும்போது சிலர் டெபாசிட் தொகையாக 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரை வாங்குவார்கள். இது முதலீட்டாளர்களின் தொகைதானே தவிர நிறுவனங்களோ அல்லது புரோக்கர்களோ இந்தத் தொகைக்கு உரிமை கொண்டாட மாட்டார்கள்.

மார்ஜின் தொகை!

கமாடிட்டியில் எந்த பொருளை வர்த்தகம் செய்ய நினைக்கிறோமோ, அந்த பொருளுக்கான மார்ஜின் தொகையைக் கட்டாயம் செலுத்தியாக வேண்டும். இந்த மார்ஜின் தொகை வாங்குவதற்கும், விற்பதற்கும் ஒரே மாதிரியாக இருந்தாலும் பொருளின் தேவை அதிகரிப்பு, வரத்து அதிகரிப்பு போன்ற காரணங்களால் மார்ஜின் தொகையில் ஏற்ற இறக்கம் இருக்கும். (பார்க்க, மார்ஜின் தொகை பற்றிய அட்டவணையை!)

ஃப்யூச்சர் டிரேடிங்!

கமாடிட்டி சந்தையில் ஃப்யூச்சர் டிரேடிங் அடிப்படையில் வர்த்தகம் செய்யலாம். அதாவது, ஒரு பொருளின் எதிர்கால விலையை இன்றே தீர்மானம் செய்து அதை முன்னதாகவே ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாங்குவது மற்றும் விற்பது. கமாடிட்டி சந்தையில் இதை 'ஹெட்ஜிங்’ என்பார்கள். இதில் பொருள் வாங்குபவர்களுக்கு உள்ள நன்மை என்னவெனில் முன்னதாகவே பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து வைத்துக்கொள்வதால், சில மாதங்கள் கழித்து அந்த பொருளின் விலை ஏறியிருந்தாலும் ஏற்கெனவே நிர்ணயம் செய்த விலையிலேயே வாங்கிக்கொள்ளலாம். ஒப்பந்தம் செய்த தேதியில் அந்த பொருளை நாம் டெலிவரியும் எடுத்துக்கொள்ளலாம். அப்படி எடுக்காவிட்டால் அந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிடும்.

ஹெட்ஜிங் அடிப்படையில் டெலிவரி எடுத்து வர்த்தகம் செய்பவர்கள் மட்டும் கமாடிட்டி டீமேட் அக்கவுன்ட் தொடங்க வேண்டும். நஷ்டம் ஏற்படாமல் தடுக்க ஹெட்ஜிங் செய்யலாமே தவிர, லாபம் ஈட்டும் கண்ணோட்டத்தில் ஹெட்ஜிங் செய்யக்கூடாது. டெலிவரி எடுப்பவர்கள் அவரவர்கள் இருக்கும் இடத்திலிருந்து டெலிவரி எடுக்கும் இடத்திற்கான போக்குவரத்துச் செலவுகளையும் கணக்கிட்டு முன்னதாகவே பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.

அறிந்ததும் அறியாததும்!

கண்காணிப்பு அவசியம்!

கமாடிட்டி சந்தையில் வர்த்தகம் செய்ய ஆரம்பித்துவிட்டால் உலகளாவிய கமாடிட்டி வர்த்தகம் குறித்தும், கரன்சி விலை ஏற்ற இறக்கம், உலக அரசியல், ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த விஷயங்கள், நாடு தழுவிய போராட்டங்கள் போன்ற நடவடிக்கைகளை தினசரி கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற பல காரணங்களாலும் கமாடிட்டி வர்த்தகத்தில் பெருவாரியான மாற்றங்கள் நடக்கும். கமாடிட்டி சந்தை நேரம் காலை 10 மணி முதல் இரவு 11.30 மணி வரை என்பதால் நிதானமாக சந்தை நிலைமையை நம்மால் கணிக்க இயலும். புரோக்கர் மூலமாகவே கமாடிட்டியில் வர்த்தகம் செய்ய முடியும் என்பதால், அவர்களை உடனுக்குடன் சந்தை நிலவரத்தை நமக்குத் தெரியப்படுத்தச் சொல்ல வேண்டும். தினசரி வர்த்தகம் மேற்கொள்பவர்களுக்கு இது முக்கியம்.

எந்த பொருள் மீது நமக்கான புரிதல் அதிகம் இருக்கிறதோ, எந்த பொருளின் மீதான தகவல்கள் நமக்கு அடிக்கடி கிடைக்கிறதோ அந்த பொருளில்தான் நாம் வர்த்தகம் செய்ய முன்வர வேண்டும்.

வியாபார நுணுக்கங்கள்!

கமாடிட்டி சந்தையில் வர்த்தகமாகும் பல பொருட்கள் உலக சந்தைகளின் விலையின் அடிப்படையில்தான் வர்த்தகமாகும்.  உதாரணத்திற்கு, கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி போன்றவை அமெரிக்கச் சந்தையில் வர்த்தகமாகும் விலையின் அடிப்படையிலும், காப்பர் மற்றும் மெட்டல் சம்பந்தமான பொருட்களின் விலை லண்டன் மற்றும் சீன சந்தை விலைகளைப் பொறுத்தும் வர்த்தகமாகும். ஆகவே, நமது கவனம் உலக சந்தைகளை பார்த்தபடியே இருக்க வேண்டும். அப்போதுதான் கமாடிட்டி சந்தையில் லாபம் ஈட்ட முடியும்.''

- செ.கார்த்திகேயன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு