MBA - மூன்றெழுத்து மந்திரம்


ஆக்ஷன் கிங் ஜப்பான்!
##~## |
ஆனால், கார்ல் மார்க்ஸ், ஃபிரெடரிக் ஏங்கல்ஸ், லெனின் ஆகியோரின் வழிகாட்டலில் ரஷ்யா தேர்ந்தெடுத்த வழி, பொதுவுடமைச் சித்தாந்தம். இதன்படி, தொழில் வளர்ச்சிக்கு காரணம் தொழிலாளியின் உழைப்புதான். எனவே, தொழிலாளி இல்லாமல் முதலாளி இல்லை. ஆக, முதலாளியும், தொழிலாளியும் என்றுமே இணைந்து வாழ முடியாத இரண்டு வர்க்கங்கள். அவர்களுக்குள் என்றும், எப்போதும் போராட்டம் நடக்கும். இந்த இரண்டு வர்க்கமும் நான் பெரியவனா, நீ பெரியவனா? என்று குடுமிப்பிடிச்சண்டை போட்டுக்கொண்டே இருக்கும். இதுதான் உலக நியதி.
இந்த சண்டையில் சிக்காமல் என் வழி தனிவழி என்று ஜப்பான்காரர்கள் சைலன்டாக ஒரு புரட்சி செய்தார்கள். ஜப்பான் தொழிற்சாலைகளில் முதலாளியும், தொழிலாளியும் எதிரிகள் அல்ல; எதிரெதிரான இரண்டு வர்க்கங்களும் அல்ல. அவர்களுக்கு இடையேயான தொடர்பு இவை அத்தனையையும் தாண்டிய பந்தம். முதலாளி அப்பா என்றால், தொழிலாளிகள் குழந்தைகள் மாதிரி.
ஜப்பானியர்கள் சாமர்த்தியசாலிகள். மேனேஜ்மென்ட் கொள்கைகள் அமெரிக்காவில் உருவானதற்காக அவற்றை ஈயடிச்சான் காப்பி அடிக்கவில்லை. அந்தக் கொள்கைகளைத் தங்கள் பாரம்பரியத்துக்கு ஏற்ப மாற்றினார்கள். நீங்கள் ஜப்பானியர் ஒருவரைச் சந்திக்கிறீர்கள். அவரைவிட ஒரு சில நாட்களே உங்களுக்கு அதிகம் என்றாலும், உங்கள் பெயரோடு ஸான் (Saan) என்று சேர்த்தே அவர் அழைப்பார். 'ஸான்’ என்பது நம்மூர் 'ஐயா’ போல.
பிஸினஸிலும் இதே பண்பாட்டை ஜப்பானியர் பின்பற்றினார்கள். இதனால், தன்னைவிட வயது அதிகமானவர் கடைநிலைத் தொழிலாளியாகவே இருந்தாலும், முதலாளி அவரை மரியாதையோடு நடத்துவார்; ஸான் என்றுதான் அழைப்பார்.
கம்பெனி ஊழியர்களைப் பணியாளர்களாக நடத்தாமல், குடும்ப அங்கத்தினர்களாக உணரவைக்கும் ஜப்பான் மரபு சாதாரணச் சமாசாரமில்லை. இதை எப்படி செய்கிறார்கள்? சோனி கம்பெனி நிறுவனர் அகியோ மோரிட்டாவே அதுபற்றி சொல்வதைக் கேட்போம்.
''எந்த நாட்டிலும், நிறுவனங்கள் தொடர்ந்து லாபகரமாக இயங்குவதற்கு அங்கே பணிபுரியும் ஊழியர்கள் அதிகபட்சத் திறமையுடனும் முழுமையான அர்ப்பணிப்புடனும் செயலாற்றுவது மிக அவசியம். ஜப்பானில் இதைப் பல வழிகளில் நிறைவேற்றுகிறார்கள்.

ஒருவர் சோனியிலும், பிற கம்பெனிகளிலும் வேலைக்குச் சேர்ந்தால் வாழ்நாள் முழுக்க அவருக்கு அங்கே பணி உத்தரவாதம். சோனி அலுவலகங்களில் உயர் அதிகாரிகளுக்குத் தனி அறைகள் கிடையாது. சக ஊழியர்களுடன் அமர்ந்துதான் அவர்கள் பணியாற்ற வேண்டும். உணவகத்திலும் நிர்வாகிகளுக்குத் தனி இடம் கிடையாது. எல்லோருக்கும் சமச் சீருடை என்கிற ஒரே யூனிஃபார்ம்தான்.
தொழிற்சாலையில் ஒவ்வொரு நாளும் வேலை தொடங்கும்முன், தொழிலாளர்களின் மேலதிகாரியான ஃபோர்மென் முந்தைய நாளின் வேலை பற்றிய அறிக்கையை அவர்களுடன் விவாதிப்பார். அன்றைய வேலை என்னவென்று விளக்குவார். அவர்களுடைய கருத்துகளைக் கேட்பார். இதற்குப் பிறகுதான் வேலை தொடங்கும். தான் ஒரு எந்திரமாக நடத்தப்படவில்லை, தன் கருத்துகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் மதிப்பு இருக்கிறது என்கிற எண்ணம் வருவதால், தொழிலாளி தன்னைக் கம்பெனியின் அங்கமாக உணருகிறான், வேலையில் தன் முழுத் திறமையையும் காட்டுகிறான்.
இவற்றால், சோனியில் மட்டுமல்ல, பெரும்பாலான ஜப்பானியக் கம்பெனிகளில் தன்னிச்சையாக ஊழியர்கள் பிற நாடுகளைவிட அதிக மணி நேரங்கள் உழைக்கிறார்கள்; தங்களுக்கு உரிமையான விடுமுறை நாட்களில்கூட வேலைக்கு வருகிறார்கள்.
சாதாரணமாக கம்பெனிகளில் நிர்வாகிகளின் அதிகப்படி நேரம் ஊழியர்களை மேய்ப்பதிலேயே செலவாகும். சோனியில் தொழிலாளர்கள் சுய ஊக்கத்தோடு செயல்படுவதால், நிர்வாகிகளுக்கு இந்த விரய நேரம் மிச்சமாகிறது. இந்த வேளையில் அவர்கள் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல், தொழிலாளர்களின் பயிற்சி, வருங்கால வளர்ச்சி போன்ற ஆக்கப்பூர்வமான வேலைகளைச் செய்ய முடிகிறது. இப்படி ஊர் கூடித் தேர் இழுக்கும்போது கம்பெனி உச்சம் தொடுகிறது.
தங்கள் குடும்பத்தில் இணையும் மனப்பாங்கு உள்ளவர்களை சோனி எப்படி கண்டுபிடிக்கிறது? சோனி குடும்பத்தில் ஒருவராக என்ன தகுதி வேண்டும்? படிப்பு, அனுபவம் இவை எல்லாவற்றையும்விட முக்கிய தகுதி எதிலும், எல்லாவற்றிலும் முன்னேற்றம் தரும் மாற்றங்கள் செய்ய என்னால் முடியும் என்கிற தன்னம்பிக்கை.''

அமெரிக்க, ஜப்பானிய மேனேஜ்மென்ட் முறைகளுக்குள் என்ன வித்தியாசம்? மோரிடா அமெரிக்க கம்பெனி அமைப்புகளைச் செங்கல் சுவருக்கும், ஜப்பானியக் கம்பெனி அமைப்புகளைக் கருங்கல் சுவருக்கும் ஒப்பிடுகிறார்.
அமெரிக்க நிர்வாக முறையில், வேலைக்குப் புதிய ஆட்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள் தெரியுமா? வேலை விளக்கம் (Job Description) என்னும் ஆவணத்தை உருவாக்குகிறார்கள். அந்த வேலையில் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன, அதை செம்மையாகச் செய்து முடிக்க என்னென்ன படிப்புத் தகுதிகள் வேண்டும், என்னென்ன குணநலன்கள் வேண்டும் என்கிற விவரங்கள் இதில் இருக்கும். வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த ஜாடிகளுக்கு ஏற்ற மூடிகள் தேர்வாகின்றன. விண்ணப்பிப்பவரின் தகுதிகள் அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும், அவர் நிராகரிக்கப்படுகிறார்.
புது ஊழியர் கம்பெனியில் ஊதிய, பதவி உயர்வுகள் பெற வேண்டுமென்றால், அவர் இந்தச் செங்கல் சுவரில் சரியாகப் பொருந்த வேண்டும். தன்னைப் பொருத்திக்கொள்வது அவர் பொறுப்பு. பொருந்தாவிட்டால் அவர் வேலையை இழப்பார். அதாவது, தனித்துவம் இருந்தால் வேலை கிடைக்காது, கிடைத்தாலும் நிலைக்காது.
சோனியில் புதியவர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். இதற்குப் பிறகு அவர்களின் திறமைகளைக் கண்டறிந்து எந்த வேலைக்கு யாரைப் பயன்படுத்துவது என்று முடிவு செய்கிறார்கள். கற்கள் பல வடிவங்களில், சைஸ்களில் வரும். எந்த கல்லை எங்கே வைத்தால் சுவர் சீராக அமையும் என்று கண்டறிந்து சுவரை நிர்மாணிப்பது நிர்வாகத்தின் பொறுப்பு.
அமெரிக்காவில் ஊழியரின் அர்ப்பணிப்பை ஏற்படுத்துவது வேலை நிலைக்க வேண்டுமே என்கிற பயம். ஜப்பானில் அர்ப்பணிப்பை ஏற்படுத்துவது கம்பெனியோடு இருக்கும் பாசப் பிணைப்பு. பாசம் தரும் பலன்களை என்றுமே பயம் கொடுக்காது.
ஊழியர்களுக்குள் சம்பள வித்தியாசம் அதிகமாக இருந்தால், அவர்களுக்குள் மனஇடைவெளி வந்துவிடும் என்று ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். இதனால், சோனியில் யாருக்குமே மிக அதிக ஆரம்பச் சம்பளம் தரப்படுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஊதியம் உயர்கிறது. எல்லோருக்குமே ஒரே மாதிரியான ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது. அனுபவம் அதிகரிக்க, அதிகரிக்க, ஊதியம் கூடுகிறது.

அமெரிக்க முறையிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது. அமெரிக்காவில் ஊதிய உயர்வுதான் ஊழியர்களின் அர்ப்பணிப்பைத் தூண்டும் முக்கிய உந்துதல் சக்தியாகக் கருதப்படுகிறது. ஜப்பானில் சம்பளம் இரண்டாம்பட்சம்தான். திறமையுள்ள ஊழியர்களுக்குக் கம்பெனியின் முக்கியமான, பொறுப்பான வேலைகள் தரப்படுகின்றன.
இந்த மதிப்பும் அங்கீகாரமும் சம்பள உயர்வைவிட அதிக சக்தி கொண்டவை என்பது சோனியும் ஜப்பான் தொழில் அதிபர்களும் கண்டறிந்த உண்மை. இதனால், ஜப்பானில் உயர்மட்ட நிர்வாகியின் சம்பளம் ஆரம்ப கடைநிலை ஊழியரின் சம்பளத்தைவிட எட்டு மடங்குக்குமேல் இருப்பதில்லை.
சோனியின் வெற்றி ரகசியங்களை மட்டுமல்ல, ஜப்பானின் மேனேஜ்மென்ட் பற்றியும் தெளிவாக எடுத்துச் சொல்கிறார் அகியோ மோரிட்டா.
இன்னும் விவரங்கள் வேண்டுமானால், Made in Japan புத்தகம் படியுங்கள். நான் சிபாரிசு செய்யும் இன்னொரு நல்ல புத்தகம் Shu Shin Luh எழுதியிருக்கும் the Sony way. Secrets of the world’s most innovative electronics giant.
ஜப்பானின் மேனேஜ்மென்ட் பற்றி தெரிந்துகொள்ள நாம் சந்தித்தேயாக வேண்டிய இன்னொரு மாமனிதர், இன்னோவா, காம்ரி, கொரோலா போன்ற கார்கள் தயாரிக்கும் டொயட்டா கம்பெனித் தலைவர் கிச்சிரோ டொயெட்டா (Kiichiro Toyoda). அவரைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில்..!
(கற்போம்)
படம்: வி.ராஜேஷ்.