Published:Updated:

மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

பிரீமியம் ஸ்டோரி
மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

தங்கம்!

##~##
ஐரோப்பிய பங்குச் சந்தைகள் மற்றும் ஆசிய பங்குச் சந்தைகள் நன்றாகச் செயல்பட்டதால் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் இறங்கி வர்த்தகமானது. 1,726 டாலருக்கு வார ஆரம்பத்தில் வர்த்தகமாகி வந்த தங்கம், வார இறுதியில் 1,703 டாலருக்குக் கீழே போனது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சந்தை அதிகரிக்கும் வரை பாண்டுகளை வாங்குவது தொடரும் என அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவில் பொருளாதார நிலைமை சீரடைந்து வந்தாலும்கூட வேலைவாய்ப்பு அதிகரிக்காமல் இருப்பதாகவும், 2015-ம் வருடம் வரை வட்டி விகிதங்களில் எந்தவித மாற்றங்களும் இருக்காது எனவும் ஃபெடரல் மீட்டிங்கில் தெரிவிக்கப்பட்டது.

தவிர, ஜெர்மன் பகுதிகளில் பிஸினஸ் கடந்த இரண்டரை வருடங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது. இது ஐரோப்பா பகுதிகளில் பொருளாதாரப் பிரச்னை அதிகமாக இருப்பதைக் காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ஆசிய பகுதிகளில் பிஸிக்கல் தங்கத்திற்கான தேவை குறைந்துள்ளது. இந்தியாவில் தீபாவளி நேரத்தில் தேவை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை எம்.சி.எக்ஸ்.

சந்தையில் பத்து கிராம் தங்கம் டிசம்பர் மாத கான்ட்ராக்ட் 30,940 ரூபாய்க்கு வர்த்தகமானது.

வெள்ளி!

தங்கத்தின் விலை சரிவைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தில் குறைந்தது. அமெரிக்க ஃபெடரல் வங்கியின் மீட்டிங் மற்றும் மற்ற உலக நாடுகளின் பொருளாதார நிலவரங்கள் காரணமாக வெள்ளியின் விலை குறைந்தது. சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரம் மந்தநிலையாக இருப்பதால் தொழிற்சாலைக்குப் பயன்படுத்தும் வெள்ளியின் பயன்பாடும் குறையுமென கூறப்படுகிறது. அடிப்படை உலோகங்களின் விலை குறைந்து வர்த்தகமானதாலும் வெள்ளியின் விலை குறைந்தது. வரும் வாரத்திலும் இதே நிலை தொடர வாய்ப்பிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை எம்.சி.எக்ஸ். சந்தையில் ஒரு கிலோ வெள்ளி டிசம்பர் கான்ட்ராக்ட் 59,150 ரூபாய்க்கு வர்த்தகமானது.

மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

காப்பர்!

டாலரின் மதிப்பு அதிகரித்ததும், ஐரோப்பிய பகுதிகளில் பொருளாதாரம் குறித்த புள்ளிவிவரங்கள் சரியில்லாத காரணத்தாலும் காப்பரின் விலை கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்தது. காப்பரை அதிகம் நுகரும் நாடுகளில் டிமாண்ட் குறைந்ததும் இந்த விலை குறைவுக்குக் காரணம். உலக நாடுகளின் பொருளாதாரப் பிரச்னைகள் மற்றும் டாலரின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களினாலும் காப்பரின் விலை குறைந்தது. கடந்த வியாழக்கிழமையில் 0.3 சதவிகிதம் வரை தேவை குறைந்ததன் காரணமாக விலை குறைந்தது. எல்.எம்.இ. இன்வென்ட்டரி குறைந்ததை அடுத்து மேலும் விலை குறையாமல் தடுக்கப்பட்டது.

மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

சீனாவில் ஸ்பாட் காப்பருக்கான தேவையும் குறைந்திருக்கிறது. 2013-ம் ஆண்டு ஜெர்மனியின் ஜி.டி.பி. வளர்ச்சி ஒரு சதவிகிதமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு 1.6 சதவிகிதமாக இருக்குமென சொல்லப்பட்டது. சென்ற வாரத்தில் தேவை குறைந்திருப்பதால் வரும் வாரத்திலும் காப்பருக்கான விலை குறைந்தே வர்த்தகமாகும். கடந்த வெள்ளிக்கிழமை எம்.சி.எக்ஸ். சந்தையில் ஒரு கிலோ காப்பர்    423 ரூபாய்க்கு வர்த்தகமானது.

இந்த வருடத்தின் முதல் எட்டு மாதத்தில் சர்வதேச சந்தையில் ஜிங்க் 1,28,000 டன்னும், லெட் 80,000 டன்னும் கூடுதலாக கையிருப்பு இருப்பதாக இன்டர்நேஷனல் லெட் அண்ட் ஜிங்க் ஸ்டடி குரூப் தெரிவித்திருக்கிறது. இந்த இரண்டு கமாடிட்டிகளின் கையிருப்பு அதிகமாக இருப்பதால் இதன் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை.  

கச்சா எண்ணெய்!

அமெரிக்க கச்சா எண்ணெய் இன்வென்ட்டரி அதிகரித்துள்ளதால் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்தது. கச்சா எண்ணெய் இருப்பு          5.9 மில்லியன் பேரலும், காசோலைன் ஸ்டாக்பைல்ஸ் 1.4 மில்லியன் பேரலும் அதிகரித்துள்ளது என எனர்ஜி இன்ஃபர்மேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது.

ஈரானிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய் கடந்த வருடத்தை ஒப்பிடும்போது 24 சதவிகிதம் குறைந்துள்ளது. ஜப்பானில் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் சில திட்டங்களை அறிவித்ததால் பங்குச் சந்தைகள் பாசிடிவ்வாக இருந்தது. இதுவும் கச்சா எண்ணெய்யின் விலையில் பிரதிபலித்தது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை எம்.சி.எக்ஸ். சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் நவம்பர் கான்ட்ராக்ட் 4,665 ரூபாய்க்கு வர்த்தகமானது.

இயற்கை எரிவாயு!

மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

சென்ற வாரத்தில் வர்த்தகர்கள் பிராஃபிட் புக்கிங் செய்ததால் இயற்கை எரிவாயு விலை குறைந்தது. மேலும், அமெரிக்க இயற்கை எரிவாயு இன்வென்ட்டரி 64 பில்லியன் கியூபிக் ஃபீட்டாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டதாலும் முதலீட்டாளர்கள் பிராஃபிட் புக்கிங் செய்தனர். எனினும், குளிர்பிரதேசங்களில் இயற்கை எரிவாயுக்கான தேவை அதிகரித்து வருவதால் டிமாண்ட் அதிகரித்தது. இதனால், மேலும் விலை குறையாமல் தடுக்கப்பட்டது. வரும் வாரத்தில் மந்தமான நிலையிலேயே இயற்கை எரிவாயு வர்த்தகமாகும். கடந்த வெள்ளிக்கிழமை மாலை எம்.சி.எக்ஸ். சந்தையில் இயற்கை எரிவாயு நவம்பர் மாத  கான்ட்ராக்ட் 203 ரூபாய்க்கு வர்த்தகமானது.

- பானுமதி அருணாசலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு