பிரீமியம் ஸ்டோரி
அக்ரி கமாடிட்டி!

மிளகு (PEPPER)

##~##
இது பண்டிகைக் காலம் என்பதால் சென்ற வாரத்தில் மிளகின் விலை அதிகரித்து காணப்பட்டது. எனினும், அதிக விளைச்சல் இருக்கும் என்ற தகவலும், ஏற்றுமதி தேவை குறைந்ததும் மேலும் விலை அதிகரிக்காமல் தடுக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் மற்ற நாட்டு மிளகைவிட இந்திய மிளகின் விலை குறைந்து இருந்ததால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மிளகின் அளவு அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் இந்த வருடத்தில் குறைவான விளைச்சலே இருக்குமென கூறப்படுகிறது. பிரேசிலில் மிளகு அறுவடை முற்றிலும் முடிவடைந்துவிட்டது. எனினும், அங்கு அறுவடை காலம் குறைவாகவே இருந்தது. இது விளைச்சல் குறைவாக இருப்பதையே காட்டுகிறது. தேவை அதிகமாக இருப்பதால் வரும் வாரத்திலும் மிளகு விலை அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்புண்டு.
அக்ரி கமாடிட்டி!

ஜீரகம் (JEERA)

பிராஃபிட் புக்கிங் காரணமாகச் சென்ற வாரத்தில் ஜீரகம் விலை குறைந்து வர்த்தகமானது. நவராத்திரி விழா காரணமாக ஜீரகத்தின் தேவை குறைவாகவே காணப்பட்டதால் விலை குறைந்தது. இன்னும் சில நாட்களுக்கு விலை குறையவே வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. விலை குறைந்தாலும் அடிப்படை காரணிகள் ஜீரகத்திற்கு சாதகமாகவே இருக்கிறது. தீபாவளி நெருங்கி வருவதால் வர்த்தகர்கள் ஜீரகத்தை அதிகமாக வாங்கி வருகிறார்கள். ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்ததால் விலை மேலும் குறையாமல் தடுக்கப்பட்டது. மற்ற நாட்டு ஜீரகத்தைவிட இந்திய நாட்டு ஜீரகத்திற்கு வர்த்தகர்களிடையே அதிகமான தேவை காணப்பட்டது. இந்த ஆண்டில் இந்திய ஜீரகத்தின் ஏற்றுமதி 45,000 டன்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராபி சீஸனில் அதிகமாக ஜீரகம் பயிரிடப்பட்டுள்ளதால் விளைச்சல் அதிகமாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். அடுத்த வாரத்தில் ஜீரகத்தின் விலை அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்புகள் இருக்கிறது.

அக்ரி கமாடிட்டி!

மஞ்சள் (TURMERIC)

சென்ற வாரத்தில் மஞ்சள் விலை குறைந்து வர்த்தகமானது. சென்ற வாரத்தில் மஞ்சளின் தேவை குறைந்ததும், கையிருப்பு அதிகமாக இருந்ததும் இதற்கு காரணம். வருகிற பண்டிகைக் காலங்களில்               மஞ்சளின் தேவை அதிகமாகும் என்பதால், இப்போது இருக்கும் கையிருப்பை விவசாயிகள் வெளியிடமாட்டார்கள் என்பதால் விலை குறைந்தே இருந்தது. அதே சமயத்தில்  மஞ்சள் ஏற்றுமதியும் மந்தமாக இருந்தது. சென்ற வாரத்தில் ஈரோடு சந்தைக்கு தினவரத்தாக 3,000 பைகள் (ஒரு பை என்பது 70 கிலோ) வந்தன. 100 கிலோ மஞ்சள் 5,300 ரூபாய்க்கு வர்த்தகமானது. சென்ற வாரத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஈரோடு மஞ்சள் ஏலச் சந்தைகள் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் விடுமுறை விடப்பட்டிருந்தது. நவராத்திரி விழாவுக்காக மூடப்பட்ட நிஜாமாபாத் சந்தை அக்டோபர் 29-ம் தேதி அன்று திறக்கப்படுகிறது. அக்டோபர் 22-ம் தேதி நிலவரப்படி, என்.சி.டி.எக்ஸ்.       எக்ஸ்சேஞ்ச் குடோன்களில் உள்ள கையிருப்பு          9,145 டன்களாக இருந்தது. இதுவே கடந்த வாரத்தில்   9,071 டன்னாக இருந்தது.

அக்ரி கமாடிட்டி!


ஏலக்காய் (CARDAMOM)

பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால் ஏலக்காய்க்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் ஏலக்காய் வாங்குவதில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏலக்காய் வர்த்தகம் குறித்து கேரள உயர்நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளின்படியே இனி வர்த்தகம் நடைபெறும் என்று ஸ்பைஸ் போர்டு ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இதனால், ஒரு டோக்கன் விலை ஐந்து ரூபாயாக இருந்ததை இரண்டு ரூபாயாக பழையபடி குறைத்து இருக்கிறது. இதனால் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த வர்த்தகர்கள் அதிகமாக ஏலக்காய் வர்த்தகத்தில் கலந்துகொண்டனர்.

மிளகாய் (CHILLI)

நடப்பு ஆண்டில் மிளகாய் உற்பத்தி நன்கு இருக்கும் என்கிற எதிர்பார்ப்பின் காரணமாக ஃபியூச்சர் கான்ட்ராக்ட்களை வர்த்தகர்கள் விற்கத் தொடங்கினர். மிளகாய் அதிகம் விளையும் மாநிலங்களில் கையிருப்பு அதிகமாக இருப்பதாலும், குறைவான தேவையின் காரணமாகவும் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தசரா விழாவிற்குப் பிறகு மிளகாயின் தேவை அதிகரிக்கும் என்பதால் மேலும் விலை குறையாமல் தடுக்கப்பட்டது. வட இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகர்கள் மத்திய பிரதேசத்தில் இருந்து வந்திருக்கும் புதிய மிளகாயை வாங்க ஆர்வம் காட்டினர். மிளகாய் வர்த்தகத்திற்கு பேர் போன ஆந்திர மாநிலம் குண்டூரில் நவராத்திரி விழாவிற்கு ஒன்பது நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு அக்டோபர் 26-ம் தேதியன்று திறக்கப்பட்டது.

- செ.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு