Published:Updated:

பிஸினஸ் சமூகம் - பிராமணர்கள்!

பிஸினஸ் சமூகம் - பிராமணர்கள்!

பிரீமியம் ஸ்டோரி
பிஸினஸ் சமூகம் - பிராமணர்கள்!

இந்திய செய்தித்தாள் வரலாற்றில் 'ஹிண்டு’ பத்திரிகைக்கு தனி இடமுண்டு. சுதந்திரப் போராட்ட காலத்திலும் சரி, சுதந்திரம் அடைந்தபிறகும் சரி, நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான யோசனைகளை சொன்னதோடு, அரசியல்வாதிகள் தவறு செய்தால், நேர்மையாக எடுத்துச் சொல்வதில் 'ஹிண்டு’ என்றைக்கும் அஞ்சியதில்லை. அப்படிப்பட்ட 'ஹிண்டு’ பத்திரிகை இந்திய மக்களுக்கு கிடைக்கக் காரணமாக இருந்தவர் கஸ்தூரிரங்க அய்யங்கார்.

##~##
கு
ம்பகோணத்திற்கு அருகில் காவிரிக்கரையை ஒட்டி இருக்கும் இன்னம்பூர் என்னும் கிராமத்தில் 1859-ம் ஆண்டு பிறந்தார் கஸ்தூரிரங்க அய்யங்கார். அப்பாவின் பெயர் சேஷய்யங்கார். இவரது முன்னோர்கள் விஜயநகர அரசாங்கத்திலும், பிற்பாடு சரபோஜி அமைச்சரவையிலும் செல்வாக்குடன் விளங்கியவர்கள். சேஷய்யங்கார் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்த்தார். 1869-ல் கபிஸ்தலம் சந்திர பிரகாச மூப்பனார் இறந்தபோது, அவரது எஸ்டேட்டை கவனித்துக் கொண்டார்.

சேஷய்யங்காருக்கு மூன்று மகன்கள். இவர்களில் மூன்றாவது மகன்தான் கஸ்தூரிரங்க அய்யங்கார். பள்ளிப்படிப்பை கும்பகோணம் மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் பிற்பாடு சென்னையில் பிரெசிடென்சி கல்லூரியிலும் படித்தார்.

படித்து முடித்தவுடன் 1881-ல் அவருக்கு பத்திரப்பதிவுத் துறையில் வேலை கிடைத்தது. விருத்தாசலத்தில் சில ஆண்டுகள் வேலை பார்த்தார். இந்த சமயத்தில்தான் அவருக்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. ஆங்கிலேய அரசாங்கம் இந்திய மக்களுக்கு ஆட்சி உரிமை வழங்குவது குறித்து ரிப்பன் பிரபு எழுதிய அறிக்கையை எளிய தமிழில் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார்.

ஆனாலும், சட்டம் படிக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்கிருந்ததால், பத்திரப்பதிவு வேலையை விட்டுவிட்டு, மீண்டும் சென்னை வந்து சட்டம் படித்தார். 1884-ல் சட்டம் படித்து முடித்தவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக பதிவு செய்துகொண்டார். வக்கீல் தொழில் செய்ய கோவைக்கு சென்றார். அங்கு வக்கீல் தொழிலை வெற்றிகரமாகச் செய்ததோடு, பொது வாழ்க்கையில் நிறைய பங்குகொண்டார். 1885-ல் காங்கிரஸ் கட்சி ஆரம்பித்தது முதலே அதில் ஆர்வத்தோடு இணைந்து பணியாற்றினார். சமூக வாழ்க்கைக்குத் தேவையான அறிவையும் துணிவையும் அவர் பெற்றது கோவையில்தான்.

எனினும், கோவையிலேயே தங்கிவிட அவருக்கு விருப்பமில்லை. பொது வாழ்க்கையில் இன்னும் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்கிற எண்ணத்தோடு 1894-ல் சென்னைக்குத் திரும்பினார். இந்த சமயத்தில் சென்னை அட்வகேட் ஜெனரல் பதவிக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டார் பாஷ்யம் அய்யங்கார். இந்த பதவிக்கு வெள்ளைக்கார பாரிஸ்டர்களே தகுதியானவர்கள் என ஆங்கில அரசாங்கம் நினைத்ததன் விளைவுதான் இந்த தற்காலிக நியமனம். திறமைக்கு உரிய மரியாதை தராமல், வெள்ளையரை ஒரு மாதிரியும் இந்தியரை வேறு மாதிரியும் ஆங்கில அரசாங்கம் நடத்துவதை எதிர்த்து 'ஹிண்டு’ பத்திரிகையில் எழுதினார் கஸ்தூரிரங்க அய்யங்கார்.

கஸ்தூரிரங்க அய்யங்கார் 'ஹிண்டு’ பத்திரிகையில் எழுத ஆரம்பித்தபோது அந்த பத்திரிகை தொடங்கி ஏறக்குறைய பத்தொன்பது ஆண்டுகள் முடிந்திருந்தது. 1878-ல் திருவையாறைச் சேர்ந்த ஜி.சுப்பிரமணிய அய்யர், செங்கல்பட்டுவைச் சேர்ந்த வீரராகவாச்சாரியார், சட்டக் கல்லூரி மாணவர் டி.டி.ரங்காச்சாரியார், பி.வி.ரங்காச்சாரியார், டி.கேசவராவ் பந்த், என்.சுப்பாராவ் பந்துலு ஆகியோர் ஆங்கில பத்திரிகைகள் மூலம் வெள்ளைக்கார அரசாங்கம் செய்துவரும் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட நினைத்து, 'ஹிண்டு’ பத்திரிகையைத் தொடங்கினார்கள். ஒரு ரூபாய் 12 அணா கடன் வாங்கி 'ஹிண்டு’ பத்திரிகையை ஆரம்பித்தனர். இந்த பத்திரிகை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை வெளியானது. 1883 தொடங்கி வாரம் மூன்று முறை வெளிவரும் பத்திரிகையாக மாறியது 'ஹிண்டு’. 1889, ஏப்ரல் 1-ம் தேதி முதல் மாலை நாளிதழாக வெளியாக ஆரம்பித்தது. (1940, நவம்பர் 1 முதல்தான் காலையில் வரத் தொடங்கியது!)  

பிஸினஸ் சமூகம் - பிராமணர்கள்!

1894 வாக்கில்தான் 'ஹிண்டு’ பத்திரிகையில் எழுத ஆரம்பித்தார் கஸ்தூரிரங்க அய்யங்கார். நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து அவர் தொடர்ந்து எழுதி வந்தார். 1900-க்குப் பிறகு சுப்பிரமணிய அய்யர் 'ஹிண்டு’ பத்திரிகையை வீரராகவாச்சாரியாரிடம் விற்றார். அவராலும் அந்த பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. அவரிடமிருந்து 1905-ம் ஆண்டில் 75,000 ரூபாய் தந்து 'ஹிண்டு’ பத்திரிகையை வாங்கினார் கஸ்தூரிரங்க அய்யங்கார்.

'ஹிண்டு’ பத்திரிகை ஆசிரியர் பொறுப்பை ஏற்றவுடன் ஆங்கில அரசாங்கம் தவறான நடவடிக்கைகளை எதிர்த்து தலையங்கம் எழுதினார் கஸ்தூரிரங்க அய்யங்கார். அவரது தெளிவான, துணிச்சலான தலையங்கம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெறவே, முதல் ஆண்டு முடிவிலேயே எல்லா செலவுகளும் போக 150 ரூபாய் லாபம் ஈட்டினார்.

எல்லா ஊர்களிலிருந்தும் செய்திகளை அனுப்ப நிருபர்களை நியமித்தார். முக்கிய செய்திகளை தந்தி மூலம் உடனுக்குடன் அனுப்பும் வழக்கத்தையும் கொண்டு வந்தார். வானிலை அறிக்கை, வர்த்தக செய்திகள், விளையாட்டு போன்ற உலக செய்திகளை வெளியிட ராய்ட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். சுழலும் அச்சு இயந்திரத்தை தென் இந்தியாவில் முதன் முதலில் கொண்டு வந்தவர் இவர்தான். தவிர, அச்சு கோர்க்கும் நவீன இயந்திரத்தையும் இவர்தான் முதலில் கொண்டு வந்து பத்திரிகைகளின் எதிர்காலத்தையே மாற்றிக் காட்டினார்.

நிதி விஷயங்களை கையாள்வதில் அவர் எவ்வளவு பெரிய நிர்வாகி என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் இந்த சம்பவம். 1907-ல் மயிலாப்பூர் இந்து சாசுவத நிதியின் தலைவராக இருந்தார் கஸ்தூரிரங்க அய்யங்கார். இந்த நிதி நிறுவனத்தில் மக்கள் டெபாசிட் செய்திருந்த நான்கு லட்ச ரூபாயை அப்போது சென்னையின் மிகப் பெரிய வங்கியாக இருந்த அர்பத்நாட் வங்கியில் போட்டு வைத்திருந்தார். ஆனால், அர்பத்நாட் வங்கி திடீரென திவாலானது. இதுபற்றி முன்பே அறிந்துகொண்டவர், திவாலாவதற்கு சில நாட்களுக்கு முன்பே பணத்தை எடுத்துவிட்டார். இது தெரியாத மக்கள், உடனடியாக பணத்தை தரவேண்டும் என்று கேட்க, எல்லோருக்கும் ஒரே நேரத்தில் பணம் தரமுடியாமல் திணறியது அந்த நிதி நிறுவனம். அப்போது தனது சொந்தப் பணத்தை அந்த நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்து நிலைமையைச் சமாளிக்க உதவினார்.

ஆங்கிலேய அதிகாரிகள் செய்த அட்டூழியங்களை வெட்ட வெளிச்சமாக்கினாலும்  முதல் உலகப் போரில் பிரிட்டனுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் ஆதரவு அளித்ததன் மூலம் ஆங்கிலேயர்களும் 'ஹிண்டு’ பத்திரிகையின் வாசகர் ஆனார்கள். பிரிட்டிஷ்  அரசின் அழைப்பின் பேரில் அவர் இங்கிலாந்து சென்றார். அங்கிருந்து பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கும் சென்றார். இந்த உலகப் பயணம் அவருடைய அணுகுமுறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. என்றாலும், தேச விடுதலைக்காக அவர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவதில் முன்பைவிட முனைப்போடு செயல்பட்டார்.

தேச விடுதலைக்காக தீவிரமாக பாடுபட்டபோதும் நேரடியாக அரசியலில் குதிக்க அவர் நினைத்ததே இல்லை. 1923-ல் தன்னுடைய 63-வது வயதில் காலமானார் கஸ்தூரிரங்க அய்யங்கார். அவர் இறக்கும்போது 'ஹிண்டு’ பத்திரிகையின் சர்க்குலேஷன் 17,000 காப்பிகளாக உயர்ந்திருந்தது. ஆனால், இன்று பல லட்சம் காப்பிகளாக, விவரமானவர்கள் விரும்பிப் படிக்கும் பத்திரிகையாக மாறக் காரணம் கஸ்தூரிரங்க அய்யங்காரின் வாரிசுகள்தான். செய்திப் பத்திரிகை உலகில் 'ஹிண்டு’க்கு என்றும் அழிவில்லை என்பது மட்டும் நிச்சயம்!  

(அறிவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு