Published:Updated:

வேல்யூ இன்வெஸ்டிங்!

வேல்யூ இன்வெஸ்டிங்!

பிரீமியம் ஸ்டோரி
வேல்யூ இன்வெஸ்டிங்!

இன்வெஸ்டிங் என்றாலே அதன் பொருள் வேல்யூ இன்வெஸ்டிங் என்பதுதான் என்று வேல்யூ இன்வெஸ்டிங் செய்பவர்கள் வாதம் செய்வார்கள். இதற்கு அவர்கள் கூறும் வியாக்கியானம் என்ன தெரியுமா? இன்வெஸ்ட்மென்ட் என்பதன் அர்த்தமே பிற்காலத்தில் விலை ஏறும் என்ற எண்ணத்தில் இன்று சொத்துக்களை வாங்கிப்போடுதல்! அப்படி சொத்துக்களை வாங்கும்போது இரண்டு வருஷம் கழித்து அந்த சொத்து எந்த விலைக்கு விற்கமுடியுமோ அந்த விலைக்கு இன்றைக்கு வாங்கிப் போட்டால் லாபம் நிச்சயமாக கிடைக்கும் இல்லையா?

வேல்யூ இன்வெஸ்டிங்!

தில் சொத்து என்பதற்கு ஈடாக ஒரு வீட்டு மனை உதாரணத்தைப் பார்ப்போம். நீங்கள் ஒரு சொத்து வாங்க நினைக்கின்றீர்கள். விற்பவர் விலையைக் கறாராகச் சொல்வார். ஏன் நடப்பு மார்க்கெட் நிலவரத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே சொல்வார். நீங்கள்தான் கொஞ்சம்  நைச்சியமாக பேசி தற்போதைய சந்தை நிலவரத்துக்கு முடிக்க வேண்டும். அதிலும், சொத்து கொஞ்சம் பிரதான சாலையில் எல்லா வசதியோடும் இருந்துவிட்டால் சொன்னதுதான் விலை. இல்லையா?

இதே சொத்தினை ஒரு சாதாரண மனிதர் அவசர பணத்தேவைக்கு விற்கிறார் என்றால் வயிற்றுவலி கேஸ் என்பார்கள்! தேவை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் நீங்களே கால் மேல் கால் போட்டுக்கொண்டு இந்த விலைக்கு நீங்க ரெடியென்றால் நாளைக்கே கிரயம் வச்சுக்கலாம் என்று பேரம் பேசுவீர்கள். இடம் பிரதான சாலையில் எல்லா வசதியோடு இருந்தாலும் சரி, ஊருக்கு வெளியே வசதிகளே இல்லாமல் இருந்தாலும் சரி, அவசரம் என்றால் விலையில் பாதிதான் என்பீர்கள்.

வீட்டுமனைச் சந்தை தனிநபர்கள் சம்பந்தப்பட்டது என்பதால் சாதாரண சூழ்நிலையில் அந்த ஏரியாவைவிட்டு விற்பனை விவரங்கள் வெளியே செல்வதில்லை. விளம்பரம் மூலம் நடக்கும் டீலிலும் கூட வெளிப்படையாய் விலையைச் சொல்வதில்லை. அதே லொக்கேஷனில் இன்னொரு மனை சமீபத்தில் என்ன விலையில் கைமாறியது என்ற விவரமும் சரியாக ஒருபோதும் வெளியே தெரியாது.

ஒரு சராசரி முதலீட்டாளராக வீட்டுமனையை இன்றைய சரியான மதிப்பில் வாங்கிப் போட்டால் இரண்டு வருடம் கழித்து சாதாரண முதலீட்டாளருக்கு கிடைக்கின்ற சராசரி ரிட்டர்ன் கிடைக்கும். ஒரு விவரமான முதலீட்டாளராக வீட்டுமனையை இன்றைய மதிப்பைக் காட்டிலும் குறைவான விலையில் வாங்கிப் போட்டால் இரண்டு வருடம் கழித்து சூப்பர் ரிட்டர்ன் கிடைக்கும்.

இது எல்லோருக்கும் தெரிந்ததுதானே என்பீர்கள். சென்ற இரண்டு வாக்கியங்களில் வீட்டுமனை என்பதற்குப் பதிலாக ஷேர் என்று மாற்றி எழுதி திரும்ப வாசித்துப் பாருங்கள். அப்படி முதலீடு செய்யும் விவரமான முதலீட்டாளர்தான் வேல்யூ இன்வெஸ்டர்.  

ரொம்ப சிம்பிளாய் இருக்கின்றது இல்லையா? சொல்வதற்கு சிம்பிளாய் இருந்தாலும், இதை நடைமுறைப்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. ஷேர்களின் சந்தை வெளிப்படையானது. அகில இந்திய ரீதியில் நடப்பது. விற்பதும் வாங்குவதும் யார் என்பதும் விற்பவர் செழிப்பில் இருக்கிறாரா? வயிற்றுவலியில் இருக்கிறாரா? என்பதுவும் உங்களுக்குத் தெரியாது. வாங்குபவர்கள் நடுவிலும் வெளிப்படையான போட்டி நிலவுவதால் நல்ல பாப்புலரான ஷேர்கள் சரியான விலைக்கு வாங்கப்படுவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றது. இப்படி ஒரு வெளிப்படையான விலை நிர்ணயத்திற்கு வாய்ப்பிருப்பதால் மட்டுமே வேல்யூ இன்வெஸ்டிங்கிற்கு நிறையவே பொறுமை தேவை.  

இரண்டு வாரங்களுக்கு முன்பு வேல்யூ இன்வெஸ்டிங்கிற்கு உகந்த கம்பெனிகளைப் பற்றி நாம் பேசியபோது ஈசாப் இந்தியா குறித்த ஒரு கேள்வியை வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். 'ஈசாப் இந்தியாவின் புத்தக மதிப்பைவிட சந்தையில் அதன் விலை அதிகமாயுள்ளதே? இது எப்படி வேல்யூ இன்வெஸ்டிங்கிற்கு உகந்ததாகும்?’ என்று கேட்டிருந்தார்.

புத்தக மதிப்பு என்பதற்கும் சந்தை மதிப்பிற்கும் நேரடித் தொடர்பை பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இதற்கும் வீட்டுமனையை வைத்து உதாரணம் சொன்னால் சுலபமாக அனைவரும் புரிந்துகொள்வீர்கள்.

ஊருக்குள் விலை அதிகமாக இருக்கிறதென்று நீங்கள் ஊரை விட்டு வெளியே ஒரு 10-15 கிலோ மீட்டர் தள்ளி ஒரு இடம் வாங்கி வீடு கட்டி குடிபோகின்றீர்கள். நிலம் மற்றும் வீடு என்ற இரண்டும் சேர்ந்து 15 லட்சம் (இடம் 5 லட்சம் + கட்டடம் 10 லட்சம்) ஆகின்றது.      15 வருடத்தில் ஊர் பரந்துவிரிந்து நீங்கள் இருக்கும் இடம் புது டவுனாகி விடுகின்றது. பஸ் ஸ்டாண்ட், ரோடு, தண்ணீர், விளக்கு, ரயில், ஏன் ஒரு பேச்சுக்கு ஏர்போர்ட்கூட உங்கள் வீட்டிற்கு அருகே வந்துசேர்ந்துவிடுகின்றது. அந்த சமயம் அமெரிக்காவில் மகனுடன் செட்டிலாக பிளான் பண்ணி நீங்களும் வீட்டை விற்றுவிடலாம் என்று விலை பேசுகின்றீர்கள். வீடு கட்டிய செலவு 10 லட்சத்திலிருந்து வருடத்திற்கு 5% (இன்கம்டாக்ஸ் டிப்ரிசிஷியேஷன் ரேட் - நிலத்திற்கு தேய்மானம் கிடையாது) தேய்மானத்தைக் கழித்தால் ரூபாய் 4.63 லட்சம் (ரௌண்ட் ஆஃப் செய்யப்பட்டது) உங்கள் புத்தக மதிப்பாக இருக்கும்.

இப்போது அந்த விலைக்கு வீட்டை விலைக்குக் கேட்டால் நிச்சயம் தரமாட்டீர்கள்! வீடு வாங்குபவர் உங்களிடம், 'இங்க நீங்க வீடு கட்டுறப்ப நிலம் 5 லட்சமும் வீடு கட்ட 10 லட்சமுமாய்

15 லட்சம் ரூபாய் செலவானது. இப்ப பில்டிங் தேய்மானத்தை கழிந்த்துவிட்டால் வீட்டுன் மதிப்பு 4.63 லட்சம் நிலத்தின் விலை 5 லட்சம் இரண்டும் சேர்த்து எல்லாம் கழித்தால் 9.63 லட்சம்தானே! ஏன் இப்படி பேராசைப்படுகிறீர்கள்?’ என்று கேட்டால் 'போய்யா’ என்று அடித்து துரத்துவீர்கள்தானே? வீட்டு மனை விலை கடுமையாய் ஏறியிருக்குமே! இந்த உதாரணம் தவறல்லவா என்று சொல்பவர்களுக்கு - அடுக்குமாடி ப்ளாட் விலையைப் பாருங்கள். பில்டிங்கோடு சேர்ந்த அண்டிவைடட் லேண்ட் ஷேர் மிகவும் குறைவாக இருக்கும் வேளையிலும் பில்டிங் தேய்மானத்துக்குப் பதில் விலை பலமடங்கு அதிகரித்துவிடுகின்றது.

##~##
அதே நிலைதான் கம்பெனியின் புத்தக மதிப்புக்கும். பில்டிங், ஃபேக்டரி, மெஷினரி என்று பிரித்துத் தராமல்  பிஸினஸிற்குள் இருக்கும் லாபம் போன்றவை அனைத்தையும் சேர்த்துக் கூட்டிய தொகைதான் புத்தக மதிப்பு. இந்த விலைக்கு ஷேர் வாங்க நினைப்பது கொஞ்சம் சாத்தியப்படாத விஷயம்தான். ஏனென்றால், கம்பெனியின் பிராண்ட், அது செய்த விளம்பரங்கள், அதனுடைய நம்பிக்கையான பொருட்கள், விநியோக நெட்வொர்க், கடன் தருபவர்கள், முதலீடு தருபவர்களின்  நன்மதிப்பு, இது போல இன்னொரு கம்பெனி உருவாக்க ஆகும் செலவு என்ற பல விஷயங்களின் மதிப்பையும் உள்ளடக்கியதுதான் ஷேரின் விலை. இதற்கு எர்னிங்ஸ் மதிப்பு என்று உண்டல்லவா?

அதாவது, மேலே சொன்ன அனைத்து விஷயங்களையும் நிர்மானித்து அதன் மூலம் கிடைத்திருக்கும் கம்பெனியின் சம்பாதிக்கும் திறனுக்கு ஒரு விலை நீங்கள் கொடுத்தே ஆகவேண்டும் இல்லையா? அந்த மதிப்பு நிச்சயமாக சந்தையில் இருக்கும் ஒவ்வொரு முதலீட்டாளரும் கேட்கவே செய்வார்கள். இதில்தான் நிறைய எதிர்பார்ப்புகள் சார்ந்த விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. கம்பெனி அடுத்த 5 வருடத்தில்,    10 வருடத்தில், 15 வருடத்தில் எப்படி செயல்படும் என்பது போன்ற கணிப்புகள் செய்யப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது.

இதில் தான் சிலசமயம் விலை அதிகமாகவும், சில சமயம் விலை குறைவாகவும் வைக்கப்படுகின்றது. இந்த விலை வித்தியாசங்களை கண்டறிந்து மதிப்பைவிட குறைவான விலையில் நல்ல கம்பெனிகளை வாங்கிப் போடுவதுதான் வேல்யூ இன்வெஸ்டிங். எனவே, புத்தக மதிப்பு என்பதையும் ஒரு கணக்காக எடுத்துக்கொள்ளலாமே தவிர, கம்பெனியின் சம்பாதிக்கும் திறன் மற்றும் ஏனைய விஷயங்களையும் அனுசரித்தே சந்தையில் விலை மாற்றங்கள் இருக்கும் என்பதையும் நீங்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். குறிப்பாகச் சொன்னால் புத்தக மதிப்பு, தற்போதைய சம்பாதிக்கும் திறனுக்கான மதிப்பு, மற்றும் கம்பெனியின் எதிர்கால வளர்ச்சிக்குண்டான மதிப்பு என்ற மூன்றும் சேர்ந்ததுதான் வேல்யூ இன்வெஸ்டிங்கிற்கான ஷேரின் உள்ளார்ந்த மதிப்பு (இன்ட்ரின்சிக் வேல்யூ) கணக்கிடப்படுகின்றது.

(முதலிடுவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு