பிரீமியம் ஸ்டோரி

எப்படிய்யா தந்தீங்க 7,000 கோடி..?

எடக்கு மடக்கு!

கிராமத்துல கல்யாணத்தை முடிச்சுட்டு ஊருக்குக் கிளம்பினேன். இரவு ஒன்பது மணிக்கு சென்னை பஸ். ஐந்து கிலோ மீட்டர் ஆட்டோவில் போய்த்தான் பஸ்சை பிடிக்கணும். அரைமணி நேரம் காத்திருந்தப் பிறகுதான் ஆட்டோ கிடைச்சுது. ''என்ன சார், கிளம்பியாச்சா மெட்ராஸுக்கு, குடுத்துவச்ச ஆளுங்க சார் நீங்க, உங்களுக்கெல்லாம் ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம்தான் கரன்டு கட்டாமே!'' என்றான் ஆட்டோக்காரன். ''பேசாம நீயும் மெட்ராஸுக்கு வந்து ஆட்டோ ஓட்ட வேண்டியதுதானே?'' என்றேன்.

''அட, போங்க சார், ஏற்கெனவே லொட லொடன்னு ஓடிகிட்டிருக்கிற இந்த ஆட்டோவை வித்துப்புட்டு, புது ஆட்டோவை வாங்கலாமுன்னுப் பார்த்தா பேங்க்ல கடன் தரமாட்டேங்குறாங்க. புது ஆட்டோவுல தினம் எத்தனை பேர் ஏறுவாங்க, எவ்வளவு வருமானம் வரும்னு ஆயிரத்தெட்டு கேள்விகளைக் கேட்டுவிட்டு,  ஓட்டம் இல்லாத ஏரியா; வருமானம் வராதுன்னு பேங்க் மேனேஜர் லோன் தரமாட்டேன்னுட்டாரு'' என்று ஆட்டோ டிரைவர் தன் சொந்தக் கதையைச் சொன்னான். ஆனால், அவன் மேற்கொண்டு பேசிய விஷயம் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

''ஏன் சார், நான் புது ஆட்டோ வாங்க கடன் கேட்டா இத்தனை கேள்வி கேக்குறாங்களே, ஏதோ கிங்ஃபிஷர்னு ஒரு ஏரோப்ளேன் கம்பெனி பத்தி பேப்பர்ல படிச்சேன்! ஏறக்குறைய பூட்டு மாட்டுற ஸ்டேஜுல இருக்குற இந்த கம்பெனிக்கு மட்டும் எப்படி சார் 7,000 கோடி கடன் தந்தாங்க? கிட்டத்தட்ட என் தொழில் மாதிரிதானே அதுவும். நான் தரையில ஓட்டுறேன், அது வானத்துல ஓடுது. எத்தனை பேரு பிளேன்ல போவாங்க, அதுக்கு எத்தனை ஃப்ளைட் தேவைப்படும்ங்கற கேள்வியை எல்லாம் கேக்காமயா அத்தனை ஆயிரம் கோடி ரூபா கடன் தந்திருப்பாங்க. அட, வீடு வாசலை ஈடா தரேன்னு சொன்னாக்கூட எனக்கு கடன் தரமாட்டேங்குறாங்களே, அந்த நிறுவனத்துக்கு மட்டும் என்னத்தை வச்சு இவ்வளவு பணம் தந்தாங்க?'' என்று கேட்டான்.  

##~##
வாஸ்தவம்தானே! கிராமத்தில் இருக்கும் ஒரு ஆட்டோ டிரைவருக்கு அவருடைய வங்கியின் மேனேஜர் புது ஆட்டோ வாங்க லோன் தருவதற்கு முன்னால் கேட்ட கேள்விகளைக்கூட கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸிடம் வங்கிகள் கேட்டதா தெரியலயே! ஒரு தொழிலில் எந்தெந்த இடத்திலெல்லாம் கடன் வாங்க முடியுமோ அந்தந்த இடத்திலெல்லாம் கடனை வாங்கி, பெரிய காமெடியல்லவா பண்ணியிருக்காங்க. ஃப்ளைட்டை லீஸுக்குக் கொடுத்தவனுக்கு அதுக்குண்டான பணம் தரலை; ஆயில் கம்பெனிகளுக்கு பெட்ரோலுக்கு காசு தரலை; ஏர்போர்ட் அத்தாரிட்டிக்கு ஏர்போர்ட்டை உபயோகிப்பதற்கான காசு தரலை; அரசாங்கத்துக்கு சர்வீஸ் டாக்ஸ் கட்டலை. இதெல்லாம் அவங்க கையில இருக்கிற காசை எடுத்துத் தரவேண்டியதில்லை. ஃப்ளைட்ல போறவங்க, வர்றவங்ககிட்ட இருந்து வாங்கி, அதை தரவேண்டிய நபர்களுக்குத் தராம விட்டுட்டாங்க. எல்லாத்துக்கும் மேல, வேலை பார்க்கிறவங்களுக்கு மூணு மாசம் சம்பளம் தராம அம்போன்னு விட்டுட்டாங்க.  

பொதுவா, ஏர்லைன்ஸ் தொழிலே ரொம்பவும் ரிஸ்க்கானது. ஏன்னா ஒரு புது ரூட்ல ஃப்ளைட் விட்டா அதுல முழுக்கூட்டம் வர்றதுக்கு ஆறு மாசம் ஆகும். ஒரு நாட்டுல எந்த அளவுக்கு பிஸினஸும் மக்களும் சுபிட்சமா இருக்காங்கங்குறதையும், பொருளாதார நிலைமையையும் வச்சுத்தான் இந்த தொழில் சிறப்பா நடக்குதான்னு தெரியும். உலக பொருளாதார நெருக்கடி வந்த வருஷமான 2008-க்கு அப்புறமா ஏர்லைன்ஸ் தொழிலே கொஞ்சம் கொஞ்சமா சிதைஞ்சுக்கிட்டு வருது. ஆனானப்பட்டவனெல்லாம் தானானப்போடுறான். புதுசா வந்த, நஷ்டம் பண்ணிக்கிட்டிருக்கிற கிங்ஃபிஷருக்கு லோன் கொடுக்கிறோமேங்கிற நிதானம் எந்த பேங்குக்கும் இருந்த மாதிரி தெரியலை.

'என்ன ஏகாம்பரம், கிங்ஃபிஷருன்னு சொன்னபிறகு நிதானத்தைப் பேசி என்ன பிரயோஜனம்?’ங்கிறீங்களா? அதுவும் சரிதான். ஆனா, கொள்ளை போறது நம்மளை மாதிரி சாமான்யனுங்கப் பணம்தானே?

போன வருஷம் இதே நேரம் ஒரு ரிசர்ச் கம்பெனி கிங்ஃபிஷர் திவாலாகப் போற கம்பெனின்னு சொன்னதுக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு அந்த கம்பெனியோட சண்டை போட்டாங்க. அப்பவாவது இந்த பேங்க்குகாரங்க முழிச்சிருக்கலாமே! இங்க நாம கிரெடிட் கார்டுல சாமான் வாங்கிட்டு ட்யூ டேட்ல பணம் கட்டலேன்னா, ஐநூறு, ஆயிரமுன்னு அபராதம் போட்டுடறான். பணத்தைக் கட்டாம இருந்தா, ஆளை விட்டு மிரட்டுறான். ஆயிரமாயிரம் கோடிய வாங்கி ஏப்பம் விட்டுட்டு, நாங்க ஒண்ணும் பயந்துகிட்டு ஓடலேன்னு டயலாக் அடிச்சுகிட்டு இருக்கிறாரு கிங்ஃபிஷர் ஓனரு.

எப்படிய்யா இந்த கம்பெனிக்கு கடன் தந்தீங்கன்னு கேட்டா, ஷேரையும் பிராண்டையும் அடகு பிடிச்சுதான் கடன் தந்தோம்ங்கிறாங்க. எக்கச்சக்க நஷ்டத்துல இருக்கிற ஒரு நிறுவனத்தோட ஷேரை வச்சுகிட்டு என்ன புண்ணியம்? இது போதாதுன்னு பிராண்டு வேற! பிராண்டுன்னா லாபம் சம்பாதிக்கணும். லாபம் சம்பாதிக்காத பிராண்டை வச்சுக்கிட்டு பணம் தந்தா, அந்த பணம் அம்பேல்தான்!

அய்யா பேங்கருங்களே, ஏர்லைன் சர்வீஸ் பண்றவன் அதுவும் குறைஞ்ச செலவுல கூட்டிட்டுப் போறேன்னு சொல்றவன் எவனுமே இதுவரைக்கும் லாபம் பண்ணதா சரித்திரமில்லை.   அப்படி எவனாவது சொன்னா, அவனை நம்பி பாசஞ்சர் போகலாமே தவிர பேங்கர் போகலாமா? அடக்க விலையைவிட குறைவா விக்கப் போறேன்னு எவனாவது வந்து கேட்டா கடன் தருவீங்களா? அப்ப கிங்ஃபிஷருக்கு மட்டும் அசையாதச் சொத்து எதுவுமே இல்லாம காத்துலபோற விஷயங்களை எல்லாம் ஈடா வச்சு எப்படி கடன் தந்தீங்க! உள்ளபடியே கடன் தந்தீங்களா, இல்லை புருடா விட்றீங்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு