Published:Updated:

மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

பிரீமியம் ஸ்டோரி
மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

இந்த வாரம் கச்சா எண்ணெய் விலை எப்படியிருக்கும் என்று சொல்கிறார் ஏஞ்சல் கமாடிட்டீஸ் புரோக்கிங் நிறுவனத்தின் கமாடிட்டி கிளஸ்டர் ஹெட் சிவக்குமார்:

கச்சா எண்ணெய்!

##~##
''சீனாவில் பணவீக்க விகிதம் கடந்த  33 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. மேலும், அங்கு ஜி.டி.பி. ஜூலை முதல் செப்டம்பர் மாதங்கள் வரை 7.4 சதவிகிதமாக குறைந்துள்ளது. தயாரிப்பு மற்றும் சில்லறை வர்த்தகத்தில் மீண்டுவர முயற்சி செய்து வருகிறது. இது மார்ச் 2013-ம் ஆண்டில் 7.9 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சீனாவில் தொழில் துறை உற்பத்தி அக்டோபர் மாதத்தில் 9.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது கடந்த நான்கு மாதங்களைவிட அதிகம் என பொருளாதார சர்வே குறிப்பிடுகிறது. குறைந்த வட்டி விகிதம், நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சுலபமான அணுகுமுறை உள்ளிட்டவை நடந்தால் மட்டுமே இந்த இக்கட்டான பொருளாதார சூழ்நிலையிலிருந்து மீளமுடியுமென இன்டர்நேஷனல் மானிட்டரி ஃபண்ட் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் வேலை இல்லாதவர்களுக்குத் தரப்படும் உதவித்தொகை குறைந்ததை அடுத்து நவம்பர் 9-ம் தேதி கச்சா எண்ணெய் விலை 0.8 சதவிகிதம் அதிகரித்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யை அதிகமாக நுகரும் சீனாவில் பொருளாதாரம் சீரடைந்து வருவதாகத் தகவல்கள் வெளியாவதும் விலை அதிகரிப்புக்குக் காரணமாகும். எதிர்பார்த்ததைவிட கச்சா எண்ணெய் இன்வென்டரி குறைந்திருப்பதாகவும் அமெரிக்கன் பெட்ரோலியம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. எனினும், எம்.சி.எக்ஸ். சந்தையில் ரூபாயின் மதிப்பு குறைவு காரணமாக விலை குறைவது தடுக்கப்பட்டது. வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்புண்டு''.  

மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

இயற்கை எரிவாயு!

இயற்கை எரிவாயு இன்வென்டரி 21 எம்.எம்.பி.டி.யூ. மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால், எதிர்பார்த்ததோ 27 எம்.எம்.பி.டி.யூ. எதிர்பார்த்ததைவிட இன்வென்டரி குறைந்ததை அடுத்து இயற்கை எரிவாயுவை வாங்க வர்த்தகர்கள் ஆர்வம் காட்டினார்கள். மேலும், அமெரிக்காவில் வீசிய சாண்டி புயல் காரணமாக இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டிமாண்ட் அதிகரித்துள்ளதால் வரும் வாரத்தில் இயற்கை எரிவாயு விலை அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்புள்ளது. எம்.சி.எக்ஸ். சந்தையில் ஒரு எம்.எம்.பி.டி.யூ. இயற்கை எரிவாயு டிசம்பர் கான்ட்ராக்ட் 202.80 ரூபாய்க்கு வெள்ளிக்கிழமை மாலை வர்த்தகமானது.

இந்த வாரம் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர் எடுத்துச் சொல்கிறார்.

மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

தங்கம்!

''ஒபாமாவின் வெற்றி தங்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. கடந்த வருடத்தில் இரண்டு முறை மட்டுமே தங்கம் சரிவைச் சந்தித்தது. ஆனால், ஒவ்வொரு முறையும் அதிலிருந்து மீண்டு சென்ற வருடத்தின் உயரமான            1,900 டாலரை (ஒரு அவுன்ஸ்) நெருங்க முயற்சி செய்கிறது.

அமெரிக்க தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி அடைந்தால் தங்கம் விலை ஏறும் என ஆரூடம் சொல்லப்பட்டது. இதற்கு காரணம், ஒபாமா மற்றும் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் பென் பெர்னான்கி டாலரை அச்சடித்து வெளியிடும் முடிவை செயல்படுத்துவார்கள். அதனால் டாலரின் மதிப்பு குறைந்து, தங்கத்தின் மதிப்பு உயரும் என்கிற நம்பிக்கைதான். மேலும், 2015-ம் ஆண்டு வரை வட்டி விகிதங்களில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று ஃபெடரல் வங்கி தலைவர் அறிவித்ததும் தங்கத்தின் விலை அதிகரிக்க இன்னொரு காரணம்.

ஐரோப்பா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவில் ஜனநாயக கட்சி ஆட்சி செய்த காலங்களில் தங்கத்தின் விலை உயர்ந்தே காணப்பட்டது. 1980-ம் வருடம் ஜிம்மி கார்ட்டர் ஆட்சியின்போது ஒரு அவுன்ஸ் 850 டாலர் வரை சென்றது. ஒபாமா ஆட்சியின்போது 2011-ம் வருடம் 1,900 டாலரைத் தொட்டது. தவிர, அமெரிக்காவில் இரண்டாவது முறையாக யாரெல்லாம் ஆட்சிக்கு வருகிறார்களோ, அப்போதும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. ஜார்ஜ் புஷ் முதல்முறை ஆட்சி செய்தபோது தங்கம் விலை 24.6 சதவிகிதம் அதிகரித்தது. இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்தபோது 88.8 சதவிகிதம் ஏற்றம் கண்டது. பில் கிளிண்டன் முதல்முறை ஆட்சிக்கு வந்தபோது 5.6 சதவிகிதமும், இரண்டாவது முறை வந்தபோது 16.9 சதவிகிதமும் ஏற்றம் கண்டது. அதே மாதிரி, இந்த முறையும் நடக்கும் என எதிர்பார்க்கிறார்கள்''.

மெட்டல் & ஆயில் கமாடிட்டி!

வெள்ளி!

அமெரிக்காவில் ஒபாமா மீண்டும் அதிபரானதால் தங்கத்தின் விலை அதிகரித்தது. இதன் விளைவாக வெள்ளியின் விலையும் அதிகரித்து வர்த்தகமானது. டாலரின் மதிப்பு குறைந்து வருவதால் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியை நோக்கி தங்களது பார்வையைச் செலுத்தினார்கள். மேலும், இந்தியாவில் பண்டிகைக் காலம் என்பதால் தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை வரும் வாரத்தில் சற்று அதிகரிக்கும் என்பதால் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளது. எம்.சி.எக்ஸ். சந்தையில் ஒரு கிலோ வெள்ளி டிசம்பர் கான்ட்ராக்ட் 60,800 ரூபாய்க்கு வெள்ளிக்கிழமை மாலை வர்த்தகமானது.

அடிப்படை உலோகங்கள்!

டாலரின் மதிப்பு குறைந்து வருவதை அடுத்து அடிப்படை உலோகங்களின் விலை அதிக ஏற்ற, இறக்கம் இல்லாமல் வர்த்தகமானது. எல்.எம்.இ. காப்பர் இன்வென்டரி அதிகரிப்பு மற்றும் உலக சந்தைகள் அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் காப்பரின் விலை சென்ற வாரத்தில் குறைந்தது. உலக நாடுகளின் கடன் பிரச்னை அடிப்படை உலோகத்தின் விலை குறைய காரணமாக அமைகிறது. வரும் வாரத்தில் அடிப்படை உலோகங்கள் விலை குறைந்து வர்த்தகமாகவே வாய்ப்புகள் உள்ளது.

- பானுமதி அருணாசலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு