பிரீமியம் ஸ்டோரி
அக்ரி கமாடிட்டி!

இந்த வாரம் கடுகு விதை குறித்து ஜே.ஆர்.ஜி. வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் ஜோனல் புராடக்ட் இன்சார்ஜ் முருகேஷ் குமார் கூறுகிறார்.

##~##
''செ
ன்ற வார ஆரம்பத்தில் கடுகு விதை விலை குறைந்து, பிறகு அதிகரித்து வர்த்தகமானது. உள்நாட்டுச் சந்தையில் தேவை குறைந்ததும், ராபி சீஸன் விதைப்பு தாமதம் ஆவதுமே விலை குறைந்து வர்த்தகமாவதற்கு காரணம். கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியா

9.9 லட்சம் டன் சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. இது அதற்கு முந்தைய மாதத்தில் 8.97 லட்சம் டன்னாக இருந்தது. அதே செப்டம்பர் மாதத்தில் பாமாயில் இறக்குமதி 39.9% அதிகரித்து 1,11,163 டன்னாக இருந்தது. அறுவடை காலத்தில் உள்நாட்டுச் சந்தையில் கடுகு விதை வரத்து அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெனிக்கல்படி பார்க்கும்போது, விலை அதிகரிப்பதற்கான காரணிகளே தென்படுகின்றன. சென்ற வாரத்தில் கடுகு விதை 100 கிலோ 4,400 ரூபாய்க்கு வர்த்தகமாகி முடிந்ததால், இந்த வாரத்தில்     4,600 ரூபாய் வரை உயர வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை 4,090 ரூபாய்க்கு கீழே இறங்கினால், விலை குறையவே வாய்ப்பு அதிகம்.

அக்ரி கமாடிட்டி!

மிளகு (PEPPER))

உள்நாட்டுச் சந்தையில் மிளகின் தேவை குறைந்து காணப்பட்டதாலும், நடப்பு ஆண்டில் அதிக விளைச்சல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதாலும் சென்ற வாரத்தில் மிளகு விலை குறைந்து வர்த்தகமானது. கொச்சி சந்தைக்கு சென்ற வாரத்தில் 14 டன் மிளகு வரத்து வந்தது. இது அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த அளவாகும். விற்பனை வரத்தைவிட குறைவாகவே இருந்தது. கடந்த வாரத்தில் நூறு கிலோ மிளகு ஸ்பாட் விலையாக 41,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சர்வதேச சந்தையில் மற்ற நாட்டு மிளகைவிட இந்திய மிளகின் விலை ஒரு டன் 8,350 டாலருக்கு வர்த்தகம் ஆனது. அதிக விலை காரணமாக இந்திய மிளகை வாங்க வர்த்தகர்கள் ஆர்வம் காட்டவில்லை.

2013-ல் சர்வதேச மிளகு உற்பத்தி 3,16,832 டன்களாக இருக்கும் எனவும்; அதே ஆண்டில் இந்தியாவின் மொத்த மிளகு உற்பத்தி 55,000 டன்னாக இருக்கும் எனவும்; நடப்பு ஆண்டில் இந்தியாவில் மொத்த மிளகு உற்பத்தி 43,000 டன் இருக்கும் எனவும் சர்வதேச மிளகு அமைப்பு மதிப்பிட்டுள்ளது. 2013-ல் நாட்டின் உள்நாட்டு பயன்பாடு மற்றும் ஏற்றுமதி முறையே 43,000 டன்கள் மற்றும் 25,000 டன்கள் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.  வரத்து அதிகம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பால் அடுத்த வாரமும் மிளகு விலை குறைந்தே வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

அக்ரி கமாடிட்டி!


ஜீரகம் (JEERA)

சென்ற வாரத்தில் ஜீரகம் விலை ஒரே நிலையில் வர்த்தகமானது. ராபி பருவத்து பயிர் தாமதமாகப் பயிரிடப்படுவதும், இப்போது இருக்கும் காரீஃப் பருவ பயிர் 10-15 சதவிகித குறைவான விளைச்சல் கொடுக்கும் சூழல் இருந்து வருகிறது. இதற்கு காரணம், கடந்த சில நாட்களாக சந்தையில் ஜீரகத்திற்கு நிலையான விலை இல்லாததுதான். இருப்பினும் ஜீரகத்திற்கு உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி தேவை அதிகமாக இருக்கிறது. சமீபத்திய தகவலின்படி, சிங்கப்பூரில் இந்திய ஜீரகத்திற்கு தேவை அதிகரித்து வருகிறது. மேலும், உள்நாட்டில் வரும் பண்டிகைகளின் காரணமாகத் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற வாரத்தில் தினவரத்தாக உஞ்ஹா சந்தைக்கு 5,000 பைகள் (ஒரு பை என்பது 55 கிலோ) வந்தன. நூறு கிலோ ஜீரகம் 14,700 ரூபாய்க்கு விற்பனை ஆனது. பண்டிகை காலத் தேவை காரணமாக கடந்த சில தினங்களாக ஜீரகத்தின் வரத்து அதிகரித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. ஏலம் விடும் சந்தைகளுக்கு நவம்பர் 12 முதல் 16-ம் தேதி வரை தீபாவளி விடுமுறை என்பதால் அதற்குள் வரத்து இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் முழுவதும் விடுமுறை என்பதால் விலையில் அதிக மாற்றங்கள் இருக்காது.

அக்ரி கமாடிட்டி!


மஞ்சள் (TURMERIC)

சென்ற வாரத்தில் வர்த்தகர்கள் பிராஃபிட் புக்கிங் செய்ததால் மஞ்சள் விலை குறைந்து வர்த்தகமானது. பண்டிகைக் காலம் என்பதாலும், தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் கடந்த வாரத்தில் கனமழை பெய்ததால் பயிர் சேதம் ஏற்பட்டதாலும் மஞ்சளின் டிமாண்ட் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் ஈரோடு சந்தைக்கு வராத ஆர்டர்கள் தற்போது அண்டை மாநிலங்களில் இருந்து வரத் துவங்கியுள்ளன. பீகார் மற்றும் மற்ற வட மாநிலங்களில் மஞ்சளுக்கான தேவை அதிகம் காணப்படுகிறது. சென்ற வாரத்தில் ஈரோடு மற்றும் நிஜாமாபாத் சந்தைக்கு தினவரத்துகள் முறையே 7,000 பைகள் மற்றும் 1,000 பைகள் (ஒரு பை என்பது 70 கிலோ) வந்தன. நூறு கிலோ விரலி மஞ்சள் 5,100 ரூபாய்க்கு விற்பனையானது. தேவை அதிகரித்துள்ளதால் வரும் வாரத்தில்  மஞ்சள் விலை உயர்ந்து வர்த்தகம் ஆகும்.

அக்ரி கமாடிட்டி!


ஏலக்காய் (CARDAMOM)

சென்ற வாரத்தில் ஏலக்காய் விலை குறைந்து வர்த்தகமானது. குறைந்த தேவை மற்றும் பெரிய சந்தைகளில் வரத்து அதிகம் காணப்பட்டதுதான் விலை குறைவிற்கு காரணம். சென்ற வாரம் சந்தைக்கு தினவரத்தாக சராசரியாக 64 டன்கள் வந்தன. ஒரு கிலோ ஏலக்காய் விலை குறைந்து 679 ரூபாய்க்கு வர்த்தகமானது. உள்நாட்டு மற்றும் ஏற்றுமதித் தேவைகளின் காரணமாக விலை மேலும் குறையாமல் தடுக்கப்பட்டது. விவசாயிகள் சந்தைக்குப் பொருட்களைக் கொண்டு வந்து ஏலம் விடலாம் அல்லது அங்கீகாரம் பெற்ற டீலர்களிடம் நேரடியாக விற்கலாம் என ஸ்பைஸ் போர்டு தெரிவித்துள்ளது. சந்தைக்கு பொருள் கொண்டுவரும் விவசாயிகளுக்கு ஏல நிறுவனம் ஒரு வாரத்தில் பணத்தைக் கொடுக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஏற்றுமதி டிமாண்ட் வருவதால் வரும் வாரத்தில் விலை சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மிளகாய் (CHILLI)

சென்ற வாரத்தில் மிளகாய் விலை குறைந்து வர்த்தகமானது. ஆந்திராவில் பெய்த கன மழையினால் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம். அதுமட்டுமல்லாமல் மிளகாய் வர்த்தகத்தின் சில அடிப்படை காரணிகள் சரியில்லாததும் விலை குறைவிற்கு காரணம். சமீபத்தில் தமிழகத்தைத் தாக்கிய நீலம் புயல் காரணமாக இந்தியாவின் தென்கிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்தது. இதனால் பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அதில் மிளகாய் அதிகம் விளையும் குண்டூர், கம்மம், ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டம் ஆகியவையும் உள்ளடங்கும். குண்டூர் சந்தைக்கு தினவரத்தாக 50,000 பைகள் (ஒரு பை என்பது 45 கிலோ) வந்தன. பயிர் சேதம் அதிகம் என்பதால் வரும் வாரத்தில் மிளகாய் விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

- செ.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு