Published:Updated:

தங்கத்தில் முதலீடு... காயின் வேஸ்ட்! எது பெஸ்ட்?

தங்கத்தில் முதலீடு... காயின் வேஸ்ட்! எது பெஸ்ட்?

பிரீமியம் ஸ்டோரி
தங்கத்தில் முதலீடு... காயின் வேஸ்ட்! எது பெஸ்ட்?
##~##
மீபத்தில் நண்பர் ஒருவருக்கு இக்கட்டான நிலைமை. திடீரென பணம் தேவைப்பட்டது. அக்கம்பக்கம் கடன் வாங்குவதைவிட, ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த எட்டு தங்க காயினை விற்று நிலைமையைச் சமாளிக்கலாமே என்று நினைத்து, காயின் வாங்கிய கடைக்கே போனார். எட்டு கிராம் எடை கொண்ட தங்க காயின்களின் மதிப்பு அன்றைய விலைக்கு 23,546 ரூபாய் என்று எழுதி தந்தனர். 'இந்த தொகைக்கு உங்களுக்குப் பிடித்த நகையை தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றனர் கடைக்காரர்கள். 'இல்லை, எனக்கு பணம் வேண்டும்’ என்றார் நண்பர். 'அப்படியானால் 21,200 ரூபாய் மட்டுமே கிடைக்கும்’ என்று கடைக்காரர்கள் சொல்ல, வேறு வழியில்லாமல் வாங்கிக்கொண்டு திரும்பினார் நண்பர். கிட்டத்தட்ட 2,346 ரூபாய் (சுமார் 10 சதவிகிதம்) நண்பருக்கு நஷ்டம்.

ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை சுலபமாகச் சேமிக்க தெரிந்த ஒரே வழி தங்கம்தான். முன்பு நகைக் கடைகளில் சீட்டு போடுவதன் மூலம் தங்கம் வாங்கினார்கள் பலர். ஆனால், இன்றைக்கோ கையில் காசு சேரும்போதெல்லாம் தங்க காயினாக வாங்கித் தள்ளுகிறார்கள். ஆனால், தங்கத்தை காயின்களாக வாங்கினால் லாபமா, இதில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்கிற கேள்விக்கு பலருக்கும் பதில் தெரிவதில்லை. அதுபற்றி ஒரு தெளிவை உருவாக்கவே இந்த கட்டுரை.

யாரெல்லாம் விற்கிறார்கள்?

தங்கத்தில் முதலீடு... காயின் வேஸ்ட்! எது பெஸ்ட்?

தங்க காயின்களை முன்பு நகைக் கடைகளே விற்று வந்தன. இப்போது வங்கிகளும், தபால் நிலையங்களும்கூட காயின்கள் விற்கின்றன. தபால் நிலையங்களில் அரை கிராம் முதல் 50 கிராம் வரையிலும், வங்கிகளில் அரை கிராம் முதல் 100 கிராம் வரையிலும், நகைக் கடைகளில் ஒரு கிராம் முதல் 100 கிராம் வரையிலும் தங்க காயின்கள் கிடைக்கிறது.

இதில் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் தங்க காயின்கள் 24 கேரட் சுத்த தங்கமாகும். அதாவது, 999.99 சதவிகிதம் அல்லது 999.95 சதவிகிதம் சுத்தமானது. சுவிட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறதாம். தரத்திற்கான முத்திரையும் அதில் இருக்கிறது. நகைக் கடைகளில் 22 கேரட் மற்றும் 24 கேரட் காயின்கள் விற்பனை செய்யப்படுகின்றன.  

தங்கத்தில் முதலீடு... காயின் வேஸ்ட்! எது பெஸ்ட்?

திரும்ப பணம் கிடைக்காது!

தங்க காயின்களை வாங்குபவர்கள் பிற்பாடு தங்க நகைகளாக மாற்றிக்கொள்ளலாம்; திடீரென பணம் தேவைப்படும்பட்சத்தில் பணமாகவும் மாற்றிக்கொள்ளலாம்; என்று நினைக்கிறார்கள் பலர். ஆனால், வங்கி மற்றும் தபால் நிலையங்களில் வாங்கும் தங்க காயின்களை மீண்டும் அங்கே கொண்டு விற்க முடியாது. நகைக் கடைகளில் மட்டுமே விற்க முடியும்.

வங்கி மற்றும் தபால் நிலையங்களில் வாங்கிய 24 கேரட் காயினை நகைக் கடைகளில் கொடுத்து ஆபரணத் தங்கமாக மாற்றும்போது அன்றைய 22 கேரட் தங்க நகையின் விலையுடன் 8 சதவிகிதம் கூடுதல் செய்து மதிப்பிடுகிறார்கள். இந்த மதிப்பு தொகைக்கு நாம் நகையாக மட்டுமே மாற்றிக்கொள்ள முடியுமே தவிர, பணம் தரமாட்டார்கள். சில நகைக் கடைகளில் அன்றைய 24 கேரட் தங்கத்தின் விலைக்கு மதிப்பிடுகிறார்கள். ஆனால், அது அந்த கடையில் வாங்கப்பட்ட தங்க காயினாக இருக்க வேண்டும். அதே கடையில் வாங்கிய காயினை தந்து பணம் பெற வேண்டுமென்றால்கூட 10 சதவிகிதம் வரை கழிவு செய்துதான் பணம் தருகிறார்கள். இதனால், அவசரத்துக்கு உதவும் என தங்க காயினை வாங்கி வைப்போருக்கு நஷ்டமே ஏற்படுகிறது.

தங்கத்தில் முதலீடு... காயின் வேஸ்ட்! எது பெஸ்ட்?

பொய்ச் சலுகை!

தற்போது பண்டிகைக் காலம் என்பதால் தபால் நிலையங்களில் 7 சதவிகிதம் வரை சலுகை தரப்படுகிறது.  வங்கிகளைப் பொறுத்தவரை, நான்கு முதல் எட்டு சதவிகிதம் சலுகை விலையில் தருவதாகச் சொல்கிறார்கள். இந்த சலுகைகள் ஒன்றிரண்டு கிராம் காயின்களுக்கு அல்ல, 8 கிராம், 10 கிராம், 20 கிராம் காயின்களுக்கு மட்டுமே. நகைக் கடைகளில் நாம் பேரம் பேசி விலையைக் குறைக்கலாம். ஆனால், தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் விலையைக் குறைக்க முடியாது. தவிர, விலையை அதிகப்படியாக உயர்த்தி, பிறகு இறக்குவதன் மூலம் சலுகை தருவதாக விஷயம் தெரிந்த சிலர் சொல்கிறார்கள். எனவே, இதை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

தங்கத்தில் முதலீடு... காயின் வேஸ்ட்! எது பெஸ்ட்?

மலைக்க வைக்கும் விலை வித்தியாசம்!

தங்க காயினை வங்கிகள், தபால் நிலையங்கள், நகைக் கடைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலையில் விற்பனை செய்கின்றன. இந்த விலை வித்தியாசம் ஏன்? என நகை மதிப்பீட்டாளரான சுவாமிநாதனிடம் கேட்டோம்.

''லாபத்தை அதிகமாகவோ, குறைத்தோ விற்பதால்தான் விலை வித்தியாசப்படுகிறது. நகைக் கடைகளுடன் ஒப்பிடும்போது வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் விலை அதிகமாக இருக்கக் காரணம், வரியுடன் விற்பனை செய்யப்படுவதே. நகைக் கடைகளில் வரியுடன் விற்பனை செய்வதில்லை என்பதால் அங்கு விலை குறைவாக இருக்கிறது. ஆனால், தரத்தைப் பொறுத்தவரை வங்கி, தபால் நிலையம், நகைக் கடைகளுக்கு எந்த வித்தியாசமும் இல்லை. முன்பெல்லாம் தரத்தைக் குறைத்துக்கொண்டு விலையைக் குறைத்து தங்க காயின்களை விற்பனை செய்து வந்தன நகைக் கடைகள். இப்போது போட்டி அதிகமானதால் தரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் சேதாரத்தில் லாபம் பார்க்கின்றன. சுத்த தங்கத்தை தங்க காயினாக மாற்ற கூலி 50 ரூபாய் ஆகும். இது ஒரு கிராம் என்றாலும் சரி, 100 கிராம் என்றாலும் 50 ரூபாய்தான் கூலி. ஆனால், சுத்த தங்கத்தை உருக்கும்போது 20 முதல் 30 மில்லி சேதாரம் ஏற்படும். இந்த சேதாரத்தைதான் தங்க காயினில் சேர்த்து விற்கிறார்கள். பெரிய கடைகளில் விளம்பரம், ஏ.சி. போன்றவற்றுக்கு நிறைய செலவாவதால், அதனை ஈடுகட்டவும் விலை உயர்த்தி விற்கிறார்கள்'' என்றார் அவர்.  

தங்கத்தில் முதலீடு... காயின் வேஸ்ட்! எது பெஸ்ட்?

என்ன தீர்வு?

தங்க காயினாக வாங்கினால் இவ்வளவு பிரச்னையா..? அப்படியானால் நாங்கள் என்னதான் செய்வது என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு தீர்வாக இருப்பது பேப்பர் தங்க சேமிப்பு திட்டங்கள்தான். கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் (இ.டி.எஃப்.), கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், இ-கோல்டு மூலம் தங்கத்தைச் சேமிக்கலாம்.

கோல்டு இ.டி.எஃப்.!

கோல்டு இ.டி.எஃப். என்பது தங்கத்தில் நேரடியாக முதலீடு செய்வது. பங்கு வாங்குவதைப் போல இதை எளிதாக வாங்கிவிடலாம். இதற்கு டீமேட் கணக்கு தேவை. ஒரு யூனிட் என்பது ஒரு கிராம் தங்கத்தின் விலைக்கு நிகரானது. கிட்டத்தட்ட 13 நிறுவனங்கள் இன்றைக்கு கோல்டு இ.டி.எஃப். திட்டங்களை நடத்தி வருகின்றன. இ.டி.எஃப்.-ஐ பொறுத்தவரை பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு விற்றால் நீண்ட கால ஆதாய வரியாக 10.3 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும். பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு என்றால் 20.6 சதவிகித வரி செலுத்த வேண்டும். குறுகிய கால மூலதன ஆதாய வரி உங்களின் வருமான வரி வரம்பைப் பொருத்து இருக்கும். கோல்டு இ.டி.எஃப்.-ன் மதிப்பு செல்வ வரிக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட்!

கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் என்பது கோல்டு இ.டி.எஃப். ஃபண்டுகளில் முதலீடு செய்வது. இதில் முதலீடு செய்வதற்கு டீமேட் கணக்கு தேவையில்லை. 100, 500, 1,000 ரூபாய் என உங்களால் முடிந்த தொகையை மாதந்தோறும் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யலாம். ஐந்துக்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இத்திட்டத்தை நடத்தி வருகின்றன. உங்களுக்கு எப்போது பணம் தேவைப்படுகிறதோ, அந்நேரத்தில் யூனிட்களை விற்று பணமாகப் பெற்றுக்கொள்ளலாம். இல்லையெனில் அந்த பணத்தைக் கொண்டு நகைக் கடைகளில் தங்கத்தை வாங்கிக்கொள்ளலாம். தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கம் இதில் பிரதிபலிக்கும் என்பதால் இது சிறந்த சேமிப்பாக இருக்கும். இதில் நீண்டகால மூலதன ஆதாய வரி (ஒரு வருடத்துக்கு பிறகு விற்றால்) பணவீக்க சரிக்கட்டலுக்குப் பிறகு 20 சதவிகிதமாகவும், பணவீக்க சரிக்கட்டல் இல்லாமல் 10 சதவிகிதமாகவும் உள்ளது. குறுகிய கால ஆதாய வரி அவரவர் வரி வரம்பிற்கு உட்பட்டதாகும்.

இ-கோல்டு!

சமீபத்திய வரவான இ-கோல்டு, நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் மூலம் வாங்கலாம். இதற்கு டீமேட் கணக்கு தேவை. தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தைப் பொறுத்து ஒரு யூனிட் இ-கோல்டு விலை இருக்கும். இ-கோல்டு மூலம் தங்கத்தை வாங்கி, 36 மாதங்களுக்குப் பிறகு விற்கும்போது பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு நீண்டகால ஆதாய வரியாக 20.6 சதவிகிதம் கட்ட வேண்டும். குறுகிய கால மூலதன ஆதாய வரி உங்களின் வருமான வரி வரம்பைப் பொறுத்து இருக்கும். இ-கோல்டு மதிப்பு செல்வ வரிக்கு கணக்கிடப்படும்.

மேற்சொன்ன இந்த மூன்றுமே அனைத்து ஷேர் புரோக்கிங் அலுவலகத்தின் மூலமாகவும், மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட் மூலமாகவும் வாங்க முடியும்.

எங்களுக்கு டீமேட் எல்லாம் கிடையாது என்கிறவர்கள் உங்கள் ஊரில் உங்களுக்கு நம்பிக்கையான, பாரம்பரியமிக்க நகைக் கடைகளில் தங்கத்தை ரிசர்வ் செய்துகொள்ளும் புதிய திட்டத்தின் மூலம் தங்கம் சேமிக்கலாம். இதற்கு சில நகைக் கடைகள் சேதாரம் மற்றும் வாட் வரி இல்லாமல் ஆபரணத்தை வாங்கிக்கொள்ளலாம் என சொல்கின்றன. என்றாலும், அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து பார்த்து உங்கள் முதலீட்டைத் தொடங்கவும்.

- பானுமதி அருணாசலம், 
படம்:  ரா.நரேந்திரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு