Published:Updated:

மூலதன ஆதாய வரி: எப்படி எல்லாம் மிச்சப்படுத்தலாம்?

மூலதன ஆதாய வரி: எப்படி எல்லாம் மிச்சப்படுத்தலாம்?

பிரீமியம் ஸ்டோரி
மூலதன ஆதாய வரி: எப்படி எல்லாம் மிச்சப்படுத்தலாம்?

அசையும் மற்றும் அசையாச் சொத்துகளை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்தைத்தான் மூலதன ஆதாயம் என்கிறோம். இந்த ஆதாயத்துக்கு வருமான வரி கட்ட வேண்டும். ஆனால், சில சொத்துகளுக்கான ஆதாயத்தை நிபந்தனைக்கு உட்பட்டு வேறு ஒன்றில் முதலீடு செய்தால் அல்லது வேறு சிலவற்றுக்குப் பயன்படுத்தினால் வரி கட்ட வேண்டிய அவசியம்  இருக்காது. அந்த வகையில் ஒருவர் தாராளமாக வருமான வரியை மிச்சப்படுத்த முடியும். அதற்கான வழிமுறைகளை விரிவாகப் பார்ப்போம்.

அதற்கு முன் எதற்கெல்லாம் மூலதன ஆதாயம் உண்டு என பட்டியலிடுவோம்.

##~##
1. விவசாய நிலம்: விவசாய வருமானத்துக்கு வருமான வரி கிடையாது. அதே நேரத்தில், விவசாய நிலத்தை விற்பதன் மூலம் கிடைக்கும் ஆதாயத்துக்கு அது அமைந்திருக்கும் பகுதியைப் பொறுத்து மூலதன ஆதாய வரி இருக்கிறது.

விவசாய நிலம் ஏதாவது நகர எல்லைக்குள் இருந்தால் மூலதன ஆதாய வரி கட்ட வேண்டி வரும். சென்னையைப் பொறுத்தவரை, சென்னை மாநகர எல்லையிலிருந்து   8 கி.மீ தொலைவுக்கு மேல் உள்ள பகுதிகளில் இருக்கும் விவசாய நிலத்தை விற்று கிடைக்கும் ஆதாயத்துக்கு வரி கட்ட வேண்டியதில்லை. இந்த தொலைவுக்குள் இருந்தால் மூலதன ஆதாய வரி வரும்.

2. வீட்டு மனை:  வீட்டு மனை எந்த இடத்தில் அமைந்திருந்தாலும் ஆதாயத்துக்கு வரி கட்ட வேண்டி இருக்கும்.

3. வீடு:  வீட்டுக்கும் மனை போலவே மூலதன ஆதாய வரி உண்டு.

4. அடுக்குமாடி குடியிருப்பு: வீடு போலவே இதற்கும் மூலதன ஆதாய வரி இருக்கிறது.

5. நிறுவனப் பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள் மூலமான ஆதாயம்.

6. கடன் பத்திரங்கள் மற்றும் பாண்டுகள் மூலமான ஆதாயம்.

7. தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் மூலமான ஆதாயம்.

8. ஓவியங்கள், சிற்பங்கள் மூலமான ஆதாயம்.

மூலதன ஆதாய வரி: எப்படி எல்லாம் மிச்சப்படுத்தலாம்?

மூலதன ஆதாயம்:

மூலதன ஆதாயத்தைக் குறுகிய கால ஆதாயம் மற்றும் நீண்ட கால ஆதாயம் என பிரிக்கிறார்கள்.

நிதிச் சார்ந்த பத்திரங்கள் (பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், கடன் பத்திரங்கள் போன்றவை) தவிர, மனை, வீடு, தங்கம், வைரம் உள்ளிட்ட மீதி எல்லா சொத்துகளுக்கும் 36 மாதங்களுக்கு        (3 ஆண்டுகள்) கீழ் அதை வைத்திருந்து விற்றால் கிடைக்கும் லாபம் குறுகிய கால மூலதன ஆதாயம் எனப்படும். இதற்கு கட்டும் வரி குறுகிய கால மூலதன ஆதாய வரி. இதேபோல், நிதிச் சார்ந்த பத்திரங்கள் தவிர மீதி எல்லாச் சொத்துகளுக்கும் 36 மாதங்களுக்கு (3 ஆண்டுகள்) மேல் வைத்திருந்து விற்றால் கிடைக்கும் லாபம் நீண்ட கால மூலதன ஆதாயம் எனப்படும். இதற்கு கட்டும் வரி நீண்ட கால மூலதன ஆதாய வரி.

நிதிச் சார்ந்த பத்திரங்களைப் பொறுத்தவரையில், (கடன் பத்திரங்கள் தவிர) நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை 12 மாதங்களுக்குள் விற்றால் குறுகிய கால மூலதன ஆதாய வரி வரும். அதற்கு மேல் என்றால் நீண்ட கால மூலதன ஆதாய வரி கணக்கிடப்படும்.

கடன் பத்திரங்களைப் பொறுத்தவரையில் அவை பட்டியலிடப்பட்டிருக்கும்பட்சத்தில் 12 மாதங்களுக்குள் விற்றால் குறுகிய கால மூலதன ஆதாயம் கணக்கிடப்படும். 12 மாதங்கள் தாண்டி விற்றால் நீண்ட கால மூலதன ஆதாய வரி கணக்கிடப்படும். அதுவே பட்டியலிடவில்லை என்றால் 36 மாதங்கள் வரையில் குறுகிய கால மூலதன ஆதாயமும் அதற்குமேல் என்றால் நீண்ட கால ஆதாயமும் கணக்கிடப்படும்.

இந்தக் கணக்குகள் எல்லாம் வாங்கிய தேதியிலிருந்து 36 மாதங்கள் அல்லது 12 மாதங்கள் என்பதாக இருக்கின்றன.

மூலதன ஆதாய வரி: எப்படி எல்லாம் மிச்சப்படுத்தலாம்?

தானம் கொடுத்தால்...

ஒரு தந்தை தன் மகனுக்கு ஆறு மாதத்துக்கு முன் வீடு ஒன்றை தானப் பத்திரம் மூலம் தருவதாக வைத்துக்கொள்வோம். இந்நிலையில் மகன் அந்த வீட்டை விற்றால், குறுகிய கால மூலதன ஆதாயமா அல்லது நீண்ட கால மூலதன ஆதாயமா? என்கிற சந்தேகம் பலருக்கு இருக்கிறது.

இங்கே தந்தை என்றைக்கு அந்த சொத்தை வாங்கி இருந்தாரோ, அந்த தேதி கணக்கில் கொள்ளப்பட்டு, அதிலிருந்து மூலதன ஆதாயம் கணக்கிடப்படும். அந்த வகையில் தந்தை 36 மாதங்களுக்கு முன் சொத்தை வாங்கியிருந்தால் நீண்ட கால மூலதன ஆதாயம்தான் கணக்கிடப்படும்.

இன்னும் சிலருக்கு இன்னொரு சந்தேகம் வரலாம். மனை வாங்கி ஐந்தாண்டு ஆகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதில் கட்டிய வீட்டை, இப்போது விற்றால் மூலதன ஆதாயம் எப்படி கணக்கிடப்படும்?

மனை விலை தனியாக எடுத்துக்கொள்ளப்பட்டு அதற்கு நீண்ட கால மூலதன ஆதாயம் கணக்கிடப்படும். வீட்டின் விலை தனியாக கணக்கிடப்பட்டு, அதன் விற்பனை விலைக்கு குறுகிய கால மூலதன ஆதாயம் கணக்கிடப்படும். அதாவது, மனை விலை தனியாகவும், வீடு விலை தனியாகவும் எடுத்துக்கொள்ளப்பட்டு, அது வாங்கி மற்றும் கட்டி எத்தனை ஆண்டுகளாகி இருக்கின்றன என்பதற்கு ஏற்ப மூலதன ஆதாயம் கணக்கிடப்படும். அவ்வாறு ஒரு சொத்தை விற்கும்போது மொத்த விற்பனை விலையில் மனை தனியாகவும், வீட்டிற்கான விற்பனை விலை தனியாகவும் பத்திரத்தில் குறிப்பிடுவது நல்லது.

மூலதன ஆதாயத்தைப் பொறுத்தவரை, விற்பனைத் தொகை என்பது அசையாச் சொத்துகள் தவிர, மற்ற அனைத்து சொத்துகளுக்கும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாகும்.

வீடு, மனை போன்ற அசையாச் சொத்துகளுக்கு ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள தொகை அல்லது அரசு வழிகாட்டி மதிப்பு (கைடுலைன் வேல்யூ), இதில் எது அதிகமோ அது எடுத்துக்கொள்ளப்படும்.

உதாரணமாக, ஒரு வீடு 12 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், கைடுலைன் வேல்யூ 15 லட்ச ரூபாய் என்றால், இந்த 15 லட்ச ரூபாய்தான் விற்பனை விலையாக எடுத்துக் கொள்ளப்படும். வக்கீல் கட்டணம், தரகு கட்டணம், பத்திரப் பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் சொத்தை விற்பதற்காக வெளிநாட்டிலிருந்து வந்து சென்றால் அதற்கான செலவு போன்றவற்றையும் விற்பனை விலையிலிருந்து கழித்துக் கொள்ளலாம்.

மூலதன ஆதாய வரி: எப்படி எல்லாம் மிச்சப்படுத்தலாம்?

அடக்க விலை கணக்கீடு:  

பணத்தின் மதிப்பு, 20, 25 ஆண்டுக்கு முன் இருந்ததற்கும் இன்றைக்கும் அதிக  வித்தியாசப்படுகிறது. அன்றைக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கியச் சொத்தை இன்றைக்கு ஒரு கோடி ரூபாய்க்கு விற்றால், அந்த ஆதாயத்துக்கு அப்படியே வருமான வரி கட்டினால், ஆதாயத்தில் பெரும்பகுதி வரியாகப் போய்விடும். அதை தவிர்க்க அன்றைக்கு வாங்கிய விலை, இன்றைய மதிப்பில் எவ்வளவு தொகையாக இருக்கும் என கணக்கிடப்படுகிறது. இதை பணவீக்க விகித சரிக்கட்டல் என்பார்கள். இதன் மூலம் சொத்தை வாங்கியதற்கான அடக்க விலை கிடைக்கும்; இதை கணக்கிட ஒரு ஃபார்முலா இருக்கிறது.

அடக்கவிலை = வாங்கிய விலை $ ( விற்ற ஆண்டுக்கான விலைவாசி குறியீட்டு எண்/ வாங்கிய ஆண்டுக்கான விலைவாசி குறியீட்டு எண்). இதில், வீட்டை 1-4-1981-க்கு முன் வாங்கியிருந்தால் வாங்கிய விலை அல்லது 1-4-1981 அன்று சந்தை விலை, வாங்கிய விலையாக எடுத்துக்கொள்ளப்படும். இந்த தேதிக்குப் பிறகு வாங்கி இருந்தால், வாங்கிய விலை எதுவோ, அது எடுத்துக்கொள்ளப்படும். வீடாக இருந்தால் மனையின் மதிப்பு மற்றும் மொத்த கட்டுமானச் செலவு எடுத்துக்கொள்ளப்படும். வீட்டை அப்படியே வாங்கி இருந்தால் அதனை வாங்கிய விலையாக எடுத்துக்கொள்ளப்படும். தவிர, வீடோ அல்லது மனையோ அவற்றை வாங்குவதற்காக செலவாகும், பத்திரப் பதிவு மற்றும் முத்திரைக் கட்டணம், தரகு கட்டணம் எல்லாம் சேர்த்து வாங்கிய விலையாக எடுத்துக்கொள்ளப்படும்.

ஒருவர் 1-4-1981-ல் மனை ஒன்றை ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கி உள்ளார். அதனை 2012-13-ல் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக வைத்துக்கொள்வோம். இங்கே, பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகான மனையின் அடக்கவிலை எவ்வளவு என்று பார்ப்போம்.

அடக்கவிலை = 1,00,000 * (852 / 100) = 8,52,,000 (100 என்பது 1981-ம் ஆண்டில் பணவீக்க விகித குறியீடு, 852 என்பது 2012-13-ம் ஆண்டுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள பணவீக்க விகித குறியீடு) விற்ற விலையான ஒரு கோடி ரூபாயிலிருந்து, அடக்க விலையான 8.52 லட்ச ரூபாயைக் கழித்தால் 91.48 லட்ச ரூபாய் நீண்ட கால மூலதன ஆதாயம். இந்த தொகைக்குத்தான் வரி கட்ட வேண்டும். அதே நேரத்தில், விற்கும்போது அரசு வழிகாட்டி மதிப்பு 1.20 கோடி ரூபாய் என்றால் 111.48 லட்ச ரூபாய்க்கு மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும். அதாவது, கைக்குக் கிடைக்காதப் பணத்துக்கும் வரி கட்ட வேண்டி இருக்கிறது. இதை தவிர்க்க விற்றவர் வருமான வரித் துறையில் மேல்முறையீடு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியும்.

கட்டுமானச் செலவுக்கான போதிய ஆவணங்கள் இல்லை என்றால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர் ஒருவரிடமிருந்து கட்டுமானச் செலவு மதிப்பீடு சான்றிதழ் பெற்று அதன் அடிப்படையில் அடக்கவிலையைக் கணக்கிடலாம்.  

ஒருவர் 1985-ம் ஆண்டில் வாங்கியச் சொத்து ஒன்றை 2005-ம் ஆண்டில் தானம் தந்திருக்கிறார்.  இதனை தற்போது தானம் வாங்கியவர் விற்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்நிலையில் எந்த ஆண்டுக்கான பணவீக்க விகித குறியீடு எடுத்துக்கொள்ளப்பட்டு அடக்கவிலை கணக்கிடப்படும்?  

அண்மையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றின்படி, சொத்தை ஒரிஜினலாக வாங்கிய 1985-ம் ஆண்டிருந்தே அடக்கவிலை கணக்கிட்டுக் கொள்ளப்படும்.

வரி எவ்வளவு?

சொத்தை ஏதாவது, வியாபாரத்துக்குப் பயன்படுத்தி தேய்மானம் கிளைம் செய்து வருமான வரிச் சலுகை பெற்றிருந்தால் அந்த சொத்தை விற்கும்போது, 3 ஆண்டுகளுக்கு மேல் அந்தச் சொத்தை வைத்திருந்தாலும் குறுகிய கால மூலதன ஆதாயமாக எடுத்துக்கொள்ளப்படும்.

மேலும், சொத்து விற்றது மூலமான மூலதன ஆதாய வரி குறுகிய கால மூலதன ஆதாயமாக இருந்தால் விற்றவருக்கான அடிப்படை வருமான வரி வரம்புக்கு ஏற்ப 10.3%, 20.6%, 30.9% வரி கட்ட வேண்டும். நீண்ட கால மூலதன ஆதாய வரி 20.6% கட்டவேண்டி வரும். நீண்ட கால மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்குப் பெறவும் வழி இருக்கிறது. இதைப் பற்றி வரும் வாரங்களில் விரிவாகப் பார்க்கலாம்.

(அடுத்த இதழில் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், கடன் பத்திரங்கள் மீதான மூலதன ஆதாய வரி கணக்கிடுவது பற்றி பார்ப்போம்!)

தொகுப்பு: சி.சரவணன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு