Published:Updated:

சித்தப்பா தரும் பரிசு... வருமான வரி கட்ட வேண்டுமா?

சித்தப்பா தரும் பரிசு... வருமான வரி கட்ட வேண்டுமா?

சித்தப்பா தரும் பரிசு... வருமான வரி கட்ட வேண்டுமா?
##~##
என் சித்தப்பா, வீடு ஒன்றை எனக்கு பரிசாக அளிக்க விரும்புகிறார். அதற்கு நான் வருமான வரி கட்ட வேண்டுமா?

- முருகானந்தம், பட்டுக்கோட்டை.

சதீஷ்குமார், ஆடிட்டர்.

''ரத்த சொந்தங்களுக்குள் அன்பளிப்பு / பரிசு அளித்துக்கொண்டால் வருமான வரி கட்டத் தேவையில்லை. அந்த வகையில் நீங்கள் உங்கள் சித்தப்பாவிடமிருந்து நேரடியாக வீட்டை வாங்குவதைவிட, அவரை உங்கள் அப்பாவிற்கு அன்பளிப்பு கொடுக்கச் சொல்லவும். அதற்கடுத்து உங்கள் அப்பாவிடமிருந்து அந்த வீட்டை நீங்கள் அன்பளிப்பாகப் பெற்றுக்கொள்ளலாம். இப்படி பெறும்பட்சத்தில் இதற்காக செட்டில்மென்ட் ஒப்பந்தம் மட்டும் போட்டுக்கொண்டால் போதும். ஆனால், உங்கள் சித்தப்பா உங்களுக்கு நேரடியாகப் பரிசளித்தால் அது அன்பளிப்பு ஆகாது. சொத்து விற்பனையாகக் கருதப்பட்டு அதற்குரிய பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், கிஃப்ட் டாக்ஸ் 30% கட்ட வேண்டி வரும். தவிர, உங்கள் சித்தப்பாவும் மூலதன ஆதாய வரி கட்ட வேண்டி வரும். மேற்சொன்ன வழியில் பரிசை பெறும்பட்சத்தில் அதற்குரிய வரிச் சலுகையை நீங்கள் அனுபவிக்கலாம்.''

சித்தப்பா தரும் பரிசு... வருமான வரி கட்ட வேண்டுமா?

பவர் ஆஃப் அட்டார்னி ஒப்பந்தத்தில் சாட்சி கையெழுத்து போட்டுள்ளேன். பவர் வாங்கிய நபர் அதை தவறாகப் பயன்படுத்தினால் அதற்கு நானும் பொறுப்பேற்க வேண்டுமா?

- மா.சுந்தரேசன், வேதாரண்யம்.

என்.ரமேஷ், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.

''சாட்சி கையெழுத்தையும் கேரன்டி கையெழுத்தையும் ஒப்பிட்டுக் குழப்பம் அடைய வேண்டாம். ஒரு ஆவணத்தில் சாட்சி கையெழுத்து போடுவது என்பது அந்த ஆவணத்தின் தன்மைக்கோ அல்லது ஆவணத்தின் சங்கதிகளுக்கோ சாட்சி கையெழுத்து போடுபவர் பொறுப்பேற்க வேண்டும் என்று கட்டுப்படுத்துவது ஆகாது. 'ஒப்பந்தத்தில் ஈடுபடுபவர்கள் என் முன்னிலையில் இந்த ஆவணத்தில் கையப்பமிட்டனர்’ என்பதற்கு மட்டுமே சாட்சி கையெழுத்து பொருந்தும். பவர் வாங்கிய நபர் ஆவணத்தின் சங்கதிகளுக்கோ, தன்மைகளுக்கோ முரண்பட்டு நடந்தால் சாட்சி கையெழுத்து போட்டுள்ள காரணத்திற்காக நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை.''

சித்தப்பா தரும் பரிசு... வருமான வரி கட்ட வேண்டுமா?

ஒரு புரோக்கிங் நிறுவனத்திலிருந்து இன்னொரு புரோக்கிங் நிறுவனத்திற்கு அப்படியே கணக்கை மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறதா?

- சாதிக் அலி, கோயம்புத்தூர்.

எம்.சேகர், இயக்குநர், தோஹா புரோக்கரேஜ் அண்ட் ஃபைனான்ஷியல் சர்வீஸஸ்.

''ஒரு புரோக்கிங் நிறுவனத்திலிருக்கும் புரோக்கரேஜ் கணக்கை மற்றொரு புரோக்கிங் நிறுவனத்திற்கு அப்படியே மாற்றிக்கொள்ளும் வசதி கிடையாது. பழைய நிறுவனத்தின் கணக்கை ரத்து செய்துவிட்டு, புதிதாகச் செல்ல விரும்பும் நிறுவனத்தில் புதிதாக கணக்கை தொடங்கிக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், பழைய கணக்கிற்காகத் தொடங்கப்பட்ட டீமேட் கணக்கை ரத்து செய்யாமல் அதை பயன்படுத்திக்கொள்ள முடியும்.''  

சித்தப்பா தரும் பரிசு... வருமான வரி கட்ட வேண்டுமா?

வசிப்பதற்காக வாடகைக்கு வீடு எடுத்தவர், தற்போது அந்த வீட்டில் டியூஷன் எடுக்கிறார். அவரிடம் அதிக வாடகை கேட்க முடியுமா?

- காளிமுத்து, திருச்சி.

முருகபாரதி, வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.

''குடும்பம் வசிப்பதற்கு என்று வாடகைக்கு வீடு எடுத்தவர், அந்த வீட்டில் வசிக்காமல் வணிக ரீதியாக போர்டு வைத்து டியூஷன் எடுத்தால், உங்களை ஏமாற்றி வீடு எடுத்துள்ளார் என்று வீட்டை காலி செய்யும்படியோ அல்லது வாடகையை அதிகரித்தோ கேட்கலாம். ஆனால், அந்த வீட்டில் குடும்பமாக வசித்து வந்தால் அது குடியிருப்பு வீடாகத்தான் கருத முடியும். குடியிருப்பவர் தனது இதர வருமான வாய்ப்பாகத்தான் வீட்டிலேயே டியூஷன் சொல்லித் தருகிறார் எனில், இந்த காரணத்திற்காக வீட்டு வாடகையை அதிகரித்துக் கேட்க முடியாது. ஆனால், டியூஷன் சொல்லித் தருவதால் அக்கம்பக்கத்தினருக்குத் தொந்தரவு இருப்பதாகக் கருதினால் அவரை வீட்டை காலி செய்யும்படி கோரலாம்.''

சித்தப்பா தரும் பரிசு... வருமான வரி கட்ட வேண்டுமா?

பங்குச் சந்தையில் ஈடுபடுவதற்காக டீமேட் கணக்கு தொடங்கி எட்டு மாதங்கள் ஆகிறது. ஆனால், தற்போது வரை அதில் எந்த பரிவர்த்தனையும் செய்யவில்லை. அந்த கணக்கு ரத்தாகிவிடுமா? அல்லது புதிய கணக்குத் தொடங்க வேண்டுமா?

- பாலாஜி, திருத்தணி.

இ.எம்.சி.பழனியப்பன், சோனா ஃபைனான்ஷியல் சர்வீஸஸ்.

''டீமேட் கணக்கில் பரிவர்த்தனை இல்லையென்றாலும் அதற்குரிய பராமரிப்புக் கட்டணத்தைச் செலுத்தி வந்தால் அந்த கணக்கு ரத்து ஆகாது. ஆண்டு பராமரிப்புக் கட்டணமாக கணக்கிடும்பட்சத்தில் தற்போது எட்டு மாதங்கள்தான் என்பதால், அந்தக் கணக்கு ரத்தாக வாய்ப்பில்லை. ஆனால், அரையாண்டு அல்லது காலாண்டு கணக்கில் பராமரிப்புக் கட்டணம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தால் அந்த கணக்கு இந்நேரம் ரத்தாகியிருக்கும். அந்த டீமேட் கணக்கு எண்ணை பங்குப் பரிவர்த்தனைக்கு குறிப்பிடும் முன்னர் அந்தக் கணக்கு செயல்பாட்டில் இருக்கிறதா என அறிந்துகொள்வது நல்லது.''

சித்தப்பா தரும் பரிசு... வருமான வரி கட்ட வேண்டுமா?

நான் முதலீடு செய்துள்ள பங்கின் விலை உயர்ந்துள்ளது. இந்த சமயத்தில் இந்த குழுமத்தின் பிற நிறுவன பங்குகளில் இப்போது முதலீடு செய்யலாமா?

- சுபேந்திரன், சென்னை.  

எஸ்.ரமேஷ், இயக்குநர், ரிலையபிள் ஸ்டாக் அண்ட் ஷேர்ஸ்.

''நீங்கள் முதலீடு செய்துள்ள பங்குகள் விலை உயருகிறது என்றால் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ள துறையின் வளர்ச்சி, அத்துறையில் நிறுவனத்தின் பங்களிப்பு, கைவசம் இருக்கும் ஆர்டர்கள், நிறுவனத்தின் நிதி நிலைமை போன்றவை சிறப்பாக இருக்கும். இந்நிறுவனத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இக்குழுமத்தின் பிற நிறுவனங்களை மதிப்பிட வேண்டாம். அவை வேறு துறை சார்ந்ததாக இருக்கும். அதன் வளர்ச்சிகளும் ஒரே மாதிரியானவையாக இருக்காது. எனவே, ஒரே குழும நிறுவனங்களின் பங்குகளாக இருந்தாலும் அவற்றின் எதிர்கால வளர்ச்சிகளைப் பொறுத்து வாங்கவும். பொதுவாக பங்குகளை வாங்குவதற்கு முன்பு கடைப்பிடிக்கும் அனைத்து வகையான அளவுகோல்களையும் இதற்கும் கடைப்பிடிப்பதே சரியானதாக இருக்கும்.''

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்க அட்வான்ஸ் புக்கிங் செய்திருந்தேன். ஆனால், ஒப்பந்த காலம் முடிந்தபிறகும் வீடு கொடுக்காமல் தாமதப்படுத்துகின்றனர். என்ன செய்வது?

- குமரகுரு, கோயம்புத்தூர்.

சுரேஷ்பாபு, வழக்கறிஞர். சென்னை உயர்நீதிமன்றம்.

''ஒப்பந்த காலத்திற்குப் பிறகும் வீடு கொடுக்காமல் இருப்பது முழுக்க முழுக்க ஒப்பந்தக்காரரின் தவறே. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் கொடுக்கப்பட முடியாத நிலைமை இருக்கும்பட்சத்தில் அதை முன்கூட்டியே தங்களுக்கு எழுத்து மூலமாக தகவல் தெரிவித்திருக்க வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாட்கள் கடந்தபிறகும் எந்தவிதமான தகவலும் இல்லாதபட்சத்தில் ஒப்பந்தக்காரருக்கு இது குறித்து கடிதம் எழுதவும். இந்த கடிதத்திற்கு பதினைந்து நாட்களுக்குள் எந்த பதிலும் இல்லாதபட்சத்தில் அவர் மீது நுகர்வோர் நீதிமன்றம் அல்லது சிவில் நீதிமன்றம் மூலமாக நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்ற நடவடிக்கை கோரலாம்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு