பிரீமியம் ஸ்டோரி

டீலிஸ்ட் ஆபத்து!

ஷேர்லக் ஹோம்ஸ்

''ஹேப்பி தீபாவளி'' என்று சொன்னபடி அதிரடியாக உள்ளே வந்தார் ஷேர்லக். வந்த வேகத்தில் சரவெடியாகச் செய்திகளை கொட்டத் தொடங்கினார்.

''வெள்ளிக்கிழமை சந்தை சரிய முக்கியமான காரணம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாதான். இதுவரை இல்லாத அளவுக்கு இந்நிறுவனத்தின் மொத்த வாராக்கடன் 5.15% அளவுக்கு உயர்ந்திருக்கிறது. தவிர, சுஸ்லான் உள்பட பல நிறுவனங்களுக்குத் தந்த கடன் இன்னும் கணக்குக்குக் கொண்டு வரவில்லை. அப்படி வரும்பட்சத்தில் இந்த வாராக்கடன் விகிதம் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்கிறார்கள். மேலும், இந்தியாவின் முக்கிய, பெரிய வங்கியின் வாராக்கடன் அதிகரித்திருப்பது முதலீட்டாளர்களிடையே ஒருவிதமான அச்சத்தையே ஏற்படுத்தி இருக்கிறது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம் இது!'' என்றவருக்கு தீபாவளி பட்சணம் தந்தோம். முறுக்கை நொறுக்கிச் சாப்பிட்டவர், அடுத்த செய்திக்குப் போனார்.

''யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் 27.4 சதவிகித பங்குகளை இங்கிலாந்தைச் சேர்ந்த டயாஜியோ (ஞிவீணீரீமீஷீ) நிறுவனம் வாங்கி இருக்கிறது. ஒரு நிறுவனத்தில்     25 சதவிகித பங்குகளுக்கு மேல் இன்னொரு நிறுவனம் வாங்கும்போது ஓபன் ஆஃபர் தரவேண்டும். அப்படி பார்த்தால், மொத்தம் 53 சதவிகித பங்குகள் டயாஜியோ நிறுவனத்திடம் சென்றுவிடும். இருந்தாலும், 'கிங்ஃபிஷர் பிரச்னைக்கும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை விற்பதற்கும் சம்பந்தமில்லை’ என்று கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் பேசி இருக்கிறார் மல்லையா. இருந்தாலும், இன்னும் சில காலம் அந்த நிறுவனத்தின் பொறுப்பிலே மல்லையா இருப்பார் என்று தெரிகிறது'' என்றார்.

''வேறு என்ன செய்தி?'' என்றோம்.

##~##
''பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் புரமோட்டர்கள் அந்நிறுவனத்தில் 75 சதவிகித பங்குகளுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்ற விதியை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் நடைமுறைபடுத்த வேண்டும் என்று செபி சொல்லி இருப்பது பழைய செய்தி. இதில் லேட்டஸ்ட் டெவலப்மென்ட் என்னவெனில், செபியின் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை எனில், அந்நிறுவனத்தை பங்குச் சந்தையிலிருந்து டீலிஸ்ட் செய்யப் போவதாகப் பேச்சு. இது எந்த வகையில் நியாயம்? புரமோட்டர்கள் செய்யும் தவறுக்காக சிறு முதலீட்டாளர்களைத் தண்டிப்பது எப்படி சரி? ஆனால், இப்படி செய்தாலாவது புரமோட்டர்கள் மசிவார்களோ என்பது செபியின் எதிர்பார்ப்பு'' என்றவருக்கு, நாம் மைசூர்பாகு தந்தோம்.

''எந்த சிக்கலிலும் மாட்டாத டாடா நிறுவனமே பிரச்னையில் சிக்கி இருக்கிறதே!'' என்றோம்.

''உண்மைதான், டாடா நிறுவனத்தின் மீது ஒரு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்றால் ஒன்றுக்கு பலமுறை யோசித்த காலம் உண்டு. ஆனால், இன்று..? ஒடிஷா மாநில அரசு டாடா ஸ்டீல் நிறுவனத்துக்கு 6,000 கோடி ரூபாயை, சட்டத்துக்குப் புறம்பாக சுரங்கங்களை பயன்படுத்தியதற்கு  அபராதமாக விதித்திருக்கிறது. அபராதம் மட்டும் 6,000 கோடி என்றால் அந்த நிறுவனம் எவ்வளவு லாபம் அடைந்திருக்கும்? ஆனால், இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், நாங்கள் திருட்டுத்தனமாக எடுக்கவில்லை. அனுமதி பெற்றதைவிட கொஞ்சம் அதிகம் எடுத்துவிட்டோம் என்று சொல்லி, டாடாவின் பெயரை இன்னும் கெடுத்திருக்கிறார். தவிர, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முடிவுகளும் சொல்லிக்கொள்வது (364 கோடி ரூபாய் நஷ்டம்) போல் இல்லை. பொதுவாக, இப்போதைக்கு ஸ்டீல் கம்பெனிகள் பக்கமிருந்து கொஞ்சம் தள்ளி இருப்பதே நல்லது'' என்றார்.

''அப்படியா?'' என்று ஆச்சரியப்பட்டோம்.

ஷேர்லக் ஹோம்ஸ்

''பல நாட்களாகப் பேசப்பட்டு வந்த பங்கு விலகலுக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது மத்திய அரசு. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் 10 சதவிகித பங்குகள் விரைவில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், 5 சதவிகித பங்குகள் ஹெச்.ஏ.எல். பணியாளர்கள் உள்ளிட்ட சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. பங்கு வெளியீடு இந்த நிதி ஆண்டிற்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹெச்.ஏ.எல். மாதிரி இன்னும் பல நிறுவனங்கள் பங்கு விலக்கல் பட்டியலில் இருக்கிறது. ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து செய்யப் போகிறதாம். இந்நிலையில் கையிருப்பில் அதிக தொகை உபரியாக வைத்திருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள், பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என மத்திய அரசு கேட்டுள்ளது. சுமார் 25 பொதுத் துறை நிறுவனங்களில் கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி ரூபாய் சும்மா கிடக்கிறதாம்''  என்றவருக்கு டிகிரி காபி தந்தோம். அதை குடித்தவர், இன்னும் சில செய்திகளைச் சொன்னார்.

''செப்டம்பர் காலாண்டில் லார்ஜ் கேப் நிறுவனங்களைவிட மிட் கேப் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டி உள்ளன. செயல்பாட்டு லாபம் மற்றும் நிகர லாபத்தின் அடிப்படையில் மிட் கேப் நிறுவனங்கள் சிறப்பாக உள்ளது. அந்த வகையில் நல்ல அடிப்படையைக் கொண்ட மிட் கேப் பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்தால் நடுத்தர காலத்தில் நல்ல லாபம் பார்க்க வாய்ப்பு இருக்கிறது'' என்றவரிடம், ''என்னென்ன மிட் கேப் பங்குகளை வாங்கலாம்?'' என்று கேட்டோம். ''பிறகு சொல்கிறேன்'' என்றவர் மேற்கொண்டு தொடர்ந்தார்.

''ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் (ஆர்.பி.எல்.) பங்குகள் மீது கடந்த 2007-ல் நடந்ததாக சந்தேகிக்கப்படும் இன்சைடர் டிரேடிங் குறித்து விவரங்களை வெளியிட செபி அமைப்புக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் உச்ச அமைப்பான மத்திய தகவல் கமிஷன் (சி.ஐ.சி.) சொல்லி இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ரிஸ் நிறுவனத்துடன் (ஆர்.ஐ.எல்.) இணைக்கப்பட்டது மற்றும் கையில் பங்கு இல்லாமல் கடன் வாங்கி (ஷார்ட் செல்லிங்) ஆர்.பி.எல். பங்குகளை விற்றது உள்ளிட்ட விவரங்களை வெளியிட சி.ஐ.சி. தெரிவித்திருக்கிறது. ஷார்ட் செல்லிங் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 500 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்திருக்கும் என கருதப்படுகிறது.

ஷேர்லக் ஹோம்ஸ்

இந்தப் பிரச்னையில் அபராதம் கட்டுவதன் மூலம் ஆர்.ஐ.எல்-ஐ வழக்கில் இருந்து விடுவிக்க செபி முயற்சி எடுத்து வந்ததாக பேச்சு. இதற்கிடையே சி.ஐ.சி. இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. செபிக்கு நவம்பர் 16-ம் தேதி வரை தகவல்களை வெளியிட காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் மூலம் ஏதாவது பூதம் கிளம்பி சற்று ஏறிக் கொண்டிருக்கும் பங்குச் சந்தை மீண்டும் இறங்கிவிடக் கூடாது என்பதே முதலீட்டாளர்களின் கவலை'' என்றார்.

''ரிலையன்ஸுக்கு மட்டுமல்ல, ஏர்டெல்லுக்கு இப்போது நேரம் சரியில்லை போலிருக்கிறதே!'' என்றோம்.

''செல்போன் சேவையில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான பார்தி ஏர்டெல், அனலிஸ்ட்களின் மதிப்பீடுகளை எல்லாம் தவிடுபொடியாக்கி உள்ளது. செப்டம்பர் காலாண்டில் அதன் நிகர லாபம் 30% வீழ்ச்சிக் கண்டிருக்கிறது. தொடர்ந்து       11 காலாண்டுகளாக இந்நிறுவனத்தின் நிகர லாபம் குறைந்து வருகிறது. அடுத்த காலாண்டிலும் இதன் நிகர லாபம் கணிசமாக குறையவே செய்யும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள். காரணம், அடுத்தக் காலாண்டிலிருந்து அது டிராய் அமைப்புக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை கட்டணமாகச் செலுத்த வேண்டும். பார்தி ஏர்டெல் பங்குகளை முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக கையாள வேண்டும்'' என்று புறப்பட்டவர், ''மீண்டும் ஹேப்பி தீபாவளி. இந்த தீபாவளிக்கு முஹூர்த் டிரேடிங் உண்டு. நல்ல நாளில் நல்லபடியாக டிரேடிங் செய்ய வாழ்த்துக்கள்'' என்றவர், ஷேர்டிப்ஸ்களையும் தந்துவிட்டு பறந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு