Published:Updated:

மோசடி நிறுவனங்களுக்கு வருகிறது கிடுக்கிப்பிடி!

விழிப்புணர்வு

பிரீமியம் ஸ்டோரி
மோசடி நிறுவனங்களுக்கு வருகிறது கிடுக்கிப்பிடி!

மு கோழி வளர்ப்பில் பல நூறு கோடி ரூபாய் மோசடி, சஹாரா நிறுவனம் 23,000 கோடி ரூபாய் மோசடி, திருப்பூர் பாசி நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி... இப்படி  தினம் ஒரு மோசடி புதிதாக வெளியாகி, தலைசுற்ற வைக்கிறது. குறுகிய காலத்தில் பெரும் பணத்தைச் சேர்த்துவிட வேண்டும் என்று நினைப்பது மக்களின் இயல்பு.இதனை மோசடி நிறுவனங்கள் இனியும் பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்க, புதிதாக சில கறார் விதிமுறைகளை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறது நிறுவன விவகாரத் துறை அமைச்சகம்.

ரிசர்வ் வங்கி அனுமதி!

மோசடி செய்ய நினைக்கும் நிறுவனங்கள்  மக்களின் நம்பிக்கையைப் பெற முதலில் சொல்லும் விஷயம், 'எங்கள் நிறுவனம் கம்பெனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கிறது’ என்பதே. கம்பெனிச் சட்டத்தின் கீழ் ஒரு நிறுவனம் பதிவு செய்ய இரண்டு பங்குதாரர், இரண்டு இயக்குநர் இருந்தாலே போதும்,  நிறுவனத்தை லிமிடெட் கம்பெனியாகப் பதிவு செய்துவிடலாம். ஆனால், ஒரு நிறுவனம் மக்களிடமிருந்து பணத்தை வசூலிக்க வேண்டுமெனில் அது ரிசர்வ் வங்கியிடம் முறையான அனுமதி வாங்கி இருக்க வேண்டும். அப்படி அனுமதி பெறாத எந்த நிறுவனமும் பணத்தை வசூலித்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். சமீபத்தில் கையும் களவுமாகப் பிடிபட்ட அப்ரோ நிறுவனம், தாங்கள் ரிசர்வ் வங்கியிடம் அனுமதி வாங்கிவிட்டோம் என்று சொல்லித்தான் மோசடி செய்தது.

நிறுவன விவகாரத் துறை அமைச்சகம் இந்த விஷயத்தில்தான் மோசடி நிறுவனங்களுக்கு செக் வைக்க நினைக்கிறது. அதாவது, மக்களிடமிருந்து பணம் வசூலிக்க நினைக்கும் நிறுவனம் முதலில் ரிசர்வ் வங்கியில் முறைப்படி அனுமதி வாங்க வேண்டும். அதன்பிறகே, கம்பெனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்கிற புதிய விதிமுறையை அறிமுகப்படுத்த பரிசீலித்து வருகிறது. இதன்படி ரிசர்வ் வங்கியிடம்  அனுமதி வாங்க வேண்டுமெனில் மக்களின் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க பல புதிய விதிமுறைகளைக் கொண்டுவர வேண்டும்.

மோசடி நிறுவனங்களுக்கு வருகிறது கிடுக்கிப்பிடி!

தற்போதைய நடைமுறை!

##~##
முதலீட்டாளர்களின் நலனை காக்கிற வகையில் என்னென்ன புதிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என ஆடிட்டர் பாலாஜியிடம் கேட்டோம்.  

''முதலில் தற்போது நடைமுறையில் கம்பெனி சட்டத்தில் இருக்கும் விதிமுறைகளை சொல்லிவிடுகிறேன். பொது மக்களிடமிருந்து அளவுக்கு அதிகமான பணத்தை வசூலிக்க எந்த நிறுவனத்துக்கும் அனுமதி கிடையாது. நிறுவனத்திற்கு அனுமதிக்கப்பட்ட டெபாசிட் தொகையும் அந்நிறுவனத்தின் அளிக்கப்பட்ட பங்கு மூலதனம் மற்றும் ரிசர்வ் தொகைக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

• அனுமதிக்கப்பட்ட டெபாசிட் தொகையை வசூலிக்க வேண்டுமெனில் அந்நிறுவனத்தின் நிதி அம்சங்கள் குறித்து விளம்பரம் செய்து, நிறுவன செயல்பாடுகள், மற்ற அனைத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.

• மக்களிடமிருந்து வாங்கிய தொகையை திரும்பச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலோ, வட்டி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலோ அந்நிறுவனம் டெபாசிட் வசூலிப்பதற்கு தடை ஏற்படும்.

• நிறுவனத்தின் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்பினால், அந்நிறுவனம் டெபாசிட் வாங்கியதற்கான ரசீதை அனுப்பி வைக்க வேண்டும். அந்த ரசீதின் பின்புறம் டெபாசிட் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். நிறுவனம் டெபாசிட் செய்த நபர்களின் விவரங்கள் மற்றும் அனைத்து விவரங்களையும் தயார் செய்து பதிவு செய்யப்பட்ட ஆடிட்டரிடமிருந்து சான்றிதழ் வாங்கி ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள் நிறுவனச் சட்டத்தின் கீழ் இயங்கும் பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

• இந்த டெபாசிட்க்கு வழங்கப்படும் வட்டி விகிதம்கூட அரசு அனுமதித்த வட்டியாக இருக்க வேண்டும். இந்த வட்டி விகிதம் நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் டெபாசிட் காலத்தைப் பொறுத்து இருக்கும்.

மோசடி நிறுவனங்களுக்கு வருகிறது கிடுக்கிப்பிடி!

புதிய விதிமுறைகள்!

மோசடி நிறுவனங்களுக்கு வருகிறது கிடுக்கிப்பிடி!

இப்போது நடைமுறையில் இந்த விதிமுறைகள் போதாது. நிறுவன விவகாரத் துறை அமைச்சகம் புதிதாக கொண்டுவரும் விதிமுறைகளில் கீழ்வரும் அம்சங்களையும் கட்டாயம் சேர்க்க வேண்டும்.  

• ஒரு நிறுவனம் பிரைவேட் லிமிடெட் நிறுவனமாகப் பதிவு செய்துகொள்ள காரணமே, நிதி சம்பந்தப்பட்ட பிரச்னை என்று வரும்போது நிறுவனத்தின் கணக்கில் இருக்கும் பணம் மற்றும் சொத்துக்களை மட்டும்தான் பறிமுதல் செய்ய முடியும் என்பதற்காகத்தான். அந்நிறுவனத்தின் உரிமையாளரின் சொந்த சொத்தை பறிமுதல் செய்ய முடியாது. இதுவே, பார்ட்னர்ஷிப் முறை என்றால் பார்ட்னர்களின் சொந்த சொத்தையும் பறிமுதல் செய்ய முடியும். இதனால்தான் மோசடி நிறுவனங்கள் பிரைவேட் லிமிடெட் என பதிவு செய்துகொள்கின்றன. அதாவது, இயக்குநருக்கு தற்போது லிமிடெட் பொறுப்புதான் இருக்கிறது. இதனை அன்லிமிடெட் பொறுப்பாக மாற்ற வேண்டும்.

• இண்டிபெண்டன்ட் இயக்குநர்களை நியமிக்கும்போது அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் படித்தவர்களை நியமிக்கலாம்.

• நிதி நிறுவனங்களுக்கான ஆடிட்டர்களை ரிசர்வ் வங்கியே நியமிக்கும். இனி, பணம் வசூலிக்கும் எல்லா நிறுவனங்களுக்கும் ரிசர்வ் வங்கியே ஆடிட்டர்களை நியமிக்கலாம்.

• பணம் வசூலிக்கும் நிறுவனங்கள் டெபாசிட் செய்த பணத்தை என்ன செய்திருக்கிறோம் என காலாண்டுக்கு அறிக்கை வெளியிட வேண்டும்.

• தற்போது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தாங்கள் வசூலித்த டெபாசிட் தொகையை பொதுத் துறை வங்கிகளில் டெபாசிட் செய்து வைப்பார்கள். தற்போது அங்கீகரிக்கப்பட்ட சீட்டு நிறுவனங்கள் அனைத்தும் இந்த முறையைத்தான் பின்பற்றுகின்றன. அதாவது, சீட்டு நிறுவனம் ஒரு கோடி ரூபாய்க்கு சீட்டு நடத்தப் போகிறது என்றால், அதில் பாதித் தொகையான 50 லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும். இந்த தொகை அந்த சீட்டு முடியும் வரை கணக்கில் இருக்க வேண்டும். இதே முறையை பொது மக்களிடமிருந்து பணம் வசூலிக்கும் எல்லா நிறுவனங்களுக்கும் கொண்டு வரலாம்.

மோசடி நிறுவனங்களுக்கு வருகிறது கிடுக்கிப்பிடி!

• மோசடி நிறுவனங்களில் மக்கள் பணத்தைக் கொட்டுவதற்கு காரணமே விளம்பரங்கள்தான். விளம்பரங்களில் முதலீட்டில் உள்ள ரிஸ்க்கையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

• மக்களிடம் பணம் வசூலிக்க நினைக்கும் நிறுவனங்கள் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி மூலம் ரேட்டிங் வாங்கியாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தலாம்'' என்றார் ஆடிட்டர் பாலாஜி.

வடமாநிலங்களில் செயல்படும் பீட்டால் லைவ் ஸ்டாக் அண்ட் ஃபார்ம் நிறுவனம் மக்களிடமிருந்து பணத்தை வாங்கி ஆடு வளர்ப்பதன் மூலம் மூன்று, நான்கு

வருடங்களில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறியிருக்கிறது. இந்நிறுவனத்திற்கும் இப்போது செபி அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுபோன்ற நிறுவனங்களை இனி செபி கண்காணிக்கும் என கூறியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதலீட்டாளர்கள் அமைப்பின் தலைவர் ஷியாம் சேகரிடம் பேசினோம்.

''மோசடி நிறுவனங்கள் முதலில் வருபவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை செய்து தந்துவிடுகின்றன. இதைப் பார்த்து மற்றவர்களும் நம்பி தங்கள் பணத்தைக் கொண்டு போய் கொட்டுகிறார்கள். எந்த ஒரு நிறுவனமும் இரண்டு மடங்கு பணம் தருகிறோம்; 24 சதவிகித வட்டி தருகிறோம் எனச் சொன்னால் அது சட்டத்திற்கு புறம்பான முறையில்தான் இருக்கும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனால் செபி மட்டுமே இந்த மாதிரியான திட்டங்களை கட்டுப்படுத்த முடியாது. 'நுகர்வோரே விழித்திரு’ என்று சொல்வதோடு, இனி 'முதலீட்டாளரே விழித்திரு’ என்பதையும் அடிக்கடி சொல்ல வேண்டும்'' என்றார்.

முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும் என்பது நூறு சதவிகிதம் உண்மை.

- பானுமதி அருணாசலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு