Published:Updated:

எடக்கு மடக்கு!

எப்படி லாபம் பார்க்க முடியும் எல்.ஐ.சி.

எடக்கு மடக்கு!

எப்படி லாபம் பார்க்க முடியும் எல்.ஐ.சி.

Published:Updated:
##~##

'ஆபத்துக் காலத்திலே அருந்துணை இவனே! ஆதரவு தரும் ஆருயிர் நண்பன் இவனே...!’

 என்னடா இது, ஏகாம்பரம் ஏதேதோ சொல்லி பினாத்துறானேன்னு நினைக்காதீங்க, நான் சின்னப்புள்ளையா இருக்கப்ப ரேடியோவில கேட்ட எல்.ஐ.சி. விளம்பரம்தான் இது. இந்த விளம்பரம் கேட்டு, நிசமாவே இவங்க ஆபத்துக் காலத்துல ரொம்ப உதவுவாங்க போலிருக்குன்னு நினைச்சுக்குவேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்ஷூரன்ஸ்னா என்னன்னு புரியாத வயசுங்க அது. கொஞ்சநஞ்சம் விவரம் வந்தபிறகு அந்த விளம்பரத்தைப் பத்தி விசாரிப்பேன். கொஞ்சோண்டு பணம் குடுத்துட்டா செத்தபிறகு பல்க்கா பணம் கிடைக்குமுன்னு சொன்னதால ரொம்ப நல்ல கம்பெனின்னு நினைச்சுக்குவேன். வளர வளரத்தான் தெரிஞ்சுது, எல்.ஐ.சி.யும் என்னைய மாதிரி விவரமில்லாத கம்பெனின்னு.

எடக்கு மடக்கு!

பின்ன என்னங்க, எப்ப கவர்மென்ட் கூப்பிட்டு என் சுமையைக் கொஞ்சம் இறக்கணும், புடிச்சுக்கன்னாலும் சரின்னு சுமையை வாங்கிக்கிருதே! இது என்ன தலையில சுமக்கறச் சுமையா? கொஞ்ச நேரம் நான் சுமக்கறேன்னு சுமக்கறதுக்கு. பாலிசி எடுத்தவனோட தலையெழுத்துச் சுமையுங்க. சும்மாயில்ல, கஷ்டப்பட்டு உழைச்சு அதுல நாலு காசு சேமிச்சு அதை வச்சு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தா, அந்த பிரீமியத்தை வாங்கி நல்லவிதமா முதலீடு பண்ணி லாபம் பார்த்து, கைகால் ஓஞ்சு கிடக்குறப்ப அதிகமா பணத்தைத் தருவாங்கன்னு பார்த்தா எப்பப் பார்த்தாலும் அரசாங்கத்தோட பணத்தேவையைப் பூர்த்தி செய்ற மாதிரி அரசு கம்பெனிகளோட ஷேர்களையே வாங்கிப் போட்டுகிட்டே இருந்தா, கடுப்பு வராதா பின்னே?  

அரசாங்கம் கொள்ளையா பணத்தைச் செலவழிச்சிட்டு, பிறகு குத்துதே குடையுதேன்னா என்ன அர்த்தம்? ஏற்கெனவே இந்த வருஷம் ஓ.என்.ஜி.சி. பங்குகளை அரசாங்கம் வித்தப்ப யாருமே அதை வாங்க முன்வரல. அப்ப எல்.ஐ.சி.தான் 4 சதவிகித பங்குகளை வாங்குச்சு. கேட்டா அரசாங்க கம்பெனி; நல்லா பெர்ஃபார்ம் பண்ணுமின்னு சொல்லிச்சி. ஏன்ங்க, அரசாங்க கம்பெனின்னாலும் அது நிச்சயமா லாபம் சம்பாதிச்சு தரும்னு எப்படிங்க சொல்ல முடியும்?  

''என்ன ஏகாம்பரம், எல்.ஐ.சி.க்கே ஐடியா தர்ற அளவுக்கு நீ என்ன பெரிய அப்பாடக்கரா ஆயிட்டியான்னு நீங்க என்னை கேக்கலாம். அய்யா, நான் உசுருக்குப் பயந்து பாலிசி எடுத்திருக்கேன். என் உசுரு போச்சுன்னா, என் புள்ளை  குட்டிங்க தெருவில நிக்காம இருக்கணுங்கிறதுக்குத்தானே நான் பாலிசி எடுத்திருக்கேன். என் பணத்தை எடுத்துக்கிட்டு ஏதேதோ கம்பெனியில கொண்டு போய் போட்டா, பிரச்னை வராதா?

'அதெல்லாம் ஒரு பிரச்னையும் வராது. உன்னைவிட நிர்வாகம் பெருசுன்னு சொல்லி நீங்க என் வாயை அடைக்கலாம். யு.டி.ஐ-யும் அப்படி பெருசாத்தாங்க இருந்துச்சு. அன்னைக்கு யு.டி.ஐ. பத்தி எவனும் கேள்வி கேக்க முடியாது! கடைசியில என்ன ஆச்சுன்னு உங்களுக்கே தெரியும்ல!

அட அவ்வளவு ஏன், எல்.ஐ.சி.யோட மூணு பென்ஷன் பிளான்களே கிட்டத்தட்ட 14,000 கோடி அளவிலான மதிப்பிழப்பை (நோஷனல் லாஸ்) 2010-ல காட்டுச்சே. எல்.ஐ.சி. கிட்டத்தட்ட 13 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளைச் செஞ்சுருக்கு. அதுல கிட்டத்தட்ட 1.1 லட்சம் கோடி அரசாங்க கம்பெனிகளில போட்டிருக்கு. இதுதாங்க ரொம்ப பயம்மா இருக்கு. ஏகப்பட்ட தொகை ஏற்கெனவே போட்டபிறகும் ஏன் இன்னும் புதுசா போடச் சொல்லுது இந்த அரசாங்கம்?

எடக்கு மடக்கு!

ஏற்கெனவே ஐ.ஆர்.டி.ஏ. இன்ஷூரன்ஸ் கம்பெனிங்க ஒரு கம்பெனியோட ஷேரில 10 பெர்சன்டுக்கு மேலே முதலீடு செய்யக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டிருக்கு. இப்ப அரசாங்கம் எல்.ஐ.சி. மட்டும் 30 சதவிகிதம் வரைக்கும் பண்ணலாமுன்னு ஒரு திருத்தம் கொண்டு வந்திருக்கு. எல்லாம் அரசாங்கத்தோட பணப் பத்தாக்குறை போக்கத்தான். இப்படி ரூல்ஸைத் திருத்தித் திருத்தி,  பல கம்பெனிகளை எல்.ஐ.சி.க்கு கீழே கொண்டு வந்துடுவாங்க போல இருக்கே!  

என் கோவம் எல்.ஐ.சி. மேல இல்லீங்க; அரசாங்கம் மேலதான். சூப்பரா போற கம்பெனியை அடிக்கடி அரசாங்கம் தன் இஷ்டத்துக்குப் பயன்படுத்த நினைச்சா எப்படிங்க அதால  லாபம் பார்க்க முடியும்? ரிஸ்க்கை குறைக்குறதுக்காக ஜனங்க இன்ஷூரன்ஸ் எடுத்தா, அந்தப் பணத்தை ரிஸ்க்கான புராஜெக்ட்ல போட்றாங்க. இப்படி போட்ற பணம் நிச்சயமா திரும்ப வரும்ங்கிறதுக்கு என்ன நிச்சயம்?  

அமெரிக்கா மாதிரி நோட்டடிச்சு நிலைமையைச் சமாளிக்க முடியல நம்ம அரசாங்கத்தால. ஆனா, பணப்பசியோ பெரிசா இருக்கு. கையில இருக்கற கவர்மென்டு கம்பெனி ஷேரை விக்கலாமுன்னு பார்த்தா மார்க்கெட் நிலவரம் சரியில்லை. உடனே இருக்கவே இருக்கு எல்.ஐ.சி.ன்னு அரசாங்கம் சொன்ன, அதை எப்படி கேட்டுட்டு சும்மா இருக்க முடியும்? ஆபத்துக் காலத்திலே அருந்துணைங்கிறது பாலிசி எடுத்த மக்களுக்குதான்;  அரசாங்கத்துக்கு இல்லைன்னு மெத்தப் படிச்ச மேதாவிங்க புரிஞ்சுகிட்டா சரிதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism