Published:Updated:

வீடு விற்றதில் லாபம்!

எப்படி வரியை மிச்சப்படுத்தலாம்?

வீடு விற்றதில் லாபம்!

எப்படி வரியை மிச்சப்படுத்தலாம்?

Published:Updated:
##~##

னை, வீடு போன்ற சொத்துகள், நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற நிதி சார்ந்த பத்திரங்கள், தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்கள் மீது செய்யப்பட்ட முதலீட்டின் மூலம் கிடைக்கும் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு வரி கட்டாமல் மிச்சப் படுத்த வழிகள் இருக்கின்றன.

 ஒரு மனிதனுக்கு வீடு என்பது அத்தியாவசியம் மற்றும் அந்தஸ்து. அந்த வகையில் வீட்டை விற்றதன் மூலமான ஆதாயத்துக்கு முழுமையாக வரிச் சலுகை பெற வழிவகை செய்யப் பட்டிருக்கிறது. வீடு விற்றதன் மூலம் நீண்ட கால மூலதன ஆதாயம் கிடைத்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்போது நீண்ட கால மூலதன ஆதாய வரி கட்டாமல் இருக்க என்னென்ன வழிகள் இருக்கின்றன என பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீடு விற்றதில் லாபம்!

வீட்டை விற்றால்..?

இந்த மூலதன ஆதாயத்தை இன்னொரு வீடு வாங்க அல்லது கட்ட பயன்படுத்தினால் வருமான வரி விலக்கு இருக்கிறது. அதே நேரத்தில், அந்த தொகையில் எவ்வளவு பயன் படுத்தப்படுகிறதோ, அந்தத் தொகைக்கு மட்டும் வரி விலக்கு இருக்கிறது. உதாரணத்துக்கு, மூலதன ஆதாயம் 30 லட்சம் ரூபாய். இதில் 25 லட்சம் ரூபாய் மட்டும் இன்னொரு வீடு வாங்க பயன்படுத்தப்பட்டிருந்தால், வீடு வாங்கப் பயன்படுத்தியது போக உள்ள 5 லட்ச ரூபாய்க்கு வரி கட்டினால் போதும்.

இங்கே ஒரு வீட்டை விற்கும்போது விற்பவரின் பெயரில் எத்தனை வீடுகள் வேண்டுமானாலும் இருக்கலாம். அதே போல், புது வீடு வாங்கும்போதும் அவரின் பெயரில் எத்தனை வீடுகள் வேண்டுமானாலும் சொந்தமாக இருக்கலாம். இந்த மூலதன ஆதாய வரிச் சலுகை என்பது வீட்டை விற்று மற்றொரு வீட்டை வாங்கும்போது எல்லாம் கிடைக்கும். அதற்காக அடிக்கடி சொத்தை வாங்கி விற்றால் அது வியாபாரமாகப் போய்விடும்.  வரிச் சலுகை கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது.  

வீடு விற்றதில் லாபம்!

பில்டர் ஒருவருடன் கூட்டுத் திட்டத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, அதில் சில ஃப்ளாட்களை ஒதுக்கித் தரும்பட்சத்தில், அவை ஒன்றோடு ஒன்று அருகில் அல்லது மேலே கீழே ஒட்டியபடி இருக்கும்பட்சத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஃப்ளாட்களுக்கு மூலதன ஆதாய வரிச் சலுகை கிடைக்கும்.

வீடு தவிர மனை, நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள், தங்கம், வெள்ளி, வைரம் போன்ற எந்த சொத்தை விற்றாலும் நீண்ட கால மூலதன ஆதாயமாக இருந்தால் நிகர விற்பனை தொகையை மற்றொரு வீடு வாங்க அல்லது கட்டுவதற்குப் பயன்படுத்தினால் வருமான வரி விலக்கு உண்டு. அந்த தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவை மட்டும் வீடு வாங்க அல்லது கட்ட பயன்படுத்தினால், அந்த விகிதாச்சாரத்துக்கு ஏற்பதான் வரி விலக்கு கிடைக்கும்.

இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். ஒரு மனையை விற்றது மூலமான நிகர விற்பனை தொகை 50 லட்சம் ரூபாய். நீண்ட கால மூலதன ஆதாயம் 30 லட்சம் ரூபாய். இன்னொரு வீடு வாங்கும் செலவு 60 லட்சம் ரூபாய் என்றால் நீண்ட கால ஆதாய வரி எதுவும் வராது.

அதே நேரத்தில், மறுபடியும் வீடு வாங்க நிகர விற்பனைத் தொகையி லிருந்து 25 லட்சம் ரூபாயை மட்டும் பயன்படுத்துவதாக வைத்துக் கொள்வோம். நிகர விற்பனை தொகைக்கும், இன்னொரு வீடு வாங்கப் பயன்படுத்திய தொகைக்குமான விகிதாச்சாரப்படி 15 லட்சம் ரூபாய் தான் மூலதன ஆதாயத்திலிருந்து செலவிடப்பட்டிருக்கிறது என எடுத்துக் கொள்ளப்படும். அதாவது (25/50) X 30 = 15 லட்சம் ரூபாய்.

இந்த 15 லட்சம் ரூபாயை மூலதன ஆதாயமான 30 லட்சம் ரூபாயிலிருந்து கழித்தால் வரும் 15 லட்சம் ரூபாய்க்கு மூலதன ஆதாய வரி கட்ட வேண்டி வரும். இப்படி வாங்கும் இன்னொரு வீடு புதிதாக அல்லது பழைய வீடாககூட இருக்கலாம்.

இப்படி வீடு தவிர வேறு சொத்துகளை விற்கிற தேதியில், விற்பவரின் பெயரில் ஒரு வீட்டுக்கு மேல் இருக்கக் கூடாது. வீடு தவிர, இதர சொத்துகளை விற்ற தேதியிலிருந்து மூன்று ஆண்டுக்குள் ஒரு வீட்டுக்கு மேல் வாங்கக் கூடாது மற்றும் கட்டக் கூடாது. அப்படி செய்தால் வரிச் சலுகை திரும்பப் பெறப்படும்.

எத்தனை ஆண்டுகளில்..?

மூலதன ஆதாயத்தை எவ்வளவு காலத்துக்குள் பயன்படுத்தினால் வரிச் சலுகை கிடைக்கும்?

மு

வீடு விற்றதில் லாபம்!

ந்தைய சொத்தை விற்ற தேதியிலிருந்து இரண்டு வருஷத்துக்குள் மொத்தமாக பணம் கொடுத்து மற்றொரு வீடு வாங்கினால் வரிச் சலுகை கிடைக்கும். வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவது என்றால் விற்ற தேதியிலிருந்து மூன்றாண்டு வரை எடுத்துக்கொள்ளலாம். மொத்த விலை கொடுத்து இன்னொரு வீட்டை அல்லது அடுக்குமாடி குடியிருப்பை, விற்ற தேதியிலிருந்து ஓராண்டுக்குள் வாங்கி இருந்தாலும் மூலதன ஆதாய வரிச் சலுகை கிடைக்கும்.  

எந்த வருடத்தில் சொத்தை விற்கிறோமோ, அந்த நிதி ஆண்டிற்கான  வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய காலக்கெடுவுக்குள் மூலதன ஆதாயத்தை வேறு வீடு வாங்க அல்லது கட்ட பயன்படுத்தவில்லை என்றால், அந்த மூலதன ஆதாயத் தொகையை பொதுத் துறை வங்கிகளில் உள்ள மூலதன ஆதாய வைப்பு நிதித் (கேப்பிட்டல் கெயின் டெபாசிட்) திட்டத்தில் போட்டு வைக்க வேண்டும். பிறகு தேவைக்கு அதிலிருந்து பணத்தை எடுத்து வீடு வாங்க அல்லது கட்டப் பயன்படுத்திக்கொள்ளலாம். வங்கியானது, பில்டர் அல்லது உங்களுக்கு வீட்டை விற்கும் வீட்டின் உரிமையாளர் பெயரில்தான் டி.டி. ஆக தரும். இந்த டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி உண்டு. அதே நேரத்தில், இந்த வட்டித் தொகையை எதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். மூன்று வருடத்துக்குள் இந்தத் தொகையை பயன்படுத்தவில்லை என்றால் ஏற்கெனவே அளிக்கப்பட்ட மூலதன ஆதாய வரி சலுகை ரத்தாகி, மூன்று வருடம் முடியும்போது வரி கட்ட வேண்டி வரும். இப்படி வீடு வாங்கவில்லை, வீடு கட்டவில்லை என்கிறபட்சத்தில் மூலதன ஆதாய தொகையை முதலீடு செய்து வரிச் சலுகை பெற வாய்ப்பு இருக்கிறது.

அதாவது, விற்ற தேதியிலிருந்து ஆறு மாதத்துக்குள் ஆர்.இ.சி, என்.ஹெச்.ஏ.ஐ, உள்ளிட்ட கேப்பிட்டல் கெயின் பாண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் மூலதன ஆதாயத்துக்கு வரிச் சலுகை கிடைக்கும். இவ்விதம் ஒரு நிதி ஆண்டில் 50 லட்சம் ரூபாய் வரைக்கும் வரிச் சலுகை பெற முடியும். இந்த கேப்பிட்டல் கெயின் பாண்ட் மூலமான வருமானத்துக்கு வரி கட்ட வேண்டி வரும். சற்று புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் ஒரு சொத்தை விற்றதன் மூலம் கிடைக்கும் ஒரு கோடி ரூபாய்க்கு மூலதன ஆதாய வரி கட்டாமல் இருக்க முடியும்.

வீடு விற்றதில் லாபம்!

எவ்வளவு கால அவகாசம்?

ஒருவர் செப்டம்பர் 30-ம் தேதியில் ஒரு சொத்தை விற்றால் அடுத்த 6 மாதம், அதாவது மார்ச் 31-ம் தேதி வரைக்கும் கேப்பிட்டல் கெயின் பாண்டுகளில் முதலீடு செய்ய கால அவகாசம் கிடைக்கும். அந்த வகையில் ஒருவருக்கு அதிகபட்சம் 50 லட்சம் வரி விலக்கு கிடைக்கும். இதுவே செப்டம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு, உதாரணத்துக்கு நவம்பர் 10-ம் தேதி வாக்கில் ஒருவருக்கு சொத்தை விற்றதன் மூலம் ஒரு கோடி ரூபாய் மூலதன ஆதாயம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவர் மார்ச் 31-ம் தேதிக்குள் 50 லட்சம் ரூபாயையும், அதன்பிறகு மே 10-ம் தேதிக்குள் மீதி 50 லட்சம் ரூபாயையும் கேப்பிட்டல் கெயின் பாண்டுகளில் முதலீடு செய்தால் ஒரு கோடி ரூபாய்க்கு வரிச் சலுகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது, அவரின் முதலீடு இரு நிதி ஆண்டுகளில் பிரிந்துச் சென்றுவிடுவதால் இந்தக் கூடுதல் சலுகை கிடைக்கிறது. இந்த விஷயம் சற்று சிக்கலானது, இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு இருப்பதால் ஆடிட்டரின் ஆலோசனையின் பேரில் செயல்படுவது நல்லது..!

(அடுத்த இதழில் வீடு, மனை, நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள் போன்றவற்றை விற்றது மூலமான மூலதன இழப்பை ஈடுகட்டும் வழிகள் பற்றி பார்ப்போம்)

தொகுப்பு: சி.சரவணன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism