Published:Updated:

பிஸினஸ் குரு!

டி.டி.கிருஷ்ணமாச்சாரிஏ.ஆர்.குமார்

பிஸினஸ் குரு!

டி.டி.கிருஷ்ணமாச்சாரிஏ.ஆர்.குமார்

Published:Updated:
##~##

கோயில், இசை, நடனம், இலக்கியம் போன்ற துறைகளில் தஞ்சை பிராமணர்களின் பங்கு மிகப் பெரிது. ஆனால், திருநெல்வேலியில் இருந்த கல்லிடைக்குறிச்சி பிராமணர்கள் பிஸினஸ் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்கள். இந்த இரு பகுதிகளைத் தவிர, சென்னையிலும் அதனைச் சுற்றி இருந்த சிறிய ஊர்களிலும் இருந்த பிராமணர்கள் கல்வித் துறையில் சிறந்து விளங்கி, அதன் மூலம் அரசுப் பணிகளில் முக்கிய அந்தஸ்த்தைப் பெற்றிருந்ததோடு, பிஸினஸ் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார்கள். அப்படி பங்காற்றியவர்களில் முக்கியமானவர், டி.டி.கிருஷ்ணமாச்சாரி.

 டி.டி.கே. என எல்லோராலும் சுருக்கமாக அழைக்கப்படும் டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஒரு வெற்றிகரமான பிஸினஸ்மேன் மட்டுமல்ல, சுதந்திர இந்தியாவின் நிதி அமைச்சராகவும் இருந்தவர். மத்தியத் தொழில் துறை அமைச்சர் பதவியையும் வகித்தவர். அதன் மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, இந்தியத் தொழில் துறையின் முன்னேற்றத்திற்கே வழி வகுத்தவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவள்ளூர் தட்டை கிருஷ்ணமாச்சாரி என்பதன் சுருக்கம்தான் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. திருவள்ளூரில் 1899-ம் ஆண்டு பிறந்தார் கிருஷ்ணமாச்சாரி. இவரது அப்பா மாவட்ட நீதிபதியாக இருந்தவர். மெத்தப் படித்த குடும்பம் என்பதால் கிருஷ்ணமாச்சாரியும் பள்ளிப் படிப்பை சரியாகவே முடித்தார். ஆனால், கல்லூரிப் படிப்புக்கு அவர் தேர்வு செய்தது மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜைத்தான். இங்கு பொருளாதாரம் படித்தார் டி.டி.கே. பொதுவாக, பொருளாதார பாடத்தைப் படிக்கும் மாணவர்கள் அதை அவ்வளவு சிரத்தையாகப் படிப்பதில்லை.  ஆனால், கிருஷ்ணமாச்சாரியோ பொருளாதாரப் பாடத்தை உணர்ந்து படித்தார் என்பதைவிட, கரைத்துக் குடித்தார் என்று சொல்ல வேண்டும். காரணம், பிற்பாடு தான் படித்த கிறிஸ்டியன் காலேஜிலேயே பொருளாதாரத்தைச் சொல்லித் தந்தார் அவர். அந்த அளவுக்கு பொருளாதாரப் படிப்பு அவருக்குப் பிடித்திருந்தது.

பிஸினஸ் குரு!

1920-ல் படித்து முடித்த கையோடு வேலைக்குச் சேர்ந்தார் அவர். முதல் உலகப் போர் முடிந்திருந்த அந்த சமயம், உலக அளவில் வியாபாரம் என்கிற புதிய அணுகுமுறை பிறந்திருந்தது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை இந்தியாவில் கொண்டுவந்து விற்கும் வழக்கம் ஏற்பட்டிருந்தது. இங்கிலாந்தின் யூனிலீவர் நிறுவனத்தின் பொருட்கள் இந்தியாவில் கனஜோராக விற்பனையாகிக் கொண்டிருந்தது. யூனிலீவர் நிறுவனத்தின் பொருட்களை சென்னையில் விற்பனை செய்யும் மிகப் பெரிய ஏஜென்ட்-ஆக இருந்தார் ஏ.ஆர்.துரைசாமி அய்யங்கார். இவரிடம் அப்ரன்டீஸாகச் சேர்ந்தார் கிருஷ்ணமாச்சாரி.

மார்க்கெட்டிங் வேலை என்றால் மக்களுடன் நெருங்கிப் பழகுகிற தன்மை வேண்டும். எந்த பொருளையும் மக்களிடம் கொண்டுபோய் காட்டி, அதை விற்கிற திறமை வேண்டும். முன்பின் தெரியாத மனிதர்களுடன் பேசுவதற்கோ, பழகுவதற்கோ சங்கோஜப்படுகிற ஒருவரால், அந்த துறையில் பெரிய அளவில் சாதிக்க முடியாது. ஆனால், கிருஷ்ணமாச்சாரியோ வித்தியாசமானவர். சாத்தி இருக்கும் கதவைத் தட்டி, உள்ளே இருக்கும் ஆட்களை வெளியே வரவழைத்து, அவர்கள் கோபப்பட முடியாத அளவுக்குப் பேசி, கொண்டு சென்ற சோப்புகளையும் எண்ணெய்யையும் விற்றுவிடுகிற சாதுர்யம் கிருஷ்ணமாச்சாரியிடம் நிறையவே இருந்தது. பிற்பாடு அரசியலில் நுழைந்து, மக்களால் தேர்வு செய்யப்படுவதற்கும் அமைச்சராக விளங்குவதற்கும் காரணமான அடிப்படை தகுதி அவருக்கு இளம் வயதிலேயே இருந்தது.

இருக்கிற அப்ரன்டீஸ்களிலேயே வித்தியாசமாக விளங்கியவர் கிருஷ்ணமாச்சாரி என்பதற்கு ஒரு சின்ன உதாரணம், சன்லைட் சோப். அந்த காலத்தில் சன்லைட் சோப் என்பது எல்லோருடைய கனவு சோப்பாக இருந்தது. அந்த அளவுக்கு அந்த சோப்பை பிரபலப்படுத்தியதற்கு ஒரே காரணம், டி.டி.கிருஷ்ணமாச்சாரிதான்.

1928-ம் ஆண்டில் துரைசாமி அய்யங்கார் திடீரென இறந்துபோக, அடுத்து யாருக்கு ஏஜென்சியைத் தருவது என்கிற பிரச்னை உருவானது யூனிலீவர் நிறுவனத்திற்கு. அந்த சமயத்தில், கிருஷ்ணமாச்சாரியைத் தேடிவந்து, ஏஜென்சியை தந்தது அந்நிறுவனம். அந்த ஆண்டில்தான் டி.டி.கிருஷ்ணமாச்சாரி அண்ட் கோ என்கிற தனது முதல் நிறுவனத்தை ஆரம்பித்தார் கிருஷ்ணமாச்சாரி.

தனக்கென ஒரு நிறுவனத்தை ஆரம்பித்த மாத்திரத்தில் அதில் பல புதுமைகளை கொண்டு வந்தார். அதற்கு முன்பு, ஒவ்வொரு கடைக்கும் தேவையான பொருட்களை சப்ளை செய்வது மட்டுமே வழக்கமாக இருந்தது. ஆனால், ஏஜென்சி தன் கையில் வந்தபிறகு, எல்லா ஊர்களிலும் டெப்போக்களை அமைத்தார். அந்த டெப்போக்களிலிருந்து நேரடியாக கடைகளுக்குப் பொருட்களை சப்ளை செய்யும் பிரதிநிதிகளை நியமித்தார். இதற்கு தோதாக இருக்கிற மாதிரி கணக்குவழக்குகளை மாற்றினார். மக்கள் ஒரு பொருளை ஏன் விரும்புகிறார்கள், அதற்கு என்ன காரணம் என்கிற கேள்விகளுக்குப் பதில் காண்கிற மாதிரி கஸ்டமர் சர்வேயை அந்த காலத்திலே செய்தவர் கிருஷ்ணமாச்சாரி.

ஒரு பொருள் பற்றி மக்கள் பேச வேண்டும் என்பதற்காக அதை பரபரப்பாக விளப்பரப்படுத்து வதில் தனிப்பாணியோடு விளங்கினார் கிருஷ்ணமாச்சாரி. உதாரணமாக, சோப்பு பற்றி விளம்பரத் தாள்களை வானத்தில் விமானத்திலிருந்து கீழே வீச, மக்கள் வேடிக்கையாக அதை தேடிப் பிடித்து படித்தனர். தவிர, ஆண்டுக்கு ஒருமுறை காலண்டர் வழங்கும் முறையையும் அவர்தான் கொண்டு வந்தார்.

பொருட்கள் விற்பனை என்றாலே நகரங்கள்தான் என்று எல்லோரும் நினைத்த காலத்தில் கிராம மக்களை எட்டுவதன் மூலம் தனது நிறுவனத்தை இன்னும் பெரிதாக வளர்த்தெடுக்க முடியும் என்பதை நம்பி, வெற்றி கண்டவர் கிருஷ்ணமாச்சாரி. கிராமப்புற மக்களை கவர்வதற்காகவே கிராம அளவில் கண்காட்சி நடத்தினார். பரிசுப் பொருட்களை வழங்குவதன் மூலம் கிராம மக்களின் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்தார்.

1928-ல் அவர் ஆரம்பித்த நிறுவனத்தை அடுத்த எட்டு ஆண்டுகளில் மிகப் பெரிய டிரேடிங் நிறுவனமாக மாற்றிக் காட்டினார். 1936-ல் அவர் அரசியலுக்குள் நுழைகிற வரை தனது நிறுவனத்தை அற்புதமாக நடத்தி வந்தார். அரசியலுக்குள் நுழைந்தபிறகு அவரால் தனது நிறுவனத்தை வளர்க்க அதிக அளவில் கவனம் செலுத்த முடியவில்லை. என்றாலும், தனது நிறுவனத்தை வளர்ப்பதைவிட நாட்டையே வளர்க்கும் பணியை அவர் எடுத்துச் செய்ய ஆரம்பித்தார். சுதந்திர இந்தியாவுக்கான சட்டதிட்டங்களை உருவாக்கும் கமிட்டியில் அவர் இடம் பெற்றிருந்தார். இதன் மூலம் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான சட்டங்களை கொண்டுவர பாடுபட்டார்.

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர், சுதந்திர இந்தியாவின் முதல் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக இருந்தார். இதன்பிறகு இந்தியாவின் நிதி அமைச்சராகவும் உயர்ந்தார்.

அவர் இரும்புத் துறை அமைச்சராக இருந்தபோது இந்தியாவில் பல பெரிய இரும்பாலைகளை தொடங்க நடவடிக்கை எடுத்தார். ஐ.டி.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ., யூ.டி.ஐ. போன்ற நிதி நிறுவனங்களும் இவர் அமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்டதே. ஃபேமிலி பென்ஷன் ஸ்கீமும் அவர் அமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்ட திட்டம்தான். பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு பாசனத் திட்டங்களையும் அவர் அமைச்சராக இருந்தபோது நிறைவேற்றினார்.

ஒரு அமைச்சர் என்கிற முறையில் இந்திய நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஒரு பிஸினஸ்மேன் என்கிற முறையில் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட இந்த பிஸினஸ் குரு, 1974-ல் தனது 75-வது வயதில் காலமானார். அவர் ஆரம்பித்த டி.டி.கே. நிறுவனம் இன்றைக்கு அவருடைய வாரிசுகளால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. சமையலுக்குத் தேவையான உபகரணங்கள், மருந்துப் பொருட்கள், மருத்துவக் கருவிகள், குழந்தைகளின் உடல்நலத்தைப் பேணும் பொருட்கள் என பல்வேறு பொருட்களை தயாரித்து வருகிறது.

(பிஸினஸ் சமூகம் முற்றும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism