##~## |
வருகிற டிசம்பர் 1-ம் தேதி முதல் மியூச்சுவல் ஃபண்டுகளிலும், பங்குச் சந்தையிலும் முதலீடு செய்வதாக இருந்தால் கே.ஒய்.சி. (know your customer) கட்டாயமாகத் தேவை என்று செபி அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே கே.ஒய்.சி. செய்திருப்பவர்கள் முதலீடு செய்யலாமா என்றால் அது முடியாது. 2012 ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு கே.ஒய்.சி. செய்தவர்கள் தாராளமாக முதலீடு செய்யலாம். அதற்கு முன், கே.ஒய்.சி. பதிவு செய்தவர்கள் புதிதாகச் செய்ய வேண்டும். ஏன் இந்த புதிய கே.ஒய்.சி. என்பது குறித்து முதலீட்டாளர்களின் டீமேட் உள்ளிட்ட கணக்குகளைப் பராமரித்து வரும் சி.டி.எஸ்.எல்.-ன் மேலாளர் வாசுதேவன் விளக்கமாகச் சொன்னார்.
''புரோக்கர்கள், முதலீட்டாளர்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என செபி கருதுகிறது. ஒருவர் பல புரோக்கர்களின் மூலமாக முதலீடு செய்யலாம். ஒவ்வொரு முறையும் அதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து தருவது கடினமான விஷயமாக இருக்கும். அதாவது, என்.எஸ்.இ., பி.எஸ்.இ.யில் விண்ணப்பங்கள் மற்றும் சி.டி.எஸ்.எல். அல்லது என்.எஸ்.டி.எல். போன்றவற்றில் தனித்தனியே விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்துதர வேண்டியிருக்கும். இந்த விண்ணப்பங்களில் முதலீட்டாளர் குறைந்தபட்சம் இருபது கையெழுத்தாவது போட வேண்டியிருக்கும். ஒருவேளை புரோக்கரின் சேவை பிடிக்கவில்லை என்றால் வேறு புரோக்கர் மாறும்போது, அங்கு புதிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்துதர வேண்டும். மேலும், பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஒரு கே.ஒய்.சி., மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலில் வேறு கே.ஒய்.சி. என பல கே.ஒய்.சி.கள் இதற்குமுன் இருந்தன. இனி, இந்த புதிய கே.ஒய்.சி.யை நிறைவு செய்துவிட்டால் அனைத்து முதலீட்டுக்கும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம். புதிதாக விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்துதர வேண்டியிருக்காது. புதிதாக கே.ஒய்.சி.யை தரும்பட்சத்தில் இந்தியா முழுவதும் பான் நம்பரை குறிப்பிட்டாலே போதும் முதலீட்டை மேற்கொள்ள முடியும்'' என்றவர், புதிய கே.ஒய்.சி. கொண்டு வரப்பட்டிருப்பதற்கான முக்கிய காரணத்தையும் விளக்கிச் சொன்னார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஒருவர் போலியான ஆவணங்களைக் கொடுத்து முதலீடு வரி ஏய்ப்பு செய்வதைத் தடுக்கவும், கணக்கில் வராத பணத்தைக் கண்டுபிடிக்கவும்தான் இந்த ஏற்பாடு'' என்று முடித்தார்.
கே.ஒய்.சி.க்குத் தரவேண்டியவை!
புகைப்பட ஆதாரம், தற்போது வசிக்கும் முகவரி அதற்கான ஆதாரம், தகவல் அனுப்புவதற்கான முகவரி, பான் நம்பர், தந்தை/கணவன்/மனைவி பெயர் கொடுக்க வேண்டியிருக்கும். புதிதாக முதலீட்டை தொடங்கும்போது கட்டாயம் கே.ஒய்.சி. தேவை. ஏற்கெனவே, எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்து வருபவர்கள் அப்படியே தொடரலாம். இதற்குமுன் மொத்தமாக முதலீடு செய்து இருப்பவர்களுக்கு இந்த கே.ஒய்.சி. தேவையில்லை.

எப்போதெல்லாம் முகவரி மாறுகிறதோ, அந்த மாற்றத்தை கே.ஒய்.சி.யிலும் கொண்டுவர வேண்டும்.
பழைய கே.ஒய்.சி.க்கும் புதிய கே.ஒய்.சி.க்குமான வித்தியாசம்!
இப்போது புதிதாகக் கொண்டு வரப்பட்டிருக்கும் கே.ஒய்.சி.யில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் குறித்து கேம்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் கமலா ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ''புதிதாக கே.ஒய்.சி. மேற்கொள்ள ஐ.பி.வி. (In personal verfication) என்பதைப் புதிதாகச் சேர்த்துள்ளார்கள். அதாவது, முதலீட்டாளரை நேரில் ஆய்வு செய்து தகவல் அளிப்பது. இதில் ஆய்வு செய்த மியூச்சுவல் ஃபண்ட் அல்லது பங்கு தரகு நிறுவனப் பணியாளரின் பெயர், அவரின் குறியீட்டு எண், அவருடைய கையப்பம் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது'' என்றார்.
புதிய கே.ஒய்.சி. பணிக்கு என சி.டி.எஸ்.எல்.(Central Depository Services (India)
limited ), என்.டி.எம்.எல். (NSDL Database Management Limited, டாடெக்ஸ் (Dotex International Limited), கேம்ஸ் (Computer Age Management Services Pvt Ltd) என நான்கு தனியார் நிறுவனங்களை செபி அமைப்பு நியமித்துள்ளது. கே.ஆர்.ஏ. ((Know Your Client) Registration Agency) என அழைக்கப்படும் இந்நிறுவனங்களில் ஏதாவது ஒன்றில் கே.ஒய்.சி. படிவத்தைப் பூர்த்தி செய்து நேரில் சென்று தந்தாலே போதும். இதை தவிர புரோக்கர்கள், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் கிளை அலுவலகங்களிலும் கே.ஒய்.சி. பதிவு செய்துகொள்ளலாம். இப்படி பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கே.ஆர்.ஏ. நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். இதன் பிறகு எந்த சிக்கலும் இல்லாமல் முதலீட்டை மேற்கொள்ளலாம்.
செஞ்சுட வேண்டியதுதானே?