Published:Updated:

டிப்டாப் மோசடிகள் !

கம்பெனிக்குள் ஒரு கறுப்பு ஆடு !

பிரீமியம் ஸ்டோரி

பாலகிஷன்

##~##

சென்னையின் மையப் பகுதியில் உள்ள பிரபல சாஃப்ட்வேர் கம்பெனி அது! சுமார் 200 இன்ஜினீயர்கள் பணிபுரிகிறார்கள். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து நாடுகளில் உள்ள பிரபல நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை கம்ப்யூட்டரில் என்ட்ரி செய்யும் பரபரப்பான கம்பெனி அது! ஒருநாள்... அந்த கம்பெனியின் முதலாளி பிரபு (பெயர் மாற்றப்பட்டுள்ளது!), அண்ணா நகரில் உள்ள தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உயர் அதிகாரியை அழைத்தார். கவலையுடன் பேச ஆரம்பித்தார்...

''எங்கள் கம்பெனியில் ஏதோ ஃபிராடு நடப்பதாகச் சந்தேகப்படுகிறேன். என்ன ஃபிராடு என்று நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்!'' என்றார் பிரபு. துப்பறியும் நிறுவனத்தின் உயரதிகாரியோ, ''இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்கள்!'' என்றார்.

''பங்கு மார்க்கெட்டில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்களது லாப - நஷ்டக் கணக்கை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடும். அதற்காக, அந்த நிறுவனங்களின் தினப்படி வரவு-செலவு விவரங்களை நாங்கள் கம்ப்யூட்டரில் டேட்டாவாகப் பதிவு செய்வோம். இந்த வேலையை செய்யும் ஆட்களுக்கு நாங்கள் தரும் சம்பளம் கம்மிதான். பணத்தாசை பிடித்து அலையும் இவர்களை தங்கள் கையில் போட்டுக்கொண்டு, போட்டி நிறுவனங்கள் தகவல்களை வாங்குகிறார்களோ என்று எனக்குச் சந்தேகம்.

டிப்டாப் மோசடிகள் !

உதாரணமாக, வருட துவக்கத்தில் ஒரு கம்பெனி லாபம் சம்பாதிப்பதாகத் தெரிந்தால், அந்த கம்பெனியின் பங்குகளை கோடிக்கணக்கில் வாங்கிக் குவித்துவிடுவார்கள். கம்பெனி சம்பாதித்த லாப விவரம் பிற்பாடு தெரியவரும்போது அந்த பங்கின் விலை ஏறும். அப்போது கொள்ளை லாபத்துக்கு அந்த பங்குகளை விற்று கொழுத்த லாபம் பார்த்துவிடுவார்கள்.

வெளிநாட்டு கம்பெனிகள் தங்கள் நாட்டில் வல்லூறுகள் சுற்றுகின்றன என்பதால், அவுட்சோர்ஸிங் முறையில் டேட்டா என்ட்ரி பணியை நம்மிடம் தருகின்றன. அங்குள்ள புரோக்கர்கள் இங்கும் வந்து தகவல்களை திருடிச் சென்று விடுகிறார்கள்.'' என்று மனம் வெறுத்துப் பேசினார்.  

துப்பறியும் நிறுவன உயரதிகாரி அந்த கறுப்பு ஆட்டை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இறங்கினார். ஒருமாத காலம் கழித்து, அந்த கறுப்பாட்டை கண்டுபிடித்து பிரபுவிடம் சொல்ல, அடுத்த நிமிடமே, அவரை வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்தார். ஆனால் ஊழியர்கள், நிர்வாகத்திற்கு எதிராக கிளம்ப, சமாதானப்படுத்தி பேசினார் பிரபு.

''அந்த ஆள் ஒரு வாரத்துக்கு முன்பு பத்து லட்சம் மதிப்புள்ள புதிய காரை வாங்கினார். அவர் குடியிருந்த 4 ஆயிரம் ரூபாய் வாடகை வீட்டை மாற்றி பெரிய பங்களாவிற்கு குடி போனார். அவர் வங்கிக் கணக்கில் உள்ள பேலன்ஸ் தொகை பல லட்சங்கள். ஆனால், அவர்  சம்பளம் வெறும்

20 ஆயிரம் ரூபாய்தான்! இதற்குமேல் விரிவாகச் சொல்ல முடியாது. அவர் செய்த ஃபிராடு வேலைகளுக்கு எல்லாம் ஆதாரம் இருக்கின்றன. சட்டப்படி அவர் சேலஞ்ச் செய்தால், அந்த விவரங்களை அப்போது வெளியிடுவேன்'' என்று சொல்லிவிட்டு கிளம்பினார். ஓரளவு நடந்ததைப் புரிந்துகொண்ட ஊழியர்கள், கலைந்து சென்றனர்.

''அந்த கறுப்பாடு செய்த ஃபிராடுதனம் என்ன?'' என துப்பறியும் நிறுவனத்தின் உயரதிகாரியிடம் கேட்டோம்.

டிப்டாப் மோசடிகள் !

''மிஸ்டர் பிரபுவுக்குப் போட்டியாக இருக்கும் இன்னொரு கம்பெனியின் ஏஜென்ட் ஒருவர் இவரை சந்தித்து பேரம் பேசியிருக்கிறார். ஓகே சொன்ன அந்த கறுப்பு ஆடு, 'கூலியாக பணம் வேண்டாம். உங்கள் கம்பெனியின் இந்திய ஆர்டர்களை நான் ஆரம்பிக்க இருக்கும் புது கம்பெனிக்குத் தந்தால் போதும். நான் வேலை பார்க்கும் கம்பெனியில் உள்ள அனைத்து டேட்டாக்களும் நிமிடத்துக்கு நிமிடம் உங்களுக்கு வந்து சேரும்' என்று சொல்லிவிட்டு தகவல்களை அனுப்பியிருக்கிறார்.

ஆறு மாதங்களுக்கு முன், சென்னையின் மையப் பகுதியில் ஒரு கம்பெனியை ஆரம்பித்து தனது மைத்துனரை எம்.டி-யாக நியமித்து வெளிநாட்டு ஆர்டர்களை வாங்கி செய்து தந்திருக்கிறார். ஆனால், நிர்வாகம் முழுக்க இந்த கறுப்பாடு தான் கவனித்து வந்திருக்கிறது. லாபம் குவிய ஆரம்பித்தது. அவரின் சொகுசு வாழ்க்கையும் விரிவானது'' என்று விவரித்தார்.

''அது சரி, அந்த கறுப்பாட்டை நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள்?'' என்று கேட்டோம்.

''அது சுவாரஸ்யமான கதை'' என்று சொல்ல ஆரம்பித்தார். ''200 பேர்களின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து கடைசியாக அந்த ஒரு கறுப்பு ஆட்டை ஃபிக்ஸ் பண்ணவே நீண்ட நாட்கள் பிடித்தது. எஸ்.எம்.எஸ். மூலம் சங்கேத மொழியில் கணக்கு விவரங்கள் வெளியாட்களுக்குப் போவதை முதலில் கண்டுபிடித்தோம். அதை டீ-கோட் செய்து பார்த்தபோது, அதிர்ந்து போனோம். எல்லாமே, அவரது கம்பெனியில் உள்ள வரவு செலவு விவரங்கள். அந்த கறுப்பு ஆடு தனியாக ஆரம்பித்த கம்பெனிக்கு அடிக்கடி சென்று வருவதை அறிந்து, அதன் பின்னணிகளை விசாரித்து, இவர்தான் அதன் செயல் எம்.டி. என்பதையும் அறிந்தோம். லஞ்சப் பணத்தில் இன்னொரு கம்பெனியே நடத்திவருவதற்கான

டிப்டாப் மோசடிகள் !

ஆதாரங்களை மிஸ்டர் பிரபுவிடம்  காட்டியபிறகு, அதிர்ந்து போனார்'' என்றார்.

அந்த துப்பறியும் நிபுணர் வேறு யாரும் அல்ல; சன் டிடெக்டிவ் நிறுவன அதிகாரி வரதராஜன்தான்! பி.பி.ஓ. அலுவலகங்களில் கறுப்பாடுகள் உருவாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என அவரிடம் கேட்டோம்.

''டேட்டா என்ட்ரி கம்பெனிகள் புகைப்படம் எடுக்கும் வசதியுள்ள செல்போன்களை கம்பெனியின் உள்ளே அனுமதிக்கக்கூடாது. குப்பைக் கூடை, அலமாரி போன்றவற்றை தினமும் பலமுறை செக்கப் செய்ய வேண்டும். தேவையில்லாத குப்பை என்று நாம் நினைப்போம். கம்பெனி ரகசியங்களை எழுதி சுருட்டி குப்பையில் போட்டுவிடுவார்கள். கைக் கடிகாரம், பேனா, கண்ணாடி... இவற்றில்கூட உளவுச் சாதனங்களை பொருத்தி வைத்திருப்பார்கள். சாஃப்ட்வேர் கம்பெனிகளின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் துப்பறியும் நிபுணர்களாவே செயல்பட வேண்டும். அந்த கம்பெனியின் ஊழியர்களுக்குள் உள்ள போட்டி, பொறாமைகளை வைத்துவரும் தகவல்களை உன்னிப்பாக கவனித்து வரவேண்டும். திடீரென்று ஒருவரின் பொருளாதார நிலை உயர்ந்தால், அதற்கு நிஜமான பின்னணி என்ன என்பது பற்றி அறியவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அலுவலக கம்ப்யூட்டரில் டேட்டாக்கள் வெளியே எடுத்து செல்லமுடியாதபடி சில சிஸ்டங்களை புகுத்தவேண்டும். இது ஒரு ரிலே ரேஸ் மாதிரி! தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான், கறுப்பு ஆடுகள் உருவாகாது'' என்றார். கவனம், கவனம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு