Published:Updated:

ஸ்பெஷல் சைல்டு...

சுகமான எதிர்காலத்துக்கு சூப்பர் பிளான்! இரா.ரூபாவதி

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

குழந்தை பிறப்பு என்பது எல்லாப் பெற்றோர்களுக்கும் பூரிப்பான விஷயம். ஆனால், அந்த பூரிப்பு சில பெற்றோர்களுக்குக் கிடைப்பதில்லை. குறிப்பாக, சிறப்புக் குழந்தைகள் பிறக்கும்போது பெற்றோர்கள் அடையும் வேதனைக்கு அளவே இல்லை. எல்லாக் குழந்தைகளையும் பராமரிப்பதுபோல் இல்லாமல், சிறப்புக் குழந்தைகளுக்கு அதிக கவனம் செலுத்தவேண்டும்.  பெரியவனாக வளர்ந்து, எதிர்காலத்தில் நம்மை காப்பாற்றுவான் என்கிற நிலை மாறி, காலம் முழுக்க நாம் அந்த குழந்தையைக் காப்பாற்ற வேண்டும். இதுமாதிரியான குழந்தைகள் இருப்பவர்கள் என்ன மாதிரியான நிதித் திட்டமிடல்களை சிறப்புக் குழந்தைகளுக்குச் செய்யவேண்டும் என்று விளக்குகிறார் மும்பையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் சுரேஷ் சடகோபன்.

''ஸ்பெஷல் சில்ட்ரன் என்று சொல்லப்படும் சிறப்புக் குழந்தைகள் ஒருவிதமான உடல் குறைபாடு உடைய குழந்தைகள்தான். அந்த குழந்தைகளால் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாது. அவர்களுடைய வேலைகளை பெற்றோர்கள்தான் செய்யவேண்டும்.  இதற்கு அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் தயாராக வேண்டும். அடுத்து முக்கிய விஷயம், அந்த குழந்தையை வளர்ப்பதற்கேற்ப தங்களது நிதி திரட்டும் பழக்கத்தையும், செலவுகளைக் குறைக்கும் பழக்கத்தையும் கொண்டுவர வேண்டும். பெற்றோர் இருவரும் வேலைக்குப் போக தயாராக இருக்க வேண்டும். ஏனெனில், உங்கள் சேமிப்பு மற்ற பெற்றோர்களின் சேமிப்பைவிட அதிகமாக இருக்க வேண்டும்.

ஸ்பெஷல் சைல்டு...

பொதுவாக பிள்ளைகளின் படிப்பு முடியும்வரை குழந்தைகளை நாம் பாதுகாப்போம். ஆனால், சிறப்புக் குழந்தைகளின் படிப்பு என்பதே மிகப் பெரிய விஷயமாக இருக்கும். அதாவது, அவர்களுக்கு சிறப்புப் பள்ளி, பள்ளிக்கு அழைத்துச் செல்ல தனி ஆள்... என ஒவ்வொரு மாதமும் கணிசமான தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கும். இதற்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 200 ரூபாயாவது செலவாகும். அப்படியெனில், மாதம் 6,000 ரூபாய்; அதாவது, வருடத்திற்கு 72,000 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஸ்பெஷல் சைல்டு...

இதனுடன் அவர்களுக்கு அடிக்கடி மருத்துவச் செலவு செய்ய வேண்டியிருக்கும். இவர்களுக்கு எளிதில் தொற்றுநோய் வரலாம். இதற்கான மருத்துவச் செலவாக மாதம் இரண்டாயிரம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். இதற்கு வருடத்திற்கு

24 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். இந்த செலவுகளை மாதச் செலவுகளின் கணக்கிலே சேர்த்து அதற்கேற்பத் திட்டமிடலாம். தவிர, சில குழந்தைகளை கவனித்துக்கொள்ள எப்போதும் ஒரு செவிலியரை நியமிக்க வேண்டி வரலாம். அந்த செவிலியருக்குச் சம்பளம் தரவேண்டும்.  

சிறப்புக் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் இன்ஷூரன்ஸ் தரமாட்டார்கள். எனவே, மருத்துவச் செலவு மற்றும் அவசரத் தேவைகளுக்காக குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை எப்போதும் வைத்திருக்க வேண்டும். இந்த தொகையை ரிஸ்க் குறைந்த நிறுவனங்களின் ஃபண்டுகள் அல்லது ஃபிக்ஸட் டெபாசிட்களில் போட்டு வைக்கலாம். இந்த பணத்தை வங்கி ஆர்.டி., மாதாந்திர முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

ஸ்பெஷல் சைல்டு...

சிறப்புக் குழந்தையின் எதிர்காலத்திற்கு சேமிப்பது அவசியம். அந்த குழந்தையின் எதிர்காலத்தின் தேவைக்கு ஏற்ப உங்கள் முதலீட்டை ஆரம்பிக்கலாம். பொது வைப்பு நிதியில் (பி.பி.எஃப்.) மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைப் போடலாம். அதோடு உங்களுக்கு போனஸ், இன்ஷூரன்ஸ் சரண்டர் செய்யும்போது கிடைக்கும் தொகை, சொத்து விற்று கிடைக்கும் தொகை என கூடுதலாக கிடைக்கும் பணத்தை இதில் போடலாம். ஒரு வருடத்திற்கு அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை இதில் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டிற்கு 8.8 சதவிகிதம் வட்டி கிடைக்கும்.

ரிஸ்க் குறைவாக உள்ள, அதேசமயம், ரிட்டர்ன் அதிகம் கிடைக்கக்கூடிய ஈக்விட்டி ஃபண்டுகளில் குறைந்த அளவில் முதலீடு செய்யலாம். இதோடு, ஒரு பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி. முறையிலும் முதலீடு செய்யலாம்!

குழந்தைகளின் எதிர்காலத்திற்கு திட்டமிடுவதுபோல உங்களின் எதிர்காலத்திற்காகவும் திட்டமிடுவது அவசியம். ஏனெனில், உங்கள் குழந்தையிடமிருந்து நீங்கள் எதுவுமே எதிர்பார்க்க முடியாது. உங்களின் மருத்துவச் செலவுகளுக்கு தனியாக ஒரு மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியம். அதோடு உங்களின் டேர்ம் இன்ஷூரன்ஸ் கவரேஜ் மற்றவர்களைவிட 5 சதவிகிதம் அதிகமாக இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம். இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடம் உங்களின் தேவையை தெளிவாகச் சொல்லி அதிக கவரேஜ் பெறலாம். இதில், கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், கவரேஜ் அதிகமாக அதிகமாக பிரீமியமும் அதிகமாகும். கட்ட முடியுமா என்பதை யோசித்துக் கொள்வது நல்லது'' என்றார் சுரேஷ் சடகோபன்.  

எதையும் சமாளிக்க முடியும்

என்பதை மனதில் வைத்து செயல்பட்டால் எல்லாமே ஈஸிதான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு