Published:Updated:

ஷேர்லக் - ரேஷன் சர்க்கரை விலை உயரும்!?

ஷேர்லக் - ரேஷன் சர்க்கரை விலை உயரும்!?

பிரீமியம் ஸ்டோரி

ஷேர்லக்

 ##~##

''எட்டாம் ஆண்டு சிறப்பிதழ் - அட்டையே அமர்க்களமாக இருக்கிறதே! நிறைய புதிய பகுதிகள், ஏகப்பட்ட கட்டுரைகள், பங்கு பரிந்துரைகள், டிப்ஸ்கள் என கலக்கி இருக்கிறீரே!'' - சுடச்சுட பிரின்ட் ஆகி வந்திருந்த அட்டையையும் பாரங்களையும் புரட்டியபடி பாராட்டினார்  ஷேர்லக். ''நன்றி'' சொல்லிவிட்டு, மேட்டருக்குள் நுழைந்தோம். ''சென்செக்ஸ் மீண்டும் 19,000 புள்ளிகளைத் தாண்டி சென்றுவிட்டதே?''என்றோம்.

''மூடி நிறுவனம் நமது பொருளாதாரத்திற்கு  'ஸ்டேபிள்’ என்கிற நிலைக்கு உயர்த்தியது ஒரு முக்கியமான காரணம். கோல்டுமேன் நிறுவனம் இந்திய பங்குச் சந்தை 'ஓவர் வெயிட்’ என்பதிலிருந்து 'மார்க்கெட் வெயிட்’ என்கிற நிலைக்குக் கொண்டுவந்தது இன்னொரு முக்கியமான விஷயம். சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு தொடர்பாக வாக்கெடுப்புக்குத் தயார் என மத்திய அரசு மூன்றாவது காரணம். இந்த காரணங்களால் சந்தை உயர்ந்து நிஃப்டி 5825 என்கிற நிலையை அடைந்து புதிய உச்சத்தைத் தொட்டது. இந்த ஆண்டில் இதுவே புதிய உச்சம். நீண்டகாலத்தில் சந்தை இன்னும் மேலே மேலே செல்லும் என்பதில் சந்தேகம் வேண்டாம்'' என்றார்.

''சரி, அடுத்த வாரம் சந்தை மேலே போகுமா, இல்லையா?'' என்று கேட்டோம். ''திடீரென சந்தை கணிசமாக உயர்ந்துவிட்டதால், அடுத்து சிறிய இறக்கம் வரலாம். எக்ஸ்பைரியை வைத்து, சந்தையை உயர்த்திய மாதிரி தெரிவதால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது'' என்றார்.

''மாஸ்கான் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜீஸ் நிறுவனத்துக்கு செபி இரண்டு ஆண்டு தடை விதித் துள்ளதே?'' என்று விசாரித்தோம்.

''பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு பங்குச் சந்தை ஊழலில் ஈடுபட்ட கேதன் பரேக்கிற்கு பங்குச் சந்தைக்கு வெளியே (ஆஃப் மார்க்கெட்) அதிக எண்ணிக்கையில் பங்குகளை கைமாற்றிவிட்ட புகார் நிரூபிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை! எப்போதோ நடந்த குற்றத்தை இத்தனை நாளாக விசாரித்து தீர்ப்பு சொல்வதில் என்ன நன்மை'' என்று புலம்பினார்.

ஷேர்லக் - ரேஷன் சர்க்கரை விலை உயரும்!?

''ரிலையன்ஸ் நிறுவனப் பங்கில் நடந்த இன்சைடர் டிரேடிங் வழக்கு குறித்த விவரங்களை மறைக்காமல் வெளியிட வேண்டும் என செபிக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறதே?'' என்றோம்.

''ஆமாம், இதற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் செபி மனு தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்த விசாரணை டிசம்பர் 3-ம் தேதி நடக்க இருக்கிறது. அதே நேரத்தில், மத்திய தகவல் ஆணையத்துக்கு எதிராக ரிலையன்ஸ் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் போட்டிருக்கும் வழக்கு 2013, வருகிற ஜனவரி 30-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இன்சைடர் டிரேடிங் வழக்கு விசாரணையைவிட அதுகுறித்த தகவல்களை வெளியிடும் வழக்கு தீவிரமாகி வருகிறது'' என்றார்.    

''புரமோட்டர்களின் பங்கு 75 சதவிகிதம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் செபி உறுதியாக இருக்கிறதே?''- டீயைத் தந்தபடி கேட்டோம்.

''இதை 2013-க்குள் செய்து முடிக்க வேண்டும் என செபி சொன்னது. ஆனால், செபி இந்த கெடு தேதியை நிச்சயம் நீடிக்கும் என்று நாற்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அசால்ட்டாக இருக்கிறதாம். குறிப்பாக, விப்ரோ, ஜெட் ஏர்வேய்ஸ், ரிலையன்ஸ் பவர், டி.எல்.எஃப், ஜேபி இன்ஃப்ராடெக், எல் அண்ட் டி ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கு கெடு தேதிக்குள் செபியின் உத்தரவை நிறைவேற்றச் சொல்லி இருக்கிறதாம்.  கூடிய விரைவில் இந்நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் களமிறங்கலாம்'' என்றவர் ஒரு அதிர்ச்சித் தகவலைச் சொன்னார்.

''ரேஷன் கடைகளில் தற்போது சர்க்கரை கிலோ 13.50 ரூபாய்க்கு (அரசு மானியம் ரூ.11.87) விற்கப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளாக இந்த விலை அதிகரிக்கப்படவில்லை. இதைவிட சுமார் 2.5 மடங்கு அதிக விலை மளிகை கடைகளில் விற்கப்படுகிறது. இந்நிலையில் சர்க்கரை விலையை ரேஷன் கடைகளில் இரு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க மத்திய உணவு அமைச்சகம் திட்டமிட்டிருந்தது. ஆனால், இதை கொண்டுவந்தால் மக்களின் கடுங்கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும். கூடிய விரைவில் சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது. நாடாளுமன்றத் தேர்தலும் வரப் போகிறது. எனவே, இப்போது வேண்டாம் இந்த விஷப் பரிட்சை என அந்த முடிவை ஒத்தி வைத்துவிட்டதாம்!''  

புறப்படத் தயாரானவரிடம் ''இந்த முறையாவது ஷேர் டிப்ஸ் தரவேண்டும்!'' என வற்புறுத்த, டிப்ஸ்களை தந்தார். அவை,

எம்.ஆர்.எஃப்., சேஷாயி பேப்பர் போர்ட்ஸ், ஜே.கே. பேங்க், ஜெய்கார்ப், ஐ.டி.எஃப்.சி., சன் பார்மா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு