நடப்பு
Published:Updated:

செக்டார் அனாலிசிஸ்!

செக்டார் அனாலிசிஸ்!

செக்டார் அனாலிசிஸ்!

ர் ஆன்மிக மாநாடு நடந்து கொண்டிருந்தது; திடீரென்று குரு கேட்டார்: ''இங்கு நரகத்திற்குச் செல்ல விரும்புகிறவர்களெல்லாம் எழுந்திருங்கள்'. ஒருவரும் எழவில்லை; யார் நரகத்துக்குப் போக விரும்புவார்கள்?

குரு அடுத்து கேட்டார்: 'சொர்க்கத்திற்குப் போக விரும்புகிற வர்கள் யார்?' கேட்கவா வேண்டும்? எல்லோரும் எழுந்து நின்றனர், முல்லாவைத் தவிர. குருவுக்கோ ஆச்சரியம். 'சொர்க்கமா, நரகமா எனத் தேர்ந்தெடுப்பதில் ஏன் குழப்பம்?'.

முல்லா சொன்னார்: ''ஒரு தயக்கமும் இல்லை! எல்லா வளங்களும் கண்ணுக்கெதிரே இருக்கும் இவ்வுலகிலேயே நீண்ட காலம் வாழ ஆசை' என்றார்!

செக்டாரைத் தேர்ந்தெடுப்பதில் இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; கண்ணெதிரே இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடிக்க முயற்சிக்காதீர்கள். குறிப்பாக, சிறு முதலீட்டாளர்கள் இதை பின்பற்றினால்  குழப்பம் இல்லாமல் எளிதாக முடிவெடுக்கலாம்.  

அறுபதுகளில் ப்ளான்டேஷன், ஆட்டோ, ஸ்டீல் மற்றும் சிமென்ட் நிறுவனங்கள், எழுபதுகளில் டெக்ஸ்டைல் மற்றும் சுகர் செக்டார், எண்பதுகளிலும் தொண்ணூறு களிலும் ஃபைனான்ஸ், பார்மா, ஐ.டி. செக்டார், பின்னர் பயோடெக், டெலிகாம் என அவ்வப்போது சில செக்டார்கள் முதலீட்டாளர்களிடம் பாப்புலராக இருந்து வந்திருக்கின்றன. அந்தந்த காலகட்டங்களில் இவற்றை 'சன்ரைஸ்’ செக்டார் என்பார்கள்.

செக்டார் அனாலிசிஸ்!

அதிகம் கேள்விப்பட்டிராத, போட்டி குறைவான, எதிர்காலத்தில் அதிவிரைவில் பெரிய லாபத்தை ஈட்டித் தரவல்ல இந்த சன்ரைஸ் செக்டாரைக் கண்டுபிடித்து அத்துறைப் பங்கு களில் ஆரம்பத்திலேயே முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் உண்டு.

ஆனால், இப்படி ஒவ்வொரு புதிய துறையையும் ஆராய்ந்து அதன் வெற்றிவாய்ப்புகளை கணிக்க வேண்டுமென்றால், அதற்கு மிகப் பெரிய ரிசர்ச் டிபார்ட்மென்ட் தனியாக இருக்க வேண்டும். ஒரு சாமானிய முதலீட்டாளருக்கு அத்தகைய வசதிகள் சாத்தியமில்லை. எனவே, ஆரம்பகட்ட முதலீட்டாளர்களுக்கு என்றே 'ஆல்வெதர் ப்ரூஃப்’ செக்டார்கள் சில உண்டு.

பல்லாண்டுகளாக, பல ஏற்ற இறக்கங்களைத் தாண்டி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் துறைகள் இவை. மிக எளிமையாக எல்லோரும் புரிந்துகொள்கிற வகையில் இவர்கள் தொழில்முறை இருக்கும். எனவே, சாதாரண முதலீட்டாளரும் இத்துறைப் பங்குகளில் முதலீடு செய்ய முடியும். அவற்றில் முதல் இடம் வங்கித் துறைக்குத்தான் எனச் சொல்ல லாம். இன்று நாம் அன்றாட வாழ்வில் அத்தியாவசியத் தேவையாகிவிட்ட வங்கித் துறையின் வளர்ச்சியில் நாமும் பங்கு பெறலாமே!

வங்கித் துறை பங்குகளில் முதலீடு செய்யும் முன்னர் அத்துறையைப் பற்றித் தெரிந்து கொள்வோம்;

செக்டார் அனாலிசிஸ்!

இந்தியாவில், முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா குழுமத்தில் மொத்தம்

8 வங்கிகள் உள்ளன. 1969-ம் ஆண்டு 14 தனியார் வங்கிகளும், 1980-ம் ஆண்டு மேலும் 6 தனியார் வங்கிகளும் அரசுடைமையாக்கப்பட்டன. இதில், 1993-ம் ஆண்டு, 'பஞ்சாப் நேஷனல் வங்கி’யுடன் தன்னை இணைத்துக் கொண்டது 'நியூ பேங்க்  ஆஃப் இந்தியா’.

ஆக, இன்று இந்தியாவில் 27 பொதுத்துறை வங்கிகளும், 27 தனியார் வங்கிகளும்,

36 வெளிநாட்டு வங்கிகளும் உள்ளன. இவை தவிர, பிராந்திய கிராம வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள் என ஆயிக்கணக்கில் உள்ளன. பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாதவை இவை.

எல்லாத் துறை பங்குகளுக்கும் பொதுவான சில ஃபில்ட்டர்கள் உண்டு; இ.பி.எஸ்., பி.இ. ரேஷியோ, புக் வேல்யூ போன்றவை. இவற்றை விடுத்து ஒவ்வொரு துறைவாரியாக, குறிப்பாக வங்கித் துறையில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

மூலப் பொருள்!

எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் முதலில் ஆராய வேண்டிய முக்கியமான அம்சம் ஒன்று உண்டு; அதன் உற்பத்திக்கு/விற்பனைக்குத் தேவையான மூலப் பொருள் என்ன, அதன் விலைவாசி எப்படி எனப் பார்க்க வேண்டும்.

செக்டார் அனாலிசிஸ்!

மூலப் பொருளின் அடக்கவிலை அதிகரிக்க அதிகரிக்க, உற்பத்தியாகும் பொருளின் அடக்கவிலையும் அதிகரிக்கும். அதற்கேற்ப அதிக விலைக்கு வாங்க வாடிக்கையாளர் தயாராக இல்லை என்றால், விற்பனை படுத்துவிடும். பின் லாபம் எப்படி பார்ப்பது?

எனவே, ஒன்று மூலப் பொருளின் விலையில் பெரிய மாற்றங்கள் இருக்கக்கூடாது; இல்லை யேல், அப்படி மாறும் விலைக்கேற்ப அதிக விலை கொடுக்க வாடிக்கையாளர் தயாராக இருக்க வேண்டும்.

வங்கித் துறையைப் பொறுத்தவரை, மூலதனம் பணம்தான். பணத்தை என்ன விலை கொடுத்து வாங்குகிறார்கள், பின்னர் என்ன விலைக்கு அதை விற்கிறார்கள் என்பதைப் பொறுத்தே லாப நஷ்டங்கள் அமையும்.

இப்படி பணத்தைக் கொள்முதல் செய்யும் விலைக்கும் விற்பனை விலைக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தையே (NII – Net Interest Income) நிகர வட்டி வருவாய் என்பார்கள். உதாரணமாக, ஒரு வங்கி டெபாசிட்க்கு ஆண்டுக்கு 8% சராசரியாக வட்டி தருவதாக வைத்துக்கொள்வோம்; வங்கிக் கடன் மீதான வட்டி 10% எனில், (10%-8%=2%) நிகர வட்டி வருவாய் 2% எனச் சொல்லலாம். இதையே 'நெட் இன்ட்ரெஸ்ட் ஸ்ப்ரெட்’ எனவும் சொல்வார்கள்.

இதில், 3 விதமான சூழல் நிலவலாம்:

1. (டெபாசிட்கள் மீதான) அடக்க வட்டி குறைவு; கடன் மீதான வட்டியும் குறைவு.

2. (டெபாசிட்கள் மீதான) அடக்க வட்டி அதிகம்; கடன் மீதான வட்டியும் அதிகம்.

3. (டெபாசிட்கள் மீதான) அடக்க வட்டி குறைவு; ஆனால், கடன் மீதான வட்டி அதிகம்.

குறைந்த வட்டிக்கு வாங்கி குறைந்த வட்டிக்குக் கடன் கொடுப்பதும், அதிக வட்டிக்கு வாங்கி அதிக வட்டிக்குக் கடன் கொடுப்பதும் ஒன்றேதான். எனவே, மேலே சொன்ன முதல் இரண்டு சூழலிலும் நிகர வட்டி வருவாய் குறைவாகத்தான் இருக்கும். மூன்றாவதாகச் சொன்ன சூழல்தான் வங்கிகள் அதிக வருவாய் ஈட்ட உதவும்.

இனி 'நிம்’(NIM) என சுருக்கமாக அழைக்கப்படும்  Net Interest Margin என்பதைப் பற்றி பார்ப்போம்; வட்டி வருவாயை ஈட்டித் தரவேண்டிய சொத்துக்களின் மதிப்போடு நிகர வட்டி வருவாயை ஒப்பிட்டுக் கணக்கிடுவது 'நிம்’.

செக்டார் அனாலிசிஸ்!

நம்முடைய ரூ.100 டெபாசிட்க்கு வங்கிகள் நமக்குக் கொடுக்கும் ஆண்டு வட்டி ரூ.8 எனில், அதே ரூ.100-ஐ கடன் கொடுப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10-ஐ அவ்வங்கி ஈட்டுகிறதென்றால், அவ்வங்கியின் 'நிம்’ 2% (108/100). வங்கிகளைப் பொறுத்தவரையில், இந்த 'நிம்’ அதிகமாக இருந்தால் நல்லது என்பது முதல் விதி.

கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதா? இரண்டும் ஒன்று போல இருந்தாலும் வேறு வேறு என்பதைத் திரும்ப ஒருமுறை படித்துப் பார்த்தால் புரியும்.  

நிகர வட்டி வருவாய் என்பது மிகச் சிம்பிளான கணக்கு. சொத்துக் கணக்கெல்லாம் பார்ப்பதில்லை. வசூலிக்கும் வட்டிக்கும் கொடுக்கும் வட்டிக்கும் சதவிகிதக் கணக்கில் உள்ள வித்தியாசம், அவ்வளவுதான். அந்த சொத்து வருவாய் ஈட்டுகிறதா, இல்லையா என்பதுபற்றியெல்லாம் கவலையில்லை.

ஆனால், 'நிம்’ கொஞ்சம் வேறு. வட்டி வருவாயை ஈட்டித் தரவேண்டிய சொத்துக்களை எடுத்துக்கொண்டு, அதன் மீதான நிகர வட்டி வருவாயைக் கணக்கிடுகிறது 'நிம்’. இதில் நாம் முக்கியமாகப் பார்க்கவேண்டிய விஷயம், என்.பி.ஏ. (Non Performing Assets) என்று சொல்லப் படக்கூடிய, எந்தவித வருவாயையும் ஈட்டித் தராத வாராக் கடன் அதிகமாக அதிகமாக, 'நிம்’ குறையும். வேறுவிதமாகச் சொன்னால், 'நிம்’ அதிகமாக இருக்க வேண்டுமென்றால், வாராக் கடன் குறைவாக இருக்க வேண்டும். எப்படி?

மேலே சொன்ன கணக்கையே மறுபடியும் வேறு மாதிரியாகப் பார்க்கலாம்.

வங்கிக் கடன் கொடுத்திருக்கும் ரூ.100-ல் ரூ.10 வாராக் கடன் என்று வைத்துக்கொள்வோம். அதன் (ரூ.10-ன்) மீது எந்த வருவாயும் வராதல்லவா? மீதம் இருக்கும் ரூ.90-ன் மீது மட்டும் 10% வட்டி வருவாயாக வங்கிக்கு ரூ.9 மட்டும் கிடைக்கும். ஆனால், வங்கி தனது டெபாசிட்தாரர்களுக்கு ரூ.100/-க்கும் 8% வட்டியாக

ரூ.8 தர வேண்டுமல்லவா?  இப்போது,

நிம் 1 % மட்டுமே (9  8 / 100 ). முன்னர்  சொன்னபடி, 2% அல்ல.

ஒருவேளை, என்.பி.ஏ. 30% அல்லது ரூ.30 என வைத்துக்கொண்டால், அதன் மீது எந்த வருவாயும் வராது; மீதமிருக்கும் ரூ.70-ன் மீது 10% வட்டியாக ரூ.7-ஆக மட்டுமே வங்கிக்குக் கிடைக்கும். அதேசமயம், ரூ.100 டெபாசிட்டின் மீது வங்கி டெபாசிட்டர்களுக்குத் தர  வேண்டிய 8 % வட்டியோ அதே ரூ.8 இப்போது 'நிம்’  1% ( 7  8 / 100 ) எனவே, அது மோசமான சூழல். எனவே, 'நிம்’ அதிகமாக உள்ள வங்கிப் பங்குகள், முதலீடு செய்ய உகந்தவை.

தனியார் துறையில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கிக்குத்தான் இதில் முதலிடம். இவ்வங்கியின் 'நிம்’ சுமார் 4%. பொதுத் துறை வங்கிகளில் சுமார் 3% 'நிம்’முடன் ஸ்டேட் பேங்கிற்குத்தான் முதலிடம்; பஞ்சாப் நேஷனல் வங்கியும் மிக அருகில். ஆக்ஸிஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகளின் 'நிம்’மும் 3% ஒட்டி இருப்பவை. வட்டி விகிதங்களைப் பொறுத்து, இவை அவ்வப்போது மாறுவதும் சகஜம்.  

'நிம்’ அதிகமாக இருந்தால் நமக்கு நிம்மதி எனும் முதல் விதியை இந்த வாரம் கற்றுக் கொண்டோம். அடுத்து பார்க்க வேண்டிய முக்கியமான விஷயத்தை அடுத்த இதழில் சொல்கிறேன்.  

(அலசுவோம்)