பிரீமியம் ஸ்டோரி
மெட்டல் & ஆயில்!

இயற்கை எரிவாயு!

மெட்டல் & ஆயில்!

கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவுக்கு இயற்கை எரிவாயுவின் விலை குறைந்து வர்த்தகமானது. இதற்கு காரணம், அமெரிக்க இயற்கை எரிவாயு இன்வென்ட்டரி அதிகரித்ததே. எதிர்பார்த்ததைவிட இரண்டு பில்லியன் கியூபிக் ஃபீட் அதிகரித்து 3.806 டிரில்லியன் கியூபிக் ஃபீட்டாக இயற்கை எரிவாயு இன்வென்ட்டரி இருப்பதாக அமெரிக்க எனர்ஜி இன்ஃபர்மேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது. தேவை குறைந்துள்ளதும், இன்வென்ட்டரி அதிகரித்ததாலும் வரும் வாரத்திலும் இயற்கை எரிவாயு விலை குறைந்தே வர்த்தகமாகும். எம்.சி.எக்ஸ். சந்தையில் ஜனவரி கான்ட்ராக்ட் ஒரு எம்.எம்.பி.டி.யூ. இயற்கை எரிவாயு 184 ரூபாய்க்கு வெள்ளிக்கிழமை மாலை வர்த்தகமானது.

காப்பர்!

மெட்டல் & ஆயில்!

சென்ற வாரத்தில் காப்பர் மற்றும் மற்ற உலோகங்கள் விலை குறைந்து வர்த்தகமானது.  வேலை யில்லா நபர்களின் எண்ணிக்கை குறைந்தால் நிதிச் சலுகை களை அமெரிக்கா நிறுத்திவிடும் என்பதால் அடிப்படை உலோகங்களின் விலை குறைந்துள்ளது. பெரு நாட்டில் தெற்கு பகுதியில் காப்பர் எடுக்கும் யூனிட்களில் டிசம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் பணியாளர்கள் 15 சதவிகித சம்பள உயர்வு மற்றும் வேலை செய்யும் இடம் நன்றாக இருக்க வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அங்குள்ள தொழிலாளர் யூனியன் கோரிக்கை வைத்துள்ளது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக காப்பரின் விலை குறைந்துள்ளது. எல்.எம்.இ. காப்பர் இன்வென்ட்டரி

1.08 சதவிகிதம் அதிகரித்து, 2,72,800 டன்னாக உள்ளது. உலகப் பொருளாதாரச் சூழ்நிலைகள் காரணமாக வரும் வாரத்திலும் காப்பரின் விலை குறைந்தே வர்த்தகமாகும். எம்.சி.எக்ஸ். சந்தையில் காப்பர் ஒரு கிலோ ஜனவரி கான்ட்ராக்ட்

453 ரூபாய்க்கு வெள்ளிக்கிழமை மாலை வர்த்தகமானது.

தங்கம்!

மெட்டல் & ஆயில்!

சென்ற வாரத்தில் சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் 1,700 டாலருக்குக் கீழே போனது. அமெரிக்க டாலரின் மதிப்பு மற்ற ஆறு முக்கிய கரன்சி களைவிட சென்ற வார இறுதியில் அதிகரித்துள்ளது. டாலரின் மதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்வதைத் தவிர்த்து டாலரில் முதலீடு செய்வதை அதிகரித்தனர் முதலீட்டாளர்கள்.

ஐரோப்பிய மத்திய வங்கிக்கு கூடுதல் அதிகாரங்களைக் கொடுக்க ஐரோப்பிய நிதி அமைச்சர்கள் ஒப்புதல் வழங்கி யுள்ளனர். அதாவது, வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்வது, வங்கிகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட அதிகாரங்களை வழங்க முடிவு செய்துள்ளனர். மேலும், ஐரோப்பிய மண்டலத்தில் பிரச்னைகளில் இருக்கும் வங்கிகளுக்கு நேரடியாக நிவாரண நிதி கிடைக்கவும் இந்த ஒப்புதல் வழி வகுக்கும்.

இந்த காரணங்களால் டாலரின் மதிப்பு அதிகரித்தது. எனினும், இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது எம்.சி.எக்ஸ். சந்தையில் தங்கத்தின் விலையில் பிரதிபலித்தது. மேலும், உலகெங்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்திருப்பதை பிராஃபிட் புக்கிங் செய்து வருகின்றனர்.

டிசம்பர் மாத இறுதியில் தங்கத்தின் விலை குறையும் என்பதால் வர்த்தகர்கள் கவனத்துடன் வர்த்தகம் செய்யவும். எம்.சி.எக்ஸ். சந்தையில் தங்கம் பத்து கிராம் ஜனவரி கான்ட்ராக்ட் 31,195 ரூபாய்க்கு வெள்ளிக்கிழமை மாலை வர்த்தகமானது.

வெள்ளி!

மெட்டல் & ஆயில்!

தங்கத்தின் விலை குறைவு மற்றும் அடிப்படை உலோகங்கள் விலை குறைவு உள்ளிட்ட காரணங்களால் வெள்ளியின் விலை குறைந்தது. மேலும், முதலீட்டாளர்கள் பிராஃபிட் புக்கிங் செய்த காரணத்தாலும் வெள்ளியின் விலை சென்ற வார இறுதியில் ஒரேநாளில் 4 சதவிகிதம் குறைந்தது. டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதும் வர்த்தகர்களை வெள்ளியில் முதலீடு செய்யாமல் தடுக்கிறது.

மேற்கத்திய நாடுகளில் பண்டிகை காலம் மற்றும் விடுமுறை கொண்டாட்டங்கள் களைகட்டுவதால் தங்களது முதலீட்டை விற்று பிராஃபிட் புக்கிங் செய்து வருகிறார்கள் முதலீட்டாளர்கள். எனவே, வரும் வாரத்திலும் வெள்ளியின் விலை குறைந்தே வர்த்தகமாகும். எம்.சி.எக்ஸ். சந்தையில் ஒரு கிலோ வெள்ளி 2013 மார்ச் மாத கான்ட்ராக்ட் 61,771 ரூபாய்க்கு வெள்ளிக்கிழமை மாலை வர்த்தகமானது.

மெட்டல் & ஆயில்!

கச்சா எண்ணெய்!

மெட்டல் & ஆயில்!

அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி எடுக்கவிருக்கும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கை காரணமாக கச்சா எண்ணெய் விலை சென்ற வாரத்தில் குறைந்து வர்த்தகமானது. எனினும், சீனாவின் தயாரிப்பு குறித்த புள்ளிவிவரங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகரித்ததால் கச்சா எண்ணெய் தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் 'நிமிக்ஸ்’ கச்சா எண்ணெய் 0.9 சதவிகிதம் சென்ற வார இறுதியில் அதிகரித்தது.

மேலும், அமெரிக்காவில் பொருளாதார நடவடிக்கைகளை பொறுத்து வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலை இருக்கும். எம்.சி.எக்ஸ். சந்தையில் கச்சா எண்ணெய் ஜனவரி கான்ட்ராக்ட் ஒரு பேரல் 4,772 ரூபாய்க்கு வர்த்தகமானது.

- பானுமதி அருணாசலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு