Published:Updated:

சீனியர்ஸ் Vs ஜூனியர்ஸ்!

ஈகோவை ஒழித்தால் மோதல் வராது!நாணயம் ஜாப்

பிரீமியம் ஸ்டோரி

சீனியர்களுக்கும் ஜூனியர்களுக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் ஈகோவே வராது.

இன்றைய கார்ப்பரேட் அலுவலகங்களில் சீனியர்களுக்கும் ஜூனியர்களுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வருவது சகஜமாகி விட்டது. 'நீ சின்னப்பயல்... உனக்கென்ன தெரியும்’ என்று சீனியர்களும், 'நான் எல்லாம் படிச்சவன். நான் சொல்வதைக் கேள்’ என்று ஜூனியர்களும் வாதம் செய்ய, ஒவ்வொரு அலுவலகத்திலும் தினமும் மகாபாரதப் போர்தான்.

''ஈகோ பார்க்காமல் வேலை பார்த்தால், இந்த மோதலை எளிதில் தவிர்க்கலாம்.'' என்கிறார் போலாரிஸ் நிறுவனத்தின் ஹெச்.ஆர். பிரிவின் மேலாளர் பாலமுருகன். அவர் சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா?

சீனியர்ஸ் Vs ஜூனியர்ஸ்!

நடைமுறைப் பிரச்னைகள்!

''பொதுவாக, அலுவலக ஊழியர்களை  மூன்று வகைப்படுத்தலாம். முப்பது வயதுக்கும் கீழே உள்ள 'ஜெனரேஷன்- எக்ஸ்’ என்பவர்கள்; இருபத்தைந்து வயதுக்கு கீழே உள்ள 'ஜெனரேஷன் - ஒய்’ என்பவர்கள்; முப்பது வயதைத் தாண்டிய 'பேபி பூமர்ஸ்’ என்பவர்கள். இதில் முதலிரண்டு பிரிவினருக்கு இடையே எப்போதும் ஈகோ மோதல் வருவதில்லை. ஆனால், இவர்களுக்கும் பேபி பூமர்ஸ்களுக்கும் இடையேதான் எப்போதும் பிரச்னை.  

ஒரு நிறுவனத்தில் யார் அதிக ஆற்றலுடனும், எளிதில் வேலையைச் செய்து முடிக்கும்

சீனியர்ஸ் Vs ஜூனியர்ஸ்!

திறமையுடனும் இருக்கிறார்களோ, அவர்களே தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்படுவார்கள். அப்படி இருக்கும்போது வயதைக் காரணம் காட்டி சீனியர்கள் பிரச்னை பண்ணக்கூடாது.  

முப்பது வயதுக்கு உட்பட்ட வர்கள் உயர் பதவியில் இருக்கும் போது எந்த வேலையானாலும் துணிந்து செய்ய முன்வருவார்கள். அவர்கள் கணக்குபடி, எப்போதுமே ரிஸ்க் எடுக்கத் தயங்கமாட்டார்கள். ரிஸ்க் எடுக்க முடிவெடுத்தப்பிறகு அவர்கள் கடுமையாக உழைக்கவும் தயங்க மாட்டார்கள். இதெல்லாம் அவர்களின் ப்ளஸ் பாயின்ட். ஆனால், சீனியர்கள் தங்கள் நீண்ட, நெடிய அனுபவம் காரணமாக நன்கு யோசித்துதான் எந்த காரியத் தையும் செய்வார்கள். இது அவர்களுடைய மைனஸ் என்று சொல்வது சரியாக இருக்காது என்றாலும், ஜூனியர்களால் இந்த நிதானமான செயல்பாட்டை எளிதில் ஜீரணிக்க முடியாது. இதனாலேயே சீனியர் களுக்கும் ஜூனியர்களுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுவிடுகிறது.  

ஜூனியர்கள் தற்போதைய தொழில்நுட்பங் களை பயன்படுத்துவதில் கில்லாடிகளாக இருப்பார்கள். ஆனால், முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு, திறமையாகப் பயன் படுத்துவதில் கொஞ்சம் மெதுவாகவே செயல் படுவார்கள். இந்த விஷயத்திலும் ஜூனியர்கள் எரிச்சலடைய வாய்ப்புண்டு.

ஜெனரேஷன் எக்ஸ் அண்ட் ஒய் பிரிவைச் சேர்ந்தவர்கள் திருமணமாகாதவர்களாகக்கூட இருக்கலாம். குடும்பம் பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை என்பதால், அவர்கள் நூறு சதவிகித கவனத்தை வேலையில்காட்ட முடியும். ஆனால், முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலும் திருமணம் ஆனவர்களாக இருப் பதால், குடும்பம் தொடர்பான கவலைகள் அவர்களின் கவனத்தைச் சிதறடிக்க வாய்ப்புண்டு. இதனாலும் பிரச்னைகள் உருவாகலாம்.

தவிர, ஜெனரேஷன் எக்ஸ் அண்ட் ஒய் பிரிவைச் சேர்ந்தவர் கள் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் பழகுவார்கள். அதேபோல, வேலையையும் வாங்குவார்கள். காரணம், அவர்கள் வளர்ந்த சூழ்நிலை அப்படி. ஆனால், பேபி பூமர்ஸ் அப்படி இல்லை. அவர்கள் ஆண், பெண் பாகுபாடு பார்ப்பார்கள். வேலையை விரைவாகச் செய்துமுடிக்க, இது ஒரு தடையாக இருக்கும்.

சீனியர்களிடம் இருக்கும் இதுபோன்ற பிரச்னைகளை குறைகள் என்று சொல்ல முடியாது. அது அவர்களின் மனநிலை. இந்த மனநிலையுடன் தன்னை வேலைச் சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளாதவர்களை ஒரு நிறுவனம் அனுபவசாலியாக ஏற்றுக்கொள்ளுமே ஒழிய, உயர்பதவி தந்து கௌரவப்படுத்தாது.

எளிய தீர்வு!

முதலில், சீனியர், ஜூனியர் என்கிற பிரிவினையை ஊழியர்கள் தங்கள் மனதி லிருந்து ஒழிக்கவேண்டும். இருவரும் திறந்த மனப்பான்மையுடன் பேசிப்பழக வேண்டும். ஒருவரிடம் குறை இருப்பின் அதை அடுத்தவர்களிடம் சொல்லி முறையிடாமல் சம்பந்தப்பட்டவர்களிடமே சொல்வதன் மூலம் பிரச்னைக்கு முடிவுகாண நினைப்பது நல்லது.

தனக்கு கீழ் பணி செய்யும் சீனியர்களால் வேலையில் காலதாமதம் ஏற்பட்டால் ஜூனியர்கள் கடுமையாக நடந்துகொள்ளக் கூடாது. அப்படியே கடுமையாக நடந்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்பட்சத்தில் அதற்கான விளக்கத்தை அடுத்த சில மணி நேரத்திலோ அல்லது அந்த நாளிலோ சொல்லி, நிலைமையைச் சமாளிக்க வேண்டும். இதேதான் சீனியர்களுக்கும். எந்த காரணத்தினால் ஒரு வேலையைச் செய்ய முடியாது என்பதைப் பொறுமையாகச் சொல்லி புரிய வைக்க வேண்டும்.

'நான் உயரதிகாரி. எல்லாவற்றையும் படித்துவிட்டு வந்தவன். நான் சொல்கிறபடி செய்’ என்கிற ரீதியில் ஜூனியர்கள் நடந்துகொள்ளக்கூடாது. வீட்டில் நாம் சொல்வதைப் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும்போது, அவர்களுக்குப் பொறுமையாக விளக்குவதுபோல, சீனியர்களிடம் பொறுமையாக விளக்கிச் சொன்னால், எந்த காரியத்தையும் மறுக்காமல் செய்வார்கள். அதேபோல, சீனியர்களும் 'நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது’ என்கிற ரீதியில் நடக்காமல், சாதக, பாதகங்களை தங்களின் அனுபவங்களில் இருந்து எடுத்துச் சொல்கிற பக்குவம் வேண்டும். வயது வித்தியாசம் என்பது தற்செயலான ஒரு நிகழ்வுதான். அதை ஒதுக்கி வைத்துவிட்டு, ஜூனியராக இருந்தாலும் அவர் சொல்வது சரியாக இருக்குமா, இருக்காதா என்று மட்டும் பார்த்தால், ஈகோவுக்கு வேலையே இருக்காது.

ஆக மொத்தத்தில், விட்டுக்கொடுத்துச் செல்லும் மனப்பான்மை இரு தரப்பினருக்கும் இருக்கும்பட்சத்தில் ஈகோ மோதலுக்கே இடமிருக்காது'' என்று உறுதியாகச் சொல்லி முடித்தார் பாலமுருகன்.

- செ.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு