Published:Updated:

பி.எஃப். பணம்... பரவும் பயம்.. இதுதான் நிஜம்!

அறிவிப்பு

பிரீமியம் ஸ்டோரி
பி.எஃப். பணம்... பரவும் பயம்.. இதுதான் நிஜம்!

பி.எஃப். தொகையை இனி மொத்த சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப் போகிறார்கள். இதனால் அலுவலக ஊழியர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் தொகை குறையும் என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகி அனைவரையும் பயமுறுத்தி இருக்கிறது. ஆனால், உண்மை நிலை என்ன? ஏன் இப்படி ஓர் அறிவிப்பு? என்று கேட்டு சென்னையில் இருக்கும் சென்னை மண்டல பி.எஃப். அலுவலகத்திற்குப் போனோம். தெளிவான விளக்கம் நமக்குக் கிடைத்தது.

சென்னை உயர்நீதிமன்றமும், மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றமும் இருவேறு வழக்கு களில் ஊழியர்களின் மொத்தச் சம்பளத்திற்கு பிராவிடெண்ட் ஃபண்ட் பிடித்தம் செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கி உள்ளன. இதைத் தொடர்ந்து பிராவிடெண்ட் ஃபண்ட் அமைப்பு கடந்த நவம்பர் 30-ம் தேதி ஒரு சுற்றறிக்கையை இந்தியா முழுவதும் உள்ள  பி.எஃப். அலுவலகங்களுக்கு அனுப்பி உள்ளது. இந்த சுற்றறிக்கை பற்றி சென்னை மண்டல பி.எஃப். கமிஷனர் கே.வி.சர்வேஸ்வரன் நம்மிடம் விளக்கினார்.

''நிறுவனங்கள், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் (டி.ஏ.) பிராவிடெண்ட் ஃபண்டை பிடித்தம் செய்கின்றன. ஒருவர் வாங்கும் மொத்த சம்பளத்தில் பாதிக்குக் குறைவாக மட்டுமே அடிப்படை சம்பளம் இருக்கும். மீதிச் சம்பளம் பல அலவன்ஸ்களாக (கல்வி, உணவு, மருத்துவம், ஊக்கத் தொகை, போக்குவரத்து செலவு, சுற்றுலாச் செலவு, கமிஷன்)  தனித் தனியாக இருக்கும். இது அத்தனையும் பி.எஃப். சட்டம் 2(பி) பிரிவின் கீழ் சம்பளமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில், அடிப்படைச் சம்பளம், டி.ஏ., இதர அலவன்ஸ், சலுகைகள் எல்லாம் சேர்ந்த தொகைக்கு பி.எஃப். பிடிக்கவேண்டும்.  

சம்பளத் தொகையில் 12% பி.எஃப். இன்னொரு 12% நிறுவனம் உங்கள் கணக்கில் செலுத்தும். மொத்தம் 24 சதவிகிதம் சேமிப்பாக இருக்கும். பிடித்தம் செய்யப்படும் 24 சதவிகிதத்தில் 8.33 சதவிகிதம் குடும்ப பென்ஷன் திட்டத்திலும், மீதி 15.67% உங்களின் கணக்கிலும் வரவு வைக்கப் படும். அதேநேரத்தில், ஒருவரின் சம்பளத்தில் 6,500 ரூபாய் என உச்ச வரம்பு (சீலிங்) நிர்ணயித்துக்கொண்டு நிறுவனங்கள் பி.எஃப். பிடித்தால் போதும் என்பது அரசு விதி.

உங்களின் சம்பளம் 20,000 என்றால் அதில் 6,500 ரூபாய்க்கு மட்டுமே பி.எஃப். பிடிக்கப்படும். ஆக, உங்களின் சம்பளத்தில் 780 ரூபாயும், நிறுவனம் 780 ரூபாயும் சேர்த்து பி.எஃப். கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால், நிறுவனங்கள் நினைத்தால் பி.எஃப். தொகையை அதிகரிக்கலாம்.

சில நிறுவனங்கள் மொத்தச் சம்பளம் 10,000 ரூபாய் என்றாலும் அடிப்படைச் சம்பளத்தை 3,000 வைத்துவிட்டு, மீதிச் சம்பளத்தை சலுகைகளாகத் தந்துவிடுகின்றன. அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி என்பது 3,000-ஆக இருக்கும். உங்களின் 12 சதவிகிதமும், நிறுவனத்தின் 12 சத விகிதமும் சேர்த்து 720 ரூபாய்தான் கிடைக்கும். அரசு 6,500 ரூபாய்க்கு கட்டாயம் பி.எஃப். பிடிக்க வேண்டும் என கூறியுள்ளது. இதனால் 1,560 ரூபாய் கிடைக்கும்.

இப்படி செய்யும்போது ஊழியர்களின் கணக்கில் அதிகமான பணம் வரவு வைக்கப்படும். இதனால் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் மாதச் சம்பளத்தின் அளவு சற்று குறைந்தாலும் ஊழியர்களின் முதுமைக் காலத்தில் கிடைக்கும் பணத்தின் அளவு அதிகமாகும். இப்படி கிடைக்கும் பணத்திற்கான வட்டிக்கு வருமான வரியும் கிடையாது. அதோடு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் ஊழியர்களின் குடும்பத்திற்கு பென்ஷன் கிடைக்கும் வசதி உள்ளது.

6,500 ரூபாய்க்கு மேல் சம்பளம் இருந்தும், அதற்கு குறைவாக பி.எஃப். பிடித்தம் செய்யும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியும். முதல்கட்டமாக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவோம். அடுத்து, அந்த நிறுவனம் நடத்துபவரை நேரில் அழைத்துப் பேசுவோம். நிறுவனம் நஷ்டத்தில் இருக்கிறது என்று காரணம் சொல்ல முடியாது. அப்படி சொன்னாலும் அதை பி.எஃப். நிறுவனம் ஏற்றுக்கொள்ளாது. பி.எஃப். கணக்கில் இருக்கும் பணத்தை எந்தவிதமான கடனுக்கும் ஈடுகட்ட முடியாது. அதாவது, உங்களுக்குக் கடன் கொடுத்தவர் நீதிமன்றத்திற்குச் சென்று, பி.எஃப். பணத்திலிருந்து கடனை திரும்பத் தரச் சொல்லுங்கள் என்றால் அதை பி.எஃப். அலுவலகம் ஏற்காது'' என்றார்.

2001-ம் ஆண்டுதான் அதிகபட்ச சம்பளம் 6,500 என மத்திய அரசு மாற்றி அமைத்தது. தற்போதைய நிலையில் 6,500 மாதச் சம்பளம் வாங்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே, இந்த அதிகபட்ச சம்பளத்தை மாற்றி அமைத்தால்தான் பல ஊழியர்கள் பயனடைய முடியும். காலத்திற்கு ஏற்ப வரைமுறைகளை அரசாங்கம் மாற்றினால்தான் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும்.  

பி.எஃப். பணம்... பரவும் பயம்.. இதுதான் நிஜம்!

- இரா.ரூபாவதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு