Published:Updated:

வேல்யூ இன்வெஸ்டிங்

தகுதியைத் தெளிவுப்படுத்தும் புதிய அளவுகோல்கள்!டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

சென்ற இரண்டு வாரங்களிலும் பெஞ்சமின் கிரஹாம் சொன்ன வேல்யூ ஸ்டாக்குகளுக்கான அளவீடுகளைப் பற்றிப் பார்த்தோம். இவர் சொன்ன சித்தாந்தங்களை அடிப்படையாகக்கொண்டு பல வெற்றிகரமான வேல்யூ இன்வெஸ்டர்களும், ஃபண்ட் மேனேஜர்களும் முதலீடுகளைச் செய்ய ஆரம்பித்தனர். வேல்யூ இன்வெஸ்டிங் பற்றி எவ்வளவு பேசினாலும், முக்கியமாக 'இன்ட்ரின்சிக் வேல்யூ’வைப் (உள்ளார்ந்த மதிப்பு) பாருங்கள் என்பதைத்தான்.

 ஒரு கம்பெனியின் 'இன்ட்ரின்சிக் வேல்யூ’ என்றால் என்ன? அதை எப்படி கண்டுபிடிப்பது? இந்த கேள்விக்கு உலகப் புகழ் வேல்யூ இன்வெஸ்டர் வாரன் பஃபெட் பதில் சொல்கிறார்...

ஒரு கம்பெனியில் இருந்து இனிவரும் காலத்தில் வெளியில் எடுக்கக்கூடிய பணத்தின் டிஸ்கவுன்ட் செய்யப்பட்ட இன்றைய மதிப்பு என்பதே இன்ட்ரின்சிக் வேல்யூ என்பதற்கு பஃபெட் சொல்லும்  விளக்கம். இதற்கு, அந்தத் தொழிலில் இருந்து எதிர்வரும் காலத்தில் வரும் லாபம் எவ்வளவு என்பதைக் கணிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகின்றது. மிகவும் நல்ல கம்பெனிகளுக்குக்கூட எதிர்காலத்தில் எப்படி வியாபாரமும் வருமானமும் இருக்கும் என்பதைக் கணக்கீடு செய்வது மிக சிரமமான விஷயம்தான். அதுவும் அதிரடி வேகத்தில் செல்லும் டெக்னாலஜி மற்றும் வியாபார உலகத்தில் இது சாமான்யர்களுக்கு முற்றிலும் இயலாதக் காரியம் என்றே சொல்லலாம். அப்படியிருக்கும்போது வேல்யூ இன்வெஸ்டிங்கிற்கான பங்குகளை தேர்ந்தெடுப்பது எப்படி?

வேல்யூ இன்வெஸ்டிங்

அதற்குத்தான் கிரஹாம் சொன்ன அளவீடுகள் உதவுகின்றன. வேல்யூ இன்வெஸ்டர்களின் சித்தாந்தமெல்லாம் அடிப்படையில் கிரஹாமுடைய சித்தாந்தங்களையே கொண்டிருந்தாலும் நாளடைவில் சந்தை, பொருளாதாரம் மற்றும் தொழில் மாறுதலுக்கேற்ப பல்வேறுவிதமான மாற்றங்களைத் தங்களுடையச் சூழலுக்கேற்றவாறு அவர்கள் கொண்டுவந்தார்கள். அவற்றில் சிலவற்றை இப்போது பார்ப்போம்.

அடிப்படையில் கிரஹாமின் அளவுகோல்களை வைத்துக்கொண்டு அதையும் தாண்டி புதிய பலதர அளவீடுகளைக் கொண்டுவந்து ஒரு பங்கு வேல்யூ இன்வெஸ்டிங்கிற்குத் தகுதியானதுதானா என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்வதில் பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் அதீத ஆர்வம் காட்டினர். உதாரணத்திற்கு, சிலவற்றைப் பார்ப்போம். கடந்த ஐந்து வருடத்தில் நஷ்டத்தைச் சந்தித்திருக்கக்கூடாது, கடன் கட்டாயமாக ஷேர் கேப்பிட்டலின் அளவைவிட குறைவாக இருக்கவேண்டும், சந்தையில் அந்தப் பங்கின் விலை அதன் புத்தக மதிப்பைவிடக் குறைவாக இருக்கவேண்டும் என்பதுபோன்ற கண்டிஷன்கள். கம்பெனியின் ஏர்னிங்க்ஸ் தற்போதைய நீண்டகால கடன் பத்திரத்திற்குக் கிடைக்கும் வட்டியைவிட இரண்டு மடங்காக இருக்கவேண்டும் என்பது மற்றொன்று. இப்படி சில புதிய அல்லது சிறிது மாற்றப்பட்ட அளவுகோல்கள் இன்றைக்கு நடைமுறையில் இருக்கின்றது.

எத்தனை வேல்யூ இன்வெஸ்டர்கள் வந்தாலும் சரி, எத்தனை விதமான கண்டிஷன்களைச் சேர்த்தாலும் சரி, அத்தனையும் ஒரே ஒரு அடிப்படையைக் கொண்டதாகத்தான் இருந்துவந்துள்ளது. ஒரு தொழிலில் முதலீடு செய்யும்போது அதில் வரும் வருமானம் எப்படிப்பட்டது என்று பார்க்கின்றோம். உதாரணத்திற்கு, பேங்க் வட்டியைவிட அதிகம் வருமா என்று பார்ப்போம். சாதாரணமாக பேங்க் டெபாசிட்கள் ஐந்து வருடம் தாண்டிய காலகட்டத்துக்கு பெற்றுக்கொள்ளப்படுவதில்லை. எனவே, இருபது வருட பாண்டுகளின் வட்டியுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு எடுத்துக்கொள்கிறோம். ஏனென்றால், தொழிலில் முதலீடு என்பது நீண்டகாலத்திற்குச் செய்யப்படுவது. நீண்டகால அளவீட்டில் வெற்றிகரமாகச் செய்யப்படும் தொழில்தான் மிகச் சிறந்த பலனைத் தரும்.  

உதாரணத்திற்கு, கல்லூரிப் படிப்பை முடித்த இருபத்தியோரு வயதாகும் ஒரு மாணவன் ஒருவன் வேலைக்குப் போக நினைக்காமல் தொழிலதிபராவோம் என்று நினைத்து ஒரு தொழிலை ஆரம்பிக்க நினைக்கின்றான். எத்தனை நாட்களுக்கு அந்தத் தொழிலைச் செய்ய நினைப்பான்? அவனுடைய வாழ்நாள் முழுமைக்கும் தானே! அப்படி வாழ்நாள் முழுவதற்கும் செய்வதற்கு தகுதியான தொழிலைத் தேர்ந்தெடுக்கும்போது பேங்க் வட்டியை  மட்டுமே ரிட்டர்னாகத் தரும் தொழிலைத் தேர்ந்தெடுப்பாரா? இல்லவே இல்லையில்லையா? எதற்காக பேங்க் வட்டியின் அளவிற்கு லாபம் தரும் தொழிலை ரிஸ்க் எடுத்துச் செய்யவேண்டும்? அதற்குப் பதிலாக பேங்கிலேயே பணத்தைப் போட்டுவிட்டு அக்கடா என்று இருக்கலாமே!

வேல்யூ இன்வெஸ்டிங்

தொழில் செய்யும்போது குறைந்தபட்சம் பேங்க் வட்டியைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமான ரிட்டர்னைத் தரும் தொழிலில் இறங்குவதுதானே புத்திசாலித்தனம். அதே நிலைதான் முதலீட்டிலும். நீண்டகாலத்திற்கான சிறந்த முதலீடு இந்த கண்டிஷனை பூர்த்தி செய்வதாக நிச்சயமாக இருக்கவேண்டும். தொழிலைத் துவங்கினால் அதனை நேரடியாக நாமே நடத்துவோம். நஷ்டமேதும் வந்தால் அதற்கான காரணகாரியங்கள் நேரடியாக நமக்குத் தெரியும். ஆனால், பங்கு முதலீட்டில் தொழில் நடத்தும் பொறுப்பை மற்றவர்களிடம் விட்டுவிடுகின்றோம். அப்படி விட்டுவிடும்போது தொழிலில் நஷ்டம் வந்தால் அதற்கான உண்மைக் காரணம் என்ன என்று தெரிந்துகொள்ளவும், எந்தவிதமான சரிசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என்பதையும் தெரிந்துகொள்ள சற்று நாளாகும். அதற்குள் சந்தையில் ஷேரின் விலை தாறுமாறாக இறங்கிவிட வாய்ப்புள்ளது. அதனாலேயே சந்தை முதலீட்டில் மிகவும் கவனமாக இருப்பது கட்டாயமாகின்றது.

எதிர்காலத்தில் லாப/நஷ்ட நிலைமை எப்படி இருக்கும் என்று கணிப்பது கடினம். அதனால் மிகவும் ஜாக்கிரதையாக முந்தைய வருடங்களின் செயல்பாட்டை அலசி ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டியிருக்கின்றது. கடந்த ஐந்து வருடங்களில் நஷ்டத்தைச் சந்தித்திருக்கக்கூடாது என்கிற கண்டின் போடப்படுவதும் அதனால்தான்.

ஷேரை வாங்கும்போது பொதுவாக நாம் நடந்துகொண்டிருக்கும் தொழிலில் கூட்டுச் சேர்க்கின்றோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். லாபம் சம்பாதிக்கும் திறனுக்கு அடுத்தபடியாகத் தொழிலின் பலம் எப்படி இருக்கின்றது என்பதில் கண் வைக்க வேண்டும். ஏனென்றால், என்னதான் கடந்த ஐந்து வருடத்தில் நன்றாகச் சம்பாதித்திருந்தாலும்

தொழில் ரீதியான நிலைமைகள் ஒட்டுமொத்தமாக எதிர்காலத்தில் மாறி லாபம் வராமல் தொழில் சற்று நொண்டியடித்தால் கம்பெனி அதைத் தாங்குமா? என்பதைக் கண்டறிய வேண்டும்.

கடனில்லாமல் இருந்தால் வருமானம் சற்று கூடக்குறைய வந்தாலும் பிரச்னை என்பது சற்றும் இருக்காது. எந்தக் கடனும் இல்லை எனில், சிறிதளவு நஷ்டத்தைக்கூட தாங்கிக் கொள்ளலாம். அதேசமயம், கடன் அளவுக்கு அதிகமாக இருந்தால் சிறிய அளவில் ஏற்படும் லாப மாற்றங்கள் கூட பெரிய அளவில் கம்பெனியைப் பாதித்துவிடும் வாய்ப்பு இருக்கின்றது. அதனால்தான் தொழிலில் போடப்பட்டிருக்கும் முதலீட்டிற்கும் வாங்கப் பட்டிருக்கும் கடனுக்கும் இடையேயுள்ள விகிதம் மிக முக்கியமானதாகின்றது.

அடுத்தது, ஒரு தொழிலை மதிப்பைவிட மிகக் குறைந்த விலையில் வாங்குவது. எப்போதுமே ஒரு பொருளை அதன் மதிப்பைவிடக் குறைவான விலையில் வாங்கிவிட்டோமென்றால் அந்தப் பொருளைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த மூன்றையும் சேர்த்து செய்யப்படும் முதலீடுதான் வேல்யூ இன்வெஸ்டிங்.

(முதலிடுவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு