பிரீமியம் ஸ்டோரி
##~##

ந்திய போலீஸ் வட்டாரத்தில், மும்பையின் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் ஆட்களை 'D' கம்பெனி என்று அழைப்பதுண்டு. அதேபோல், நைஜீரிய நாட்டு ஆட்களை 'N' கம்பெனி என்று தற்போது அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். நமது நாட்டில் தினப்படி நடக்கும் சைபர் க்ரைம், ஆன்-லைன் க்ரைம், கிரெடிட் கார்டு மோசடிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை இந்த நைஜீரிய நாட்டு கம்ப்யூட்டர் ஃபிராடுகள் சுவாகா செய்கிறார்கள். யார் இவர்கள்? எப்படி எங்கோ இருந்துகொண்டு நம் பையில் இருக்கும் பணத்தைக் கொக்கிப்போட்டுத் தூக்குகிறார்கள்?

 நைஜீரியாவில் எம்.சி.எஸ். பட்டம் படித்தவர்கள்தான் இந்த மோசடித் தொழிலுக்கு வருகிறார்கள். எம்.சி.எஸ். என்றால், தயவு செய்து மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்று நினைத்துவிடாதீர்கள். 'மாஸ்டர் ஆஃப் க்ரைம் சப்ஜெக்ட்' என்பதன் சுருக்கமே எம்.சி.எஸ். அங்குள்ள சைபர் க்ரைம் தாதாக்கள் க்ரைம் பயிற்சி கல்லூரி என்கிற பேனரில் ஃபீல்டு ட்ரையினிங், கம்ப்யூட்டர் ட்ரையினிங் சொல்லித் தருவதோடு, பயிற்சி முடித்தவர்களுக்கு உலக அளவில் சீக்ரெட் நெட்வொர்க் உருவாக்கியும் தருகிறார்களாம்.

நவீன செல்போன், லேப்-டாப், ஏ.டி.எம். கார்டு, போலியான இ-மெயில் ஐ.டி. இவைதான் 'N' கம்பெனி ஆட்களின் முதலீடு. நைஜீரியாவின் மேற்குப் பகுதியில் இருந்து இவர்கள் டூரிஸ்ட் விசா மூலம் இந்தியா வருகிறார்கள். குறிப்பிட்ட காலக்கெடு முடிந்தபிறகு, சட்டவிரோதமான முறையில் எங்காவது பதுங்கி க்ரைம்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களை 'நைஜீரியன் 420’ என்று போலீஸார் அழைக்கிறார்கள். நமது நாட்டில் பல்வேறு சிறைகளில் ஆயிரத்துக்கும் அதிகமான 'N' கம்பெனி ஆட்கள் சிறைக் கம்பிகளை  எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். சுமார் நாலாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இன்னும் பிடிபடாமலே டபாய்த்து வருகிறார்கள்.  

'N' கம்பெனி!

பல்க் எஸ்.எம்.எஸ்.!

இவர்கள் அதிகம் பயன்படுத்தும் ஆயுதமே 'பல்க் எஸ்.எம்.எஸ்.'தான். குறுக்கு வழியில் லட்சக்கணக்கான நபர்களின் செல்போன் நம்பர்களை வாங்கி, கவர்ச்சிகர எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி, கொக்கு மீனுக்காக காத்திருப்பதுபோல் காத்திருப்பார்கள். அவர்கள் எதிர்பார்த்தது மாதிரி லட்சத்தில் நூறுபேர் நிச்சயம் சிக்குவார்கள். அப்பாவியாக வந்து மாட்டியவர்களிடம்தான் இவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பிப்பார்கள்.

தங்கி இருக்கும் வாடகை வீட்டின் டெலிபோன் பில்லை காட்டி, வங்கியில் கணக்கு ஆரம்பிப்பார்கள். ஏ.டி.எம். கார்டு வாங்குவார்கள். கார்டு வாங்கிய கையோடு தங்களது அக்கவுன்டுக்குப் பணம் போடும் நல்லவர்களுக்கு மொட்டை அடித்துவிட்டு, பணத்தைச் சுருட்டிக்கொண்டு, வீட்டையும் காலி செய்துவிட்டு, எஸ்கேப் ஆகிவிடுவார்கள். பணம் போட்டு ஏமாந்தவர்கள் போலீஸுக்குப் போவதற்கு முன், இவர்கள் இன்னொரு மாநிலத்தில் இன்னொரு வாடகை வீட்டில், இன்னொரு வங்கிக் கணக்கை ஆரம்பிக்கும் வேலையைச் செய்துகொண்டிருப்பார்கள்.

'N' கம்பெனி!

ஏமாந்த பெண்மணி!

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம்... மத்திய குற்றப்பிரிவு பிராஞ்ச் வளாகம்... 32 வயது பெண்மணி ஒருவர் அலறியபடி ஓடிவந்தார். ''ஐயா.. 28 லட்சத்தை ஏமாத்திட்டாங்க. ஆன்-லைன்ல கட்டினேன். என் செல்போனில், 100 கோடி ரூபாய்க்கு லாட்டரி விழுந்திருப்பதாகச் சொல்லி ஆசை வார்த்தைப் பேசினார்கள். தவணை முறையில் முன்பணம் கட்டச் சொன்னார்கள். அதை நம்பினேன். வீடு அடகு... கணவருக்கு விஷயம் தெரியாது...'' என்று அழுதபடி சொல்ல, வங்கி மோசடி தடுப்பு பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் ஜான்ரோஸ் குறுக்கிட்டார்.

''கஸ்டம்ஸ்-ல் க்ளியரன்ஸ் செய்யவேண்டும்... தீவிரவாத எதிர்ப்புச் சான்றிதழ் பெறவேண்டும்.. ரிசர்வ் வங்கி சார்ஜ் கட்ட வேண்டும்... என்றெல்லாம் பணம் கேட்டிருப்பார்களே? 'நீங்களும் பணத்தை ஆன்லைனில் செலுத்தினீர்களா?...’ ஏம்மா... நாங்களும் பத்திரிகைகளும் எவ்வளவு எச்சரிக்கை செய்கிறோம்... கேட்க மாட்டேங் கிறீங்களே?'' என்று குரலை உயர்த்த, அந்தப் பெண்மணி தலை கவிழ்ந்துகொண்டார்.

''உங்களைப் போல ஏமாறுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகுது. பாதிப் பேருக்கு மேல பெண்கள்ங்கிறது அதிர்ச்சியான விஷயம். அவனுகளைப் பிடிப்பது அவ்வளவு சுலபமல்ல! பயங்கர நெட்வொர்க். இங்கே ஒருவன் போனில் ஏமாற்றுவான். அவர்கள் அக்கவுன்டில் நீங்கள் போடும் பணத்தை வேறு மாநிலத்திலோ, வெளிநாடுகளில் இருந்தோ இன்னொருவன் எடுத்துவிடுவான்'' என்று சொல்லி, மேலும் அதிர வைத்தார் ஜான்ரோஸ்.  

'N' கம்பெனி!

தெரிந்தே ஏமாறுவோர்கள்!

அவரே தொடர்ந்து சொல்லும்போது, ''உலக கோப்பை மொபைல் அதிர்ஷ்ட குலுக்கலில் பரிசு, மருத்துவ இன்ஷூரன்ஸ் கோடிக்கணக்கில் பணம், பங்கு மார்க்கெட்டில் முதலீடு லாபம், லாட்டரியில் பரிசு.. இதெல்லாம் சில ரகங்கள். 'வெளிநாட்டில் கோடீஸ்வரர் இறந்துவிட்டார். வாரிசு இல்லை. நீங்கள் உங்கள் விவரங்களை அனுப்புங்கள். 100 கோடி பணம் எங்கள் வங்கியில் இருக்கிறது. அதை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்' என்று செல்போன் எஸ்.எம்.எஸ். மூலமோ, இன்டர்நெட் மெயில் மூலமாகவோ முதலில் தகவல் அனுப்புகிறார்கள்.

கோடி ரூபாயைத் தருகிறேன் என்றவுடன் எல்லோரும் எளிதில் ஏமாந்துவிடுகிறார்கள். ஆனால், ஏமாந்தபிறகு எங்களிடம் வந்து பணத்தை மீட்டுத் தரச் சொன்னால் எப்படி?'' என்று அவர் கேட்கும் கேள்விக்கு ஏமாந்தவர்கள் பதில் சொல்வதே இல்லை.

'N' கம்பெனி!

சிக்கியது 'N' கம்பெனி!

மும்பையில் சமீபத்தில் 'N' கம்பெனி ஆட்களை சென்னை போலீஸ் பிடித்து வந்து சிறையில் அடைத்தது. ஆன்லைனில் ஏற்கெனவே ஏமாந்த நபர் ஒருமுறை எப்படியோ உஷாராகி பணப் பரிமாற்றம் நடைபெறும்போதே, போலீஸுக்குத் தகவல் தர, சென்னையில் இவர் போடும் பணத்தை மும்பையில் எடுக்க ஆள் வரும்போது, போலீஸ் அமுக்கியது; பணம் தப்பியது; அவனை வைத்து மேலும் இருவரைப் பிடித்தனர்.

இதேபோல், சென்னையைச் சேர்ந்த ஒரு பிரமுகர் 17 லட்சத்தை இழந்துவிட்டார். அதன்பிறகும், 'N' கம்பெனியினர் விடவில்லை. கடைசிக் கட்டமாக, 62 ஆயிரம் ரூபாயை அவர்கள் கணக்கில் போடச் சொன்னது. இந்த பிரமுகரும் பணத்தைப் போட்டுவிட்டு, உடனே சென்னை போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்கு ஓடியிருக்கிறார். போலீஸாரும் பெங்களூரு வங்கிக் கணக்கில் அந்த பணத்தை மர்ம நபர்கள் எடுக்கும் முன்பே வங்கிக்குத் தகவல் சொல்லி நிறுத்தினார்கள். இப்படி அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு உள்ளதை இழக்கும் அப்பாவிகள் பல ஆயிரம் பேர்.  

இந்த நிமிஷம்கூட, அதே 'N' கம்பெனி ஆட்கள், உங்களை வலையில் சிக்கவைக்க முயற்சி செய்து கொண்டிருப்பார்கள், ஜாக்கிரதை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு