Published:Updated:

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

Published:Updated:

இன்சைடர் டிரேடிங்கில் ரிலையன்ஸ்!

ஷேர்லக் ஹோம்ஸ்

''உம்மைச் சந்தித்து பல வாரமாச்சு. இன்று மாலை கட்டாயம் உம் அலுவலகத்துக்கு வந்து சந்திக்கிறேன்'' என வெள்ளிக்கிழமை காலையிலேயே ஷேர்லக்கிடமிருந்து நமக்கு எஸ்.எம்.எஸ். வர, ''யூ ஆர் மோஸ்ட் வெல்கம்!'' என்று பதில் அனுப்பினோம். சொன்னபடி இரவு எட்டு மணிக்கு நம் கேபினுக்குள் நுழைந்தார் அவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சந்தை சரிந்து வருகிறதே! இன்னும் கூட ஆழமாகச் சரியுமோ?'' என்றபடி பேச்சை ஆரம்பித்தோம்.

''அப்படித்தான் சொல்கிறார்கள் மும்பையில் நான் சந்தித்த பல அனலிஸ்ட்கள். பொதுவாக டிசம்பர் மாத முடிவில் எஃப்.ஐ.ஐ.கள் ப்ராஃபிட் புக்கிங் செய்வார்கள். இந்தமுறையும் அது கொஞ்சம் நடந்திருக்கிறது என்றாலும் முக்கிய காரணம் அமெரிக்காதான்.

'ஃபிஸ்கல் கிளிஃப்’ காரணமாக அமெரிக்கச் சந்தை கீழ்நோக்கி சரிய, அதன் பாதிப்பாக உலகச் சந்தைகள் பல இறக்கம் கண்டிருக்கின்றன. அதில் இந்தியாவும் ஒன்று. இதன் தாக்கம் அடுத்த வாரமும் எதிரொலிக்கவே செய்யும்.

தவிர, செவ்வாய்க்கிழமை கிறிஸ்துமஸ், வியாழக்கிழமை எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி என பல விஷயங்கள் இருப்பதால், சந்தையின் போக்கு புயல் நேரக் கடலாக இருக்கும். பொதுவாக ஜனவரி மாதத்தில் அந்நிய முதலீடு ஏதுவும் வராது. கிட்டத்தட்ட பட்ஜெட் வரை இந்த நிலை தொடரலாம். இதனால் ரூபாய் மதிப்பு மேலும் சரியவே வாய்ப்புண்டு'' என பல்வேறு விஷயங்களைச் சொன்னவருக்கு மெது பக்கோடாவை ஒரு தட்டில் வைத்துத் தந்தோம்.

கொஞ்சமாக எடுத்து சாப்பிட்டபடி அடுத்த விஷயத்துக்குப் போனார்.

''பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் 30,000 கோடி ரூபாயைத் திரட்ட முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு. இதில் என்.டி.பி.சி. மட்டுமே கணிசமான பங்கினை அளிக்கும். இதனால் புதிதாகச் சந்தைக்குள் பணம் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏற்கெனவே வாங்கிய பங்குகளை விற்று விட்டுதான், இந்தப் பங்கை வாங்க வழி உண்டு. எனவே, சில பங்குகள் அதிகமாக விற்கப்படலாம். இன்னொரு முக்கியமான விஷயம், 75 சதவிகிதத்துக்கு மேல் ஹோல்டிங் வைத்திருக்கிற புரமோட்டர்கள் தங்கள் பங்குகளை விற்று வருகிறார்கள். இதனால் விற்பனை அதிகரித்து வருகிறது. எனவே, உஷாராக இருப்பது நல்லது'' என்றார்.

''அரசின் டிஸ்இன்வெஸ்ட்மென்ட் என்னாச்சு?'' என்றோம்.

ஷேர்லக் ஹோம்ஸ்

''செயில் நிறுவனப் பங்குகளை பிப்ரவரியில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதேநேரத்தில், மற்றொரு ஸ்டீல் நிறுவனமான ராஷ்ட்ரிய இஸ்பத் நிகாம் நிறுவனப் பங்கு விற்பனை தொடர்பான விவகாரம் கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கிறது'' என்று சொன்னார்.

''எம்.சி.எக்ஸ். பங்குச் சந்தை இன்னும் காணோமே?'' என்றோம்.

''எம்.சி.எக்ஸ்-எஸ்.எக்ஸ்., பங்குச் சந்தை செயலாக்கத்துக்கான சான்றிதழை செபி அமைப்பிடமிருந்து பெற்றிருக்கிறது. கூடிய விரைவில் முழுவீச்சில் களமிறங்கப் போகிறது இந்தப் புதிய பங்குச் சந்தை. ஈக்விட்டி, பாண்ட், இன்ட்ரஸ்ட் ரேட் டெரிவேடிவ்ஸ் பிரிவுகளில் புதிய ஸ்கீம்களை அறிமுகப்படுத்த இருக்கிறது'' என்றார் மிச்சமிருந்த பக்கோடாவைச் சாப்பிட்டபடி.

''வட்டி விகிதங்களில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் ஏமாற்றிவிட்டதே மத்திய ரிசர்வ் வங்கி?'' என்றோம்.

''பணவீக்கம் மெச்சிக்கொள்ளும்படி குறைந்துவிடவில்லை என்கிறபோது வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? அப்படி ஒரு எதிர்பார்ப்பு யாருக்காவது இருந்தால் கொஞ்ச காலத்துக்கு அதை மூட்டைகட்டி வைத்து விடுவதே நல்லது'' என்றார்.

''பங்குச் சந்தை புரோக்கர்களுக்கான டெபாசிட் உயர்த்தப்பட்டிருப்பது பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள்?'' என்று வினவினோம்.

''பல புரோக்கர்கள் செபியின் மீது கோபத்தில் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, அல்காரிதம் டிரேடிங் தொடர்புடைய புரோக்கர்களுக்கான டெபாசிட்டை 10 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளதைக் கண்டு கொதித்துப்போயிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை சந்தை ரிஸ்கை குறைக்க எடுக்கப் பட்டிருப்பதாக செபி சொல்கிறது. நாலு பேருக்கு நல்லது என்றால் ஒரு சிலருக்கு அது கெட்டதாகத்தானே இருக்கும்!'' என்றவருக்கு சுடச்சுட டீ தந்தோம். டிசம்பர் குளிருக்கு அது இதமாக இருந்ததால் ரசித்துக் குடித்தார்.

##~##
''இன்சைடர் டிரேடிங் சிக்கல் இன்னும் ரிலையன்ஸை விட்டமாதிரி தெரியவில்லையே?'' என்றோம்.

''கடந்த 2007-ல் ரிலையன்ஸ் பெட்ரோலியம் மீது நடந்த இன்சைடர் டிரேடிங் வழக்கில் கோர்ட்டுக்கு வெளியே அபராதம் கட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தப் பிரச்னை கோர்ட்டிற்கு வந்திருக்கிறது. மத்திய தகவல் அறியும் ஆணையம் இன்சைடர் டிரேடிங் தொடர்பான விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க செபிக்குச் சொன்னது.

இதுகுறித்த விசாரணையில் ரிலையன்ஸ் ஜனவரி 21-ம் தேதிக்குள் பதில் அளிக்க, பாம்பே ஹைகோர்ட் டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் இந்த இன்சைடர் டிரேடிங் வழக்கில் செபி மேலும் சில புதிய தில்லுமுல்லுகளைக் கண்டுபிடித்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஷோகாஸ் நோட்டீஸ் கொடுத்திருக்கிறது.

மூன்றாவது முறையாக சமரசத்துக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் முயற்சித்ததை செபி தள்ளுபடி செய்திருக்கிறது. செபிக்கும் ரிலையன்ஸுக்கும் நடுவே ஏன் இந்தக் கடும் போர் என்று புரியாமல் பலரும் முழிக்கிறார்கள். இது சந்தைக்கு நல்லதல்ல என்பது அனலிஸ்ட்களின் கருத்து!'' என்றார் ஷேர்லக்.

''எஃப் அண்ட் ஓ பிரிவில் ஏதேனும் மாற்றம் வந்திருக்கிறதா?'' என்று கேட்டோம். .

''வந்திருக்கிறது. எஃப் அண்ட் ஓ பிரிவிலிருந்து சுஸ்லான் எனர்ஜி மற்றும் குஜராத் ஃப்ளுரோகெமிக்கல்ஸ் நிறுவனப் பங்குகளை என்.எஸ்.இ. நீக்கியிருக்கிறது. இது மார்ச் 1, 2013 முதல் அமலுக்கு வருகிறது. அதேநேரத்தில், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதத்துக்கான கான்ட்ராக்ட் மீதான வர்த்தகத்துக்கு அனுமதி உண்டு'' என்றவர் புறப்படத் தயாரானார்.

''என்ன அதற்குள் புறப்பட் டாச்சா? இந்த வாரமாவது ஷேர்டிப்ஸ் உண்டா?'' என்று கேட்டோம்.

''சந்தைதான் ஓரளவுக்கு இறங்கிவிட்டதே! இன்னும் கொஞ்சம் விலை குறையும்பட்சத்தில் பின்வரும் பங்குகளை வாங்கலாம். பங்குகளின் பெயர் இதோ:

விப்ரோ,
ஜே.கே. சிமென்ட்,
பெர்சிஸ்ட்டன்ட் சிஸ்டம்ஸ்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism