Published:Updated:

டார்கெட் வந்துட்டா லாபத்தை புக் பண்ணுங்க!

கனிப்பு

டார்கெட் வந்துட்டா லாபத்தை புக் பண்ணுங்க!

கனிப்பு

Published:Updated:
டார்கெட் வந்துட்டா லாபத்தை புக் பண்ணுங்க!

- 2013-க்கு ஆரூடம் சொல்கிறார் ஷேருச்சாமி -

''வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் திறப்பு வைபவத்திற்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குப் போகின்றேன். வருவதென்றால் பங்களாவிற்கு துணிமணியோடு நைட்டே வந்துவிடவும்'' என்று ஷேருச்சாமியிடம் இருந்து எஸ்.எம்.எஸ். வந்தது. சொன்ன டயத்துக்கு வரமாட்டோமுன்னு தெரிஞ்சு சாமி நைட்டே வீட்டுக்கு வரச்சொல்கின்றார் என்று தெரிந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வருஷக் கடைசியாச்சே! ஷேருச்சாமியோட கோயிலுக்குப் போய் சாமியையும் பார்த்துட்டு வந்தாலாவது 2013-ல நாலுகாசு பார்க்க முடியுமான்னுப் பார்ப்போமுன்னு நினைச்சு 'ஓகே சாமி’ என்று பதில் மெசேஜ் போட்டேன்.

##~##
''கோ
யிலுக்குப் போறோம். சாமியைப் பார்க்குறோம். சரவண பவன்ல சாப்பிட்றோம். அப்படியே வீட்டுக்குப் போறோம்'' என்று சாமி மறுநாள் பிளானை அனுப்பினார். அதற்கும் ஓகே சொல்லிவிட்டு, ''இன்று இரவு சாமியின் வீட்டுக்கு வந்துவிடவும்'' என்று நண்பன் செல்லுக்கு (செல்வம்) மெசேஜ் அனுப்ப, அது போன வேகத்தில் ஓகே என்று பதில் வந்தது.

இரவு சுமார் ஒன்பது மணிக்கு நானும் செல்லும் சாமியின் வீட்டில் ஆஜர். ''வாங்கப்பூ'' என்று வரவேற்றார் வீரப்பா ஸ்டைலில் சிரித்தபடி. ''அட! சாமியைப் பார்க்கலாமுன்னவுடனே உஷாரா முன்னாடியே வந்துட்டீகளான்னு'  கிண்டலடித்தார். ''இல்லே சாமி உங்களிடம் டீடெயிலாப் பேசி நாளாச்சு அதனாலதான், ஹிஹி'' என்றேன். ''அடுத்த வருஷத்துல சந்தை எப்படி இருக்கும்னு பேசுவோமேன்னுதான் உங்களைக் கூப்பிட்டேன்'' விளக்கம் தந்தார் சாமி. ''அதான், நாங்களே வந்துட்டோமே சாமி'' என்றான் செல் அவசரக்குடுக்கையாக.

''ஓகே, என்ன செல், கன் ரெண்டு பேரும் மார்க்கெட்ல இன்னும் பணத்தைப் போட்டுக் கிட்டு இருக்கீங்களா, இல்லை தள்ளி நின்னு வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்கீங்களா?'' எடுத்த எடுப்பிலேயே நக்கல் கேள்வியோடு ஆரம்பித்தார் சாமி.

''கொஞ்சம் டிரேடிங், கொஞ்சம் இன்வெஸ்ட்மென்டுன்னு மிக்ஸடா பண்றேன். நீங்க போன வருஷம் சொன்ன ஸ்டாக்குகளை வாங்கிப்போட்டு லாபமும் பார்த்தேன்'' என்றான் செல்.

டார்கெட் வந்துட்டா லாபத்தை புக் பண்ணுங்க!

''அட, மக்குப்பயலே! நான் சொன்னேன்னு அப்படியே வாங்கிடாதே. நீ கொஞ்சம் அந்த கம்பெனிகளைப் பத்தி படிச்சுத் தெரிஞ்சுகிட்டு வாங்கு. ஐடியாதான் என்னோடதுன்னாலும் பணம் உன்னோடது. நானே சொன்னாலும் அதை அப்படியே ஃபாலோ பண்ணக்கூடாதுன்னு பல தடவை சொல்லி இருக்கேன்ல!'' என்று செல்லமாகக் கடிந்துகொண்டது சாமி.

''சாமி, இந்த ஃபிஸ்கல் கிளிஃப் என்னவாகும்?'' என்றேன்.

''உடம்புக்கு முடியாதவன் இன்னைக்கு கசப்பு மருந்தும் பத்தியச் சாப்பாடும் சாப்பிட்டா, இரண்டொரு நாளில உடம்பு சரியாயிடும். அது மாதிரி, ஃபிஸ்கல் கிளிஃப் வந்தா அமெரிக்க அரசாங்கத்தோட செலவு குறையும். அமெரிக்கப் பொருளாதாரம் நெருக்கடியில இருந்தப்ப தரப்பட்ட வரிச் சலுகைகள் ஒரு முடிவுக்கு வரும். செலவு குறைஞ்சு, வரவு அதிகமாகுறது நல்லதுதானே?'' என்று நான் கேட்ட கேள்விக்குப் பெரிய விளக்கம் தந்தான் செல்.

''அது சரிதான்பூ! ஆனா, தொழில் பண்றவன் அதிக வரி கட்டணுமின்னா வேறெங்கேயாவது போறேன்பான். தொழில் வளராதும்பான். வேலைவாய்ப்பு குறையுமென்பான். இப்படி மிரட்டினா அரசாங்கம் பயந்துடுமே'' என்றார் சாமி.

''அதனால் என்ன சாமி?'' என்றேன் நான்.

''சொல்றேன்'' என்றவர் பக்கத்தில் இருந்த வெத்திலைப்பெட்டியை எடுத்து, அதிலிருந்து இரண்டு பாக்குகளை எடுத்து, வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தார். இளசா இருந்த வெத்தலையாகத் தேடிப் பிடித்து, அதன் முதுகில் லேசாகச் சுண்ணாம்பு தடவி, வாயில் போட்டுக் கொண்டார்.

''அமெரிக்க அரசாங்கம் அது கடன் வாங்குற அளவை அதிகப்படுத்தியே ஆகணுமுங்கிற கட்டாயத்துல இருக்கு. இந்த அளவை அதிகப் படுத்துறதுக்கு ஒப்புதல் தர்றதுல ரிபப்ளிக்கன் பார்ட்டிகாரங்களோட ரோல் அதிகம் இருக்கு. அவங்க கடனை அதிகப்படுத்திடலாம். ஆனா, செலவைக் குறைங்க. வரிச் சலுகைய குறைச்சு வருமானத்தை அதிகப்படுத்துங்க. இதுக்கு ஒப்புக்கிட்டா கடன் வாங்குற சீலிங்கை அதிகப்படுத்தற மசோதாவை நாங்க பாஸ் பண்றோ முங்கிறாங்க. கடன் அதிகமா வாங்கணு மின்னா, செலவைக் குறைச்சு வரவை அதிகம் பண்ணனும். கடன் வாங்கற உச்சவரம்பு அதிகமாகலேன்னா, அரசாங்கத்தோட செயல்பாடு சிக்கலாயிடும். இப்படி இருதலைக்கொள்ளி எறும்பா ஒபாமாவோட நிலைமை இருக்குது'' என்றார் சாமி.

''சரி சாமி, நாம நம்ம நாட்டுக்கு வருவோம்'' என்று பேச்சை திசை திருப்பினேன். ''நம்ம சந்தை எப்படியிருக்கும் 2013-லேன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்'' என்றேன்.

டார்கெட் வந்துட்டா லாபத்தை புக் பண்ணுங்க!

''ஃபிஸ்கல் கிளிஃப் என்னவாகுதுங்கறதைப் பொறுத்துதான் நம்ம சந்தையோட போக்கு 2013 ஆரம்பத்தில் இருக்கும். கடன் வாங்குற துக்குண்டான அனுமதி கிடைக்கலேன்னா ஷார்ட் ரன்ல சந்தை நல்லாவே வாலட்டைலா மாறிடும். ஃபாரெக்ஸ் சந்தையிலேயும் வாலட்டைலிட்டி வந்துடலாம். ரூபாய் கொஞ்சம் மதிப்பிழக்கலாம்'' என்றார்.

''ஒருவேளை கிடைச்சுட்டா...?'' விவரமாகவே ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டான் செல்.

''லாங் ரன்ல நம்மளோட எக்ஸ்போர்ட் அளவு பாதிக்கப்படும். அதுக்கப்புறம் நம்ம மத்திய பட்ஜெட் வரும். இதுதான் இந்த அரசாங்கத்தோட கடைசி பட்ஜெட்ங்கிறதால எலெக்ஷன் பட்ஜெட்டா இருக்க வாய்ப்பிருக்கு. அதனால தாராளமா சலுகைகள் வழங்கப்படலாம். பொருளாதாரமும் சுணங்கிப் போய், பட்ஜெட் பற்றாக்குறையும் அதிகமாச்சுன்னா, சந்தை மேலே போக வாய்ப்பில்லாமப் போயிடும். அதனால இன்னும் சந்தை வாலட்டைலா மாறும்''  என்றார் வெத்தலையைக் குதப்பியபடி.

''என்ன சாமி, ஒரேயடியாய் பயமுறுத்துறீங்க?'' என்றான் செல்.

''பயமுறுத்தலையடா. உள்ளதைச் சொல்றேன். 2013 காலண்டர் இயரோட மூணாவது காலாண்டுல  சந்தையின் போக்கில் பெரிய மாறுதல்கள் எல்லாம் முடிஞ்சுபோயிட வாய்ப்பிருக்கு. அதுக்கப்புறம் தேர்தல் அறிவிப்பு வந்தபின்னாடிதான் பெரிய மாறுதல்களை எதிர்பார்க்கலாம்'' என்ற சாமி, சமையல்காரர் தயார் செய்து வைத்திருந்த கேசரியைத் தட்டில் வைத்துத் தந்தார். ''குளிர் அதிகமால்லே இருக்கு! சுடச்சுட சாப்பிடுங்கப்பா! நானும் வாயைக் கொப்பளிச்சுட்டு வந்துடறேன்'' என்று கிளம்பிப் போனார்.

வாய் கொப்பளித்து வந்த சாமியிடம், ''சாமி, நீங்க சொல்றது ஆச்சரியமாத்தான் இருக்கு! போன வருஷம் 25 சதவிகிதம் லாபம் தர்ற மாதிரி சொன்னீங்க. இந்த வருஷம் என்னடான்னா வாலட்டைல், வாலட்டைல், ஸ்டேபிள் அப்படின்னே  முடிச்சிட்டீங்களே’ என்றான் செல்.

''நல்ல முதலீட்டாளர்களுக்கு வாலட்டைல் மார்க்கெட் ஒரு வரப்பிரசாதம். நல்ல பங்குகள் கீழே போகிறபோது வாங்கிப் போட்டுடலாமுல்ல'' என்றார் சாமி.

''சாமி இதெல்லாம் சொல்றதுக்கு நல்லாயிருக்கு. ஆனா, பலருக்கும் இது ஒத்துவருமா?'' என்று கேட்டேன் நான்.

''ஒத்துவருதோ இல்லையோ, இதுதான் யதார்த்தம்னு ஒத்துக்கிட்டாகணும். பெரிய பல சம்பவங்கள் நடக்குற வருஷத்துல இந்த மாதிரியான நிச்சயமின்மை கொஞ்சம் வரத்தான் செய்யும். அதைத் தாங்கித்தான் கடக்க வேண்டி யிருக்கும்'' என்றார் சாமி.

''கேசரி சாப்பிட்டு முடிச்சாச்சா? இப்ப வெங்காய பஜ்ஜி இருக்கு! அதை ஒரு கை பாருங்க!'' என்று அள்ளி வைத்தார். வாய்க்கு ருசியாகவும் குளிருக்கு இதமாகவும் இருந்தது அது.

''ஓகே சாமி, இந்த வருஷம் சந்தையில பணம் போடலாமா, வேண்டாமா?’ என்று நேரடியாகக் கேட்டான் செல். ''தொழிலுன்னு இருந்தா மேடு பள்ளம் இருக்கத்தான்வே செய்யும். நாடுன்னு இருந்தா பொருளாதாரம் மேலும் கீழும் போகத் தான் செய்யும். பொருளாதாரம் சரியில்லை, தொழில் சரியில்லைன்னு முதலீடு பண்ணாம இருந்தா, பொருளாதாரம் சரியாகித் தொழிலும் ஜம்முன்னு போகும்போது கையில ஒண்ணும் இருக்காது. ஏன்னா நீதான் நெகட்டிவ்வா இருக்கறப்ப முதலீடு பண்ணலையே!'' என்று நம்பிக்கை ஊட்டுகிற மாதிரி பேசினார் சாமி.

''அட, ஆமால்ல! இந்த ஆங்கிளை நான் மறந்துட்டேனே!'' என்றான் செல்.

''2013-ல இன்னைக்கு இருக்கற நிலைமைக்கு நிறைய நிச்சயமற்றதன்மை இருக்கு. சம்பாதிக்கிற குடும்பத் தலைவருக்கு நீண்ட நாட்களுக்கு உடல்நிலை சரியில்லேன்னா வீட்டில நிதிநிலைமை எப்படியிருக்கும்'' என்றார் சாமி. ''கவலைக்கிடம்தான்'' என்றான் செல். ''அதேபோல்தான் பெரிய நாட்டோட பொருளாதாரத்துலே பிரச்னைன்னா அதைச் சார்ந்திருக்கிற மற்ற நாடுகளோட பொருளாதாரங்கள் கொஞ்சம் அப்படியும் இப்படியுமாத்தான் இருக்கும்'' என்றார்.

''என்ன சாமி சொல்றீங்க? போன வருஷம் யூரோ பெரிய பிரச்னையா இருந்துச்சு. அப்பகூட நீங்க ரொம்ப நம்பிக்கையாப் பேசுனீங்க. எல்லாம் போகப்போக சரியாயிடுமுன்னீங்க. ஆனா இந்த வருஷம் இப்படி கைகழுவற மாதிரியே பேசுறீங்களே!'' என்றேன், நான் சுடச்சுட டீயைக் குடித்தபடி.

''விவரமில்லாமப் பேசாதே. யூரோ பிரச்னை வேற. இது வேற. வியாபார ரீதியாவும், முதலீடுகளுக்கும் (எஃப்.ஐ.ஐ.), பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவைச் சார்ந்ததாவே இருக்குது. அதனால அங்கே ஸ்விட்ச் ஆஃப் பண்ணா இங்கே லைட் எரியாது'' என்று டயலாக் அடித்தார்.

டார்கெட் வந்துட்டா லாபத்தை புக் பண்ணுங்க!

பேச்சு சுவாரஸ்யத்தில் மணி மூன்று ஆகியிருந்தது. ''அய்யோ, மணி மூணு! வாங்க, வாங்க, குளிச்சுட்டு சாமி தரிசனத்துக்கு க்யூவில போயி நிப்போம்'' என்றவர், ''பசங்களா, அங்க ரெண்டு பாத்ரூம் இருக்கு. ஆளுக்கொண்ணுல புகுந்து சீக்கிரம் குளிச்சு முடிச்சுட்டு, கௌம்புங்க'' என்று உத்தரவு போட்டுவிட்டுப் போனார்.

அடுத்த அரை மணி நேரத்தில் கோயிலுக்குப் புறப்பட்டோம் பொடிநடையாய். 'சாமி, இத்தனை நேரம் பேசியது ஒண்ணும் சரியில்லை! இனி கோயில்லயாவது நாலு வார்த்தை நல்லதாச் சொல்றாரான்னு பார்ப்போம்’ என்று சிந்தித்தபடி நடக்க, கோயில் வந்தே வந்துவிட்டது. அந்த அதிகாலையிலும் பெருமாளை சேவிக்க பெருங்கூட்டம் கூடியிருந்தது.

வரிசையில் நின்றபோது, ''சாமி, இந்த வருஷம் என்னென்ன பங்குகள் வாங்கலாமுன்னு சொன்னீங்கன்னா கப்ன்னு நாங்க புடிச்சுக்கு வோம்!'' என்று தலையைச் சொறிந்தான் செல்.

''தம்பி, உள்ளபடி சொன்னா இன்னைய நிலைமையில அப்படி ஒரு கணிப்பைச் செய்யறது ரொம்ப கஷ்டமான வேலையா இருக்கு. பல்வேறு பிரச்னைகள் ஒண்ணுக்கு ஒண்ணு சளைக்காமப் போட்டிப்போட்டு நிலைமையை மேலும் சிக்கல் மிகுந்ததா ஆக்கி வச்சிருக்கு. இந்தச் சூழ்நிலையில என்ன பங்குகளை வாங்கலாமுன்னு சொல்றது கஷ்டம். ஜனவரிக்குள்ள அமெரிக்காவோட போக்கு தெளிவாயிடும். அப்ப நானே உங்களைத் தேடி வந்து சொல்றேன்'' என்றார் சாமி.

''ஓகே சாமி, பங்குகள்தான் சொல்லலை. வாசகர்களுக்கு சந்தையோட மொத்தப் போக்கு எப்படி இருக்குமுன்னு ஒரு கைடுலைனாவது சொல்லுங்களேன்'' என்றேன் நான்.

''போன வருஷம் மாதிரி ஜனவரியில் முதலீடு நவம்பர்-டிசம்பரில் வெளியேறுதலுன்னு இருக்காதீங்க. டார்கெட் லாபம் வந்துட்டா லாபத்தை புக் பண்ணுங்க. அடுத்த தீபாவளிக்கு அப்புறம் கொஞ்சம் வீக்காக வாய்ப்பிருக்கு. அதனால உங்க விற்பனைகளை தீபாவளிக்கு முன்னாடியே முடிச்சுக்குங்க.

இது இன்னைக்கு நிலைமைதான். ஏற்கெனவே சொன்ன மாதிரி பல்வேறு பிரச்னைகள் கூட்டமா இருக்கறதால இப்ப அனுமானம் பண்றது அப்படியே நடந்துடுமுன்னு சொல்லமுடியாது. நான் இதே ஊர்ல உங்களோடதானே இருக்கப் போறேன். மேஜரா ஏதாவது சேஞ்ச் வந்தா, உடனே வந்து சொல்லிடமாட்டேன்!'' என்றார் சாமி.

''அப்ப அடிக்கடி சந்திக்கலாமா சாமி?'' என்றான் செல்.

''சந்தையில மேஜர் டிரென்ட் சேஞ்ச் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்றுமுறை அடுத்த வருஷம் வரலாம்'' என்று சாமி சொன்னதை வச்சு, ''அப்ப இரண்டு அல்லது மூன்று முறை சந்திக்கலாமுங்கிறீங்களா?'' என்று கேட்டேன் நான்.

பல்லைக் கடித்துக்கொண்ட சாமி, கோவிந்தா, கோவிந்தா என்றபடி பக்தி மூடுக்குச் சென்றார். சாமியைப் பார்த்து முடித்தவுடன் அசதியாக இருக்கவே, நேரே சரவண பவனுக்கு ஜூட் விட்டோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism