Published:Updated:

டிப்டாப் மோசடிகள் - என் இடத்தைக் காணோம்..!

பாலகிஷன்

டிப்டாப் மோசடிகள் - என் இடத்தைக் காணோம்..!

பாலகிஷன்

Published:Updated:
##~##

கோவை மண்டலத்தில் மட்டும் ஏன் இத்தனை மோசடி என ஒரு போலீஸ் உயரதிகாரியிடம் கேட்டோம்.  அவர் சொன்ன தகவல் ஆச்சரியமாக இருந்தது!

''இந்தப் பகுதி மக்கள் மென்மையானவர்கள். யார் மீதாவது நம்பிக்கை வைத்தால் அப்படியே நம்பிவிடுவார்கள். இவர்களின் இந்தக் குணத்தைத் தெரிந்துகொண்ட மோசடி பேர்வழிகள் ஏமாற்றிவிடுகிறார்கள். அப்படியே தாங்கள் ஏமாற்றப்பட்டதாகத் தெரிந்தாலும், அதற்குமேல் வேறு எந்த தடாலடி செயலிலும் இறங்க மாட்டார்கள். சாத்வீகமான முறையில் போராடுவார்கள். ஏமாற்றியவன், ஓரிரு மாதங்கள் சிறைக்குப் போய்விட்டு வந்து வழக்கம்போல் நடமாடுவான். மீண்டும் மோசடி செய்ய ஆரம்பிப்பான்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவர் சொல்வதும் சரிதான். கொங்குமண்டலத்தில், 'இந்த வாரம்... மோசடி வாரம்' என்று சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறித்தான் வருகின்றன. இந்த வரிசையில், தற்போது முதலிடத்தில் இருப்பது... ஆன்லைன் நிறுவனம் செய்த மோசடிதான்! ஃபைன் ஃப்யூச்சர்ஸ், ஃபைன் இந்தியா, குட்வே, வே டு சக்சஸ், பெஸ்ட் வே போன்ற ஐந்து பெயர்களில் இந்த ஆன்லைன் நிறுவனம் செயல்பட்டதாகத் தகவல். 30,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பதாக இதுவரை தெரியவந்துள்ளது. கேரள பிரமுகர் விவேக், கோவை செந்தில்.... இருவரும்தான் இதன் உரிமையாளர்கள் என்கிறார்கள். ஆனால், இந்த நிறுவனங்களுக்கான ஏஜென்டுகள் ஆயிரம்பேர் கொங்கு மண்டலம் முழுக்க நிறைந்து கிடக்கின்றனர்.

கடந்த எட்டு வருடங்களாக நடந்துவந்த இந்த மோசடி தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. சுமார் 10 ஆயிரம்பேர் வரை ஏமாந்ததாக முதல்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. ஒரு லட்சம் ரூபாய் தந்தால், 8,500 ரூபாய் மாதந்தோறும் வட்டியாக வரும். புதிய ஆளை அறிமுகப்படுத்தினால், கூடுதலாக 2,000 ரூபாய் கிடைக்கும். ஆனால், இந்தப் பணத்துக்கு ரசீது எதுவும் தரப்படாது. மாதம் 7-ம் தேதியன்று பணம் உங்கள் இல்லம் தேடி வந்துவிடும்’ என்று கேன்வாஸ் செய்திருக்கிறார்கள்.  

டிப்டாப் மோசடிகள் - என் இடத்தைக்  காணோம்..!

தற்போது போலீஸுக்கு புகார் தந்திருப்பவர்கள் முதலீட்டாளர்கள் அல்ல! ஏஜென்டுகள். அந்த நிறுவனம் தங்களை ஏமாற்றிவிட்டதாகச் சொல்லி இவர்களில் நூறு பேர் முதலில் போய் போலீஸ் ஸ்டேஷன் படியேறி இருக்கிறார்கள். நிறுவன முதலாளிகளைக் கேட்டால், 'ஏஜென்டுகள்தான் ஏமாற்றிவிட்டார்கள்' என்கிறார்கள். மொத்தத்தில், எந்த ஓர் ஆவணத்திலும் அந்நிறுவனத்தினரின் கையெழுத்து இல்லை. எந்த ஒரு ரசீதும் முதலீட்டாளர்களிடம் இல்லை. போலீஸார் கொஞ்சம் மிரட்டல் தொனியில் விசாரித்தபோது நெஞ்சை நிமிர்த்தி இருக்கிறார்கள் மோசடிக்காரர்கள். 'நாங்க பணம் வாங்கினோம்னு ஆதாரம் இருக்கா?’ என்று தில்லாகக் கேட்கிறார்களாம். கனகச்சிதமாய் ஸ்கெட்ச் போட்டு ஏமாற்றும் இந்த நபர்களை எப்படி பிடிப்பது என்று புரியாமல் கோவை போலீஸ் தவிக்கிறது.

குறுகிய காலத்தில் பல லட்சங்களை சுருட்ட முடியுமா? 'முடியும்’ என்று சொல்லி சிரிக்கின்றன கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள மோசடி கும்பல்! கிராம நிர்வாக அலுவலரிடம் உதவியாளராக வேலை பார்த்தவர் மோசஸ் விஜயகுமார். இவர் விஜய் புரமோட்டர்ஸ் என்கிற பெயரில் ப்ளாட்  விற்பனைக்கு விளம்பரம் செய்தார். அவர் பெயரில் எந்த நிலமும் இல்லை! பின் எப்படி ப்ளாட் விற்பனை செய்வார் என்கிறீர்களா?

வெறுங்கையால் முழம் போடுவதில் இவர் கில்லாடி. அன்னூர் பக்கம் புகளூர் கிராமத்தில் இரண்டரை ஏக்கர் நிலத்தை வாங்க அதன் உரிமையாளரிடம் டோக்கன் அட்வான்ஸாக சிறு தொகையைக் கொடுத்து ஓர் அக்ரிமென்ட் போட்டார். அந்த ஏரியாவில் 14 ஏக்கர் அளவுக்கு இடம் வைத்திருப்பதாகப் பொய் தகவலை பரப்பினார். 'ப்ளாட்  விற்பனை... அதுவும், மாதத் தவணையில்...’ என்று விளம்பரம் செய்தார். மக்கள் ப்ளாட் வாங்கும் ஆசையில் விஜயகுமாரிடம் பணத்தை அள்ளிக்கொண்டு வந்து கொட்டினார்கள். அதற்குப் பக்காவான ரசீதும் தந்தார் விஜயகுமார். ப்ளாட் வாங்கியவர்களில் யாராவது ஒருவர், விஜயகுமாரிடம் உண்மையிலேயே நிலம் இருக்கிறதா என்பதை விசாரித்திருந்தால் அவரும் ஏமாந்திருக்க மாட்டார்; பலரையும் ஏமாறாமல் தடுத்திருப்பார்.

டிப்டாப் மோசடிகள் - என் இடத்தைக்  காணோம்..!

மோசடியில் இது ஒரு வகை என்றால், கொங்கு மண்டலத்தில் லே-அவுட் போடுகிறேன் என்று உலா வருகிறவர்களின் பாணி இன்னொரு வகை. அரசுத் துறை அதிகாரிகளுக்கும் அப்பாவி நடுத்தர மக்களுக்கும் அல்வா கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிறார்கள். சிறுக சிறுகச் சேர்த்தப் பணத்தை மக்கள் இழப்பதோடு, அரசு சட்ட விதிமீறல்களுக்கும் ஆளாக வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். வேறு ஏதோ ஆய்வுக்குப் போன இடத்தில், சந்தேகப்பட்டு விசாரணையில் இறங்க... ரியல் எஸ்டேட் பெயரில் நடந்த தில்லுமுல்லுகளை கோவை மாவட்ட கலெக்டர் கருணாகரன் கண்டுபிடித்தார். தீத்திபாளையத்தில் 135 ஏக்கர், சுண்டப்பாளையத்தில் 45 ஏக்கர், உக்கடம் ஏரியாவில் 11 ஏக்கர்... என்று வெவ்வேறு நபர்கள் லே-அவுட் போட்டிருந்தனர். அங்கே நேரிடையாக விசிட் செய்த கலெக்டர் முறைப்படி அப்ரூவல் வாங்கி இருக்கிறார்களா? என்று பார்த்தபோது, ஆவணங்கள் சரியில்லை என்று தெரிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

இதுமாதிரி காடு, மலை என்று கணக்குவழக்கில்லாமல் லே-அவுட் போடும் இந்த ரியல் எஸ்டேட் ஆசாமிகள், அரசிடம் எந்த ஓர் அப்ரூவலையும் வாங்குவதில்லை. பொது இடத்தையும் ஒதுக்குவதில்லை. ஓர் ஏக்கரில் அரசு விதிகளின்படி அனுமதி பெற்றால் சாலைகள், கடை உள்ளிட்ட மற்ற ஒதுக்கீடுகள் போக 2,400 சதுர அடி அளவிலான

12 ப்ளாட்கள்தான் போட முடியும். ஆனால், இவர்கள் 15, 16 ப்ளாட்கள் போட்டு, விற்றுவிட்டு ஓடிவிடுவார்கள். அதன்பிறகு, வாங்கிய மக்கள் வீடு கட்ட அரசிடம் விண்ணப்பிக்கும்போது, சிக்கல் கிளம்பும். ஆனால், இதையெல்லாம் ஆரம்பத்திலேயே தீர விசாரிக்காமல் ப்ளாட் வாங்கும் செயலில் இறங்குவதே எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம்.

கொங்கு மண்டலத்தில் இப்படி பல மலைமுழுங்கி மகாதேவன்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மக்கள் ஜாக்கிரதையாக இருந்தால் யார்தான் என்ன செய்ய முடியும்..?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism