Published:Updated:

ஷேர்லக் - பெட்ரோல், டீசல் விலை உயரும் ! ?

ஷேர்லக் - பெட்ரோல், டீசல் விலை உயரும் ! ?

ஷேர்லக் - பெட்ரோல், டீசல் விலை உயரும் ! ?

ஷேர்லக் - பெட்ரோல், டீசல் விலை உயரும் ! ?

Published:Updated:
##~##

''நல்லவேளை, நான் பிழைத்துக்கொண் டேன்'' என்று எம்.ஜி.ஆர். பாடலைக் குதூகலமாகப் பாடியபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ''உங்கள் உற்சாகத்துக்கான காரணம் புரிகிறது. இந்திய பங்குச் சந்தை இரண்டாண்டுகளிலான அதிகபட்ச உயரத்தைத் தொட்டு நிற்பதால்தானே?’ என்றோம்.

''ஃபிஸ்கல் கிளிஃப் பிரச்னையில் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பின்னோக்கி இழுக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உலக அளவில் சந்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டன. ஆனால், வார இறுதியில் சந்தை மீண்டும் சுரத்து குறைந்து சரியத் தொடங்கியது. ஃபிஸ்கல் பிரச்னை இரண்டு மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, பிரச்னைக்கான  முழுமையான தீர்வு கிடைத்துவிடவில்லை. எனவே, கொஞ்சம் ஜாக்கிரதையாகவே முதலீடு  செய்யவேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூன்றாம் காலாண்டுக்கான முடிவுகள் இன்னும் சில நாட்களில் வர ஆரம்பிக்கலாம். அதனைப் பொறுத்து சந்தையின் செயல்பாடுகள் இருக்கும். மூன்றாம் காலாண்டில் பஜாஜ் கார்ப் நிறுவனத்தின் முடிவுகள் சிறப்பாக வரலாம் என்று தெரிகிறது. 248 ரூபாய்க்கு மேலே செல்லும்பட்சத்தில் 270 ரூபாய்க்கு விரைவாகச் செல்ல வாய்ப்பு இருக்கிறது'' என்றார்.

''இல்லிக்விட் பங்குகள் பற்றி எக்ஸ்சேஞ்சுகள் பயங்கரமான அறிவிப்பு வெளியிட்டிருக்கிறதே?'' என்றோம், ஷேர்லக்கிற்கு பக்கோடா தட்டைத் தந்தபடி.

''ஆமாம், இந்தியாவின் முன்னணி பங்குச் சந்தைகளான பி.எஸ்.இ. மற்றும் என்.எஸ்.இ., எளிதில் பணமாக்க முடியாத 'இல்லிக்விட்' பங்குகளில் முதலீடு மற்றும் வர்த்தகம் செய்யும்போது மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளன. இவ்விதமாக மொத்தம் சுமார் 2,400 நிறுவனப் பங்குகள் இருக்கின்றன. இதில் சுமார் 2,135 பங்குகள் பி.எஸ்.இ.யிலும், 260 பங்குகள் என்.எஸ்.இ.-யிலும் உள்ளன. எனவே, உஷாராக இருப்பது அவசியம்'' என்றார்.

ஷேர்லக் - பெட்ரோல், டீசல் விலை உயரும் ! ?

''இன்று நடக்கவேண்டிய நிலக்கரி ஒழுங்குமுறை மசோதா கூட்டத்தில் என்ன விசேஷம்?'' என்று கேட்டோம்.

''அந்த விவாதக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முந்தைய கூட்டம் டிசம்பர் 18-ம் தேதி நடப்பதாக இருந்தது. கடந்த மே மாதம் முதல், நிலக்கரி ஒழுங்குமுறை மசோதா தொடர்பான விவாதம் நடந்துவருகிறது. ஆனால், இதுவரைக்கும் உருப்படியாக எந்த மாற்றமும் தெரியவில்லை'' என்றார் பக்கோடாவைச் சாப்பிட்டபடி.

''கெய்த்தான் எலெக்ட்ரிக்கல்ஸ் பங்கின் விலை ஒரேநாளில் அப்பர் சர்க்யூட் 5 சதவிகிதத்தைத் தாண்டியிருக்கிறதே..?'' என்று இழுத்தோம்.

''ஒன்றுமில்லை, அந்நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாகவே முறையான அறிவிப்பு எதுவும் செய்யாமல் பங்குகளை திரும்ப வாங்கிவந்தது. இந்நிலையில் முறைப்படி அறிவித்து, உரிய விலை தந்து பங்குகளை பைபேக் செய்யும்படி செபி அந்நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதை 45 நாட் களுக்குள் மேற்கொள்ளவேண்டும் என செபி சொல்லி இருக்கிறது'' என்றார்.

''செபி-யின் தலைவர் யூ.கே.சின்ஹா ஆக்டிவ்-ஆக இருக்கிறார் போலிருக்கிறதே?'' என்றோம்.

''உண்மைதான், அவர் எடுக்கும் பல நடவடிக்கைகளைக் கண்டு பல நிறுவனங்கள் கதிகலங்கிப் போயிருக்கின்றன. விதிமுறைகளை மீறி பங்கு விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு செபி அபராதம் விதித்து வருவதோடு, முதலீட்டாளர்களின் புகாருக்கு செவி சாய்க்காத நிறுவனங்கள் மீது செபி அபராதம் விதித்திருக்கிறது. 2012-13-ம் நிதி ஆண்டில்  முதலீட்டாளர்களின் புகாரை தீர்த்துவைக்காத 11 கம்பெனிகள் மீது ரூ.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

ஆனால், விதிமுறைகள் மீறல் தொடங்கி இன்சைடர் டிரேடிங் வரையில் ஈடுபட்ட சுமார் 150 நிறுவனங்கள், செபி அமைப்பிடம் அபராதம் கட்டிவிடுகிறோம் எங்கள் மீதான குற்றச்சாட்டை விலக்கிக்கொள்ளுங்கள் என கோரிக்கை வைத்திருந்தன. இவற்றை செபி தள்ளுபடி செய்திருக்கிறது. இதில் ரிலையன்ஸ், ஜி.எம்.ஆர். ஹோல்டிங்ஸ், வலேசா இன்ஜினீயரிங், இந்தியா இன்ஃபோலைன், ரெலிகேர்,

ஹெச்.எஸ்.பி.சி. இன்வெஸ்ட் டைரக்ட் போன்றவை குறிப்பிடத் தக்கவை...!'' என்றார்.

''உஷார் தகவல் ஏதும் உண்டா?'' என்று கேட்டோம்.

''சி.இ.எஸ்.இ. நிறுவனத்தின் துணை நிறுவனம் மீது ஸ்கை டிவி பல மில்லியன் டாலர் அளவுக்கு வழக்குத் தொடுக்கப் போவதாக செய்தி வருகிறது; எனவே, உஷார்!'' என்று எச்சரித்தார்.

''ஆர்.பி.ஐ.யின் சுபீர் கோகனுக்கு பதவி நீட்டிக்காமல் போனதற்கு என்ன காரணமாம்?'' என்று வம்புக்கிழுத்தோம்.

''ஒரு மாதத்திற்கு முன் அவர் பதவியை ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்தது மத்திய அரசாங்கம். வட்டி விகிதங்களைக் குறைக்க அவர் ஏதாவது நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்த்தது நிதி அமைச்சகம். ஆனால், அவர் அதுமாதிரி எதுவும் செய்யவில்லை. எனவே, அவர் பதவியை மேலும் நீட்டிக்காமல் புதிய துணை கவர்னரை நியமித்துவிட்டது!'' என்று கிசுகிசுத்தார்.

ஷேர்லக் - பெட்ரோல், டீசல் விலை உயரும் ! ?

''நமது ரூபாய் மதிப்பு வெள்ளிக் கிழமை மட்டுமே பெரிய அளவில் சரிந்திருக்கிறதே?'' என்றோம்.

''கடந்த சில நாட்களாக உயர்ந்த இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை அன்று பெரிதாகச் சரிந்தது. ஆனால், இன்னும் மூன்று ஆண்டுகள்வரை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 ரூபாய்க்கு கீழே போக வாய்ப்பு இல்லை என்று முன்னணி நிறுவனம் ஒன்று சொல்லி இருக்கிறது'' என்றவர் புறப்படும் முன்பு ஓர் அதிர்ச்சித் தகவலைச் சொன்னார்.

''அதிகரித்துவரும் அரசின் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க கேல்கர் கமிட்டியானது கேஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் மற்றும் டீசல் விலையை அதிகரிக்கவேண்டும் என அமைச்சரவைக்கு சிபாரிசு செய்துள்ளது. கேஸ் சிலிண்டர்

50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தவேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதிக்கும்பட்சத்தில், சாதாரண மக்கள் இன்னும் கஷ்டப்படவே செய்வார்கள். அடுத்த வருஷம் தேர்தல் வரப்போவதால், அமைச்சரவை இதற்கு ஒப்புதல் தருமா என்பது சந்தேகமே!'' என்றவர், ''இந்த வாரம் ஷேர்டிப்ஸ் இல்லை'' என்று சொல்லிவிட்டு, நடையைக் கட்டினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism