Published:Updated:

அமெரிக்கா TO தாராபுரம்

வா.கார்த்திகேயன், கோவிந்த் பழனிச்சாமி.படம்: தி.விஜய்.

அமெரிக்கா TO தாராபுரம்

வா.கார்த்திகேயன், கோவிந்த் பழனிச்சாமி.படம்: தி.விஜய்.

Published:Updated:
அமெரிக்கா TO தாராபுரம்
##~##

வெறும் ஐந்தே ஐந்து பேப்பர் தான். ஆனால், அவற்றின் மதிப்பு சுமார் 27,500 கோடி ரூபாய். இத்தனை பெரிய மதிப்புள்ள பேப்பரை (பாண்டுகளை) நம்மூரில் சாதாரண பீரோவில் பூட்டி வைத்திருந்திருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இல்லை!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழகத்தில், திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் சிறு நகரம்தான் தாராபுரம். இங்கு வசித்துவரும் ராமலிங்கத்திடம் தான் இத்தனை மதிப்புள்ள அமெரிக்க டிரஸரி பாண்டுகள் சிக்கி இருக்கிறது. இத்தனைக்கும் இவர் ஒரு பிஸினஸ்மேன் இல்லை;  நிலக்கடலை வியாபாரிதான். பிறகு எப்படி இத்தனை கோடி ரூபாய் மதிப்பு பாண்டுகள் இவரிடம் மாட்டியது?

எப்படி மாட்டினார்?

இந்தப் பாண்டுகளை சென்னையில் இருக்கும் பார்க்ளேஸ் வங்கி மூலம் விற்க முயற்சித்தாராம் ராமலிங்கம். தவிர, 2,500 கோடி ரூபாய்க்கு ஒரே செக்கையும் தந்தாராம். இதைப் பார்த்து அந்த வங்கி அதிகாரிகள் பதறிப் போய், வருமான வரித் துறைக்கு ரகசியத் தகவல் சொல்ல, வருமான வரி அதிகாரிகள் பல காலம் முயற்சித்ததில் ராமலிங்கத்திடம் இந்தப் பாண்டுகள் இருந்ததைக் கண்டுபிடித்தார்களாம்.  

யார் இந்த ராமலிங்கம்?

அமெரிக்கா TO தாராபுரம்

ராமலிங்கத்தின் சொந்த ஊர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள தொண்டாமுத்தூர்; பரம்பரை வியாபாரக் குடும்பம். வெறும் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். கடந்த 94-ம் வருடவாக்கில் நிலக்கடலை வியாபாரம் செய்ய தாராபுரத்துக்கு வந்தார். ஆரம்பத்தில் நிலக்கடலை, தேங்காய் என்று பைக்கில் சென்று வியாபாரம் செய்துகொண்டிருந்த இந்த ராமலிங்கத்தின் நடவடிக்கையில் கடந்த சில வருடங்களாக பல மாற்றங்கள். விஸ்தாரமான வீடு, பல லட்சம்  ரூபாய் மதிப்புள்ள உல்லாச கார் என ராஜபோகமாக இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட 64 நாடு களுக்குப் பலமுறை பயணம் செய்திருக்கிறார்.

பெரிய விஷயமில்லீங்க!

ஒரேநாளில் உலகப் புகழ் பெற்றாலும், அந்தப் பரபரப்புக்கு கொஞ்சம்கூட ஆளாகாமல் தாராபுரம் மருத்துவமனை ஒன்றில் சேர்ந்து குளுக்கோஸ் ஏற்றிக்கொண்டிருந்தார் ராமலிங்கம். 'இதெல்லாம் பெரிய விஷயமில்லீங்க, சாதாரண சமாசாரம்தானுங்க!’ என்பதுபோல நம்மிடம் பேசினார்.

'27,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான அமெரிக்க கடன் பத்திரங்கள் எப்படி  உங்களுக்குக் கிடைத்தது?’ என்று கேட்டோம். ''அது மட்டும் இப்போதைக்குச் சொல்ல மாட்டேன்; விசாரணை முடியட்டும், விலாவாரியாகச் சொல்கிறேன்'' என்றவர் மேலும் தொடர்ந்தார்.

''ஒண்ணும் இல்லீங்க, வெறும்(!) ஒண்ணேகால் லட்சம் கோடி ரூபாயில்(!) ஒரு புராஜக்ட் ஆரம்பிக்கப்போறேன்.

அமெரிக்கா TO தாராபுரம்

அதுக்கு அனுமதி கேட்டு 2,500 கோடி ரூபாய்க்கு ஒரு செக் (ஒரே செக்) தந்தேன். அதை விசாரிக்க வந்திருந்தாங்க. உண்மையைச் சொல்லி இருக்கேன்'' என்று சொல்லி, நம்மை தடதடக்க வைத்தார்.

'ஒண்ணேகால் லட்சம் கோடி ரூபாயில் அப்படி என்ன தொழில் ஆரம்பிக்கப் போறீங்க?’ என்று அடுத்தக் கேள்வியைக் கேட்டோம்.

''ஓ, அதுங்களா... ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி யில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை பல நூறு ஏக்கரில் அமைக்கப்போறேன். பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மாதிரியான முக்கிய தொழில் அது. இந்தியாவில் ரிலையன்ஸ், எஸ்ஸார் நிறுவனங்களுக்கு அடுத்து இதைச் செய்யும் தனியார் கம்பெனி நாங்களாகத்தான் இருப்போம்'' என்றவரிடம், 'நீங்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போறீங்களே, உங்க பின்னணியில் அரசியல் கட்சிகள் ஏதாவது இருக்கிறதா?’ என்று கேட்டோம்.

''இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு அடிக்கடி போய்வருவது உண்மைதான். இன்றைய தேதியில் வெளிநாடு போய் வருவதெல்லாம் சாதாரண விஷயம். கச்சா எண்ணெய் தொழில் சம்பந்தமான ஆலோசனை பெறவும், முதலீட்டாளர்கள் மீட்டிங்கில் கலந்துகொள்ளவும்தான் போய் வருகிறேன். எனக்குப் பின்னால் அரசியல் கட்சி பிரமுகர்கள் இருப்பது என்பதெல்லாம் பொய். சென்னை விசாரணை முடிந்தபின்பு என்னை சந்திங்க, இன்னும் பேசலாம்'' என்று முடித்துக்கொண்டார் ராமலிங்கம்.

அமெரிக்கா TO தாராபுரம்

இதுகுறித்து வருமான வரித் துறையில் வலம் வந்தபோது, இந்த பாண்டு உண்மையானதுதானா,   இவருடைய பின்னணி என்ன, இவர் பினாமியாக இருப்பாரா என்கிற ரீதியில் விசாரிக்கிறார்களாம்.  

இதற்கிடையில் இவ்வளவு அதிக தொகைக்கு (ஒரு பில்லியன் டாலருக்கு) அமெரிக்க அரசு பாண்டுகளை வெளியிடவே இல்லை என்று சொன்ன அமெரிக்க அரசு அதிகாரிகள், கடந்த பிப்ரவரியில் இதேபோல 6 பில்லியன் டாலர் மதிப்பிலான போலி பாண்டுகளை இத்தாலியில் கண்டுபிடித்ததாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

இந்தப் பாண்டுகளும் போலியாகவே இருக்கும் என்று ஃபைலை குளோஸ் பண்ண விசாரணை அதிகாரிகள் தயாராக இல்லை. ''ராமலிங்கம் ஒன்றும் 'டம்மி பீஸ்’ கிடையாது. அவரிடம் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது'' என்று சொல்லும் அவர்கள், இந்த வழக்கு சி.பி.ஐ. அல்லது Serious Fraud Investigation Office-தான் விசாரிக்கும் என்றார்கள்.

அமெரிக்கா TO தாராபுரம்

தமிழகத்தில் வருமான வரிச் சோதனையில் அதிகபட்சமாக சிக்கிய தொகை சுமார் 120 கோடிதான். ஆனால், இப்போது 28,000 கோடி ரூபாய் அளவுக்கு சிக்கி இருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது என்கிறது வருமான வரித் துறை. கூடவே, பல கேள்விகளையும் எழுப்புகிறது.

ராமலிங்கம் என்ற தனிநபரிடம் மட்டும் இவ்வளவு தொகை இருக்கிறது என்றால், இவரைப் போல இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்கள் வைத்திருக்கும் தொகை எவ்வளவு, இந்த பத்திரம் உண்மையானது என்றால், இவருக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது, இவருக்குப் பின்னால் இருக்கும் நபர்கள் யார்? ஒருவேளை போலியானது எனில் எந்த நாட்டிலிருந்து இதைக் கொண்டு வந்தார்... இப்படி பல கேள்விகள் வரிசைக்கட்டி நிற்கின்றன.

பாசி முதல் முதல் ஈமு வரை அனைத்து மோசடிகளைப் போல கொங்கு மண்டலம் இந்த சம்பவத்தையும் வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism