Published:Updated:

குறைந்தபட்ச சொத்து மதிப்பு ரூ.25 கோடி...

புதிய பரிந்துரை - சிறிய நிதி நிறுவனங்களுக்கு ஆபத்து ! செ.கார்த்திகேயன், படம்: ச.இரா.ஸ்ரீதர்.

##~##

குறைந்தபட்ச சொத்து மதிப்பு ரூ.25 கோடி என சமீபத்தில் ஆர்.பி.ஐ.-யின்  புதிய பரிந்துரையால் சிறிய நிதி நிறுவனங்களுக்கு ஆபத்து உருவாகியுள்ளது. எப்படி?

பெரும்பாலானவர் கள் அவசர நிதித் தேவை என்கிறபோது நாடுவது வங்கி சாரா நிதி சேவை (என்.பி.எஃப்.சி.) நிறுவனங்களைத்தான். இந்த நிறுவனங்களின் முக்கியச் சேவை, கடன் கொடுப்பது மற்றும் டெபாசிட் திரட்டுவ தாக இருக்கும். சில போலியான நிதி நிறுவனங்கள் மக்களிடம் பெறும் டெபாசிட் பணத்தை வாரிச் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுகின்றன. இவர்களைக் கண்டுபிடித்தாலும் பொது மக்களிடமிருந்து திரட்டிய தொகையைத் திரும்ப வாங்க முடிவதில்லை. காரணம், இந்நிறுவனங்களின் சொத்து மதிப்பு பெரிதாக இருப்பதில்லை. இதனால் மக்கள் பணத்தை இழக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதனைத் தடுக்கும் விதத்தில் ஆர்.பி.ஐ.யின் துணை கவர்னராக இருந்த உஷா தாரட்  தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்தது ஆர்.பி.ஐ. அந்த கமிட்டி தனது பரிந்துரைகளை சமீபத்தில் ஆர்.பி.ஐ.க்கு அனுப்பியது. அதன் முக்கிய அம்சங்கள் இரண்டு.

முக்கிய அம்சங்கள்..!

* வங்கி சாரா நிதி நிறுவனங் களின் குறைந்தபட்ச சொத்து 25 கோடி ரூபாயாக இருக்க வேண்டும்.

* இடர்பாட்டுக்காக ஒதுக்கி வைத்திருக்கும் தொகை தற்போது 7.5 சதவிகிதமாக உள்ளது. இதை 10% ஆக உயர்த்த வேண்டும்.

இந்தியாவில் இயங்கிவரும் பெரும்பாலான வங்கி சாரா நிதிச் சேவை நிறுவனங்களின் சொத்து மதிப்பு, தற்போது ஐந்து முதல் பத்து கோடி ரூபாய் என்கிற விகிதத்தில்தான் இருக்கிறது. மேலே சொல்லப்பட்டுள்ள விதிமுறைகள் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் சுமார் 9,000 வங்கி சாரா நிதி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் சூழ்நிலை உருவாகும்.

குறைந்தபட்ச சொத்து மதிப்பு ரூ.25 கோடி...

இதுகுறித்து கோவையைச் சேர்ந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவரைக் கேட்டோம். ''இந்தியா முழுக்க சுமார் 12,000-க்கும் மேற்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் 25 கோடி ரூபாய் சொத்து மதிப்பு உள்ள நிறுவனங்கள் எத்தனை என்று பார்த்தால், 250-லிருந்து 300 வரை (டெபாசிட் திரட்டும் நிதி நிறுவனங்கள் மட்டும்) நிறுவனங்கள் மட்டுமே. ஆக, ஆர்.பி.ஐ. பரிசீலனையில் இருக்கும் விதிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டு வந்தால் பெரும்பாலான சிறிய அளவிலான நிதி நிறுவனங்களை மூடவேண்டிய நிலை உருவாகும்.

இது ஒரு வகையில் ஆரோக்கியமானதுதான். ஏனென்றால், நியாயமான தொழில் சூழல் உருவாகும். ஆனால், தொடர்ந்து தொழிலில் இருக்க விரும்பும் பல நிறுவனங்கள் அவற்றின் சொத்து மதிப்பை அதிகரித்து காட்டும் முயற்சியில் இறங்கும். அப்போது, இந்நிறுவனங்களில் பணம் டெபாசிட் செய்த மற்றும் அதில் பணிபுரிந்த பல்லாயிரக்கணக் கானவர்களுக்குப் பிரச்னை ஏற்படும். இதற்கு தீர்வு ஏற்படுத்தி விட்டு, அதன்பிறகு அந்த நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை ஆர்.பி.ஐ. எடுப்பதுதான் சரியாக இருக்கும்.

ஆர்.பி.ஐ. விதிமுறையின் கீழ் வராதவர்கள் அந்தந்த மாநில அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டியிருக்கும். இந்தச் சட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதாக இருக்காது என்பதால் பெரும்பாலான வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பாதிக்கப்படும்.

குறைந்தபட்ச சொத்து மதிப்பு ரூ.25 கோடி...

ஆயிரம் கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு இருக்கும் நிதி நிறுவனங்களின் சி.இ.ஓ-க்களை வங்கியைப் போலவே ஆர்.பி.ஐ.-ன் அனுமதியுடன் தான் பணியில் அமர்த்த வேண்டும் என்ற விதிமுறையையும் நடைமுறைக்குக் கொண்டுவர இருப்பதாகச் சொல்லப்பட்டு வருகிறது. இதுவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அல்ல.

2000-ம் ஆண்டுக்கு முன்னர் வங்கி சாரா நிதி நிறுவனங்களினால் பல மோசடிகள் நடைபெற்று வந்தன. இதனாலேயே உஷா தாரட் தலைமையில் ஆர்.பி.ஐ. 2004-ல் கமிட்டி ஒன்றை அமைத்து விதிமுறைகளைக் கடுமையாக்கின. அதன் பின்னர் குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது.

வங்கிச் சேவை இல்லாத இடங்களில் நிச்சயம் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் சேவை அவசியமாகிறது. அவர்களின் நிறுவன நடவடிக்கைகள் மோசமாக இருக்கும்பட்சத்தில் அவர்களை தடை செய்வதோ, தண்டிப்பதோ நியாயமாகிறது. ஆனால், நல்ல முறையில் இயங்கி வரும் நிறுவனங்களுக்கு ஆர்.பி.ஐ. கமிட்டியின் பரிந்துரை சிரமம் தரக்கூடிய விஷயமே'' என்றார்.

ஸ்ரீராம் குழுமத்தின் இயக்குநர் ஜி.எஸ்.சுந்தர ராஜனிடம் இதுகுறித்து கேட்டபோது, ''வங்கிகளுக்கு நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளை போலவே வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் கொண்டுவர வேண்டும் என்று ஆர்.பி.ஐ. பரிசீலனை செய்து வருகிறது. இது வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு நல்லதல்ல. வங்கி வாடிக்கையாளர்கள் வேறு, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வேறு என்பதை ஆர்.பி.ஐ. புரிந்துகொள்ள வேண்டும்.

குறைந்தபட்ச சொத்து மதிப்பு ரூ.25 கோடி...

இடர்பாடுகளுக்காக எடுத்து வைக்கும் தொகையின் நடைமுறை சதவிகிதத்தை 7.5-லிருந்து 10 சதவிகிதமாக உயர்த்தப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ஆனால், இந்த விகிதம் வங்கிக்கு ஆறு சதவிகிதமே.

சிறிய அளவிலான நிதி நிறுவனங்களினால் நடக்கும் மோசடிகளைத் தடுப்பதற்காக இந்த விதிமுறைகள் என்றாலும், சில விதிமுறைகள் எங்களைப் போன்ற பெரிய அளவிலான நிதி நிறுவனங்களுக்கும் சிரமம் தரக்கூடியதாக இருக்கின்றன. விதிமுறைகளைத் தளர்த்த ஆர்.பி.ஐ-யிடம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்'' என்றார்.

பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் ஆர்.பி.ஐ., என்.பி.எஃப்.சி. நிறுவனங்கள் நலிந்துபோகாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம்..!