Published:Updated:

பணமும் மனமும்!

பணமும் மனமும்!

 ##~##

லகத்தில் இருக்கும் அத்தனை பணமும் உங்களுடையதுதான் என்றால் உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?

இந்தக் கேள்வியைப்  பலரிடம் கேட்டபோது, 'சமையலறைப் பாத்திரங்களைக் கழுவமாட்டேன். யூஸ் அண்ட் த்ரோ மாதிரி யூஸ் பண்ணுவேன். எப்பவும் பிஸினஸ் கிளாஸில் மட்டுமே ப்ளேனில் போவேன்’ என்றார்கள் பலர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இன்னும் சிலர், அந்தப் பணத்தை வைத்து மற்றவர்களுடைய வாழ்க்கையை எப்படி மாற்றுவேன் என்று சொன்னார்கள். ஒரு பெண்மணி, 'நான் நிறைய டிவி ப்ராட்காஸ்டிங் கம்பெனிகளை விலை கொடுத்து வாங்கி உடனடியாக ரியாலிட்டி ஷோக்களை கேன்சல் செய்துவிடுவேன்’ என்றார் தமாஷாக!

சந்தோஷமும் பணமும் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிறவியா? என்பதே இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் லாரா வன்டெர்காமின் கேள்வி. பணத்தைக்கொண்டு நாமும் நம்மைச் சார்ந்தவர்களும் எப்படி வளமாக வாழ வழிவகை செய்யலாம் என்பதை விரிவாக எடுத்துச்சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

பணம் எப்போதுமே எல்லோருக்குமே பற்றாக்குறைதான். ஏனென்றால், எவ்வளவு இருந்தாலும் போதாது என்பதுதான் அனைவரின் நிலையும். உலகத்தில் இருக்கும் அத்தனை பணமும் உங்களிடம் இருந்தால்கூட அப்போதும் பற்றாக்குறை மனதில் இருக்கவே செய்யும் என்கிறார் லாரா. ஆக, பணத்தைக் குறித்த நம் மனப்பாங்கை மாற்றவேண்டுமே தவிர பணம் போதவில்லை, போதவில்லை என்ற அங்கலாய்ப்பைத் தவிர்க்கவேண்டும் என்கிறார்.

மகிழ்ச்சியுடன் வாழும் பலரும் பணம் குறித்த பின்வரும் கொள்கைகளைக்கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்கின்றார் ஆசிரியர்.

பணமும்  மனமும்!

1. என்னிடம் என் தேவைக்கு அதிகமாகவே பணம் இருக்கின்றது என்று நினைப்பது. உலகத்தில் சிலரே, என்னைப்போல் தேவைக்கு அதிகமாகப் பணம் வைத்திருக்கிறார்கள். பலர் தேவைக்குக் குறைவாகத்தான் வைத்திருக்கின்றார்கள்.

2. என் தேவை அதிகமானதென்றால் என்னால் அதற்கு ஏற்றாற்போல் வழிவகைகளைக் கண்டுபிடித்து தேவையான பணத்தைச் சம்பாதித்துக்கொள்ள முடியும்.

3. ஒவ்வொரு ரூபாயும் என் விருப்பம். எப்படி சம்பாதிப்பேன், எப்படி செலவு செய்வேன் என்ற இரண்டுமே என் விருப்பம்.

பற்றாக்குறையை நினைத்து பொருமுவதையும், கஞ்சனாக வாழ்வதையும் தவிர்த்து கொஞ்சம் தேவைக்கு ஏற்றாற்போல் சம்பாதிக்க வழிகளைக் கண்டுபிடிப்பதற்கு நேரத்தை செலவு செய்யலாம் என்று சொல்லும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் லாரா, எல்லாப் பிரச்னையையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி அல்ல பணம் என்றும் சொல்கிறார்.

உதாரணத்திற்கு நீங்கள் 25,000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்க்கின்றீர்கள். மாதாமாதம் வீட்டில் பற்றாக்குறை பட்ஜெட்தான். 50,000 ரூபாய் சம்பளம் இருந்தால் சந்தோஷம் என்று நினைக்கிறீர்கள். 50,000 கையில் வந்தால் என்னென்ன பிரச்னை சரியாகும். பற்றாக்குறை குறையும், அவ்வளவுதான், மற்றபடி ஆபீஸ் செல்லும்போது நீங்கள் டிராபிக்கில் கஷ்டப்படத்தான் வேண்டும். 25,000 சம்பள உயர்வு சின்னச் சின்ன குடைச்சல்கள் மற்றும் எரிச்சல்களைத்தான் குறைக்குமே தவிர, உங்களை வீட்டிலிருந்து ஹெலிகாப்டரில் லிஃப்ட் செய்து ஆபீஸ் மாடியில் கொண்டுபோய் விட்டுவிடாது. 50,000 போன பின்னர் 1,00,000-த்தை நோக்கித்தான் ஓடத்தோன்றும் என்று பணம் குறித்த நமது தவறான அபிப்ராயங்களை சுக்குநூறாக உடைக்கிறார் ஆசிரியர்.

நீங்கள் வாழும் சூழல் மற்றும் இருக்கும் தொழில் போன்றவற்றிலேயே சிறுசிறு நடவடிக்கைகளை செய்தால் பற்றாக் குறைதனை முழுமையாகத் தவிர்க்கலாம் என்று சொல்லும் ஆசிரியர், 'இதுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை என்கிறீர்களா? அது நேரமின்மையால் இல்லை! உங்களுக்கு சம்பாதிக்க மனமில்லை’ என்கின்றார். விலையுயர்ந்த ஸ்மார்ட் போன் ஒன்றை பார்க்கின்றீர்கள். என் அந்தஸ்துக்கு அதை வாங்க முடியாது என்று நினைப்பதைத் தவிர்த்து, அதை வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஆங்கிளில் யோசிக்கவேண்டும் என்பதுதான் லாராவின் வாதம்.

வெறும் சேமிப்பு என்கிற கோணத்தில் மட்டுமே பார்க்காமல், அதிகம் சம்பாதிக்க என்னென்ன செய்யலாம் என்பதையும் சொல்கிறார் ஆசிரியர். குடும்பத்தின் சந்தோஷத்திற்கு வாராந்திர நடவடிக்கைகளை திட்டமிடவும், குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கவும் நல்ல பல மாற்று ஐடியாக்களைத் தந்துள்ளார்.  

இறுதியாக ஈகை. அதாவது, சம்பாதித்தப் பணத்தை மற்றவர்களுக்குக் கொடுத்து உதவுவதில் எவ்வளவு இன்பம் இருக்கின்றது என்பதையும், அப்படி கொடுப்பதன் அவசியத்தையும் விளக்கியுள்ளார். பணம் குறித்த ஒரு மாற்றுக் கருத்தைத் தெரிந்து கொள்ள உதவும் சரியான புத்தகம் இது என்பதால் எல்லோரும் ஒருமுறையாவது இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.

- நாணயம் டீம்.