Published:Updated:

ஷேர்லக் - இன்ஃபோசிஸை வாங்கிய எல்.ஐ.சி.!

ஓவியம்: முத்து

##~##

''கமதாபாத்தில் நடக்கும் 'வைப்ரன்ட் குஜராத்’ முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள நாளை செல்கிறேன். எனவே, இன்று மாலை ஆறு மணிக்கு உம்மைச் சந்திக்க வந்துவிடுகிறேன்'' என்று எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு, அதுபடியே வந்து சேர்ந்தார் ஷேர்லக்.

''என்ன திடீரென குஜராத்திற்குக் கிளம்பிவிட்டீர்கள்?'' என்று வந்ததும் வராததுமாகக் கொக்கிப்போட்டோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''உலகம் முழுக்க தொழில் நிலைமை சரியில்லை என்றபோதிலும் கடந்த ஆண்டைவிட அதிகமான முதலீட்டை ஈர்த்துவிடவேண்டும் என்கிற வேகத்தோடு இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் மோடி. தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை பெரிய அளவில் இருப்பதால், இங்கு தொழிற்சாலை தொடங்க நினைத்த கம்பெனிகள் எல்லாம் குஜராத்திற்கு இடம்பெயர வாய்ப்புண்டு. இதுமாதிரி பல விஷயங்களை அங்கு போனால் தெரிந்துகொள்ள முடியும் என்பதற்காகவே செல்கிறேன்!'' என்ற வரிடம், ''இன்று இன்ஃபோசிஸ் திடீரென

16 சதவிகிதம் வரை உயர்ந்துவிட்டதே?'' என்று கேட்டோம்.

''இன்ஃபோசிஸ் நிறுவனத்தைப் பொறுத்த வரை, அடுத்த காலாண்டு பற்றிய அதன் கைடன்ஸ் என்பது முக்கியமான விஷயம். அடுத்த காலாண்டில் சந்தை எப்படி இருக்கும் என இன்ஃபோசிஸ் நிர்வாகிகள் சொன்ன ஆரூடம் பெரும்பாலும் பலித்திருக்கிறது. அந்த வகையில், அடுத்த காலாண்டில் இன்னும் லாபம் காண்போம் எனச் சொல்லப்போகவே, டிரேடர்கள் இன்ஃபோசிஸ் பங்குகளை வாங்கி, சகட்டுமேனிக்கு விற்கத் தொடங்கினார்கள். இன்று ஒருநாள் மட்டும் மொத்தமாக டிரேட் ஆன இன்ஃபோசிஸ் பங்குகளின் எண்ணிக்கை 1,16,06,571. ஆனால், டெலிவரி எடுக்கப்பட்ட பங்குகள் எண்ணிக்கை 49,25,415. இந்த டேட்டாவிலிருந்தே டிரேடர்கள் இந்தப் பங்கில் கபடி ஆடியிருக்கிறார்கள் என்பது புரியவில்லையா!'' என்றவர், ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் சொன்னார்.

ஷேர்லக் - இன்ஃபோசிஸை  வாங்கிய எல்.ஐ.சி.!

''பொதுவாக, சந்தை சரியும்போது கைகொடுத்துவரும் எல்.ஐ.சி. இப்போது தனிப்பட்ட பங்குகளையும் காப்பாற்றி வருகிறது. அண்மையில் எல்.ஐ.சி. நிறுவனம், இன்ஃபோசிஸின் இரண்டு சதவிகிதப் பங்குகளை 3,000 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது. இதைத் தொடர்ந்து எல்.ஐ.சி.யிடம் இருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் 7.24 சதவிகிதமாக இருக்கிறது. அது மட்டுமல்ல, ஹிந்துஸ்தான் காப்பர், பங்கு விலக்கலின்போது 50 சதவிகிதப் பங்குகளை, பங்கு ஒன்றுக்கு சுமார் 155 ரூபாய் கொடுத்து எல்.ஐ.சி. வாங்கி இருக்கிறது. இன்னும் கொஞ்சநாளில் எல்லா பெரிய கம்பெனிகளிலும் முக்கிய அங்கம் வகிக்கும் கம்பெனியாக எல்.ஐ.சி. மாறிவிடும்'' என்றார்.

''இன்று காலையில் உயர்ந்த சந்தை பிற்பகலில் சரிந்துவிட்டதே! என்ன காரணம்?'' என்று வினவினோம்.

''நவம்பர் மாதத்திற்கான ஐ.ஐ.பி. டேட்டா காலை வாரியதே இதற்கு காரணம். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஐ.ஐ.பி. 6 சதவிகித வளர்ச்சி கண்டது. ஆனால், இப்போது 0.1 சதவிகிதம் குறைந்துள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த முதலீட்டாளர்கள், பங்குகளை விற்கத்தொடங்க, நன்றாக ஏறியிருந்த சந்தை மீண்டும் இறங்கி, நிஃப்டி மைனஸில் முடிந்தது. அடுத்த வாரத்திலும் சந்தை கொஞ்சம் ஏற்ற, இறக்கத்துடனேயே இருக்கும் என்பதால் டிரேடர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது'' என்றவருக்கு ஒரு தட்டில் சர்க்கரைப் பொங்கல் தந்தோம்.

''அட, உம் அலுவலகத்தில் இன்றைக்கே பொங்கல் வந்தாச்சா! மறப்பதற்குள் சொல்லிவிடுகிறேன், உமக்கும் நாணயம் விகடன் வாசகர்கள் அனைவருக்கும் இனிமையான பொங்கல் வாழ்த்துக்கள்'' என்றவர், பொங்கலை ரசித்து சாப்பிட்டார்.

ஷேர்லக் - இன்ஃபோசிஸை  வாங்கிய எல்.ஐ.சி.!

''டி.எல்.எஃப். நிறுவனத்தின் புரமோட்டர்கள் அடிக்கடி தங்களுக்குள் பங்குகளை விற்றுக் கொள்கிறார்களே?'' என்றோம்.

''இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எஃப். அதன் கடனை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து வருகிறது. இந்நிலையில், அதன் நிறுவனர்கள் தங்களுக்குள் பங்கை விற்பது அடிக்கடி நடக்கிற சம்பவமாக இருக்கிறது.

டி.எல்.எஃப். சேர்மன் கே.பி.சிங்-ன் மகள் பியா சிங், ரூ.100 கோடி மதிப்புள்ள 42.5 லட்சம் பங்குகளை, இதர ஆறு புரமோட்டர்களுக்கு விற்றிருக்கிறார். பங்கு ஒன்றின் விலை ரூ.235 என்கிற அளவுக்கு கைமாறியிருக்கிறது. டி.எல்.எஃப். பங்குகள் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக இப்படி புரமோட்டர்களுக்குள் விற்றுக்கொள்கிறார்களா என தெரியவில்லை. எதற்கும் சிறு முதலீட்டாளர்கள் உஷாராக இருப்பது நல்லது'' என எச்சரித்தார் ஷேர்லக்.

''ஜி.வி.கே. பவர் நிறுவனப் பங்கின் விலை ஒரே நாளில் 7% அதிகரித்துள்ளதே! என்ன காரணம்?'' என்று கேட்டோம்.

''கடன் குறைப்புதான் ஒரே காரணம்'' என்று ஒரே வரியில் பதில் சொன்னார்.

''பி.எஸ்.இ. பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்திருக்கிறது போலிருக்கிறதே?'' என்றோம்.

''பி.எஸ்.இ. அதன் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் இண்டெக்ஸில் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது.

மிட் கேப் இண்டெக்ஸில் இருந்து எட்டு பங்குகளை நீக்கிவிட்டு புதிதாக 12 பங்குகளைச் சேர்த்திருக்கிறது.  கிராம்ப்டன் கிரீவ்ஸ், டிவி 18, கேர், என்.பி.சி.சி. போன்ற பங்குகள் புதிதாகச் சேர்க்கப்படுகிற பங்குகளில் குறிப்பிடத்தக்கவை. இதேபோல், ஸ்மால் கேப் இண்டெக்ஸில்

38 பங்குகளை நீக்கிவிட்டு, புதிதாக 28 பங்கு களைச் சேர்த்திருக்கிறது. சோனாட்டா சாஃப்ட்வேர், சுவென் லைஃப் சயின்ஸ், சினிமேக்ஸ் இந்தியா போன்ற பங்குகள் புதிதாகச் சேர்க்கப்படுகிற பங்குகளில் குறிப்பிடத்தக்கவை. இந்த மாற்றங்கள் ஜனவரி 14 முதல் அமலுக்கு வருகிறது'' என்றார்.

''டாக்டர் கார்த்திகேயனின்  'இன்று மார்க்கெட் இப்படித்தான்’ கேட்கிறீரா?'' என்றோம்.

''அதன் தொலைபேசி எண் மாறிவிட்டதில்லையா? 044-66802914 என்கிற எண்ணுக்கு வாசகர்கள் போன் செய்து இன்று மார்க்கெட் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். டிரேடர்களுக்கு மிகவும் பயனுள்ள தாக இருப்பதால் வாசகர்கள் இதைத் தொடர்ந்து கேட்பது நல்லது'' என்றவர், ''ஷேர் டிப்ஸ் இன்னும் கொஞ்ச நேரத்தில் அனுப்புகிறேன்'' .என்று சொல்லிவிட்டு, புறப்படத் தயாரானார்.

''சரி, அர்ஷியா இன்டர்நேஷனல் பங்குக்கு என்ன ஆச்சு?'' என்று அவரை தடுத்து நிறுத்தினோம்.

''சொல்கிறேன், 6.1.2013 தேதியிட்ட நாணயம் விகடனில் ஷேர் டிப்ஸில் அர்ஷியா இன்டர்நேஷனல் பங்கை வாங்கச் சொல்லி சிபாரிசு செய்திருந்தேன். இந்தப் பங்கு கடந்த மூன்று நாட்களில் 50 சதவிகிதம் குறைந்துவிட்டது.

இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தில் ஏற்பட்ட திடீர் பிரச்னைகளே இந்த விலைச் சரிவுக்கு காரணம். சில சமயங்களில் நாம்

சற்றும் எதிர்பாராதவிதமாக இந்த மாதிரி நடந்துவிடுகிறது. வாசகர்கள் இந்தப் பங்கை வாங்கியிருந்தால் உடனடியாக விற்றுவிட்டு, வெளியேறிவிடவும்!'' என்றவர், வீட்டுக்கு விறுவிறுவென நடந்தார்.