Published:Updated:

ஊழியர்களுக்கு முதல் மரியாதை!

ஊழியர்களுக்கு முதல் மரியாதை!

ஊழியர்களுக்கு முதல் மரியாதை!

ஊழியர்களுக்கு முதல் மரியாதை!

Published:Updated:
 ##~##

ஒரு குளோபல் கம்பெனியின் சி.இ.ஓ.வும் ஒரு ரிட்டையராகப் போகும் ரேஸ் கார் டிரைவரும் ஒரு விமானத்தில் அடுத்தடுத்த இருக்கைகளில் பயணம் செய்தனர். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின்னால் ரேஸ் கார் டிரைவர் கேட்டார். ''நான் ஒருமுறை ரேஸில் கார் ஓட்டும்போது என் காரின் பிரேக் பெயில் ஆகிவிட்டது. இதுபோல் உங்கள் தொழிலில் ஏதாவது நிகழ்ந்ததுண்டா?''. ''இல்லை'' என்று சி.இ.ஓ. சொல்ல, ''நீங்க அப்போது என் இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?'' என்று கேட்டார் டிரைவர்.

சி.இ.ஓ. பல்வேறு ஐடியாக்களை மனதில் நினைத்தாலும் ''நீங்களே சொல்லிவிடுங்களேன்'' என்றார். ரேஸ் கார் டிரைவரோ, ''பல டிரைவர்கள் பிரேக்கை வண்டி ஓடும்போதே சரி செய்ய முயற்சிப்பார்கள். அப்படிச் செய்வது வண்டி ஆக்ஸிடென்ட் ஆவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். சில டிரைவர்கள் வேகத்தைக் குறைக்க முயற்சிப்பார்கள். அதனால் பின்னால் வரும் வண்டிகளுடன் மோதி, விபத்துக்குள்ளாகும் வாய்ப்புண்டு. இந்த இரண்டும் இல்லாமல் மூன்றாவதாக ஒரு வழி இருக்கின்றது'' என்றவர், அந்த வழியைப் பற்றி சொன்னார்.  ''அப்போது போய்க்கொண்டிருக்கும் வேகத்தைவிட அதிகமான வேகத்தில் காரை செலுத்த ஆரம்பிக்க வேண்டும். அப்படி அதிக வேகத்தில் செலுத்த ஆரம்பித்தபின்னர் அடுத்த நடவடிக்கை என்ன என்று யோசிக்க ஆரம்பிக்கவேண்டும்!'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஊழியர்களுக்கு முதல் மரியாதை!

'அட, இந்த யோசனை நல்லா இருக்கே!'' என்று யோசித்தார் சி.இ.ஓ. பிற்பாடு அவர் தலைமை வகித்த ஹெச்.சி.எல். கம்பெனி, போட்டியாளர்களால் தொய்வடைய ஆரம்பித்தபோது ரேஸ் கார் டிரைவர் சொன்ன யோசனையை, தான் நடைமுறைப் படுத்தியதை எம்ப்ளாயீஸ் ஃபர்ஸ்ட் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார், அண்மையில் சி.இ.ஓ. பதவியிலிருந்து ஓய்வு பெற்ற வினீத் நாயர்.  

ஐ.டி. துறை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது ஹெச்.சி.எல். நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆனார் வினீத் நாயர். பதவி ஏற்றவுடன் அவர் தொழில் ரீதியாக சுற்றுமுற்றும் பார்த்தார். எல்லாப் போட்டியாளர்களும் தாங்கள் எங்கே என்ன செய்யப் போகின்றோம், எப்படிப்பட்ட கம்பெனியாகப் போகின்றோம் என்று அவர்களுடைய விஷன், மிஷன் ஸ்டேட்மென்ட்களிலும், கார்ப்பரேட் கம்யூனிகேஷன்களிலும் சொல்லித் தீர்த்தனர். ஒருவர்கூட தெளிவாக தாங்கள் இங்கே இருக்கின்றோம் என்று சொல்லவில்லை. சில நிறுவனங்கள் அவர்களுடைய வியாபாரத்தின் அளவு மற்றும் நிதி நிலைமை பற்றி மட்டுமே பேசினவே தவிர, தாங்கள் எங்கே இருக்கின்றோம் என்பதை தெளிவாகச் சொல்லவில்லை.

வினீத் நாயருக்கு அப்போது பொறி தட்டியது. எங்கே இருக்கின்றோம் என்று தெரியாமல் எங்கே போகப் போகின்றோம் என்று சொல்வது சாத்தியமா? போய்ச் சேரவேண்டிய இடத்திற்கான வழித்தடத்தைத்தான் தீர்மானிக்க முடியுமா என்ற கேள்விகள் அவர் மனதில் வந்து குடிகொண்டது. அதன் பின்னர் அவர் தெளிவான ஒரு முடிவை எடுத்தார். நமது கம்பெனி இன்றைக்கு எப்படி இருக்கின்றது என்ற உண்மை நிலையை தெளிவுபடுத்திக்கொள்வோம். பின்னர் எங்கே போகவேண்டும் என்பதைப் பற்றித் திட்டமிடுவோம் என்று செயல்பட ஆரம்பித்தார்.

ஹெச்.சி.எல். டெக் மெதுவாக மாறிக்கொண்டிருந்ததே தவிர, டெக் உலகில் வரும் வேகமான மாறுதலுக்கு ஏற்றாற்போல் மாற்றங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதை அறிந்தார். இதனால் ப்ரேக் பெயிலான காரைப்போல் எப்போது வேண்டுமென்றாலும் விபத்தைச் சந்திக்கலாம் என்பதையும் புரிந்துகொண்டார். இந்த விபத்தைத் தவிர்க்க வேகமெடுத்து ஓடுவதைத் தவிர, வேறு மாற்று வழி ஏதுமில்லை என்பதையும் தெளிவாகப் புரிந்துகொண்டார். இதை அவர் முதல்முதலாக சென்னையில் அவருடைய அலுவலகத்தில் பணிபுரிபவர்களிடம் ஒரு மீட்டிங்கில் சொன்னார். இது அவருடைய சகபணியாளர்களுக்கு வருத்தத்தை அளித்தது என்பதையும் அவர் புத்தகத்தில் கூறியுள்ளார்.

இரண்டு கஸ்டமர்களைச் சந்தித்த அனுபவத்தை இந்தப் புத்தகத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார் வினீத். அவர் பதவி ஏற்ற புதிதில் ஒரு முக்கியமான கஸ்டமரை பார்க்கச் சென்றபோது அந்த கம்பெனியின் சி.ஐ.ஓ. ''வினீத், 'நீங்கள் ரொம்பவும் லக்கி. சூப்பரான டீமை வைத்திருக்கின்றீர்கள். நான் எதிர்பார்த்ததைவிட அதிகமான விஷயங்களை எங்களுக்குத் தந்திருக்கின்றார்கள்'' என்று பாராட்டினார் என்றும், மற்றொரு கஸ்டமர், ''வினீத், நீங்கள் எதையுமே சரியான நேரத்தில் செய்து தரவில்லை. ஏகப்பட்ட பிரச்னை. ஆனாலும், உங்கள் டீமைக் குறை சொல்ல முடியாது. உங்க கம்பெனியால் இந்த டீமுக்கு முழுமையான சப்போர்ட்டை கொடுக்க முடியவில்லை'' என்று சொன்னாரென்றும் இந்த இரண்டு சந்திப்புகளிலும் கம்பெனி, டெக்னாலஜி என்பதையெல்லாம் தாண்டி டீமிற்கு தரப்படும் முக்கியத்துவத்தை அவர் புரிந்துகொண்டதாகவும் சொல்லியுள்ளார் இந்தப் புத்தகத்தில்.

'ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து புறப்பட்டு அனைவருக்கும் பை சொல்லி ஆபீஸ் செல்கின்றோம். நம்முடைய எமோஷன், சப்ஜெக்டிவிட்டி, பெர்சனாலிட்டி மற்றும் கனெக்ஷன்களை குடும்பத்தோடு விட்டுவிட்டு ஆபீஸில் புது மனிதனாக நுழைகின்றோம். ஆபீஸிற்கென்று சில எழுதப்படாத சட்டதிட்டங்கள் இருக்கின்றன. ஒரு மேனேஜரையும் நம்பாதே! எதிலும் எதற்கும் எமோஷனலாக ஆகாதே! ஞாபகமிருக்கட்டும் இது பெர்சனல் விஷயமில்லை, பிஸினஸ்! போன்ற கற்கால சட்டதிட்டங்களை ஆபீஸில் இன்னும் தொடர்கின்றோம்’ என்கின்றார் அவர்.

ஊழியர்களுக்கு முதல் மரியாதை!

'அதேநேரம் குடும்பத்தில் எத்தனை மாறுதல்கள் நடந்துள்ளது. அந்தக் கால அப்பா, அம்மா எவ்வளவு அத்தாரிட்டியை வைத்திருந்தார்கள். இன்றைக்கு குழந்தைகளை நண்பனாய் பார்க்கின்றோம். நிறைய நம்புகின்றோம். நம்பி நண்பனாய் இருந்தால்தான் அவன் அவனுடைய பிரச்னைகளை நம்மிடத்தில் சொல்வான் என்று சொல்லித் திரிகின்றோம். இந்த நம்பிக்கை இல்லாத குடும்பத்தில் இன்றைக்கும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நடுவே தினமும் போர் நடப்பதைப் பார்க்கின்றோம். இவை அனைத்தையும் பார்த்தப் பின்னரும் ஆபீஸில் நாம் யாரையும் நம்புவதில்லை. நம்பாத ஒருவரிடம் உண்மைப் பிரச்னைகளை இன்னுமொரு பணியாளர் எவ்வாறு சொல்வார்’ என்பதைப் போன்ற நடைமுறை உதாரணங்களைச் சொல்லி அசத்துகின்றார் வினீத் நாயர்.

அவருடைய அனுபவத்தில் மனிதர்கள் பிடித்ததைத் மனமாரச் செய்ய ஆரம்பிக்கும்போது எந்தவிதமான இடர்பாட்டையும் தாண்டிவிடும் வல்லமை படைத்தவர்களாக இருக்கின்றார்கள் என்கின்றார். பிடித்து மனமாரச் செய்யப்படும் ஒரு செயல் கம்பெனியின் நிலைமையும் தனிநபரின் நிலைமையையும் சுலபமாக வேகமான வளர்ச்சிப் பாதைக்கு மாற்றிவிடுகின்றது என்கின்றார்.

மொத்தத்தில், பழங்கால மேனேஜ்மென்ட் முறையை தலை கீழாகமாற்றி அமைத்தால், இன்றைய அறிவுசார் தொழில்களில் வெற்றி பெற முடியும் என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார் வினீத் நாயர். தொழில் நடைமுறையில் பார்க்கப் படும் ஒரு மாறுபட்ட கண்ணோட்டம் எப்படி சிக்கலான சூழ்நிலையைச் சமாளிக்க உதவுகின்றது என்பதை விளக்கமாகத் தந்துள்ள இந்தப் புத்தகத்தை இளம் தொழில் முனைவோர்களும், நிர்வாகப் பதவிகளில் வெற்றிபெறத் துடிப்பவர்களும் நிச்சயமாய்ப் படிக்கலாம்.

- நாணயம் டீம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism