Published:Updated:

ஷேர்லக் - ஃபேஸ்புக்கில் அசிங்கப்படுத்தும் முன்னணி வங்கி !

ஷேர்லக் - ஃபேஸ்புக்கில் அசிங்கப்படுத்தும் முன்னணி வங்கி !

ஷேர்லக் - ஃபேஸ்புக்கில் அசிங்கப்படுத்தும் முன்னணி வங்கி !

ஷேர்லக் - ஃபேஸ்புக்கில் அசிங்கப்படுத்தும் முன்னணி வங்கி !

Published:Updated:
##~##

''கட்டிங் நிச்சயம்!'' என கரகரத்த குரலில் சொன்னபடி நம் கேபினுக்குள் வந்து உட்கார்ந்தார் ஷேர்லக்.

''என்ன கட்டிங் நிச்சயம்?'' என்று புரியாமல் கேட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வருகிற 29-ம் தேதி ஆர்.பி.ஐ. கூட்டம் நடக்கிறது. இதில் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றாலும் குறைந்தபட்சம் 0.25 சதவிகிதம் குறையும் என்று எதிர்பார்க்கலாம் என்பதைத்தான் அப்படி சொன்னேன். மற்றபடி கட்டிங்குக்கும் எனக்கும் துளி சம்பந்தமில்லை என்பது உமக்குத் தெரியுமே!'' என்று சொல்லிவிட்டு, ''நண்பரின் அலுவலகத்திலிருந்து நேராக உம்மை சந்திக்க வந்துவிட்டேன், நீர் ஏதாவது சாப்பிடத் தருவீர் என்கிற நம்பிக்கை யில்!'' என்றவருக்கு, மொறுமொறு பக்கோடா தந்தோம். சில துண்டுகளைச் சாப்பிட்டுவிட்டு, இளஞ்சூடான தண்ணீரைக் குடித்தவரிடம் அடுத்த கேள்வி கேட்டோம்.

''ரியல் எஸ்டேட் பங்கான ஹெச்.டி.ஐ.எல். பங்கு இப்படி தடபுடலாக இறங்கிவிட்டதே?''

''கொஞ்சநஞ்சமல்ல, ஒரேநாளில் 22.4% வீழ்ச்சி கண்டிருக்கிறது. எல்லாம் அதன் புரமோட்டர் சாரங் வாத்வான் 50 லட்சம் பங்குகளை 57 கோடி ரூபாய்க்கு ஒரேயடியாக விற்றுத் தீர்த்ததுதான் காரணம். இதற்கு பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, பங்கின் விலை சரமாரியாகச் சரிந்திருக்கிறது. தெற்கு மும்பையில் இடம் வாங்குவதற்கு அவசரமாகப் பணம் தேவைப்பட்டதால் பங்குகளை விற்றதாக புரமோட்டர் விளக்கம் தந்திருக்கிறார். மேற்கொண்டு பங்குகளை விற்கப் போவதில்லை என்று சொல்லவே, வெள்ளியன்று இந்தப் பங்கின் விலை 11% ஏறியது.

ஷேர்லக் -  ஃபேஸ்புக்கில் அசிங்கப்படுத்தும் முன்னணி வங்கி !

இன்னொரு ரியல் எஸ்டேட் நிறுவனமான ஐ.வி.ஆர்.சி.எல். பங்கின் விலையும் சுமார்

20 சதவிகிதம் இறங்கி இருக்கிறது. கோயம்புத்தூர் அருகே இந்நிறுவனத்தின் துணை நிறுவனம் எடுத்துள்ள தேசிய நெடுஞ்சாலை கான்ட்ராக்ட்-ன் தரத்தை சரிபார்க்கச் சென்ற கன்சல்டன்ட்  அதிகாரி மர்மமான முறையில் இறந்ததே இதற்கு காரணம் என்கிறார்கள். இதை அந்நிறுவனம் மறுத்திருக்கிறது. ரியல் எஸ்டேட் விலை போல அந்நிறுவனங்களும் புதிராகவே இருக்கிறது. எனவே, கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது!'' என்றார்.  

''இந்துஸ்தான் யூனிலீவர் பங்கு விலையும் இறங்கி இருக்கிறதே?'' என்றோம்.

''ஒரு டாப் புரோக்கர் நிறுவனம் இந்தப் பங்கை தரமிறக்கம் செய்ததே விலை குறைந்ததற்கு முக்கிய காரணம். இதனுடைய வால்யூம் குரோத் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது. இது 13 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு. இருந்தாலும் இந்த பங்கின் லாபம் 14.6 சதவிகிதம் அதிகரிக்கவே செய்திருக்கிறது. ஆனால், பணவீக்கம் உச்சத்தில் இருப்பதால் தொடர்ந்து இந்நிறுவனத்தால் நல்ல லாபம் பார்க்க முடியுமா என்கிற சந்தேகமும், தாய் நிறுவனத்திற்கு கொடுக்கும் ராயல்டியை உயர்த்தியதும் இந்தப் பங்கின் விலையை பதம் பார்த்துவிட்டது. என்றாலும், இப்போதைக்கு 475 ரூபாய்க்கு வர்த்தகமாகும் இந்த பங்கு 420 ரூபாய்க்கு வரும்பட்சத்தில் வாங்கலாம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள். கொஞ்சம் பொறுத்திருப்பது நல்லது'' என்றார்.  

''பங்குச் சந்தையில் சுவாரஸ்யமான தகவல் ஏதுமுண்டா?'' என்று கேட்டோம்.

''பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பங்குக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அந்தப் பங்கு எப்போதும் பிப்ரவரி மாதத்தில் 10 முதல் 15 சதவிகிதம் வரைக்கும் உயரக் கூடும். கடந்த சில வருடங்களாக இப்படிதான் நடந்திருக்கிறது. இதில் 2008-ம் ஆண்டு மட்டும் விதிவிலக்கு. இந்த வருடம் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்'' என்றவரிடம்,

''எஸ்.கே.எஸ். மைக்ரோ ஃபைனான்ஸ் மீண்டும் நஷ்டக் கணக்கு காட்டி இருக்கிறதே?'' என்றோம்.

''தொடர்ந்து ஏழு காலாண்டு களாக எஸ்.கே.எஸ் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனம் நிகர இழப்பை சந்தித்து வந்தது. முடிந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் 1.2 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியிருக்கிறது. நடப்பு காலாண்டிலும் இதன் நிகர லாபம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் பங்கின் விலை வியாழக்கிழமை 4.73 சதவிகிதம் குறைந்து போனது. முதலீட்டாளர்களுக்கு நிறுவனம் மீது இன்னும் நம்பிக்கை வரவில்லை போலும்'' என்றவருக்கு, சூடான ஏலக்காய் டீ தந்தோம். அதை ரசித்துக் குடித்தவர், அடுத்த செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.

''ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்க் ஸ்கீம் முதலீட்டை அதிகரிக்க அதனை 80சி பிரிவின் கீழ் கொண்டுவரும் எண்ணத்தில் மத்திய அரசு இருக்கிறது. அப்படி மாற்றும்பட்சத்தில் தற்போதுள்ள 50,000 ரூபாய் முதலீட்டுக்கு 25,000 ரூபாய்க்கு மட்டுமே வரிச் சலுகை என்பது போய், முழுத் தொகைக்கும் வரிச் சலுகை கிடைக்கும். மேலும், இந்த வரிச் சலுகையை அனைவருக்கும் ஆண்டுதோறும் கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவல். இந்தத் திட்டத்தில் அரசாங்கம் தொடர்ந்து பல குழப்பங்கள் செய்து வருவதைப் பார்த்தால், யாரிடமிருந்தும் இதற்கு பெரிய சப்போர்ட் இல்லை என்றே படுகிறது!

ஆனால், நீண்டகால இன்ஃப்ரா ஃபண்டுகளுக்கு முதலீடு மற்றும் வட்டிக்கு வரி விலக்கு மற்றும் 80சி செக்ஷனின் வரம்பை உயர்த்தவும் சிதம்பரம் யோசித்து வருகிறாராம். இவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்'' என்றவர் கிளம்புவதற்கு முன் ஒரு அதிர்ச்சித் தகவலை சொன்னார்.

''முன்னணி தனியார் வங்கி, கடனை வசூலிக்க குண்டர்களை வைத்து மிரட்டும் வேலையை இன்னும்கூட கைவிட்ட மாதிரி தெரியவில்லை. இந்த வங்கியில் கிரெடிட் கார்டு வாங்கி இருக்கிறார் ஒருவர். கணக்கை முடிக்க கொஞ்சம் பணம்தான் பாக்கி. அதை திருப்பித் தருவதற்குள் அவர் பெயரை அவுட்சோர்ஸிங் நிறுவனத்துக்குத் தந்துவிட்டது அந்த வங்கி. அவர்கள் குண்டர்களை வைத்து மிரட்டி இருக்கிறார்கள். கடன் வாங்கியவருக்கு எந்த காலஅவகாசத்தையும் தராததோடு,  அவரது ஃபேஸ்புக் கணக்கை எடுத்துப் பார்த்து, அதிலுள்ள நண்பர்கள், உறவினர்களிடம் கடன் பணம் திரும்பக் கட்டாததை எடுத்துச் சொன்னதோடு, வெளிநாட்டில் படிக்கும் அவருடைய உறவுகார  பையனையும் மிரட்டி இருக்கிறார்கள். இன்னும் இந்தப் பிரச்னை முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டிருக்கிறது. கிரெடிட் கார்டை கவனமாகப் பயன்படுத்துவதோடு, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் படுகவனமாக இருக்க வேண்டும் என்பதும் தெளிவாகத் தெரிகிறது'' என்று புறப்படத் தயாரானார்.  

''ஞாயிற்றுக்கிழமை சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நடக்கும் 'கமாடிட்டி... கரன்சி... கற்கலாம்’ முதலீட்டாளர் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிக்கு அவசியம் வாருங்கள். பல ஆயிரம் வாசகர்கள் வருவார்கள். அவர்களின் கருத்தை நீங்கள் நேரடியாக கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்'' என்று அழைத்தோம்.

''கட்டாயமாக. வாசகர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது!'' என்று சொல்லிவிட்டு, 'வரும் வாரத்தில் ஆர்.பி.ஐ. அறிவிப்பு, எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி இருப்பதால் ஷேர் டிப்ஸ் இல்லை’ என்று சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தார் ஷேர்லக்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism